×

தசமஹா வித்யாவை வணங்குவோம்!

தசமஹாவித்யா” என்று போற்றப்படும் பத்து மஹா தேவியரும் ஆதிபராசக்தியான, அம்பாளின்  அம்சங்களே ஆவர். காளி, தாரா, ஷோடசி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்னும் பெயர்க்கொண்ட இந்த பத்து மஹாதேவியரையும் நவராத்திரி சமயம் பூஜிப்பது மிகுந்த விசேஷமாகும். அதுமட்டுமல்லாமல், தேவியர்களின் மந்திரங்களை சொல்லி நவராத்திரியை பூஜிப்பது  சிறந்ததாகும்.

காளி: கரிய நீலநிறம் கொண்டவள். வேதத்தில், அதர்வண வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் அமைப்பு காளியின் உருவம்.

ப்ரஹ்மா விஷ்ணு சிவோ கௌரீ லக்ஷ்மீர் கணபதி ரவி பூஜிதா: ஸகல தேவா ய: காளீம் பூஜையேத் ஸதா

தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாகக் காட்சியளிப்பவள்.

நைவ தாரா ஸமா காசித் தேவதா ஸர்வ ஸித்திதா:

ஷோடசி - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ லலிதா த்ரிபுர ஸுந்தரி என்று போற்றப்படும் தேவி.

ஸ்ரீ மாதா மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாஸனேஸ்வரி

புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியைக் காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்குக் காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.

தேவதா சித்கலாரூபா புவனேஸீ பராத்மிகா

திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து காட்சியளிப்பவள். கருநீலநிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸானை: த்ரிதேவைர் அர்ச்சிதா புரா
த்ரிபுரேதி ததா நாம கதிதம் தைவதை: புரா:


சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை, கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தைத் தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம்
இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

யஸ்யா ப்ரஸாத மாத்ரேண நர: ஸ்யாத்தி ஸதாசிவ:


தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவைக் கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளைநிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள்.

சேதினீம் துஷ்டஸங்கானாம் பஜே தூமாவதீமஹம்


பகளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால்
தாக்குபவள்.

ஓம் பகளாம்பாயை வித்மஹே ப்ரஹ்மாஸ்த்ர
வித்யாயை தீமஹி


மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்துக் கேடுகளையும் தனதாக்கி நன்மையைப் பிறருக்கு அருள்பவள்.

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லட்சுமியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி.

தொகுப்பு: அனுஷா

Tags : tasamaha ,
× RELATED மாவளியோ மாவளி...