வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலமே அமாவாசை ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை, “பிதுர் காரகன்” என்கிறோம். சந்திரனை, “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே, சூரியனும் சந்திரனும் பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை, இந்த ஆண்டு குருவாரம் (வியாழக்கிழமை) புனர்பூசம், பூசம் கலந்த நன்னாளில் ஏற்படுகிறது. அதுவும், காலச்சக்கரத்தின் நான்காவது ராசியான சந்திரனுக்குரிய கடக ராசியில், சூரியன் இருக்கும் பொழுது இந்த அமாவாசை நிகழ்வது சிறப்பு. ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். அதில், தேவ கணங்களுக்கு அதிக சிறப்பு உள்ள நாள்களாக உத்தராயணமும், பித்ருக்களுக்கு அதிக சிறப்பு உள்ள நாட்களாக தட்சிணாயனமும் திகழும்.
இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்பது குறள்நெறி. அதில் முதலில் சொல்லப்பட்டவர்கள் தென்புலத்தார் என்று கொண்டாடப்படும் முன்னோர்கள். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்துவிட்டால், குடும்பத்தில் பல குழப்பங்களும், சுபத் தடைகளும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஒரே பரிகாரம், தென்புலத்தார் மகிழ்ந்து ஆசி தருவதுதான். அதற்கு அவர்களை பூஜிக்க வேண்டும். அப்படி, பூஜைக்கு ஏற்பட்ட வழிதான் இந்த அமாவாசை விரதம். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிராத்தம் என்று பெயர். அமாவாசை தினம் பிதுர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது. முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும். ஆடி, புரட்டாசி (மஹாளயம்), தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.
ஆடி அமாவாசை அன்று புறப்பட்டு, புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்றுசேருகிறார்கள். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தேவையான எளிமையான வழிபாடு நடத்துவதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள், பிரச்னைகள் தீர்ந்து விடும். அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணமே அவர்களை மகிழ்விக்கிறது.
நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், (எள்ளும் தண்ணீரும் அளிப்பதால்) நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும். ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அன்று அன்னதானம் செய்வதும் சிறப்பு.
இதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்பதை இந்த நாளிலாவது அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான்.
அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகாபாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதும் மகாபாவம் ஆகும்.
யார் யார் இந்த விரதத்தை இருக்கலாம்?
1) தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
2) கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு ஆணுக்குத் தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
யார் விரதம் இருக்கக்கூடாது?
1) தாய், தந்தை உள்ளவர்கள் விரதம் இருக்கக்கூடாது.
2) திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலோ, அவர் விரதம் இருக்கக்கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின், அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். அப்பா இல்லை என்றால், அம்மா விரதம் இருப்பார்.அம்மா இல்லை என்றால் அப்பா விரதம் இருப்பார். அப்படி சகோதரர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்குச் சென்று தானம் கொடுக்கலாம். யாராவது ஒரு வைதீகருக்கு கொஞ்சம் அரிசி, இரண்டு வாழைக்காய், இயன்ற அளவு தட்சிணை தந்து ஆசி பெறலாம். மற்றவர்களுக்கு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் கடைப்பிடிக்கக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
1) உபவாசம் இருக்க வேண்டும்.
2) எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
3) கோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
4) இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்து விட்டு வீட்டில் சமைத்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
“தெய்வ பூஜை கூட முன்னோர்கள் பூஜைக்குப் பிறகுதான்” என்று சொல்லப்பட்டதிலிருந்து இந்த வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் நாம் தெரிந்துகொள்ளலாம். நமக்கு ஆசி வழங்குவதற்காகவே மூதாதையர் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் புறப்படத் தயாராகிறார்கள். அப்படித் தயாராகும் அவர்களை ஆடி அமாவாசை நாளில் வரவேற்க நாமும் தயாராவோம்.
