×

பஞ்சாங்கத்தில் இத்தனை விஷயங்களா?

ஒவ்வொரு தமிழ் வருடம் பிறக்கும் போதும் நாம் கடைகளில் பஞ்சாங்கம் வாங்குகின்றோம். ஆனால், அதை பயன்படுத்துகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், உண்மையில் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்ற துல்லியமான புள்ளி விவரங்களை நாம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால், ஒரு பஞ்சாங்கத்துக்கு ஆயிரம் ரூபாய்கூட விலை தரலாம் என்பது போல இருக்கும். ஓரளவாவது அதனுடைய அடிப்படையையும், அதிலே உள்ள விபரங்கள் எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நமது வாசகர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

கௌரி நேரம்

பஞ்சாங்கங்களில் எதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை குறித்து சுருக்கமாக நாம் தெரிந்து கொண்டால், அந்தந்த செயல்களுக்கான நல்ல நேரத்தை ஓரளவு நாமே நிர்ணயித்துக் கொள்ள முடியும். ஒரு காலத்தில் விவசாய வேலைகளுக்காக நாள் நட்சத்திரங்களை அதிகம் பார்த்தார்கள். `காலத்தோடு பயிர் செய்’ என்ற வாக்கியமே இந்தக் கணிதத்தைக் குறிப்பதுதான். ஏர் கட்ட, தானியம் விதைக்க, கதிர் அறுக்க என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான நாட்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எல்லா பஞ்சாங்களிலும், நாள் காட்டிகளிலும் `கௌரி பஞ்சாங்கம்’ என்று ஒரு அட்டவணை இருக்கும். அதில் அந்தந்த கிழமையும், அதற்குரிய நேரம் என்ன நேரம் என்பது குறித்தும், எட்டு பகுதிகளாக, பகலிலும் இரவிலும் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும்.

எட்டு பிரிவுகள்

உத்தியோகம், அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம் சோரம், விஷம் என்று ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு நேரத்தின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உத்தியோகம், லாபம், அமிர்தம், சுகம், தனம் இவை சுபநேரம். விஷம், ரோகம் இவை சுபமற்ற நேரம் என்பதை  நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், கௌரி பஞ்சாங்கம் என்பது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது. இதனை மற்ற காரியங்களுக்கு பார்க்க வேண்டிய தேவையில்லை.

கௌரி பஞ்சாங்கம் அமுதத்தில் தானியம் விதைத்தால் விளையும் தானியம் மக்களுக்கு அமுதமாகும். சோரநேரத்தில் (சோரம் என்றால் திருட்டு) விதைத்தால் தானியம் திருடு போகும். ஆனால், இதை சுபமுகூர்த்த நேரங்களுக்கு நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்கு வேறு கணிதங்கள் உண்டு.

ஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?

உங்களுடைய நட்சத்திரம் வருகின்ற நாளில் புதிதாக பாடசாலையில் சேருதல், பதவியை ஏற்றுக் கொள்ளுதல், நிலம் அல்லது சொத்து வாங்குதல் குழந்தைகளுக்கு உபநயனம் செய்தல், வீட்டில் விசேஷமான ஹோமங்கள் செய்தல், அன்னதானம் செய்தல், புதிதாக கட்டிய வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்தல், கிரக ஆரம்பம் செய்தல் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை

திருமணத்தை பெரும்பாலும் ஜென்ம நட்சத்திரத்தில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதே போல, பெண்ணுக்கு சீமந்தம் செய்தல் ஜென்ம நட்சத்திர நாட்களாக இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆகாத நட்சத்திரங்கள் பஞ்சாங்கத்தில், ஒரு பாட்டு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்.
 
ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம்
முப்பூரம் கேட்டை
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறில்
மாதனங் கொண்டார் தாரார் வழிநடை
போனார் மீளார்  
பாயினில் படுத்தார் தேரர் பாம்பின் வாய்
தேரை தானே


அந்த காலத்தில், சொல்லப்பட்ட சில விஷயங்களை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம், விதிகளோடு விதிவிலக்குகளையும் சேர்த்துதான் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
உதாரணமாக, இதில் 12 நட்சத்திரங்கள் யாத்திரை செய்வதற்கும், நோய்களுக்கு வைத்தியம் செய்து கொள்ளவும், கடன் கொடுக்கவும், அல்லது கடன் வாங்கவும் ஆகாத நட்சத்திரங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி என்று இந்த 12 நட்சத்திரங்களை இந்த பாடல் குறிப்பிடுகிறது. ஆனால், சந்திரனுக்கு குரு, சுக்கிரன் முதலிய சுப பார்வைகள் இருந்தாலும், லக்னத்திற்கு சுப அம்சம் இருந்தாலும், இந்த நட்சத்திர தோஷம் கிடையாது. அதையும் அனுசரித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்

காலண்டர்களில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் போன்ற குறிப்புகள் இருக்கும். இந்த குறிப்புகள் எதற்காக என்று முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாள் மேல்நோக்கு நாள் என்று சொல்லப்படும். இந்த நாட்களில் உயர்ந்த கட்டிடங்கள், கொடிமரம் வைப்பது, மதில்சுவர் கட்டுவது, வாசல்கால் வைப்பது, ஆடுமாடுகளுக்கு கொட்டகை போடுவது, பந்தல் அமைப்பது முதலிய காரியங்களைச் செய்யலாம்.

அதைப்போலவே பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திர நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் என்ற கணக்கில் வரும். இந்த நாட்களில் பூமிக்கு கீழே தோண்டுதல், குளம் கிணறு வெட்டுதல், முதலிய செயல்களைச் செய்வதற்கு உத்தமமான நாட்கள்.

அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி இந்த நட்சத்திரங்கள், சம நோக்கு நாட்கள். இவைகளில் ஆடுமாடுகள் வாங்குதல், ஏற்றம் இறைத்தல், உழவு செய்தல், கால்வாய் வெட்டுதல் முதலிய காரியங்களைச் செய்யலாம்.

மிருதா நட்சத்திர தினங்கள்

முகூர்த்தம் வைக்கும்போது மிருதா நட்சத்திர தினங்களை வைத்து விடக் கூடாது. அது என்ன மிருதா நட்சத்திரம் என்றால், சூரியன் பிரவேசிக்கும் நட்சத்திர நாளாக அந்த நாள் இருக்ககூடாது. அதாவது, முகூர்த்தம் குறித்த நாளில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். முகூர்த்த நாள் நட்சத்திரமும், அதே நட்சத்திரமாக இருந்தால் அன்றைக்கு சுபகாரியங்கள் விலக்கப்பட வேண்டும். அதேபோலவே, சூரியன் அதுவரை இருந்து விலகிய நட்சத்திர நாளும் உசிதமில்லை.

திருவாதிரை நட்சத்திரம் என்பது ராகுவின் நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசித்த பிறகு, 10 தினங்கள் சுபகாரியங்கள் விலக்கப்பட வேண்டும். இவைகளையெல்லாம் அனுசரித்துத்தான் நாள் குறிக்க வேண்டும். ஒரு தேர்ந்த ஜோசியருக்கு இவைகளையெல்லாம் கவனித்தல் மிக எளிதான ஒரு காரியம்தான். கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

தனிஷ்டா பஞ்சமி

தனிஷ்டா பஞ்சமி என்று ஒன்று பஞ்சாங்கத்தில் போட்டு இருக்கும். ஒருவர் காலமாகிவிட்டார் என்றால், எந்த நட்சத்திரத்தில் காலமானார் என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணமாக அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் இறந்தால் 6 மாதமும், ரோகிணியில் காலமானால் 4 மாதமும் கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தில் காலமாகி இருந்தால் மூன்று மாதமும், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் நட்சத்திரத்தில் இறந்தால் 2 மாத காலமும் தோஷகாலம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

சரி, இதற்கு என்ன செய்யலாம் என்றால் மிக எளிதான வழிதான். அப்படி இந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்து போயிருந்தால், அவர் உபயோகப்படுத்திய பொருட்களை ஒரு தனி அறையில் வைத்து, மூடிவிட்டு ஒரு வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் தீபம் வைத்து தினசரி காலையிலும் மாலையிலும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு அந்த நாள் முடிந்ததும், அந்த வெண்கல கிண்ணத்தை யாருக்காவது தானம் செய்துவிட வேண்டும். இன்னும் சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. அதை அடுத்த இதழில்  பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags : almanac ,
× RELATED வாக்கிய பஞ்சாங்கப்படி உத்தமர்கோயிலில் இன்று சனிப் பெயர்ச்சி விழா