×

பேராசை கொள்ளாதீர்கள்..!

‘இறைவன் உங்களில் சிலருக்குச் சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பு அளித்திருக்கிறானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்...... இருப்பினும் இறைவனிடம் அவனுடைய அருளைக் கோரியவண்ணம் இருங்கள். நிச்சயமாக இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”திருக்குர்ஆனின் நான்காம் அத்தியாயத்தின் 32ம் வசனம் ஆகும் இது. இந்த வசனத்திற்கு இஸ்லாமியப் பேரறிஞர் மௌதூதி அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்.“இந்த வசனத்தில் தரப்பட்டுள்ள ஒழுக்க வழிகாட்டுதல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனில், இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டாலே மனிதனுக்குக் கூட்டுவாழ்வில் அமைதி கிடைத்துவிடும்.

“இறைவன் மனிதர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகப் படைக்கவில்லை. அவர்களுக்கிடையில் எண்ணற்ற வேறுபாடுகளை வைத்துள்ளான். சிலர் அழகானவர்களாய் இருக்கிறார்கள் எனில் சிலர் அழகற்றவர்களாய் இருக்கின்றனர். சிலருக்கு இனிமையான குரல்வளம் தரப்பட்டிருக்கிறது எனில், சிலருக்கு இனிமையற்ற குரலாய் இருக்கும். சிலர் உடல்வலிமை மிக்கவர்களாய் இருக்கிறார்கள் எனில் சிலர் பலவீனமானவர்களாய் இருக்கிறார்கள்.

சிலருக்கு உடலுறுப்புகள் அனைத்தும் குறையில்லாத வகையில் தரப்பட்டிருக்கின்றன எனில் சிலர் பிறக்கும்போதே உடல் ஊனத்துடன் பிறக்கின்றார்கள். சிலருக்கு உடல், உள ஆற்றல்களில் ஏதேனும் ஒன்று அதிகமாகத் தரப்பட்டிருக்கிறது எனில் சிலருக்கு வேறொன்று அதிகமாகத் தரப்பட்டிருக்கும். சிலர் பிறக்கும்போதே நல்ல நிலைமையில் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு பிறக்கிறார்கள் எனில் சிலர் மிக மோசமான நிலைமைகளில் பிறக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வசதிகளும் உலக வளங்களும் மிக அதிக அளவில் தரப்பட்டிருக்கின்றன எனில் சிலருக்கு அவை மிகவும் சொற்பமான அளவில் தரப்பட்டிருக்கின்றன.இந்த வேறுபாடுகளையும் சிறப்புகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் மனித நாகரிகத்தின் பன்மைத்தன்மை நிறுவப்பட்டுள்ளது. அந்த வகையில் இவை யாவும் இறைஞானத்தின் மதிநுட்பமே. எங்கெல்லாம் இந்த வேறுபாடுகளின் இயல்பான வரையறைகள் நீட்டப்பட்டு மனிதன் போலியான சிறப்புகளைச் சேர்க்கிறானோ அங்கெல்லாம் ஒருவிதமான குழப்பம் வெடிக்கிறது.

“எங்கெல்லாம் இந்த வேறுபாடுகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காக இயற்கையுடன் போரிடுகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அங்கெல்லாம் வேறுவிதமான மாறுபட்ட குழப்பங்கள் வெடிக்கின்றன.“இன்னொருவரைத் தன்னைவிட கூடுதல் சிறப்பு கொண்டவனாகப் பார்க்கின்ற போது அதிருப்திகொள்கின்ற, நிம்மதியிழந்து தவிக்கின்ற மனிதனின் மனநிலைதான் கூட்டுவாழ்வில் வெடிக்கின்ற போட்டி, பொறாமை, காழ்ப்பு உணர்வு, குரோதம், ஒருவர் மீது ஒருவர் வன்மம், மோதல் ஆகிய அனைத்துக்கும் ஆணிவேராகும். இதன் விளைவாக ஆகுமான வழிமுறைகளில் தனக்குக் கிடைக்காத வளங்களை எப்பாடுபட்டாவது அடைகின்ற வெறியுடன் தடுக்கப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்டு அவற்றை அடைகின்ற முயற்சிகளில் மனிதன் இறங்கிவிடுகின்றான்.

“இத்தகைய மனோபாவத்திலிருந்து தப்பித்திருக்கும்படி இந்த வசனத்தின் மூலமாக இறைவன் அறிவுறுத்தியுள்ளான். இந்த வசனத்தின் குறிக்கோள் என்னவென்றால், இறைவனிடமிருந்து மற்றவர்களுக்கு அருளப்பட்ட வளங்கள் மீது ஆசை கொள்ளாதீர்கள். அதே சமயம் அருள்வளங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு எந்தெந்த அருள்வளங்கள் எல்லாம் பொருத்தமானவை என அவன் தன்னுடைய ஞானம், விவேகம் ஆகியவற்றின் அடிப்படையில் நினைக்கிறானோ அவற்றை எல்லாம் உங்களுக்கு அருள்வான்.” (தஃப்ஹீமுல் குர்ஆன்)
        -
சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED ஆவணி மாத கிரக நிலைகள்!