×

கண்ணொளி தந்த கண்ணன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிரம்ம லோகம். அங்கே எப்போதும் வாணியின் வீணா நாதம் தானே கேட்கும்? ஆனால், இன்றோ ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ஆம்! தேவ சிற்பி விஸ்வகர்மாவும், அசுர சிற்பி மயனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ‘‘சுவர்க்க லோகம் முதல் அனைத்து தெய்வீக லோகத்தையும் நிர்மாணித்த நான்தான் சிறந்தவன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் விஸ்வகர்மா. ‘‘இல்லை.. இல்லை.. பறக்கும் முப்புரங்கள் முதல் அனைத்தும் படைத்த நான்தான் சிறந்தவன்” என்று தொண்டை கிழிய வாதாடினார் மயன்.

பிரம்மாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. போதாத குறைக்கு, இருவரும் தங்களில் யார் சிறந்தவர் என்று பிரம்மாதான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்ற பெரும் பொறுப்பை அவரிடம் தந்து விட்டனர். இருவருமே பெரும் படைப்பாளிகள். பிரம்மனுக்கு, இருவரில் யார் சிறந்தவர் என்று தீர்ப்பு வழங்குவது என்று விளங்கவில்லை. ஒருவழியாக பிரம்மன், ஒரு யுக்தியை கண்டான்.

‘‘அன்புக் குழந்தைகளே! இருவருமே சிறந்தவர்கள்தான். ஆனால், விஸ்வகர்மா முழு முதற்பொருளான நாராயணனுக்கு அழகான வைகுண்ட நகரம் கட்டி தந்திருக்கிறான். அதன் அழகிற்கு ஈடு இணையே இல்லை. ஆனால், நீயோ.. இறைவனுக்கு என்று ஒன்றுமே செய்யவே இல்லை. இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் போதுதான் கலை அழகானதாக ஆகிறது.

உன்கலையில், இறைவனுக்கு அர்ப்பணிப்பு இல்லை. ஆகவே, விஸ்வகர்மாவே சிறந்தவன். இதுவே என் தீர்ப்பு” என்று நியாயமான தீர்ப்பை வழங்கினார் பிரம்மன். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரவே, விஸ்வகர்மா பிரம்மனுக்கு வந்தனங்கள் செய்துவிட்டு, மயனை ஏளனமாக பார்த்துவிட்டு, இல்லம் திரும்பினான். ஆனால், மயனுக்கு அவமானம் பிய்த்துத் தின்றது. அதனால், கவலை அதிகமானது.

தன் வாழ்நாள் முழுவதும் அசுரர்களுக்கே உழைத்து இளைத்துவிட்டது, அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. தெய்வத்தை ஒருபோதும் வணங்கி தொழாதது வருத்தத்தை தந்தது. தொழில்தொழில் என்று ஓடி முழு முதல்வனை மறந்துவிட்டோமே என்று நொந்துகொண்டார்.  இறைவனை மறந்த இந்தப் பிழைக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும் என்று அவனது ஆழ்மனது கட்டளை இட்டது. பரிகாரம் சொல்லத்தான், எதிரில் நான்முகன் இருக்கிறாரே? பிறகென்ன கவலை? பிரம்மனிடம் தானும் நற்கதி அடைய ஒரு வழி சொல்லுமாறு மயன் கேட்டான். மயனின் கோரிக்கையை கேட்ட நான்முகன், சற்று யோசித்த பின் பதிலுரைக்க ஆரம்பித்தார்.

‘‘காவிரிக்கரையில் வைகுண்டத்தை விட அழகாக ஒரு தலம் உருவாக்கு. அங்கே அந்த மாதவனை எண்ணி தவம் புரி. உனது மனக்குறை தீரும். திருவருள் சேரும்.” என்று பிரம்மன் உபதேசித்தான். அதன்படி, மயன் பிரம்மபுரம் என்ற இடத்திற்கு வந்தான். வைகுண்டத்தை பழிக்கும் அற்புத நகரத்தை தோற்றுவித்தான். அங்கேயே தவம் புரிந்தான்.

நல்ல நாள் கனிந்தது. தவம் கனிந்து, மாதவன் அருள் கிட்டும் அமிர்த யோகம் மயனுக்கு வந்தது. சங்கு, சக்ர, கதா தாரியாக, ஸ்ரீதேவி -  பூதேவி சமேதனாக கருடவாகனம் ஏறி, மாலவன் காட்சி தந்தான். ‘‘ஆராவமுதே போற்றி! திருமகள் தலைவா போற்றி போற்றி! நீல வண்ணா போற்றி! தாமரைக் கண்ணா போற்றி!” என்று மயன் பலவாறு போற்றி மாதவன் மலரடி பணிந்தான். பவழச்செவ்வாய் குவிய புன்னகைத்த இறைவன், வலது கை உயர்த்தி ஆசிவழங்கினான். ‘‘மகனே மயன், நீ வேண்டுவது யாது? தயங்காமல் கேள். தாராளமாகதருவேன்.” என்று கோவிந்தன் வாய்மலர்ந்து அருளினான்.

ஸ்ரீராமன் திருக்கோலத்தையே போற்றி வாழும் மயனுக்கு, மாலவனின் இந்தரூபத்தைவிட ராமனின் ரூபமே வெகுஉவப்பாக இருந்தது. சர்க்கரை இருக்க, கரும்பை யாராவது விரும்புவார்களா? என்று தோன்றியது. ஆகவே தனது எண்ணத்தை வார்த்தையாக்கி, மயன் பணிவோடு கூறினான். ‘‘பிரபு! தங்களின் இந்த திருக்கோலத்தைவிட, ராமாவதார திருக்கோலமே கண்ணுக்கும் கருத்திற்கும் இனியது. ஆகவே, எனக்கு தாங்கள் ஸ்ரீராம சந்திர மூர்த்தியாக காட்சி தர வேண்டும். இதுவே என் ஆசை”. பக்தன் பேச்சுக்கு மறுபேச்சு பேசுவானா பக்தவத்சலன்? தன்னைத்தாங்கி வந்த கருடனுக்கு கட்டளையிஇட, அவனை நோக்கி திரும்பினான் மாயவன்.

‘‘கருடா! இதோ இந்த சங்கு சக்கரத்தை நீ வைத்துக்கொள். இந்த பக்தனுக்கு இது பிடிக்கவில்லையாம். இந்த கோதண்டம் மட்டும் போதுமாம். ஆகவே, இவன் மனம் குளிர நான் ராமனாக காட்சிதரப்போகிறேன். அவன் தரிசிக்கும் வரை நீயே இதை வைத்துக்கொள்” என்று சொல்லி கருடனிடம் தன் சங்கு சக்கரத்தை மாயவன் கொடுத்தான்.

கோதண்ட வில் ஏந்தி கோமகன் ராமனாக மயனுக்கு காட்சி தந்தான் மாயவன். மயன் ராமனை பார்த்துப் பார்த்து பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ராமனின் ரமணீய சௌந்தர்யத்தை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திண்டாடி, கண்களில் நீர் சோர, அவன் பாதத்தில் தஞ்சமென விழுந்தான். வில்லேந்திய அழகியவன் என்று பொருள்பட ‘‘கோலவில் ராமா” என்று நெக்குருக அழைத்தான்.

அந்த பெயருடன் இன்றுவரை நமக்கு காட்சி தருகிறான் மாயவன். இந்தக் கோலவில் ராமன், அசுரகுரு சுக்கிராச்சாரியாரையும் அரவணைத்து இருக்கிறான். அரவணைப்பதில் அண்ணலுக்கு இணை உண்டா என்ன?வாமன அவாதாரம் எடுத்து, மாயவன் மாபலியின் அசுவமேத யாகசாலைக்கு வந்தார். மூன்றடி மண்ணை யாசகமாக வேண்டினார். பலியும் தந்தேன் என்று சொல்லி நீர் வார்த்து தானம் வழங்க, தனது கமண்டலத்தை எடுத்தான். வாமன வடிவில் வந்திருப்பதுபரம்பொருள், என்று சுக்கிரன் தனது ஞான திருஷ்டியால் கண்டுகொண்டார். இந்திரனின் தாயான அதிதியின் சரணாகதியை ஏற்று, இந்திரனை காக்க வந்திருக்கிறார் இறைவன், என்பதும் சுக்கிரனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

ஆகவே, மாபலியை காக்க வேண்டும் என்று முடிவு செய்தார் சுக்கிரன். பலியை தடுத்தார். தன்னிடம் தானம் பெறுவது இறைவன் என்றால், என்னைவிட பெரிய பாக்கியசாலி யாரும் இல்லை. ஆகவே நான், தானம் வழங்கியே தீருவேன் என்று பலி மறுத்துவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் சுக்கிராச்சாரியர், ஒரு வண்டாக மாறி, மகாபலியின், ஜல பாத்திரத்தின் நீர் விழும் துளையை, அடைத்துக் கொண்டார். இதனால், இறைவனுக்குத் தானம் வழங்க மகாபலி எத்தனித்த போது நீர் விழவில்லை.

ஆகவே மாலவன் ஒரு தர்பையை எடுத்து, பாத்திரத்தின் துளையை குத்தினார். இதனால் சுக்கிரனின் கண்பறிபோனது. பாவத்திலேயே கொடிய பாவம், பிறர் தரும் தானத்தை தடுப்பது. அதைச் செய்த சுக்கிரன், குருடாக வேண்டியதுதான் என்று மாயவன் தண்டித்தான் போலும். தவறை உணர்ந்த சுக்கிரன், மயன் காவிரிக் கரையில் உருவாக்கிய பிரம்மபுரம் வந்து, வண்டு உருவில் தவம் கிடந்தார். அவருக்காக மாதவன் மனம் கனிந்து காட்சி தந்து அவர் கண்ணொளியை மீண்டும் தந்தான்.

சுக்கிரன் ஆனந்தப்பெருக்கில், ‘‘சுவாமி என் கண்ணிற்கு ஒளி தந்த தங்கள் திரு சந்நதியில் தீபஒளியாக உங்களை என்றும் ஆராதிக்க அருள் தாருங்கள் அய்யனே.” என்று வேண்டிக்கொண்டார். மாதவன், அவர் வேண்டுதலின் படி அவரை திரு விளக்காக மாற்றி தன்னருகே வைத்துக்கொண்டான். வெள்ளி எனப்படும் சுக்கிரனை வணங்கி அருள் பெற்றதால் ‘‘திருவெள்ளியங்குடி” என்று அந்த திவ்யதேசம் அழைக்கப்படுகிறது.

விளக்காக மாறிய சுக்கிரனை, இன்றும் சந்நதியில் கண்டுகளிக்கலாம். அதைபக்தர்கள் ‘‘நேத்ர தீபம்” என்று அன்போடு அழைக்கிறார்கள். மயனுக்கு அருளுவதற்காக மாதவன், சங்கு சக்ரத்தை கருடனிடம் தந்தான்அல்லவா? இத்தலத்து கருடாழ்வார், இன்றுவரை அந்த சங்கு சக்கரத்தை கையில் ஏந்தி நிற்கிறார். இந்த கோலத்தில் கருடனை வேறெங்கும் சேவிக்க முடியாது. கல்லில் முளைத்த வாழைதான் இத்தலத்துதலவிருட்சம்.

இத்தலத்து உற்சவரின் பெயர் ‘‘ஸ்ருங்கார சுந்தரன்”. அதாவது, ஒப்பனை செய்வதில் விருப்பம் உள்ளவன் என்று பொருள். ஆம்! தன் பக்தன் மயனுக்காக, நொடியில் ராமனாக மாறினான் அல்லவா? இப்படி பக்தர் கேட்கும் விதத்தில் ஒப்பனை செய்துகொள்ள விருப்பம் உள்ளவனாக இருப்பதால், அவனுக்கு இந்த பெயர் மிகவும் பொருந்தும். திருமங்கை ஆழ்வாரால் பத்துப்பாசுரங்களில் புகழப்பட்ட அந்த வடிவழகனை காண, இரண்டு கண்கள் போதாது. கும்பகோணத்திலிருந்து ஆணைக்கரை செல்லும் வழியில், செங்கனூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அற்புதத் தலம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Tags : Kannan ,
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது