×

பேரருள் புரிவார் ஸ்ரீபெத்தரண சுவாமி

செந்தாம்பாளையம், பவானி, ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள செந்தாம்பாளையத்தில் பவானி நதிக்கரையில் நஞ்சுண்டேஸ்வரர், சமேத ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீபெத்தரண சுவாமி அருட்பாலிக்கிறார். இக்கோயிலில் மூல தெய்வமாக நஞ்சை உண்டதால் நீலநிற மேனியை உடைய நஞ்சுண்டேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார்.

செந்தேவனூக் என்ற இயற்பெயர் கொண்ட செந்தாம்பாளையத்தில் அமைந்த இக்கோயில் 1709ம் ஆண்டிலிருந்து அறியப்படுகிறது.
இக்கோயிலின் சிறப்பே ‘‘எழுபது வெள்ளம் சேனைகள்’’ என்று அழைக்கப்படும் தெய்வங்களின் அவதாரங்களும், பிற தெய்வங்களுமே. இத்தலத்தில் நஞ்சுண்டேஸ்வரர், காமாட்சியம்மன், கணபதி, முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை, வீரபத்ர சுவாமி, மந்திர மாலை, எமதருமராஜன், பாட்டப்ப சுவாமி, கன்னிமார், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, பெத்தரணசுவாமி, ஆதி நாராயணப் பெருமாள், லட்சுமி, பரமநாச்சி, ஆயி, மாயம் பெருமாள், நயினார் ஆகிய தேவ கணங்கல் என்னும் எழுபது வெள்ளம் சேனைகளும் எழுந்தருளியுள்ளனர்.

இங்கு அனைத்து ஆண் தெய்வங்களும், பெண் தெய்வங்களும் இருப்பதால் மரியாதையின் காரணமாக இம்மடாலயம் ‘‘பெரியசாமி, ஆயி திருக்கோயில்’’ என்றும் வழங்கப்படுகிறது.இத்தலத்தின் சிறப்பு இங்கு அமைந்த மண் சிலைகளே. முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வச்சிலைகள் மண்ணால் செய்யப்பட்டு வெப்பப்படுத்தப்பட்டது.

அந்த காலத்தில் மண்பானைகள் செய்பவர்கள் செந்தாம்பாளையத்திற்கு வந்து குடிசை போட்டுத் தங்கி இந்தச் சிலைகளை செய்து தந்து விட்டுச் சென்றதாக, அவ்வூரார் தெரிவித்தனர். மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் இன்றும் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை நடசாவடிக்கு மாற்றிய பின்னர், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு மடாலயத்திற்கு கட்டிடத் திருப்பணிகள் செய்ய முடிவு  செய்யப்பட்டது.

புதூர் பண்ணாடி என்பவரின் தலைமையில் பணிகள் துவங்கப்பட்டன. எதிர்பாராத விதமாக இவர் இறக்க கட்டுமானப் பணிகள் நின்றது. ஐந்து அங்கணம் அஸ்திவாரம் அமைந்த கோபுரம் முழுமையடையாமல் நின்று தெய்வச் சிலைகள் நடசாவடியில் வைத்தே பூஜிக்கப்படுகின்றன.

எழுபது சேனைகளின் தலைவரான பெத்தரணசுவாமியை குல தெய்வமாக அவர் சார்ந்த சமுதாயத்தினர் வணங்கி வந்தனர். அதிலும் பரமத்தி வேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் வசிக்கும் அந்த சமூகத்தினர் பெத்தரண சுவாமிக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கோயில் எழுப்பி வழிபடுகின்றனர்.

இருப்பினும் பெத்தரணசுவாமிக்கு   செந்தேவனூர் என்று இயற்பெயர் கொண்ட செந்தாம்பாளையமே பூர்வீக ஊராகும் என்று சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரின் அருகே அமைந்த குருநாத சுவாமி கோயிலிலும், வனக்கோயிலிலும் பெத்தரண சுவாமிக்கு சந்நதி உள்ளன.  
மயிலாடுதுறையில் இருந்து குடி பெயர்ந்து வந்த  சில சமூகங்களுக்கும் குல தெய்வமாக பெத்தரணசுவாமி திகழ்கிறார்.

வனத்தில் அமைந்த சாமிக்கு பலியிட்டு வேண்டினர். இதனால்தான் மடாலயம், வனக்கோயில் என்ற வடிவமைப்பு ஏற்பட்டது என்றும் வேறு இடங்களில் இவை காணப்படாது என்றும் கூறுகின்றனர். இக்கோயில் ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியிலிருந்து பவானி செல்லும் சாலையிலுள்ள செந்தாம்பாளையத்தில் உள்ளது. கவுந்தபாடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது.

தொகுப்பு: சு.இளங்கலைமாறன்

Tags : Perarul Purivar Sripetharana Swami ,
× RELATED பேரருள் புரிவார் ஸ்ரீபெத்தரண சுவாமி