×

அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர், கங்கைப் புனித நீர், இவற்றில் சிறந்தது எது? ஏன்? எப்படி?

தெளிவு பெறுஓம்  

?அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர், கங்கைப் புனித நீர், இவற்றில் சிறந்தது எது? ஏன்? எப்படி?
- டி.என். ரங்கநாதன், திருவானைக்காவல்.

கங்கைப் புனித நீரே சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் மூன்றை ஒரு பிரிவாகவும், கடைசியில் உள்ள ஏழையின் வியர்வை நீரை ஒரு பிரிவாகவும் பிரித்துக் கொள்வோம். முதலாவது பிரிவில் அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர் ஆகிய இந்த இரண்டும் ஆன்மிக வகையைச் சார்ந்தவை. கங்கை நீர் என்பது இயற்கையில் உருவாவது. கங்கை நீர் என்றதும் கங்கை ஆற்றில் ஓடிவரும் நீர் என்று மேலோட்டமாகப் பொருள் கொள்ளக்கூடாது. இந்த பூலோகத்தின் மையப்பகுதியாக புவியியல் விஞ்ஞானிகள் கருதும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தையும் ‘சிவகங்கை’ என்றே அழைப்பார்கள்.

நமது பாரத பூமியிலிருந்து கிடைக்கும் நீர் மொத்தமும் கங்கை நீருக்குச் சமானமே. ஆறு, ஏரி, குளம், கிணறு என நமது நாட்டில் உள்ள அத்தனை நீர்நிலைகளிலும் கங்கைநீர், பூமியின் அடிவழியாக ஊடுருவிக் கலந்திருக்கும். அவ்வளவு ஏன், கடல் நீரிலும் கங்கையின் புனித நீர் கலந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் ஜலத்திற்கு தோஷமில்லை என்று ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.

நமது இந்திய தீபகற்பம் முழுவதும் கங்கையின் நீர் உள்ளுக்குள் ஊடுருவி எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த நீர்தான் நமது வாழ்வின் ஜீவாதாரம். அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர் என்று நீங்கள் குறிப்பிட்ட ஆன்மிக வகையைச் சார்ந்த இந்த இரண்டு நீரும் ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து எடுக்கப்பட்ட கங்கையின் புனித நீரே ஆகும். அனைத்துவிதமான பூஜைகளிலும் துவக்கத்தில் ‘கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சந்நிதிம் குரு’ என்ற மந்திரத்தை உச்சரிப்பார்கள். அதாவது இங்கு வைக்கப்பட்டுள்ள ஜலத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலான புண்ணிய நதிகளின் சாந்நித்தியம் வந்து சேரட்டும் என்று சொல்வதாக அர்த்தம்.

இவ்வாறு இத்தனை புண்ணிய நதிகளின் சாந்நத்தியம் கொண்ட தீர்த்தம்தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது, இந்த தீர்த்தம்தான் கும்பாபிஷேகத்திற்கும் பயன்படுகிறது. ஆக, அபிஷேக நீருக்கும், கும்பாபிஷேக நீருக்கும் கங்கையின் புனித நீரே ஆதாரம் என்பதால் இங்கு கங்கை நீரே முதல் சிறப்புப் பெறுகிறது.

?கோயிலில் ஆண்டவனை நாம் பார்க்க வேண்டுமா, ஆண்டவன் நம்மைப் பார்க்க வேண்டுமா? ஒரு நொடி தரிசனம் போதுமானதா?
- கே.விஸ்வநாத், அல்சூர்.

கோயிலுக்குச் செல்வது என்பது ஆண்டவனை நாம் பார்க்கத்தான். ஆண்டவன் நம்மைப் பார்க்க நாம் கோயிலுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆண்டவன் எப்போதும் நம்மைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். ஒரு நொடி தரிசனம் போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். உள்ளத்தில் உருவத்தைப் பதிவு செய்தால் இறைவனை தரிசிப்பதற்கு ஒரு நொடிகூடதேவையில்லை. ஆண்டவனின் சந்நதிக்குச் செல்லும் வேளையில் மனதை அங்குமிங்கும் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்துபாருங்கள். ஒருநொடி தரிசனம்கூட உங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைப் புகுத்தும்.
 
?ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு உருவ சின்னம் உள்ளது. அந்த ராசியில் பிறந்தவர்களின் குண நலன்களை இதன் மூலம் அறிய முடியுமா? மகர ராசியின் உருவம் என்ன?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ராசிக்கு உள்ள உருவச் சின்னத்தைக் கொண்டு அவர்களது குணநலன்களை வரையறுக்க முடியாது.  உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு உரிய உருவம் காளை என்பதால் ரிஷபராசிக்காரர்கள் காளையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வது தவறு. உண்மையில் ரிஷப ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டசாலிகளும்கூட. விருச்சிக ராசிக்கு உரிய உருவம் தேள் என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் தேள் போன்று கொட்டும் குணத்தினை உடையவர்கள் என்று சொல்வது முற்றிலும் தவறு.

கும்ப ராசிக்கு குடம் என்பது உருவச்சின்னமாக உள்ளது என்றால் இவர்கள் குடம் போன்று எல்லாவற்றையும் உள்ளடக்கி வைத்திருப்பவர்கள் என்றும் சொல்லக்கூடாது. இவ்வாறு நாமாகச் சொல்லிக் கொள்ளும் விளக்க உரைகள் அனைத்தும் நமது அனுமானத்தின் பேரில் சொல்லப்படுகின்ற கற்பனையே. ராசிகள் மட்டுமல்ல, நட்சத்திரத்திற்கும் கூட உருவச் சின்னம் என்பது உண்டு. உதாரணத்திற்கு அஸ்வினி நட்சத்திரத்திற்கு குதிரைச் சின்னமும், பரணி நட்சத்திரத்திற்கு யானையும், கிருத்திகைக்கு ஆடு உருவமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அஸ்வினி என்று நாம் அழைக்கும் நட்சத்திரம் உண்மையில் ஒரேயொரு நட்சத்திரம் கிடையாது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பினைத்தான் ஒரு நட்சத்திரமாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த நட்சத்திரக் கூட்டத்தினை ஒன்றிணைத்து தொலைவிலிருந்து பார்க்கும் நம் கண்களுக்கு அது குதிரை வடிவத்தில் தென்படுகிறது.

ஒரு நாளில் எந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு நடுவே சந்திரன் பயணிக்கின்றதோ, அதுவே அந்த நாளுக்கு உரிய நட்சத்திரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு ராசி மண்டலத்திற்குள்ளும் மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு மேஷ ராசி என்று எடுத்துக்கொண்டால் அதற்குள் அஸ்வினி, பரணி, கார்த்திகை (முதல்பாதம்) என்று மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு உள்ளடங்கி இருக்கும். இந்த மண்டலத்தினை ஒன்றிணைத்து தொலைவில் இருந்து காணும்போது அதன் உருவம் ஆடு போல் நம் கண்களுக்குத் தென்படுகிறது. இதனால் மேஷ ராசிக்கு உரிய உருவச்சின்னமாக ஆடு என்று உருவகப் படுத்தி உள்ளார்கள்.

ராசி மண்டலங்களை தொலைவிலிருந்து நோக்கும்போது நம் கண்களுக்கு தெரியவரும் உருவ அமைப்பினைக் கொண்டு இந்தச் சின்னங்களை வரையறுத்து வைத்துள்ளார்கள். இவற்றைக் கொண்டு அந்த ராசிக்காரர்களின் குண நலன்களை வரையறுக்க இயலாது. மகரராசிக்கு உரிய உருவம் பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவினாலும் பெரும்பாலானோரின் கருத்து முதலை என்பதே. மகர ராசிக்கு உரிய உருவச்சின்னம் முதலை என்பதை வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Tags : Kumbabhishek ,Ganges ,
× RELATED கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய...