×

ஆரோக்கியமான வாழ்வை அருளும் ஆவூர் பசுபதீஸ்வரர்

ஆவூர்

வைகுந்தவாசனிடமே தனது இறுமாப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு துணிவுகொண்டது காமதேனு. பாற்கடல் தந்த அற்புதங்களில் தான் மட்டுமே உயர்ந்தவள் என கர்வம் கொண்டது. கேட்போருக்குக் கேட்பதைக் கொடுக்கும் தன் திறமைக்குக் காரணம், தனக்குள் சுரக்கும் சிவசக்திதான் என்பதை உணர மறந்தது. தான் வழங்கும் எதுவும் தன்னால்தான் உண்டாகின்றன என்று தனியே இரு ஆணவக் கொம்புகள் அதற்கு முளைத்தன. எல்லாம் சரிதான்; ஆனால் ராஜரிஷியான வசிஷ்டரிடமே அது விளையாடிப் பார்த்ததுதான் வினையாக முடிந்தது.

 வசிஷ்டர் தனது ஆசிரமத்திற்கு எதிரேயுள்ள பரந்திருக்கும் வயலைக் கண்டார். வாடிய பயிரை கண்டபோது தானும் வாடினார். நிலம் வானை
ஏக்கத்தோடு வாய் பிளந்தபடி பார்த்திருந்தது. மக்கள் மழையில்லையே எனத் துவண்டு இருந்தார்கள். எங்கோ தர்மம் பிசகி நடப்பதன் கோளாறு இது என்று உணர்ந்தார், வசிஷ்டர். பயிரும், மக்களும் வாடுவது கண்டு தானும் சுருங்கி சருகானார். என்ன செய்வதென்று யோசித்தார். யாகம் செய்யத் தீர்மானித்தார் வாஜபேயம் எனும் யாகம்.

என்ன யாகம் அது?

 ‘‘வாஜம் என்றால் அன்னம். சோறு என்றும் பொருள் உண்டு. பேயம் எனில் பானம். அதாவது தானியச் செழிப்பையும், பானம் எனும் நீர்வளத்தையும் இந்த யாகம் கொண்டு வந்து கொடுக்கும். இந்த யாகத்தில் சோம ரச ஹோமம் நடத்தி, பசுக்களை பூஜித்து, வாஜம் எனும் அன்னத்தை ஹோமத்தில் செலுத்துவார்கள். பின்பு மீதியுள்ள அன்னத்தால் யாரால் இந்த ஹோமம் நடத்தப்படுகிறதோ, அந்த எஜமானனுக்கு அன்னாபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த யாகத்தின் சிறப்பம்சம் இது. முடிவாக மன்னனே வெண்பட்டுக் குடை பிடிப்பான். யாகத்தின் பலனாக மழை பொழியும். உலகம் சுபிட்சம் பெறும்’’ என்று விளக்கம் கொடுத்தார் வசிஷ்டர். அந்த யாகத்துக்கு காமதேனுவை வரவழைத்து பூஜித்தால் நற்பலன்கள் விளையும் எனத் தோன்றியது. காமதேனுவை அழைத்தார்கள். வானுலகில் தேவர்கள் துதியால் மயங்கிக் கிடந்தது காமதேனு. வசிஷ்டர் வரச் சொன்னார் என்றவுடன் அலட்சியப் பெருமூச்சு விட்டது.

‘எல்லாவற்றிற்கும் நான்தானா?’ என்று கர்வமாக அலுத்துக்கொண்டது. ‘‘சரி, சரி, நான் எப்பொழுதாவது வருகிறேன், என்று சொல்,’’ என்று சொல்லியனுப்பியது.
வசிஷ்டர் கோபமானார். தானென்ற பித்து அதற்குத் தலைக்கேறியிருப்பதை கண்டு வருத்தமானார். அதனுள் அருள் சுரந்து கொண்டிருந்த ஈசனை, சற்றே நீங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். சிவமும் அதற்காகவே காத்திருந்ததுபோல, அதனின்று நீங்கியது. சிவத்தை இழந்த காமதேனு, வெறும் பசுவானது.

அதற்கே உரிய இயல்பான களையையும், மங்கலத்தையும் பறிகொடுத்து ஒடுங்கியது. அதுவரை அதனை பூஜித்துக் கொண்டிருந்த தேவர்கள் அதன் பொலிவு இருள்வது கண்டு மருண்டு ஒதுங்கினார்கள்.  ஆனாலும் அகம்பாவம் குறையாத காமதேனு கடும் கோபம் கொண்டது. ஆனால் அந்த கோபத்தை வெளிப்படுத்த முடியாத பலவீனம் தன்னுள் நிறைந்திருப்பதையும் உணர்ந்தது. தேவருலகில் தன்னை சீந்துவார் இல்லாத நிலை கண்டு பயந்து, கீழிறங்கி பூமிக்கு வந்து திரிந்தது.

பசி, பட்டினி, சோர்வு... கடைசியாகத் தன்னை வரச்சொல்லி ஆள் அனுப்பியவர் வசிஷ்டர் தானே? அதற்குப் பிறகுதானே இவையெல்லாம் நடந்தது... அவரையே பார்ப்போம்... யாகசாலைக்குச் சற்றுத் தொலைவில் கண் களில் நீர் கொப்பளிக்க ஒடுங்கி, நடுங்கி நின்றுகொண்டிருந்த காமதேனுவை வசிஷ்டர் கண்டார். ‘அருகே வா’ என்று அழைத்தார்.

அந்த ஒரு கணத்தில் காமதேனு தான் படைக்கப்பட்டிருப்பதின் காரணத்தையும், தான் இறையருளைப் பிறருக்கு வழங்கும் வெறும் கருவிதான் என்பதையும் உணர்ந்தது. வசிஷ்டர் அதற்கு ஆறுதலளித்தார்: ‘‘அஸ்வத்த வனம் செல். அங்கே ஈசனை பூஜித்து வா. காலம் கனியும்போது காமதேனுவாக மாறுவாய்’’ என்றார்.
அடர்ந்து செழித்து காடாக பரவியிருந்த அஸ்வத்த வனம் எனும் அரசமரக் காட்டிற்குள் நுழைந்தது. தான் காமதேனுவா, பசுவா என்ற சந்தேக எண்ணத்தை அழித்தது.

சிவனை மட்டுமே தன் சிந்தையில் கொண்டது. அங்கே ஈசனைக் கண்டதும், முன்னங்கால்களை மடித்து தலை சாய்த்து வணங்கியது. சிற்றோடை பாயும் இடத்திற்குச் சென்று கொம்பால் கீறி, பொங்கி வரும் தீர்த்தத்தால் லிங்கத்தை அபிஷேகித்தது. கயிலை நாயகனை தனது நாவால் நீவி சுத்தம் செய்தது. பாலை சிவலிங்கத்தின் மீது பொழிந்தது. வெண்மை மிகுந்து பூக்கும் மல்லிகைபோல மனம் ஒளி கண்டது.  

பசுவின் பூஜையில் மகிழ்ந்த பசுபதிநாதர் காமதேனுவைப் பரிவுடன் பார்த்தார். உடனே அந்தப் பசு காமதேனுவாக மாறியது. மீண்டும் சிவசக்தி உள்ளுக்குள் பொங்கியது. காமதேனு வசிஷ்டரை பார்க்கச் சென்றது. வாஜபேய யாகத்திற்குத் தேவையான அனைத்தையும் சுரந்தது. யாகம் முடிந்தவுடன் அதற்காகவே காத்திருந்தது போல, மழை அடித்துப் பெய்தது.

இன்றும் அந்த தலம் ஆ எனும் காமதேனு பசு பூஜித்ததால், ஆவூர் என அழைக்கப்படுகிறது. கோச்செங்கட்சோழன் எடுப்பித்த ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில் இது.
தொன்மையான தலம் இது என புறநானூறு விவரிக்கிறது. இரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் கோட்டையாக சிறப்புற்றிருக்கிறது. ஆவூர் மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் ஆகிய அரும்புலவர்களைப் பெற்ற ஊர் இது. கோயிலின் கோபுரத்திற்கு நேரே கொடி மரத்திற்கு இடது புறத்திலிருந்து சற்று மேல் நோக்கி படிக்கட்டுகள் செல்கின்றன. மெல்ல ஏறி இடது பக்கம் திரும்பினால் நேராக பசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.

சற்று உள்ளே நகர வலப்பக்கத்தில் எத்தலத்திலும் காணக்கிடைக்காத பஞ்ச பைரவர்களைத் தரிசிக்கலாம். இத்தலத்தின் பிரதான சிறப்புகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொருமாதமும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதற்கு அருகேயே தசரத சக்ரவர்த்தி சிவனை பூஜிக்கும் புடைப்புச் சிற்பமும் அமைந்துள்ளது. ஆரோக்கியத்தையும் கடன் நிவர்த்தியையும் தரும் சந்நதி இது. இத்தலத்தில் இரண்டு அம்பாள் சந்நதிகள் உள்ளன.  மங்களாம்பிகை மற்றும் பங்கஜவல்லி. பங்கஜவல்லியே தேவாரத்தில் ‘பங்கயமங்கை விரும்பும் ஆவூர்’ என அழைக்கப்படுகிறார்.

பசுபதீஸ்வரர் சந்நதியில் பால்மணம் கமழ்வது போன்ற பிரமை. பசு என்பதற்கு ஜீவராசிகள், உயிர்கள் என்றும் பொருளுண்டு. அதற்கெல்லாம் பதியாக தலைவராக விளங்குவதால் பசுபதீஸ்வரர் என்றும் பொருள் கொள்ளலாம். கேட்டதை தட்டாது அளித்திடும் காமதேனுவுக்கே அருள்புரிந்தவரை தரிசித்தாலே போதும். கேட்க மறந்ததையும் சொல்லாமல் அளித்திடும் பரமன் இவர். திருஞானசம்பந்தர், ‘‘குற்றமறுத்தார் குணத்திலுள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்’’ என்று தொடங்கி, ‘‘ஆவூர் பசுபதீச்சுரம் பாடுநாவே’’ என்று அவனின் நாமத்தை பாடிக்கொண்டிருங்கள் என்கிறார்.

இரு தேவியரும் அபய, வரத ஹஸ்தம் காட்டி வலது கையில் அட்சர மாலையும், இடக்கரத்தில் தாமரை மலரையும் ஏந்தி அருள்கிறார்கள். அன்பு அவர்களிருவரின் சந்நதிகளிலும் காட்டாறாக பொங்கி வழிவதை உணரலாம். சிவ&சக்திகள் அருளும் அபூர்வத் தலம் இது. மெல்ல கீழிறங்கினால் ஒரு மணிக்கூடம்.  கயிலையிலிருந்து ஒரு மலைத்துண்டு வந்து தங்கியதால் ஏற்பட்டதாம் இது.  

கோயிலின் தென்மேற்குப் பகுதியில் நிருதி விநாயகரும், வில்லேந்திய வேலனாக சுப்ரமணிய சுவாமியும் காட்சி தருகிறார்கள். அரசன் தர்மத்துவஜனுக்கு குஷ்டநோய் நீக்கிய பிரம்ம தீர்த்தம், சந்திரன் உருவாக்கிய சந்திர புஷ்கரணி, காமதேனு தீர்த்தம் மற்றும் குடமுருட்டியின் பிரிவாகிய பொய்கையாறும் தீர்த்தமாக விளங்குகின்றன. அரச மரம் தலவிருட்சம். வெகுநாட்களாக பராமரிப்பின்றி கிடந்த இக்கோயிலை பக்தர்கள் ஒன்றுகூடி சீர்செய்திருக்கின்றனர்; சமீபத்தில் பசுபதீஸ்வரர், பசுக்களாகிய நமக்கு பதியாக அருள கருணை ததும்ப காத்திருக்கிறார். காமதேனு, கேட்டதைக் கொடுக்கும்; பசுபதீஸ்வரர் நினைத்ததை அளிப்பார்.

இத்தலம் கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக திருக்கருக்காவூர் செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு : கிருஷ்ணா

Tags : Aaur Pashupadeeswarar ,
× RELATED ஆரோக்கியமான வாழ்வை அருளும் ஆவூர் பசுபதீஸ்வரர்