பேட்ட - விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசி குமார், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பேட்ட‘. தானே வான்டடாக வண்டியில் ஏறி வந்து ஒரு கல்லூரியில் வார்டன் பதவி வேண்டும் என மிரட்டி வாங்குகிறார் காளி(ரஜினிகாந்த்). வழக்கம் போல் பெரிய இடத்து பிள்ளை மற்றும் கலேஜ் சீனியர் மைக்கேலின்(பாபி சிம்ஹா) ரவுடிசம். ஹாஸ்டலின் புது வரவு மாணவர்களை பதம் பார்க்கிறது. இறங்கி மாஸ் காட்டி அண்டர்வேருடன் ஓட விடுகிறார் காளி. இதற்கிடையில் அதே கல்லூரி காதல் ஜோடி காளியிடம் உதவி கேட்கிறது.

சுமூகமாக போகும் கதைக்குள் காதலர் தினத்தில் கல்லூரி மாணவர்களால் வெளியிடப்படும் ஒரு வீடியோவால் லக்னோவிலிருந்து ஜித்து(விஜய் சேதுபதி) சிங்கா(நவாசுதீன் சித்திக்) என்னும் பெரிய ரவுடிகளிடமிருந்து வருகிறது ஆபத்து.  யார் இவர்கள் நடந்தது என்ன என்பது மீதிக்கதை. #Rajinified இந்த வார்த்தைக்கு ஏற்ப படம் முழுக்க ரஜினி.. ரஜினி… ரஜினி…மட்டுமே என பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினி படங்களை மீண்டும் தூசி தட்டியது போல் படம் நெடுக அவ்வளவு நாஸ்டால்ஜியா ரஜினி மொமெண்ட்கள். ’ஸ்வீட் சாப்ட போறோம்‘ ‘அடிச்சு அண்டவேரோட ஓட வுட்டுடுவேன்‘, ‘டீ கேன்சல்‘, என மாஸ் காட்டுவதும், ‘ஸ்டைலா ஹா ஹா, ‘அட நீ நல்லா இருக்கே‘ , ‘மங்களம்‘ என காதலில் உருகி கண்ணாடியில் இரண்டு முறை பார்ப்பதாகட்டும் மனுஷன் ஒவ்வொரு காட்சியிலும் சூடேற்றி ஆட்டம் போட வைக்கிறார்.

ரஜினியை ரசித்து நம்மையே ரசிக்க வைக்கும் விஜய் சேதுபதி மாஸ் எனில் ஒரே சீன் இவர் யாருப்பா என முதல் பாதியில் கேட்ட சில வாய்களை எல்லாம் ‘அடிச்சது யாரு பேட்டடடட… ஹ ஹ ஹ ஹ ‘ என பளிப்பு காட்டி ரஜினி ரசிகர்களையே வாயடைக்கச் செய்து கைதட்டலை அள்ளுகிறார் நவாசுதீன். இருவருமே அவர்களுக்குக் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நட்புக்காக நடித்திருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது. சிம்ரன் நீங்க இன்னொரு ரவுண்டே வரலாம், அவ்வளவு அழகு, ஃபிட், நச்.

ஆனால் சொற்ப சீன்களில் அப்பீட் ஆகிவிடுவது கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் மங்களம்(சிம்ரன்) இல்லாத குறையை தீர்க்கவே மங்களகரமாக வந்து நிற்கிறார் த்ரிஷா. ’96‘ படத்திற்குப் பிறகு மீண்டும் த்ரிஷாவின் கெட்டப்பிற்காக இந்தப்படமும் பேசப்படும். மேகா ஆகாஷ் யூத் ஐகானாக ஏற்கனவே மாறிவிட்டார். இளமை துள்ளல், கள்ளமில்லா சிரிப்பு என நிச்சயம் பொண்ணுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு இருக்கு. சசிகுமார், மகேந்திரன் என படம் முழுக்க ஏகப்பட்ட ஷாக்கிங் கேரக்டர்கள். ஆனால் எல்லாமே ரஜினி என்னும் ஒற்றை மாஸால் சட்டென காணாமல் போய்விடுகிறது.

பிரிக்க முடியாதது என்னவோ ‘கார்த்திக் சுப்புராஜும் நீளமான படமும்‘, தவிர்க்க முடியாதது என்னவோ ‘கார்த்திக் சுப்புராஜும் கடைசி பத்து நிமிடங்களும்‘ இந்த ரெண்டு வரிக்கும் அப்பட்டமான அடுத்த நிரூபணம். எங்கே கட் பண்ணுவது எனத் தெரியாத கதைக்களம் ஆனால் கடைசி பத்து நிமிடம் ஆத்தாடி லெஜெண்ட் லெவல் என ஆச்சர்யம் ஏற்படுத்திவிடும் கதை சொல்லித்தனம் இதிலும் பிரமாதமாக கை கொடுத்திருக்கிறது. முக்கியமாக ஒரு மாஸ் ஹீரோவிற்கு படம் எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு இயக்குநர் முதலில் ரசிகனாக மாற வேண்டும் என்பதற்கு இந்தப்படம் சான்று. கொஞ்சம் நீளம் , லாஜிக் இல்லா சில காட்சிகள் என்றாலும் பின்பாதியில் ரஜினி காட்டும் 80ஸ் கெத்து, கொலை செய்யவே குழந்தை போல் நடனமாடும் தருணங்கள் என அத்தனையும் மைனஸ்களை மறைத்து ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளுகின்றன.

அனிருத்… அந்த சரஸ்வதி தேவியே கையில உக்காந்து கதகளி விளையாடுறா போல பயபுள்ளைக்குள்ள அம்புட்டு திறமை. ஒவ்வொரு மாஸ் காட்சிக்கும் மரண மாஸ் பின்னணியும் , பாடல்களும் அரங்கத்தை வைப்ரேஷன் மோடிலேயே வைத்திருக்கின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலேயே ரசிகர்களின் கொண்டாட்டம் அடங்க மறுப்பதற்கு பக்க பலம் அனிதான். படத்தின் அடுத்த ஸ்பெஷல் திருவின் ஒளிப்பதிவு. காப்பர் டோன் லைட்டிங் கல்லூரி இரவு நேரக் காட்சிகள், சர்ச் சண்டைகாட்சிகள், ‘இளமை திரும்புதே‘ பாடல்கள் என ஆச்சர்யமான காட்சியமைப்பு. மொத்தத்தில் ‘சிவாஜி‘ படத்திற்கு பிறகு முழுமையான ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தியை கொடுக்கத் தவறவில்லை ‘பேட்ட‘.

× RELATED டபுள் ஆக்‌ஷன் அனுஷ்கா