×

கண்ணாடியில் தடம் கண்ட வேல்

கண்ணாடி, முகம் பார்க்கவும், தன்னை அழகுபடுத்திக் கொள்ளவும் உதவும் சாதனம். இது மங்கலப் பொருட்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களை வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. தெய்வங்கள் கண்ணாடியில் தோன்றும் உருவங்களுக்கு உயிர்கொடுத்து உலவவிட்ட நிகழ்ச்சி களைப் புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் கண்ணாடியில் தோன்றும் தனது பிம்பத்திற்கு உயிர்கொடுத்து உருவாக்கப்பட்டவரே சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்.

அம்பிகை கண்ணாடியில்தான், எழுதி மகிழ்ந்த குழந்தை வடிவத்திற்கு உயிர்கொடுத்து மகிழ்ந்தாள். அந்தக் குமாரனே சித்திரகுப்தன் ஆவார். சிவபெருமான், கண்ணாடியில் தோன்றிய பணமூட்டையின் நிழலை நிஜமாக்கி ஒரு வேடனுக்கு அளித்ததை, மணிவாசகர் திருவாசகத்தில் குறித்துள்ளார். முருகன், கண்ணாடியில் தோன்றி அருள்பாலித்ததை, வள்ளலார் வரலாற்றில் காண்கிறோம்.

வள்ளலார் கண்ணாடி ஒன்றை வைத்து வழிபட்டுவந்த வேளையில், தணிகேசன் ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு தோள்களும் உடையவராய் அவருக்குக்
காட்சியளித்தார். முருகன், கண்ணாடியில் காட்சியளித்ததைப் போலவே, அவரது வேலாயுதமும் கண்ணாடியில் தோன்றிக் காட்சியளித்ததுடன், தடம் பதித்ததை அருணகிரிநாதர் குறித்துள்ளார். அவர் இதனைக் குமார வயலூர் திருப்புகழில், `கல்லார் மனத்துடனில்லா மனத்தவ கண்ணாடியிற்றடம் கண்ட வேலா கண்ணாடியில் தடம் கண்ட வேலே’ என்று குறித்துள்ளார்.

(இதற்கு உரை கண்டவர்கள் கண்ணாடி போல் தெளிந்த நீரை உடைய குளங்களை உருவாக்கியவேல் என்று உரை வரைந்துள்ளனர்). சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப் பிறகு முருகனுக்கு அபிஷேகம் செய்வர். அந்த அபிஷேகத்தை முருகன் திருமேனியின் மீது செய்யாமல், முருகன் வடிவுக்கு எதிரில் பெரிய நிலைக் கண்ணாடியை வைத்து, அதில் முருகனின் வடிவம் தெரியும்படி செய்து அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்வர். இதற்குச் `சாயா அபிஷேகம்’ என்பது பெயர். கண்ணாடியில், வேல் செய்து முருகனுக்கு அணிவிக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்