×

திருப்புள்ளமங்கை துர்கை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இத்தலத்தை திருப்புள்ளமங்கை மற்றும் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைப்பர். அதாவது தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்த நாதர் என்று அழைக்கிறார்கள். பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று இதை குறிப்பிடுகிறார்கள். பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள்.

இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும், மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்திருக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயிலாகும். கலை உலகத்தின் உச்சியான பல சிற்பவேலைப்பாடுகளை இத்தலத்தில் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன.

ஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும்பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள். அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது. ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது. இறுதியில் சகஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது.

இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே சுற்றச் செய்திருக்கிறார். சகல ஜீவர்களுக்கு இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலகிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் என்பதை தமக்குள்தாமாக அனுபூதியில் உணர்ந்து கொண்டாள்.

சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்ந்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள். அஷ்டநாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சார்த்தி பூஜித்தாள். இத்தலத்தை வணங்குபவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.

அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண்ணாக கனிமுது என்று சொல்லப்படும் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். இந்த ஏழு தலங்களையும் தரிசித்து ஆத்மானுபூதி அடைந்த தம்பதி மயிலாடுதுறை மயூரநாதரை தரிசித்து உடலைத் துறந்தனர் என்றும் ஒரு புராண வரலாறு உண்டு. தஞ்சை -கும்பகோணம் பாதையில் பசுபதி கோவிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: பரிமளா

Tags :
× RELATED அன்பு மகனே..!