×

வாழ்வைக் காக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்

மகாபாரதத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உண்டு. ஒன்று பகவான் சொல்லியது. இன்னொன்று பகவான் கேட்டது. பகவான் சொல்லியது பகவத் கீதை. பகவான் கேட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். சொல்லிய விஷயத்தை விட கேட்ட விஷயத்திற்கு மதிப்பு இன்னும் அதிகம். அதனால்தான் பகவத்கீதை பாராயணத்தை விட, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் உலகெங்கும் அதிகமாக நடந்து வருகிறது.

உண்மையில் ஒன்றோடு ஒன்று இணைந்ததுதான் பகவத் கீதையும் விஷ்ணு சஹஸ்ரநாமமும். பொதுவாக சகஸ்ரநாமம்  என்றாலே  விஷ்ணு சகஸ்ரநாமம்  தான். விஷ்ணு சகஸ்ர நாமத்தின் பலஸ்ருதி (பாராயணத்தின் பலன்) அதிஅற்புதமானது. பீஷ்மாச்சாரியார் எதிரே அமர்ந்து, பகவான் விஷ்ணு ,அப்பாவி போல், தன் நாமத்தை தானே கேட்கின்றார்.

இந்த மூர்த்தியின் பெருமை எளிதில் சொல்லக்கூடியதா? அவர் அனந்தன். பேராயிரம் உடைய பெரியோன். ஆயிரம் பாதங்களை உடையவன். பொதுவாக உலகத்தில் பொறுப்புத் துறப்புதான் அதிகம். ஆனால் இங்கே தேர்தல் வாக்குறுதி போலில்லாமல் ஒரு வாக்குறுதியை பகவான் தருகிறார்.

“நீ என்னை நினை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.” பகவான் தந்த வாக்குறுதி  கோடி கோடி ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. சரி, இந்த வாக்குறுதி வேலை செய்கிறதா? உண்மையில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஒருவரை காப்பாற்றுகிறதா? எப்படி? இதோ ஒரு அனுபவம். நம்முடைய நண்பர் ஒருவரின் அனுபவம் மதுரையில் இருக்கிறார். கிருஷ்ணசாமி என்று பெயர். 90 வயதுக்கு மேல் ஆகிறது. பரம வைஷ்ணவர். ஒரு வைஷ்ணவ பாகவதரைக்  கண்டால் பந்துக்களைக் கண்டதுபோல சந்தோஷம் அடைபவர்.

நாம் நினைக்கலாம். நல்லவர்கள் வாழ்க்கையில் பகவான் சிலசமயம் விளையாடுகிறான்  என்று தோன்றலாம். ஆனால் கைவிடுவதில்லை. மற்றவர்கள் விழிப்புணர்வு பெறவும் நல்வாழ்க்கை பெறவும் தன்னுடைய பக்தர்களின் வாழ்க்கையில் சில செயல்களை பகவான் நடத்துகிறான்.  அப்படிப்பட்ட ஒரு  விளையாட்டுதான் இவர் வாழ்விலும் நடந்தது. இவருடைய குமாரர்கள் நன்கு படித்து மருத்துவத் துறையில் உள்ளவர்கள். ஏன், பேரன் பேத்திகளும் கூட மருத்துவர்களாக இருக்கிறார்கள்.

அதிலே மதுரையில் மிகச் சிறந்த மருத்துவராக இருக்கக்கூடிய இவருடைய குமாரருக்கு, ஒரு நாள் இரவு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது.  ஏதோ வேலை செய்து கொண்டிருந்த பொழுது, கீழே விழுகிறார். வேலை செய்துகொண்டிருந்த கணிப்பொறியின் ஒரு கூர்மையான பகுதி விலாவில் குத்தி மண்ணீரலைக்(spleen) கிழித்தது. ரத்தப்போக்கு ஏற்படுகிறது. மயக்கம் அடைகிறார்.

பெரியவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியவில்லை.
அவர் குமாரர் பணிபுரிகின்ற  மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வருகிறது. கிட்டத்தட்ட ஊர் அடங்கிய இரவு நேரத்தில் நினைவற்ற நிலையில் அவருடைய குமாரர் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படுகிறார். வயதான இவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும் மனம் துடிக்கிறது. கையறுநிலை.

இப்பொழுது என்ன செய்வது? யாரை  
துணை கொள்வது? தோன்றாத் துணையாக
மனதில் தோன்றியவன் மாயக்கண்ணன்.

எந்த மருத்துவரை விடவும் சிறந்த மருத்துவன் அல்லவா அவன்.
மருத்துவனாய் நின்ற மாமணி மன்னன் அல்லவா.
பிறவி என்னும் நோய்க்கு மருந்து கொடுப்பவன்  அல்லவா.


மனது அலைபாய மாதவனை நினைக்கிறார். எப்பொழுதும் பெரியவர் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்பவர். இப்பொழுதும் அது தான் கை கொடுக்கிறது.

அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||


வேறொன்றும் நினையாமல் என்னை நினை. உன் யோக ஷேமங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். இனி அவன் கவனித்துக் கொள்வான். நம் வசம் எதுவும் இல்லை. அந்த இரவில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் தொடர்கிறது. திரும்பத் திரும்ப விஷ்ணு சகஸ்ரநாமம் தான். வியாதி தீரும் வரை மருந்து சாப்பிட்டு தானே ஆகவேண்டும்.

மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற மகனின் நிலை என்னாயிற்று என்று வயதான தகப்பனின் கவலையும் மனநிலையும் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். இதேநேரம் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதைப்  பார்ப்போம். மருத்துவமனையில் கொண்டு போய் இவர் குமாரரைச்  சேர்த்ததும் மிகப் பெரிய பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. அங்கேயே வேலை பார்க்கின்ற மருத்துவர் அல்லவா. எத்தனை உயிர்களைக் காப்பாற்றியவர். ஆனால் இன்று தன் உயிருக்குப் போராடும் நிலை.

மருத்துவரை  இறைவனுக்குச்  சமமாக கருதுவது மனிதகுலம். காரணம் போகும் உயிரைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு மருத்துவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்கள் மூலமாக அதை செயல்படுத்துபவன் மாலவன்தான் என்பதை மறந்து விட முடியாது. சக நண்பருக்கு நேர்ந்த ஆபத்தை எண்ணி மருத்துவர்கள் துடிக்கிறார்கள். ஆபத்தான அவர் நிலையை அறிகிறார்கள். எங்கும் பதட்டம். அப்பொழுது எதிர்பாராமல் ஒரு மருத்துவர் அந்த மருத்துவமனைக்கு அந்த இரவு நேரத்தில் வந்திருக்கிறார்.

மருத்துவமனையில் இவ்வளவு பதட்டம் ஏன் இருக்கிறது என்று விசாரித்தபொழுது தெரிகிறது. சக மருத்துவர் ஒருவருக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. யார் என விசாரிக்கிறார். அவரும் மற்ற மருத்துவர்களுக்கு நண்பர்தான்.  “எங்கே அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக்  கொடுங்கள்”.  பார்க்கிறார். மற்ற மருத்துவர்களுடன் கலந்துரையாடுகிறார். “இவருக்கு மண்ணீரல் குத்தி கிழிபட்டிருக்கிறது. விலா பகுதியில் சில எலும்புகள்(ribs) உடைந்து இருக்கின்றன. ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தில் முடியும்.”

“காலையில் செய்யலாமா?’’ “இல்லை. இப்பொழுதே செய்ய வேண்டும்... தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. no alternate... உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் ஆபத்து அதிகமாகிவிடும்”.  அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவியாளர்கள் இல்லாத நிலையிலும் கூட உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இங்கே வீட்டில் பெரியவர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தைத்  தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தையல் போடப்பட்டு இரத்த வெளியேற்றம் தடுத்து நிறுத்தப்படுகிறது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிறைவு பெறும் பொழுது பெரியவருக்கு தொலைபேசி வருகிறது. “கவலைப்படாதீர்கள்.. ஆபத்து நீங்கி விட்டது”.
மறுபடியும் பகவான் கண்ணனின் வார்த்தைதான் இங்கே நினைவு கொள்ள வேண்டும். அசலான பக்தியோடு என்னை நினை. உன்னுடைய யோகங்களையும் ஷேமங்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன்.

விஷ்ணு சகஸ்ரநாமம் முழுமையையும் பாராயணம் செய்ய முடியா விட்டாலும் தினசரி மாலை விளக்கு வைத்து இந்த ஒரு ஸ்லோகத்தையாவது பக்தியோடு பாராயணம் செய்யுங்கள்.

துஞ்சும் போது அழைமின்
துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லினும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர்
நம்முடை வினைக்கு
நாராயணாவென்னும் நாமம்


 - என்று இதைத்தான் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமம் உங்களுக்கு ஆபத்து வராமல் காக்கும். ஆபத்து வந்தாலும் துணையாக நிற்கும்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்