×

வாசிப்போம்! வளர்வோம்!

திசைகாட்டும் தெய்வீகம்!20

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்


தலை குனிந்து நம்மைப் படிக்கச் செய்யும் புத்தகங்கள்தான் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து நாம் வாழத் துணைபுரிகின்றன என்கின்றார் ஒரு கவிஞர். அறிவைப் புகட்டும் புத்தகங்களை ஆயுள் முடியும்வரை அனுதினமும் அணுகிக் கொண்டே இருங்கள் என்பதுதான் புகழ் பெற்ற மேதைகள் பலர் புகட்டும் உபதேசம்.
பேரறிஞர் அண்ணாவிற்குக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அயல்நாட்டிலிருந்து பிரபலமான டாக்டர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் அண்ணா ஒரு அன்பு வேண்டுகோள் வைத்தார்.

‘அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளிப் போடுங்களேன்’ ‘பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும்’ என்ற டாக்டர்; `எதற்காக ஒரு நாளைக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்கிறீர்கள்? காரணம் அறிந்து கொள்ளலாமா’’? என்றார்.

‘ஒன்றுமில்லை பயனுள்ள புத்தகம் ஒன்றைய படித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் பல பக்கங்கள் மீதம் உள்ளன. அறுவை சிகிச்சையின் முடிவு எப்படி ஆனாலும் சரி, ஒரு நல்ல நூலைப் படித்து முடித்த நிறைவு எனக்குக் கிடைக்கும். அதனால்தான் ஒரு நாள் தள்ளிப்போடுங்கள் என்றேன்’ என்றார். பேரறிஞருக்கு இருந்த ஆர்வம் வாசகர்களாகிய நம் அனைவருக்கும் வரவேண்டும்!

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு


விரிந்து பரந்த இந்த வையகத்தில் எல்லா நாடும், எல்லா ஊர்களும் கற்றவர்க்கே! ஆகவே, வாழ்வின் இறுதிவரை வாசிப்பை மேற்கொள்வோம்! என்கிறார் வள்ளுவர். கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு நிகழும்!

மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின் கீழ் உள்ள வலிகள் போல்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்கு
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு


என்னும் பாடல்வரிகள் பலரும் அறிந்தது தானே! பலபேர் பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் இவற்றோடு படிக்கும் பணி நிறைவு பெற்று விடுவதாக நிச்சயித்துக் கொள்கின்றனர். பணி நியமனம் பெற்ற பிறகு அலுவலகத்திற்குச் செல்வது, விடுமுறை நாட்களில் அரட்டை அடிப்பது, பொழுது போக்குகளில் ஈடுபடுவது என நேரத்தைக் கழிப்பதையே வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ‘நல்ல புத்தகங்கள்தான் வாழ்வில் இறுதி வரை நம்மோடு வரும் நண்பர்கள்’ என்பதை அறவே மறந்து விடுகின்றனர்.

‘அறிவாயுதம் ஏந்துங்கள்!’ என்று சாக்ரடீஸ் முழங்குகின்றார். திரும்பிய திசைக்கெல்லாம் நம் மனத்தைச் செல்லவிடாமல், தீமையை நீக்கி நல்லவற்றையே நாடச்செய்யும் அறிவு அழிவுவராமல் காக்கும் ஒரு அற்புதக்கருவி என்கின்றது திருக்குறள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

ஆண் - பெண் என்ற பேதமின்றி அறிவொளி பரவவேண்டும். அறியாமை இருள், அறவே அகல வேண்டும் என்பதுதான் உலக அறிஞர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

கல்வியே இல்லாப் பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல்விளைந்திடலாம்! நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை!

என்று பாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

பெருந்தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்.

என்று கவியரசர் கம்பரும் பாடுகின்றார்.

மனித குலம் உயர்ந்த பல சாதனைகளை உலகில் உருவாக்கியுள்ளது. அவை அனைத்திலும் முதலிடத்தைப் பிடிப்பது புத்தகங்களே என்கிறார் சிந்தனையாளர் தாமஸ்கார்லைல் அற்புதமான பயனுள்ள புத்தகங்களை போல் ஒரு அரிய தோழன் எவருக்குமே வாழ்க்கையில் அகப்படுவதில்லை! ஆதி இலக்கிய நூல்கள், ஆழ்கடல் நீந்தும் கலன்களாக நம்மைக் கரை சேர்க்கின்றன. நீதி இலக்கிய நூல்கள், திசை தடுமாறும் பலருக்கு நேர் வழி காட்டும் கரங்களாக விளங்குகின்றன. ஒருவனின் பழக்க வழக்கங்களையும், ஒழுக்கத்தையும் உருவாக்குவதில் நண்பர்களைப் போலவே, புத்தகங்களுக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து சீரிய புத்தகங்களையே தேர்ந்தெடுத்து நாம் படித்திட வேண்டும்.

கற்க கசடற என்று கூறும் வள்ளுவர் ‘கற்பவை’ என்று கூறுவதைக் கவனமாக நாம் கவனித்திட வேண்டும்.ஏனென்றால், வாழ்வில் திரும்பப் பெறவே முடியாத அரிய நேரத்தை ஒரு நூலைப் பயில்வதற்கு நாம் செலவிடுகின்றோம். எனவே, அந்நூல் உரிய முறையில் நம் உள்ளத்தைப் பண்படுத்துவதாகவும், நம்மை உயரச்செய்வதாகவும் அமைந்திட வேண்டும்.

மாவீரர் அலெக்ஸாண்டர் ஒருமுறை பளபளக்கும் தங்கக் கிண்ணம் ஒன்றைப் பலர் சூழ்ந்திருக்கும் அவையில் காட்டினார். பொலிவுடன் விளங்கும் இப்பொற்கிண்ணத்தில் பொருத்தமாக வைக்கத்தக்கப் பொருள் என்ன? என்று வினவினார். ஒவ்வொருவரும் உரியபொருள் என பலவற்றைச் சொன்னபோது, கிரேக்க
இலக்கியமான ‘இலியத்’ என்னும் காவியமே. இத்தங்கப் பாத்திரத்தை அலங்கரிக்கத் தகுதியானது என்றார்.

‘புஸ்தகம் ஹஸ்த பூஷ்ணம்’ என்றே நம் வடமொழி புகழ்கின்றது. மனிதர்களுக்குத் தனிமையில் தக்க துணையாகவும், உரிமையோடு பழகும் உள்ளார்ந்த தோழனாகவும், உபதேசிக்கும் ஞான குருவாகவும் விளங்கும் நூல்கள் இல்லாத இல்லங்கள், பாலை வனங்களுக்கு நிகரானவையே என்கிறார்கள் சான்றோர்கள்.

வீடுதோறும் கலையின் விளக்கம்!
வீதிதோறும் இரண்டொரு பள்ளி!
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி!
தேடு கல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்.


கலாசாலை இல்லாத ஊரை தீயிட்டுக் கொளுத்துதலே கலைமகளுக்குச் செய்யும் கற்பூர ஆரத்தி என்று மனக் கொதிப்புடன் பாடுகிறார் மகாகவி. நூலகம் என்பது கோயில். அதிலுள்ள சுவடிகள்தான் தெய்வம். ஒரு நூல் நிலையக் கதவு திறக்கும் போது, நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.   
 
மாணிக்கவாசகர் சொல்ல, சிவபெருமானே எழுதிய சிறப்புமிக்க திருவாசகம். திருவாசகப் புத்தகப் பிரதி ஒன்றை இறைவனே தன் கைவசம் வைத்திருப்பது எதற்காக? இதற்கான விடையைக் கூறுகிறார் மனோன்மணியம் சுந்தரம்!

‘‘கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ
உடையான் அம்பலத்துள் ஒருபிரதி கருதியதே!’’

அதாவது அண்டாண்டங்கள் அனைத்தும் அழித்த ஊழிக்காலத்திற்குப் பின்னர், தான் மட்டும் தனியாக இருக்க வேண்டி வருமே! அப்போது நாம் படிக்க, நம் தனிமையைப் போக்க, கட்டாயம் கையில் புத்தகம் ஒன்று தேவை எனக் கருதியே வாசித்து மகிழ, வாசக நூலை எழுதினார் சிவபெருமான் என்று பாடுகிறார் கவிஞர்.

‘ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்’


என்று பாடுகிறார் ஆழ்வார்!

அறியாமை இருட்டை அறிவொளியால் நீக்குவோம்!

வாசிப்பை சுவாசிப்பாய் வாழ்வில் மேற் கொள்வோம்!

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!