×

ஆணவம் அகற்றுவோம்!

நட்பும், உறவும் நல்லபடி அமைந்தால்தான் ஒவ்வொருவரும் வாழ்வின் உயரங்களை எட்டமுடியும். ‘‘என்னிடம் அசாத்திய திறமை இருக்கிறது. அயராத உழைப்பாற்றலையும் என் லட்சியம் நிறைவேற என்னால் தர முடியும்!’’ என்று ஒருவர் எண்ணினாலும், மற்றவர்களின் துணையின்றி தனி ஒருவருக்கு வெற்றி எந்த துறையிலும் வாய்த்துவிடாது. ஆம்! தனித்து எவரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. எனவே, அனைவரிடமும் அனுசரித்துப் போகும் அடிப்படைப் பண்பு நமக்கு அமையவேண்டும்.

அப்படியென்றால், ஆணவம் என்னும் அரக்ககுணம் நம்மிடம் அணுவளவும் ஏற்பட்டுவிடாமல் நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘நான்’ என்னும் ஆணவம் ‘நாம்’ என்னும் கூட்டுறவிற்குள் பிளவை ஏற்படுத்தும். பிரிவை உண்டாக்கும். உறவும், நட்பும் உடனிருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் ஒரு போதும் தலைக்கனத்திற்கு இடம் தந்து விடக் கூடாது. புகழ் பெற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் அற்புதமான பொன் மொழி ஒன்றைப் பார்ப்போமா!

‘ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான். ‘ஒரு புத்திசாலி தன்னைப் புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாள் ஆகிறான். நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும், ஒன்பது வியாகரணங்களையும், பதினெட்டு புராணங்களையும் கற்ற ஒருவரிடம் ‘பண்டிதன்’ என்னும் இறுமாப்பு வந்து விட்டால், அவர் கற்ற கலைகள் அனைத்துமே வீணாகி விடுகின்றன. ‘கர்வம் சர்வ நாசம்’ என்பதை நாம் உணர்ந்து அடக்கத்தோடும், அன்போடும் வாழப் பழகிக் கொண்டால், சக மனிதர்களின் கூட்டுறவு நமக்கு நிரந்தரமாக அமையும்.

கவிஞர் தாராபாரதி குறிப்பிடுகின்றார்;

‘நான் மறையைக் கற்றவனா ஞானி- தன்னுள்
நான் மறையக் கற்றவனே ஞானி!’
நான் என்பது அகப்பற்று!
எனது என்பது புறப்பற்று!


‘எனக்கு எல்லாம் தெரியும். என்னிடம் வாலாட்டாதீர்கள்’! என்று அகம்பாவம் பிடித்து அலைபவர்கள், முடிவில் ஒற்றை மரமாகி நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும். ‘இது என்னுடைய சொத்து! இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என உடைமைப் பொருள்களின் மீது வைக்கும் அதிகாரப்பற்று மிகவும் கொடியது.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

- என்கிறார் திருவள்ளுவர்.

எனது, யானும் வேறாகி
எவரும் யாதும் யானாகும்
இதய பாவனாதீதம் அருள்வாயே!
என்று திருப்புகழில் அருண கிரிநாதர் அதி
அற்புதமாகப் பாடுகிறார்!
‘காதல் இருவர் கருத்து ஒருமித்து
ஆதரவு பட்டதே இல்வாழ்க்கை’
- என்கிறது தமிழ்ச் செய்யுள்.


ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும், இதயப் பூர்வமாகக் கலந்தும் வாழும் இல்லறமே நல்லறம். ஆனால், அந்த இல்லறவாழ்க்கை திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே நீதிமன்ற வாசலில் போய் நிற்கிறதே!

என்ன காரணம்?

பெண், தன் பிறந்த வீட்டின் பெருமையைப் பறை சாற்றுகிறாள் ஆணவம் மேலோங்க! பதிலுக்குக் கணவனும் தன் குடிப் பெருமையையும், பதவிச் சிறப்பையும் ஓங்கிய குரலில் எடுத்துக் கூறுகிறான்! இருவரிடமும் இருக்கும் தலைக்கனமே குடும்பத்தின் பெருமையை தலைகுனிய வைத்துவிடுகிறது. அருமையும், பெருமையும் மிக்க, நம் அருமைத் தமிழ் மொழி ‘ல்’ ‘ன்’ என்ற இரு எழுத்தின் வேறுபாட்டில் குடும்பத்தின் மேம்பாட்டைக் குறிப்பிடுகிறது.

எப்படித் தெரியுமா?


தம்பதிகள் குடும்பத்தின், கௌவரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, குடும்பத்தில் கௌரவத்தை எதிர்பார்க்கக் கூடாது. தெய்வ வழிபாடு நிகழ்த்தும்போது, பூவால் இறைவனை பூஜை செய்கின்றோம். விநாயகாய நமஹ, சரவண பவாய நமஹ, பார்வதி பதயே நமோ நமஹ  என்று மந்திரம் ஒலிக்கப்படுகிறது.

‘நம’ என்ற வடமொழிப் பதத்திற்கு என்ன பொருள் தெரியுமா?
‘ந’ என்றால் இல்லை என்று அர்த்தம்.
‘ம’ என்றால் என்னுடையது என்று பொருள்.

என்னுடையது இல்லை, என்னுடையது இல்லை என்ற பொருளில் நம, நம, என்று கூறி மலர்களால் அர்ச்சனை புரிகிறோம். ஆணவம் அறவே இல்லாமல், எதுவும் என்னுடையது இல்லை அனைத்தும் ஆண்டவனின் பேரருளே என மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு நிகழ்த்த வேண்டும் என்பதே பூஜையின் தத்துவம்.
குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் கீழ்க்கண்டவாறு பாடுகிறாள்;

அகந்தைக் கிழங்கை
அகழ்ந்து எடுக்கும்
தொழும்பர் ஊக்கோயிற்கு ஏற்றும் விளக்கே!


திருவள்ளுவர் ‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை’ என்று படிப்போ, செல்வமோ, பிறந்த குலமோ, பதவியோ தென்மூலமும் தன்னை ஒருவன் பெரிதாகப் பேசி தன்முனைப்பு கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார். ஆணவம் சிறிதும் அற்றவராக விளங்குவதாலேயே ஆஞ்சநேயர் பெரிதும் போற்றப்படுகிறார். இணையற்ற இதிகாசமான ராமாயணத்தில், அவதார நாயகனான ராமச்சந்திர மூர்த்தி, ‘அனுமனே! நீ செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்து விடமுடியும்? என்று உள்ளம் நெகிழ்ந்து, மகிழ்ந்து, புகழ்ந்து பேசுகிறார். அப்போதும், அனுமன் சிறிதும் பெருமிதமோ, கர்வமோ அடையாமல் பணிவுடன், சிரம்தாழ்த்தி நிற்கிறான்.

வணங்கிய சென்னியன்
மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன்


- என்று கம்பர் மாருதியின் மாண்பினை அற்புதச் சொற்பதங்களால் படம் பிடிக்கிறார்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
- என்பார்கள்.


அதாவது அறிவு, வலிமை, ஆரோக்கியம், அஞ்சாமை, புகழ் அனைத்தும் இருந்தபோதும், ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற விதத்தில் அடக்கமே உருவாக இருந்த காரணத்தாலே, அனுமார் அதிகம் போற்றப்படுகிறார். ‘ஆணவத்தால் தலை நிமிர்ந்து இருப்பவனை அழிப்பதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஏனென்றால், அவன் கர்வமே அவனைக் கொன்று விடும்’ என்பார்கள். தீக்குச்சியும், தீப்பெட்டியும் ஒன்றோடு ஒன்று ஒருமுறை பேசிக் கொண்டனவாம்.

‘நானும் நீயும் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொள்கிறோம். தீபபெட்டியே! நீ எப்படி அப்படியே இருக்கிறாய்! நான் எரிந்து கரியாகி விடுகின்றேனே’ என்று கேட்டதாம் தீக்குச்சி. அதற்கு தீப்பெட்டி அளித்த பதில் என்ன தெரியுமா? ‘உனக்குத் தலைக்கனம்’ அதிகம்!

Tags :
× RELATED காமதகனமூர்த்தி