×

விஸ்வரூப தரிசனம் முதல் அர்த்தசாம வரை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம் என்றால், அதிகாலையில் முதல் தரிசனம் என்று பொருள். அதாவது, இறைவனை திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. திருமஞ்சனம் என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும். மற்ற தரிசனத்திற்கும், விஸ்வரூப தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம்?

சாதாரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனைப் பார்ப்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது, நாம் சென்று இறைவனைப் பார்ப்பது தரிசனம். ஆனால், இறைவன் நம்மைப் பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலையில் முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னைப் பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அதுதான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. ஆறுகால நித்திய பூஜை அல்லது ஆறுகால பூஜை என்பது கோவில்களில் ஆகம முறைப்படி தினமும் நடைபெறுகின்ற ஆறு பூஜைகளாகும்.

ஆறு கால பூஜைகள்
உசத்கால பூஜை
காலசந்தி பூஜை
உச்சிக்கால பூஜை
சாயரட்சை பூஜை
சாயரட்சை இரண்டாம் கால பூஜை
அர்த்தசாம பூஜை
உசத்கால பூஜை


முதல் பூஜையான இது, சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின் படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும். இந்த பூஜையின்போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜைசெய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்பு பெருமான் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோயிலை வலம் வந்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூஜை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்குச் செல்வதாக நம்பிக்கை. இந்தப் பூஜை அபிஷேக ஆராதனையோடு முடிவடைகிறது.

காலை சந்தி

ஆகமத்தின்படி காலை சந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூஜையின் போது சூரியன், விநாயகருக்கு, பூஜை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூஜை முடிவடைகிறது.

உச்சிகால பூஜை

இப்பூஜை நண்பகலில் நடத்தப்படுகிறது. விநாயகர் பூஜை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான லிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்த பூஜைப்பொருட்கள் மூல வரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேஸரிடம் வைத்து வழிபடப்படுகிறது.

சாயரட்சை பூஜை

இந்த பூஜையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூஜை, மூலவரான லிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

இரண்டாம் கால பூஜை

விநாயகர் பூஜை, மூலவருக்கு அபிஷேக ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூஜை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூஜை நடைபெற்று, சண்டேஸ்வர பூஜையுடன் இரண்டாம் கால பூஜை முடிவடைகிறது.

அர்த்த சாம பூஜை

மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் சென்று அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனை பள்ளியறை பூஜை என்பர். பள்ளிறைப் பூஜை முடிந்ததும், சண்டேஸ்வரர் பூஜை நடைபெறுகிறது. பின்பு, பைரவர் சந்நதியில் சாவியை வைத்து பூஜை நடைபெற்று அர்த்தசாம பூஜை முடிவடைகிறது.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்