×

கடவுளின் சாயல் ரூபத்தில் மனிதர்

கடவுளின் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இவ்வுலகம் மற்றும் அண்டசராசரங்கள் எனும் பிரம்மாண்டமான படைப்பு. கடவுளின் படைப்பில் எதுவும் எதற்கும் கீழ்ப்பட்டதோ அல்லது குறைவுடையதோ அல்ல. கடவுளின் எல்லா படைப்புகட்கும் தனி அடையாளமும், பயன்பாடும், மற்றும் வாழ்வுரிமையும் (Right to exist) உண்டு என்பதுதான் கடவுளின் படைப்பு பற்றிய சூழலியல் இறையியல் (Ecological Theology) வலியுறுத்துவது ஆகும்.தொடக்க நூல் முதல் அதிகாரத்தில் (தொடக்க நூல் 1:1-31 ) எல்லா படைப்புகளும் படைத்து முடிக்கப்பட்ட பின்புதான் மனிதர் படைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பொருள் யாதெனில், பிற படைப்புகள் அனைத்தும் மனிதரின் துணையின்றி இயங்கக்கூடியவை. ஆனால், மனிதர் மட்டும் பிற படைப்புகளின் துணையின்றி வாழமுடியாது என்பதாகும். மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருந்துகள், தண்ணீர், காற்று, முதலியவை இயற்கையிடமிருந்துதான் கிடைக்கிறது. இத்தகைய சார்புநிலையில் இருக்கும் மனிதருக்குத் தான் கடவுள் தமது சாயலையும்(Image), ரூபத்தையும்(Likeness) அளிக்கிறார். அது மட்டுமல்ல, பிற படைப்புகளை ஆண்டுகொள்ளும் பொறுப்பையும் வழங்குகிறார். இது கடவுளின் சொல்லிமுடியாத ஞானம் எனலாம்.

ஆண்டுகொள்ளுங்கள் என்பதை கடவுளின் இதர படைப்புகளை எவ்வாறு அணுகுவது, எவ்வாறு நிர்வகிப்பது, எவ்வாறு கையாள்வது, மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் புரிந்துகொள்ளலாம். மனிதருக்கு இந்த ஞானத்தைக் கடவுள் வழங்கியிராவிட்டால் ஒரு யானையின் காலில்மிதியுண்டு அழிந்திருப்பர் அல்லது காட்டெருமை கூட தன் கொம்பில் தூக்கி எறிந்திருக்கும் அல்லது சிங்கம், புலி முதலியவை கடித்துக் குதறியிருக்கும். இவ்வித ஆபத்துகளுக்கு தப்பியும், அவற்றை எதிர்த்தும், கட்டுப்படுத்தியும், பயன்படுத்தியும் வாழ்வதற்கு கடவுள் தமது ஞானத்தை மனிதருக்கு அளித்தார். கடவுளின் இதர படைப்புகளை அழித்து வாழ மனிதருக்கு எந்த உரிமையும் இல்லை. கடவுள் தமது படைப்புகளைப் பண்படுத்தவும் காக்கவுமே பொறுப்பை அளித்தார். (தொடக்கநூல் 2:15)

படைப்பைப் பாடமாக்கிய அருள்நாதர் இயேசு

கடவுளுக்கு மனிதர் காட்டிய கீழ்படியாமையின் விளைவாக மனிதருக்குள் புதர் போல் வளர்ந்துவிட்ட பொறாமை, பேராசை, சுயநலன் முதலியவை காரணமாக சக மனிதருக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைக்கு மனுக்குலம் சென்றுவிட்டது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயும், மனிதருக்கும் மனிதருக்கு மிடையேயும், மனிதருக்கும் இயற்கைக்குமிடையேயும் ஏற்பட்ட பிளவை நீக்கி நல்லுறவை ஏற்படுத்தவே மனுக்குமாரன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்து கடவுளுடைய படைப்பின் மகத்துவத்தை அறிந்ததோடல்லாமல், அப்படைப்புகள் வழியே மனிதருக்கு எளிதாகப் புரியும் வகையில் கடவுள் பற்றியும், மானுட வாழ்வு பற்றியும் கடவுளாட்சி பற்றியும் கற்பித்தார். அவற்றில் சிலவற்றைப்பற்றி இங்கு காண்போம்.நாம் வாழும் வாழ்க்கை பிறருக்குப் பயன் அளிக்கும் வகையிலும், கடவுளின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையிலும் இருத்தல் வேண்டும் என்பதற்கு “நீங்கள் உலகிற்கு உப்பாயிருக்கிறீர்கள்” “ஒளியாக இருக்கிறீர்கள்” என்று விளக்கினார். (மத்தேயு 5: 13-16)

பலர் வீண் கவலைகளை வளர்த்துக்கொண்டு நிகழ்கால வாழ்க்கையை சோகம் நிறைந்ததாகவும், நம்பிக்கையற்றதாகவும் மாற்றிக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு “வானத்துப் பறவைகள், காட்டுமலர்ச்செடிகளை உதாரணம் காட்டி, கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும் கடவுளுடைய அரசைத் தேடவும், கற்பித்தார். (மத்தேயு 6: 25-34)
மேலும், நமது வாழ்க்கை உறுதியான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட வேண்டும் என்பதையும் அந்த அடித்தளம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகள் தாம் என்பதையும் பாறையின் மீது கட்டப்பட்ட கட்டடத்திற்கும் மணல் மீது கட்டப்பட்ட கட்டடத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டுக் கூறினார். (மத்தேயு 7: 24-27)
அதே சமயம், உலக வாழ்வில் நாம் எதிர்மறையான சூழல்கள் மற்றும் எதிர்மறையான மனிதர்களை சந்திப்பது தவிர்க்க இயலாது. எனவே, அதை எதிர்பார்த்தே நம் வாழ்க்கையை எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும் என்று தமது சீடர்களிடம், “ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல உங்களை அனுப்புகிறேன்” என்று எச்சரித்தார். இப்படிப்பட்ட சூழலில் ஓநாய்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்பதைக் கூறும் வகையில், “பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போல கபடு அற்றவர்களாகவும் இருங்கள்” என்றார். (மத்தேயு 10: 16-17) நாம் அறிந்த வகையில் பாம்பு வலைக்குள் நுழைந்தவுடன் தன் தலையை அவ்வலையின் வாயில் வைத்துக்கொணடு உடலை மெதுவாக உள்ளுக்கு இழுக்கும். பாம்பு தனக்கு ஆபத்தைத் தருபவரை எதிர்நோக்கி எப்போதும் அவ்வாறு செய்கிறது. இதுதான் அதன் முன்மாதிரி என்பது. பெண்ணிய இறையியலாளர்கள் இதையே வேறுவிதமாக, பெண்களுக்கு எல்லா சிந்தனைகள், கூற்றுகள், எழுத்துக்கள் மீது கருத்தியல் சந்தேகத்தை (Ideological Suspicion) வைக்க வேண்டும் என்பர்.

படைப்பைப் பேணுதல்

இன்றைய முதலாளித்துவ, உலகமயப் பொருளாதாரம் இயற்கையை ஒரு சரக்காகக் (commodity) கருதுகிறது. இயற்கை வளங்களை சூறையாடி விரைவாகப் பொருளீட்டுகிறது. இதனால் இயற்கை வளங்கள் சுருங்குகின்றது இல்லாமலும் போகிறது. நாம் அறிந்து பல குன்றுகள் காணாமல் போய்விட்டன. ஏரிகள் குளங்கள் தற்போது இல்லை. பல மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. அழகான ஆறுகள் சாக்கடையாக்கப்பட்டன. காற்று மாசடைந்துவிட்டது. இதற்குப் பேராசை கட்டுக்கடங்கா இலாபம், சுயநலம் முதலியவையே காரணம். நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வது என்ன? வாழ்வாதாரத்தையா அல்லது சுடுகாட்டையா? சிந்திப்போம் இயற்கையைப் பாதுகாப்போம் வாழ்வைக் காப்போம்.

Tags : God ,
× RELATED கடவுளின் அருட்பணி