×

சங்கரரின் நோய் தீர்த்த செந்திலாண்டவர்!

தீராவினையெல்லாம் தீர்த்துவைப்பான் திருச்செந்தூர் ஆண்டவன் என்பது அனுபவசாலி பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. எத்தனையோ அற்புதங்களை இந்தக் குமரன் புரிந்திருக்கிறான். இத்தலத்தை சுனாமி நெருங்க வில்லை தெரியுமா? ஆமாம், சுற்று வட்டாரமெல்லாம் அலைகடலின் ஆக்ரோஷத் தாக்குதலுக்கு அடிபணிந்தபோது, திருச்செந்தூர் கோயில் பகுதி மட்டும் நிமிர்ந்து நின்றது. ‘இத்தனை நாள் புரண்டு புரண்டு வந்து என் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றுத் திரும்பினாயே, இப்போது ஏன் விபரீத வேகத்தில் ஊரையே அழிக்கிறாய்? என்று இந்த பாலசுப்பிரமணியன் கோபித்துக் கொண்டானோ, இங்கு மட்டும் கடல் தன் அலைவரிசையைக் காட்டவில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திச் செல்லலாமா?

1803ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்தவர் லூஷிங்டன் என்ற ஆங்கிலேயர். அவர் தம்முடைய அலுவல் காரணமாக திருச்செந்தூரில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் மாலைப் பொழுதில் தன் அலுவலக ஊழியர் ஒருவருடன் திருச்செந்தூர் ஆலயம் பக்கமாகச் சென்றார். அப்போது ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் செந்திலாண்டவனைக் கொலுவமர்த்தி பக்தர்கள் புடைசூழ ஆலய அர்ச்சகர்கள் கவரி வீசிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்து கேலியாகச் சிரித்தார் லூஷிங்டன். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? ஒரு சிலைக்குப்போய் விசிறுகிறார்களே! ஜடப்பொருளுக்கு வியர்க்கவா செய்யும்?’ என்ற நையாண்டி அவருக்கு. உடனே கவரி வீசிக்கொண்டிருந்த அர்ச்சகர்களை தன்னிடம் வரச் சொன்னார். அவர்கள் வந்ததும், ‘‘உங்கள் கடவுளுக்கும் வியர்க்குமா என்ன? விசிறி விட்டுக்கொண்டிருக்கிறீர்களே,’ என்று கேலியாகக் கேட்டார்.

‘ஆமாம்,’ என்று உறுதியாகச் சொன்னார்கள் அர்ச்சகர்கள். ஆங்கிலேயர் அதிர்ந்துபோனார். ‘இது எங்கள் சம்பிரதாயம், அதனால் இதை விடாமல் செய்துகொண்டிருக்கிறோம். முட்டாள்தனம்தான் என்று தெரிந்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் விட முடியவில்லை’ என்று ஏதாவது மழுப்பலாக சமாதானம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், இவ்வளவு ஆணித்தரமாக ‘ஆமாம்,’ என்கிறார்களே என்று அவருக்கு வியப்பு. ஆனாலும் தன் வீம்பை விட்டுக் கொள்ளாமல், ‘எங்கே, நான் அந்த வியர்வையைப் பார்க்க முடியுமா?’ என்று கேட்டார்.

உடனே, அர்ச்சகர்கள் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை களைந்தார்கள். வெற்றுச் சிலையாக நின்றிருந்த முருகப்பெருமானுக்கு வெறும் வஸ்திரம் ஒன்றை மட்டும் போர்த்தினார்கள். உலர்ந்த அந்த வஸ்திரம், கொஞ்சம் கொஞ்சமாக ஈரம் உறிஞ்ச ஆரம்பித்தது. அதைப் பார்த்துத் திடுக்கிட்ட லூஷிங்டன்த் தான் வியர்த்துப் போனார். இது என்ன மாயம்! அது எப்படி முடியும்? ஆனால் நேரமாக  ஆக அந்த துணி முற்றிலுமாக ஈரமாகிவிட்டது. ஏன், வியர்வைநீர் துணியிலிருந்து சொட்டவும் ஆரம்பித்தது.

அந்த அதிகாரி அப்படியே அப்போதே மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்ல, செந்திலாண்டவருக்குக் காணிக்கையாகப் பல வெள்ளிப் பாத்திரங்களை அளித்தார். அந்தப் பாத்திரங்கள் இன்றும் அந்த முருகன் நிகழ்த்திய அற்புதத்திற்குச் சான்றாக ஆலயத்தில் உள்ளன. ‘கடற்கரையாண்டி’ என்று அழைக்கப் படும் பாலசுப்பிரமணியன் கோயில் கொண்டிருக்கும் இந்த திருச்செந்தூர் தலம், அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடு.

பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஆனாலும் தற்போது நாம் காணும் கோயிலை உருவாக்கியவர்களில் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன.
மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது.

வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. சீபலி என்பது மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிராகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனேயே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமாரன், தன்னை நாடும் பக்தர்களை எவ்வாறெல்லாம் பரிவுடன் பார்த்துக்கொள்வான் என்ற நிறைவு இந்தச் சீபலியைக் கண்டவுடனேயே தோன்றிவிடும். கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றைக் கோயிலுக்கு
வழங்கியுள்ளார்.

இன்னொரு அற்புதத்தையும் பாருங்கள்: ஆதிசங்கரரின் மேல் அபிநவ குப்தன் எனும் மாந்திரீகன் பொறாமை கொண்டான். பிறருக்குத் தீங்கினை விளைவிக்கக்கூடிய ஆபிசார ஹோமம் என்ற யாகத்தைச் செய்து அவர் மேல் காசநோயை ஏவினான். நோய் ஆதிசங்கரரைப் பற்றியது. அந்த பாதிப்போடு, மனம் வருந்தியவராக, கோகர்ணேஸ்வரரைத் தரிசனம் செய்தார் அவர்.

அன்றிரவு அவருடைய கனவில் கோகர்ணேஸ்வரர் தோன்றி ‘திருச்செந்தூர் சென்று கந்தவேளைப் பாடுக’ என ஆணையிட்டார். அதன்படி திருச்செந்தூர் வந்தார் ஆதிசங்கரர். அதிகாலையில் ஐந்துதலை நாகம் ஒன்று மூலவர் முருகனை வழிபடும் காட்சியைச் சிலிர்ப்புடன் கண்டார்.  உடனே சுப்ரமண்ய புஜங்கம் எனும் அதியற்புதமான துதியை மனமுருகிப் பாடினார். அவரது காசநோய் அப்போதே காணாமல் போயிற்று.

இந்த சுப்ரமண்ய புஜங்கத்தைப் படிப் பவர்கள் அனைவரும் தம் துயரெல்லாம் நீங்கி வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

தொகுப்பு: பிரபுசங்கர்

Tags : Sentilandava ,Shankar ,
× RELATED வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை...