ஆக்சிடென்டல் டைரக்டர்! 100% காதல் இயக்குநர் சொல்கிறார்

“எங்கப் படத்தோட பெரிய பிளஸ் என்னன்னா ஃப்ரெஷ்னஸ்தான். மலைப்பிரதேசத்துல புத்துணர்ச்சியான ஒரு காலைப் பொழுது எப்படி இருக்கும்கிறதை ஃபீல்தான் பண்ண முடியும். அதை விவரிக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு காதல் கதைதான் ‘100% காதல்’ படமா வந்திருக்கு” என்கிறார் அறிமுக டைரக்டர் சந்திரமௌலி.

“உங்க பயோடேட்டாவை சொல்லுங்க சார். ரொம்ப வெயிட்டான புரொஃபைல்னு இண்டஸ்ட்ரியிலே சொல்லுறாங்க...”
“வெயிட்டா வெயிட்டில்லையான்னு என்னோட படம்தான் சொல்லணும். நான் திருப்பதியில் பி.எஸ்.சி முடிச்சிட்டு, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தேன். இங்கே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஃபிலிம் டெக்னாலஜி படிப்பை முடிச்சேன். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சார் கிட்ட அசோசியேட்டா சேர்ந்தேன். என்னோட ஒர்க்லே அவர் ரொம்பவே இம்ப்ரஸ் ஆனார். தொடர்ந்து 25க்கும் அதிகமான படங்களில் அவர்கூட ஒர்க் பண்ணினேன். ஒவ்வொரு படமும் ஓர் அனுபவம். இந்திய சினிமாவின் பெரிய மாஸ்டர் கிட்டே, இவ்ளோ படங்களில் இவ்வளவு நாட்கள் ஒரு மாணவனா கத்துக்கிட்ட வாய்ப்பு வேறு எவருக்கும் அமையாது.
அதே நேரம் மலேசியாவில் இருக்கிற மெசட் பிராட்காஸ்ட் நெட்வொர்க்ல ஒளிப்பதிவு கன்சல்டன்ட்டாவும் இருந்தேன். பிறகு ‘ஜீ பூம் பா’ டிவி சீரிஸை குழந்தைகளுக்காக தயாரிச்சேன். அதுக்கு அப்புறம் அமெரிக்காவுக்கு போனேன். அங்கே ‘சீக்ரெட் விண்டோ’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்ச பெரிய கேமிராமேனான ஃபிரட் முர்ஃபி உடன் ஒர்க் பண்ணினேன். அமெரிக்காவிலேயே ஃபேமிலியோடு செட்டில் ஆனேன்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?
அதனாலே, அப்பப்போ இங்கேயே வந்துடுவேன். அப்போதான் என்னோட நெருங்கிய நண்பர் சுகுமாருடன் சேர்ந்து நிறைய படங்களை விநியோகம் பண்ண ஆரம்பிச்சேன். சுகுமார், தெலுங்கில் தயாரிப்பாளராகவும், பிறகு பெரிய டைரக்டராவும் கலக்க ஆரம்பிச்சார். அவர் கடைசியா டைரக்ட் பண்ணின ராம்சரண், சமந்தா நடிச்ச ‘ரங்கஸ்தலம்’ மெகா ஹிட்டாச்சு. அந்தப் படத்துக்கும் நானே விநியோகஸ்தரா இருந்தேன்.”

“சினிமாவில் இவ்வளவு அனுபவம் வெச்சுக்கிட்டு இப்போதான் டைரக்டர் ஆகியிருக்கீங்க?”
“ம்ஹூம். எனக்கு டைரக்‌ஷன் பண்ணுற ஐடியா அதுவரைக்கும் இல்லை. நான் ஒரு ஆக்சிடென்டல் டைரக்டர். 2011ல இந்த படத்தோட ஒரிஜினலான 100 % லவ் படத்தை சுகுமார் இயக்கினார். இந்தப் படத்தை இந்தியிலே தயாரிக்க எண்ணினேன். சில காரணங்களால அது முடியல. பிறகு தமிழில் இந்தப் படத்தை ரீமேக் பண்றதுக்காக உரிமை வாங்கினேன். அப்போவும் கூட வேறொரு டைரக்டரை வெச்சிதான் இந்தப் படத்தை தயாரிக்க யோசனை பண்ணிட்டிருந்தேன். அப்போதான் சுகுமார் என்கிட்ட அன்பா கோபப்பட்டார். ‘இந்தப் படத்தோட உரிமையை உங்களுக்கு கொடுத்தது, நீங்க டைரக்‌ஷன் பண்ணணும் என்கிற என் விருப்பத்துக்காகதான். நீங்க ஏன் வேறொருத்தரை வச்சி இந்த படம் பண்றீங்க?’ன்னு கேட்டார். அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு தைரியத்தை கொடுத்துச்சு. ‘100% லவ்’, எப்போவுமே என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமான படம். காரணம், காதலை இந்தப் படம் சொன்ன விதம் ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். தமிழில் இந்த படத்தை பண்ணினா கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்னு நம்பிக்கை இருந்துச்சு. அதனால, நண்பனோட அன்புக் கட்டளையை ஒப்புக்கிட்டு டைரக்‌ஷன் பொறுப்பை ஏத்துக்கிட்டேன்.”

“அப்படி என்னதான் கதை?”
“ரொம்ப சிம்பிளான கதைதான். காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் இடையே நடக்கிற பல விஷயங்களை ரொம்பவே சுவாரஸ்யப்படுத்தி கொடுக்கிற திரைக்கதை படத்துலே இருக்கு. குறிப்பா ஈகோ மோதல் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதை ஹைக்கூ கவிதை போல திரைக்கதை சொல்லும். காலேஜில் டாப் ரேங்கரா இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேற்படிப்புக்காக ஊர்லே இருந்து வருகிறார் ஷாலினி பாண்டே. இவர்களுக்கு இடையிலான உறவை அழகாக சொல்ற படமிது.”

“ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேயை இந்த ரோலுக்கு தேர்வு பண்ணினது ஏன்?”
“காலேஜ் பசங்க கேரக்டருங்கிறதால ரொம்ப க்யூட்டான ரெண்டு பேர் தேவைப்பட்டாங்க. இவங்களை காலேஜ் ஸ்டூடன்ட்சுன்னு சொன்னா உடனே ஆடியன்ஸ் நம்புற மாதிரி இருக்கணும். ரொம்பவே யூத்தான, அதே சமயம் ரொமான்டிக்கான ஃபீல் கொடுக்கிற முகங்களாவும் இருக்கணும்னு முடிவு பண்ணினோம். எனக்கு உடனே ஸ்டிரைக் ஆனது ஜி.வி.பிரகாஷ்தான்.  அவரும் ஓகே சொல்லிட்டார். அதேபோல அர்ஜுன் ரெட்டி படம் பார்த்துட்டு, ஷாலினி பாண்டே மேல இளம் ரசிகர்கள் எல்லோருமே கிரேஸா இருந்த நேரமது. உடனே அவங்களை தமிழுக்கு கொண்டு வரலாம்னு முடிவு பண்ணினோம். ஷாலினியை அறிமுகப்படுத்த இன்னொரு காரணமும் இருக்கு. பார்த்ததுமே தமிழ் பொண்ணுங்கிற உணர்வு வரணும். ஷாலினியோ முகவெட்டு அச்சு அசலா தமிழ் பொண்ணுங்க மாதிரி இருக்கிறது எங்களுக்கு பிளஸ்சா தெரிஞ்சது. அவரை தேர்வு பண்ண அதுவும் ஒரு காரணம்”.

“லாவண்யா திரிபாதியோடு என்ன பிரச்னை?”
“தெலுங்குல தமன்னா பண்ணின கேரக்டரை தமிழ்லே அவங்களை நடிக்க வைக்கத்தான் ஒப்பந்தம் பண்ணினோம். லண்டன் ஷூட்டிங்கிற்காக ஏற்பாடுகள் எல்லாம் பண்ணிட்ட பிறகு படத்துல நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க. இது தொடர்பாக அவங்க மேல புகார் கொடுத்தோம். படத்துல அவங்க ஏன் நடிக்கலேங்கிறது அவங்கதான் சொல்லணும்.”

“தமன்னாவுடன் ஷாலினியை கம்பேர் பண்ணும்போது நடிப்புல யார் பெஸ்ட்?”
“அப்படி பிரிச்சி பார்க்க முடியல. எதுக்கு கம்பேர் பண்ணணும்னு தெரியல. ஏன்னா, தமன்னாவோட நடிப்பு ஸ்டைல் வேற, ஷாலினியோட நடிக்கிற ஸ்டைல் வேற. தமன்னாவோட நடிப்பை ஷாலினி ரிபீட் பண்ணல. அந்த கேரக்டரை மட்டும் உள்வாங்கிட்டு அவங்களோட பெஸ்ட்டை கொடுத்திருக்காங்க. ஜி.வி.யோடு அவங்களோட கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் ஆகியிருக்கு.”

“ஒளிப்பதிவுல ஹாலிவுட் வரை போயிட்டு வந்திருக்கீங்க. நீங்க ஏன் இதுல ஒளிப்பதிவு பண்ணலை?”
“டைரக்‌ஷன் பொறுப்பை ஒழுங்கா பண்ணணும், தெலுங்குல சுகுமார் படத்தை லவ்லியா கொடுத்திருந்தார். அந்த அழகியல் கெடாம பார்த்துக்கணும்னு பொறுப்பு இருந்துச்சு. அதனால டைரக்‌ஷன் பண்ணும்போது அதுலே மட்டும் கவனம் செலுத்த முடிவு பண்ணினேன். அதனால ஒளிப்பதிவை கணேஷ் ராஜவேலு கவனிக்கிறார்.”

“2011ல் தெலுங்குல வந்த படமிது. 7 வருஷம் கழிச்சு ரீமேக் ரிலீசாகும்போது ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறீங்களா?”
“காதல் எக்ஸ்பயரி ஆகவே ஆகாது சார். ‘100% லவ்’ படத்தை எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் நம்மை ஈர்க்கும். எந்த காலக்கட்டத்துலேயும் அதை ரீமேக் பண்ணலாம்கிற மாதிரியான சப்ஜெக்ட் அது. காரணம், அதுல வர்ற எந்த காட்சியையும் ஈஸியா காப்பி அடிச்சிட முடியாது. காரணம், திரைக்கதையை அந்த அளவுக்கு ஃபிரெஷ்ஷா சுகுமார் எழுதியிருந்தார். ஒரு காட்சியை அதுலேருந்து எடுத்தாலும் காட்டிக் கொடுத்துடும். அதனால இந்தப் படமும் காட்சிகளும் இன்னும் பல வருஷம் கழிச்சு கூட ரீமேக் பண்ணினால் கூட க்ளிக் ஆகும்.”

“தமிழுக்காக படத்துல ஆக்‌ஷன் இருக்குமா?”
“தெலுங்குல அந்த மாதிரி கிடையாது. தமிழுக்கும் அப்படி தேவைப்படல. ஜி.வி.பிரகாஷும் அதைக் கேட்கல. தெலுங்கு படத்தை  பார்க்க சொன்னப்போ, வேணாம். நீங்க கதை சொல்லுங்க. கேட்டுட்டு நடிக்கிறேன்னுதான் அவர் சொன்னார். தமிழ்ல படத்தை தரும்போது இன்னும் ஃபிரெஷ்ஷா நாம கொடுக்கணும்கிறதுக்காகவே ஜி.வி.பி, நான் உள்பட மொத்த டீமும் உழைச்சிருக்கோம். படம் வரும்போது அது தெரியும்.”

× RELATED அப்பாவுடன் ரோடு வேலைக்கு போன இயக்குனர்