×

வன்முறைச் சூழலில் அமைதி

(மத்தேயு 5: 38-48)

வன்முறை இன்று எல்லா இடங்களிலும் இயல்பான நிகழ்வு போன்று நடைபெறுகிறது. வன்முறை என்பது நாளிதழில் படித்துவிட்டுப் போகும் அல்லது ஊடகங்களில் காட்சியாகப் பார்த்து ஒதுக்கித்தள்ளும் ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் தெருச்சண்டை தொடங்கி குழுச்சண்டை என விரிந்து உயிர்க் கொலைகள்,
உடைமைகள் அழிப்பு  என நடைபெற்று வருகிறது.

வன்முறைக்கு வன்முறை தீர்வாக அமையாது. பதிலுக்குப் பதில் வன்முறை என்பது வன்முறையை ஒரு தொடராக மாற்றும். நமது காலகட்டத்தில் வன்முறைக்கு நன்முறையைத் தீர்வாக வழங்கியவர்களில் காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா முதலானோர் சிறப்பிடம்  பெறுகின்றனர்.

வன்முறைக்கு இயேசு கிறிஸ்துவின் புரட்சிகர தீர்வு

இன்று இந்தியாவிலும், உலகெங்கும் பல்வேறு சட்டங்கள் தண்டனைகள் மூலம் வன்முறை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு வாழ்ந்த சமூகம்கூட தனக்கென சட்டங்கள் வகுத்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டது. வன்முறைகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் அச்சட்டங்கள் அவர்களுக்குப் பயன்பட்டது.

இயேசுகிறிஸ்து அவரது சமூகத்து சட்டங்களின் குறைபாடுகளையும், பலவீனங்களையும் மற்றும் அவைகள் எவ்வாறு ஏழை எளிய மக்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பெரும் சுமையாகவும் இருந்து வருகிறது என்பதை உணர்ந்தார். எனவே தனக்குக் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறான சட்டங்களை விமர்சித்தும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை மீறவும் கற்பித்தார்.

இயேசுகிறிஸ்து வன்முறைக்கு வழங்கிய தீர்வு சட்டம் சாராதது. அது புரட்சிகரமானது. அத்தீர்வு என்பது வன்முறையாளர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு மூன்றாவது ஒரு நபர் வழங்கும் தீர்ப்பும் அல்ல தீர்வும் அல்ல. மாறாக வன்முறையால் பாதிக்கப்பட்டவர் வழங்கும் தீர்வு. இது வன்முறைக்கு நடந்த இடத்திலேயே ஒரு முடிவு கட்டுவதுடன் வன்முறையாளர் மீட்கப்படவும் வழிவகுக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில்,  குற்றத்தின் அளவிற்கேற்ப தண்டனை வழங்குதல் என்ற நிலை இருந்தது. இதுவும் கூட வன்முறையின் அளவைக் குறைக்கும் ஒரு சிறிய நடவடிக்கை என்றே கூறலாம்.  ஆனால் இயேசு கிறிஸ்துவோ வன்முறைக்கு முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கற்றுத் தருகிறார். அவர் ‘‘உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டுங்கள்’’ என்றார்.

ஒருவர் மற்றவரது கன்னத்தில் அறைவது என்பது இருவருக்கிடையில் ஏதோ இரகசியமாக நடந்திடும் நிகழ்வல்ல. அது பெரும்பாலும் பிறர் கண்பார்வையில் அல்லது ஒரு பொதுவெளியில் நடைபெறுவது. இது இருவருக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் உச்சமாக நிகழ்வது. இதைப் பலர் பார்க்கும் வாய்ப்புடையது. இதில் கன்னத்தில் அடி வாங்கியவர் மட்டுமல்ல அவரோடு கூட அவரது குடும்பத்தினரும் அவமானத்தை அனுபவிக்க நேர்கிறது.

இச்சூழலில் கன்னத்தில் அடிபட்டவர் அருகிலிருக்கும் ஏதோ ஒன்றை ஆயுதமாக எடுத்து அடித்தவரைப் பலமாகத் தாக்குவதுதான் இயற்கை. இயேசு கிறிஸ்து கன்னத்தில் அடி வாங்கியவரை மறு கன்னத்தைக் காண்பிக்கக் கற்பிக்கிறார். முதலாவதாக இச்செயல் வன்முறை தொடர் வன்முறையாவதைத் தடுக்கிறது. இரண்டாவதாக வன்முறையாளர்தான் அடித்தவன் தன்னைத் திருப்பித் தாக்குவான் என்று நினைத்துப் பெரியதொரு வன்முறைக்குத் தயாராகையில் வன்முறைக்கு ஆளானவரின் செயல் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது. மூன்றாவதாக வன்முறைக்கு ஆளானவரின் செயல் நடந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்தவரை வியப்புக்குள்ளாக்குகிறது. வன்முறையாளரை அவமானத்திற்கு ஆளாக்குகிறது. நான்காவதாக வன்முறைக்கு ஆளானவர் தாமே தமது செயல் மூலம் வன்முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இது மிகவும் எளிதான செயலல்ல. மிகவும் கடினமானது. இது கடினமானது, ஆனால் சாத்தியமானது. பல முறை பலரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வன்முறைக்குப் பதில் வன்முறை செய்யாதவர்களைக் கோழைகள் எனக் கருதிவிடக்கூடாது. உண்மையில் அவர்கள் துணிவு கொண்டவர்கள் ஆற்றல்மிக்கவர்கள். வன்முறையில்லா உலகம் உருவாகிட நாமும் நம்மை அர்ப்பணிப்போம்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Tags :
× RELATED சுந்தர வேடம்