×

அன்பால் செங்கல் எறிந்த சாக்கிய நாயனார்

(24.12.2022 - சனிக்கிழமை
சாக்கிய நாயனார் குருபூஜை)



சிவனுடைய அடியார்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து, ``திருத்தொண்டர் புராணம்’’ என்று அளித்தார் சேக்கிழார் பெருமான். அதில், அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒவ்வொருவிதமான சிறப்புண்டு. சாக்கியநாயனார் தன்னை மறந்த நிலையில் சிவனை வழிபட்டவர். கற்களைக் கொண்டு கற்றளி சமைத்து பல திருப்பணிகளைச் செய்தவர்கள் உண்டு.

சொற்களைக் கொண்டு பல கவிதைகளைச் சமைத்து திருப்பணிகளைச் செய்த மகான்களும் உண்டு. ஆனால், கற்களை வீசி பூஜை செய்த ஒரு பக்தரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னால் அவர்தான் சாக்கிய நாயனார். மகாபாரதத்தில் ஒரு அற்புதமான சம்பவம். விதுரன் மாளிகைக்கு வந்த கிருஷ்ண பரமாத்மாவை வரவேற்று உபசரிப்பார் விதுரர்.

‘முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல்இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதிநீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறுகுடில்!’


 - என்றான்.

கண்ணன் வருகையால் தனது உள்ளம் மட்டுமல்ல, இல்லமும் பெருமை பெற்றது என்ற சிலிர்ப்பில் இருப்பார் விதுரர். அவருக்கு பல்வேறு விதமான கனி வகைகளை பரிமாறுவார். தானே தன் கையால் பழங்களை உரித்து அவருடைய கையில் தருவார். ஆனால், என்ன ஒரு வியப்பு பாருங்கள். கண்ணன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விதுரர், தான் செய்கின்ற செயலை மறந்து ஒரு வாழைப்பழத்தை உரித்து, பழத்தை கீழே போட்டுவிட்டு, தோலை கண்ணபிரானுக்கு தந்தாராம். அவருக்கு பழத்தைப் போட்டுவிட்டு தோலைத் தருகிறோம் என்கிற உணர்வு இல்லை. பழத்தைத்தான் தருகிறோம் என்கிற உணர்வில் இருந்தார். தன்னை மறக்கச் செய்யும் பக்தி உணர்ச்சியின் விளைவு இது.

இப்படிப்பட்ட தன்னை மறந்த உணர்வு நிலையில் இருக்கின்ற பக்தர்கள் பலர் நம்முடைய ஆன்மிக சரித்திரத்தில் உண்டு. அதைப் போலவே, தான் வீசுவது கற்கள்தான்; இதை வீசினால் சிவபெருமானுக்கு வலிக்குமே என்கின்ற எண்ணத்தை மறந்து, அதை பூக்களாகவே பாவித்து அவர் போடுகின்றார். எந்த பாவனை மனதில் வருகிறதோ அதுதான் அந்த இடத்தில் நிகழும். நாம் பாவனை இல்லாமல் வெறும் பூக்களை எடுத்து வீசினால் அது கற்களாகத் தான் படும். ஆனால் சாக்கிய நாயனார், கற்களை பூக்களாக நினைத்து வீசியதால் பூக்களாகவே மாறி சிவனின் திருவடியில் விழுந்தன.

இனி இவரின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். இவர், திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். சமய உண்மைகளை அறிய காஞ்சிநகரத்தை அடைந்து, புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். ஆயினும் அதில் மனநிறைவு இல்லை. சிவபெருமான் திருவருள் கைகூட, சிவநன்நெறியே பொருள் எனும் நல்லுணர்வு கைவரப்பெற்றார்.

இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து, நாள் தோறும் இறைவனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என உறுதிகொண்டார். இதனால், பௌத்தத் துறவிக் கோலத்தை (சாக்கியர் கோலம்) மாற்றாமல் ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து, அந்த கல்லை மலர்போலப் பாவித்துப் பூஜை செய்து வந்தார். சிவலிங்க பூஜை செய்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சாக்கியரின் உறுதியாகும்.

இவ்வாறு நாள்தோறும், (பௌத்தர்கள் அறியாதவாறு) சிறு கல்லை, மலர் போலப் பாவித்து சிவலிங்க வழிபாடு செய்த சாக்கியரின் செயலைக் கண்ட பௌத்தர்கள், சிவலிங்கத்தைப் பௌத்தத் துறவி கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வினைக் கீழ்க்காணும் பெரியபுராணப் பாடலில் காணலாம்;

எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலைநிற்பார்
 - பெரியபுராணம்


(சாக்கிய நாயனார்) 3641.

சாக்கியர் செய்த இந்த செயல், சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்துவந்தார்.
ஒருநாள் சாக்கியர் அந்த செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம்பெருமானைக் கல்லால் அர்ச்சனை செய்ய மறந்துவிட்டேனே என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராதகாதலால் கண்ணீர் வழிய ஒரு கல்லை எடுத்து எறிந்தார்.

சங்கமங்கை வரும்வேளாண் தலைவர்
காஞ்சிச்
சாக்கியரோ டியைந்தவர்தந்
தவறுஞ்சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந்து
அந்த வேடம்
துறவாதே சிவலிங்கந் தொழுவோர்
கண்டோர்
அங்கல் மலர் திருமேனி அழுந்தச்
சாத்தி
அமருநாள் மறந்தொருநாள் அருந்தா
தோடிச்
செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த
நாதன்
திருவருளால் அமருலகஞ்
சேர்ந்துளாரே.


சிவபெருமான், விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அந்த தெய்வக் காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சாக்கிய நாயனாரைப் பற்றி, சுந்தரர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;

வார்கொண்ட வனமுலையாள் உமை
பங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும்
அடியேன்.


சுந்தரர் திருத்தொண்டத்தொகை - 398.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

Tags : Sakya ,
× RELATED தன்னை யாரும் கடத்தவில்லை!: உ.பி. பாஜக எம்.எல்.ஏ. வினய் சாக்யா மறுப்பு