×

திருவரங்கத்தில் தீபாவளி

திருவரங்கத்தில் மிக விசேஷமாக பெருமாள் தீபாவளியைக் கொண்டாடுவார். அதுவும், அவர் மாப்பிள்ளை பெருமாள் அல்லவா. அதனால், தன் மாமனாரான பெரியாழ்வாருக்கு சீர் செய்வார். இந்த உற்சவத்தை ஜாலி உற்சவம் அல்லது ஜாலி அலங்காரம் என்பார்கள். ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.

தீபாவளிக்கு முதல் நாள், மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோயிலில் கைங்கரியம் செய்வோருக்கும், அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படும். இரவு உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்படும். கோயிலில் உள்ள ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் அனுப்பி வைக்கப்படும். தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்
படும். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு, கிளி மண்டபத்துக்கு வந்து நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். காலை நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார்.

தொகுப்பு : அருள்ஜோதி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?