×

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். “குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்” என்பது நம்முடைய மரபு நமக்குக் கற்றுத் தந்த விஷயம். அதனால் தான் பெரும்பாலான தெய்வங்களை குழந்தை வடிவிலே தரிசிக்கிறோம். குழந்தைகளின் சிறப்பைப் பற்றியும், குழந்தை தெய்வங்களின் பெருமையைப் பற்றியும், குழந்தைப்பேறு இன்மைப் பற்றியும், அந்த தோஷம் நீக்கிக் கொள்ளும் வழிமுறைகள், பரிகாரங்கள், மந்திரங்கள், பாசுரங்கள் மற்றும் வழிபாடுகள் பற்றியும் “முப்பது முத்துக்களாக” நாம் காண்போம்.

1) தெய்வங்களின் அருட் கொடை

தெய்வத்தின் அருள்தான் குழந்தைகள் என்னும் மலர்கள். குழந்தைகள்தான் தெய்வங்களின் பிம்பங்களாக அங்கங்கே மலர்ந்திருக்கின்றன. “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று” என்றொரு பாடல் உண்டு. உண்மையில் குழந்தைகள் தெய்வத்தின் அருளால் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புக்கு ஒரு காரணக் கருவியாகவே இருக்கிறார்களே தவிர, தெய்வம்தான், சுக்கிலமும் சுரோணிதம் சேர்வதற்குக் காரணமாக அமைகிறது. அதனால், குழந்தைகளை தெய்வங்களின் அருட் கொடையாகக் கொள்ளவேண்டும்.

2) நன் மக்களைப் பெறுதல்

குழந்தை பிறப்பு என்பது தெய்வீகம் - ஆன்மீகம் தொடர்புடையது. அதனால், திருமணம் ஆனதிலிருந்து, நல்லதொரு குழந்தையைப் பெறுவதற்கான பலவித சடங்குகளைச் செய்கின்றனர். கர்ப்பாதானம் (சாந்தி முஹூர்த்தம்) முதற்கொண்டு சடங்குகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயார் வயிற்றில் கருவறையில் இருக்கும் போதே குழந்தை பிறப்பதற்கான சடங்குகள் ஆரம்பமாகின்றன. ``நன் மக்களை பெறுதல்” என்பதே ஒரு வேள்விதான். தவமிருந்து பிள்ளை பெற்றான் என்று சொல்கிறோம் அல்லவா!

தன் வினையை நீக்கிக்கொள்ள ஒரு ஜீவன் பிறப்பது சாதாரணம். எல்லோருடைய வினையையும் தீர்க்கும் படியாக பிள்ளை பிறப்பது லோக க்ஷேமம். அப்படி ஒரு பிள்ளை, தன் மூலமாக பிறந்து, தமக்கும் சமூகத்துக்கும் உதவ வேண்டும் என்பதற்காகத்தான், ‘‘தெய்வ அருள் வேண்டி” “நன் மக்களைப் பெற” இத்தனை சடங்குகள் செய்கிறோம். சரீர பிண்டமானது மந்திர பூர்வமாக உற்பத்தியாக வேண்டும். கர்ப்பத்திலுள்ள ஜீவனை உத்தேசித்துப் பண்ணப்படும் கர்ப்பா தானம், பும்ஸவனம், சீமந்தம் என்பவை ஏதோ ஒரு ஸம்ஸ்காரமென்று நினைக்கிறார்கள். அவை உள்ளே உண்டாகிற ஜீவனைக் குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை.

3) சீமந்தம்

குழந்தை பிறப்பதற்கு முன்னாலேயே செய்யவேண்டிய ஆன்மீக ரீதியான சடங்குகள் கர்ப்பாதானம். இதற்குப் பிறகு கரு உற்பத்தியான உடன் நல்ல விதமாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய சடங்குகள் தான் சீமந்தம். சீமந்தம் வேறு; வளைகாப்பு வேறு. இப்போது இரண்டும் ஒன்றாகிவிட்டது. சீமந்தம் மந்திர பூர்வமாக இருக்கும். வளைகாப்பு மகிழ்ச்சிக்குரிய ஒரு விழா. வளைகாப்பு பண்டைய தமிழர் சடங்கு.

முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம், 9ஆம் மாதம், ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். 6ஆம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்கு கிறது. அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில குடும்பங்களில் வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை `பும்சுவன சீமந்தம்’ என்று நடத்தப்படுகிறது.

4) தாய்மை அடைந்தபின் எப்படி இருக்க வேண்டும்?

இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து, புத்தாடை அணிவித்து, அலங்காரம் செய்து, எல்லோரும் வாழ்த்தி, வாய்க்கு ருசியாக பலகாரங்களையும், சத்துள்ள ஆகாரங்களையும் கொடுத்து, மகிழும்படி செய்யப் படுகின்ற சடங்கு வளைகாப்பு. கர்ப்பிணிப் பெண்ணானவள் எந்தவித மனக்கவலையும் இன்றி முழு மகிழ்ச்சியோடு இருந்தால் நல்லவிதமாக குழந்தை பிறக்கும் என்பதற்காக செய்யப்படுகிறது. இந்த காலத்தில் கருவுற்ற பெண் எப்படி நடத்தப்பட வேண்டும்? அவள் என்னென்ன வாசிக்கவேண்டும்? என்னென்ன உயர்ந்த விஷயங்களை கேட்க வேண்டும்? என்ன மன நிலையில் இருக்க வேண்டும்? என்றெல்லாம் பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

இரணியன் மனைவி கருவுற்றிருந்த பொழுது, அக்குழந்தைக்கு நாரதர், பகவானின் நன்மைகளை கதைகளாக எடுத்துரைத்தார். அதனால், பிரகலாதன் என்ற பக்தன் பிறந்தான்.
இன்றைக்கும் மேல்நாடுகளில் கருவுற்ற குழந்தை, தன் தாயின் மனநிலையை பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் பல விஷயங்களை உள் வாங்கிக் கொள்கிறது என்று சொல்கிறார்கள்.

5) அம்மன் கோயில்களும் வளையணி விழாவும்

சக்தியை முதற்கண் தெய்வமாக வணங்கிடும் சாக்த மதப்பிரிவில் வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளன்று அம்மன் கோயில்களில், அம்மனே கர்ப்பவதியாக இருப்பதைப் போன்று அலங்காரம் செய்து பட்டுத்தி, வளையல் அணிவித்து கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கர்ப்பிணி கோலத்தில் அம்மனை தரிசிக்கலாம். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள், இனிப்புகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

 6) வளைகாப்பு நடைபெறும் சில கோயில்கள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில், உறையூர் குங்குமவல்லி அம்மன் கோயில், திருச்சி பீமநகர் அருள்மிகு செடல் மாரியம்மன் கோயில் என வரிசையாகச் சொல்லலாம். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பிப் பார்கள். சென்னை சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள திருக்கச்சூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில், ஆடிப் பூரத்தில் அம்பாளுக்கு பக்தர்கள் கொண்டு வரும் வளையல்களால், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த வளையல்கள் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துகொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்.

7) குழந்தை தெய்வங்களும், தெய்வக் குழந்தைகளும்

“குழந்தைகளும்,தெய்வங்களும்” என்று சிந்திக்கின்ற பொழுது, தெய்வங்கள் இம்மண்ணுலகில் குழந்தைகளாகப் பிறந்தார்கள் அல்லது காட்சி தந்தார்கள் என்பது ஒரு நிலை. கண்ணன், ஐயப்பன், முருகன், வள்ளி தெய்வானை, என்று இந்நிலைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதே நேரம், இன்னொரு கோணத்தில் தெய்வங்களை தங்கள் முன் தோன்றும் படி நடந்து கொண்ட குழந்தைகளும் உண்டு.

திருஞானசம்பந்தர் மூன்று வயதில் அம்மை அப்பரை சீர்காழிக் குளக்கரையில் தரிசனம் செய்து ஞானப்பால் அருந்தி, தமிழ்ப் பாக்களை பொழிந்து, “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்னும் சிறப்பை அடைந்தார். ஆண்டாள் நாச்சியார் சின்னஞ்சிறு வயதில் “திருப்பாவை” என்ற உயர்ந்த தமிழ் நூலைத் தந்து அந்தக் கண்ணனையே கணவராக மணந்தாள். விடாது தன் மீது நம்பிக்கை கொண்டு வாதிட்ட பிரகலாதன் என்னும் மழலைக்கு பகவானே நரசிம்மராக காட்சி தந்தார்.

8) தெய்வத்தை வரவழைத்த குழந்தை

தெய்வத்தை கண்ட குழந்தைகளின் உத்தமமான ஒரு குழந்தையின் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவன் பெயர் துருவன். துருவனின் தந்தை பெயர் உத்தானபாதன். தாயின் பெயர் சுநீதி. சித்தியின் பெயர் சுருசி. துருவனுக்கு தன் தந்தை மடியில் அமர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசை. அவனது சித்தி, ‘‘நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. அதனால் உன் தந்தை மடியில் அமர உனக்கு உரிமை இல்லை” என்று விரட்டி விடுகிறாள். சிறு பாலகன் அழுதுகொண்டே பெற்ற தாயை நோக்கி ஓடினான்.

அவள் தன் இயலாமையை வெளிப்படுத்தினாள். ‘‘நீ அந்த பரம புருஷனை தியானம் செய்தால்தான் உன் தகப்பனார் மடியில் அமர முடியும்” என்று கூறினாள். ‘‘எங்கே தியானம் செய்வது?” என்று கேட்டான். ‘‘காட்டில்” என்று பதில் வந்தது. பாலகன் காட்டிற்கு பரம் பொருளைக் காணப் புறப்பட்டான். பல இன்னல்களுக்கு பிறகு, தேவரிஷி நாரதரைக் கண்டான். பாலகனின் உறுதியைக் கண்ட நாரதர் ‘‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாயா” என்ற மூல மந்திரத்தையும் அஷ்டாங்க யோகத்தையும் கற்றுதந்தார். துருவன் கடும் தவம் புரிய துவங்கினான்.

அவன் ஒரே நோக்கம் பரம்பொருளான பகவானைக் கண்டே தீர்வது. 12 நாட்களுக்கு ஒரு முறை மூச்சுக்காற்றை உள் வாங்கினான். பிற நேரங்களில் விஷ்ணு தியானத்தில் இருந்தான். ஒரு கட்டத்தில் சுவாசிப்பதையே மறந்தான். அவன் தவத்தின் வீரியத்தில் உலக இயக்கமே ஸ்தம்பித்தது. இனி பகவானுக்கு வேறு வழியில்லை. சங்கு சக்ர கதாபாணியாக அவன் முன் தோன்றினான். பகவானை நேரில் கண்ட சந்தோஷத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பக்தவச்சலனான பகவான், பாஞ்ச சந்நியம் என்ற சங்கால் அவன் கன்னத்தை வருடினான். என்றும் மிளிரும் துருவ நட்சத்திரத்தைத் பெற வரம் கொடுத்தான்.

 9) துருவன் கதை இன்றைய குழந்தைகளுக்குச் சொல்வது என்ன?

இன்றைக்கும் ஒரு நட்சத்திரத்தைக் காட்டி ‘‘துருவ நட்சத்திரம்” என்று அதன் பெயரைச் சொல்லுகின்றார்கள். மன உறுதி இருந்தால், சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தாலும், அவர்கள் தெய்வத்தை காண முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் துருவன். இதை வெறும் ஆன்மீக நோக்கத்தில் மட்டும் சொல்லாமல், இளம் வயதில், சரியான முறையில் வழிநடத்தி, ஒரு குழந்தையின் ஆழ் மனதில் உறுதியையும், நல்லெண்ணத்தையும் விதைத்து விட்டால், அவன் எப்பேர்ப்பட்ட குறிக்கோளாக இருந்தாலும், வெற்றி அடைந்து விடுவான்.

சகல உலகங்களையும் வென்று விடுவான் என்பது தான் துருவன் கதை. சகல உலகங்களையும் பெற்றுவிட்டான் என்பதன் அடையாளம்தான் ஆதிமூலப் பரம் பொருளே அவனைத் தேடி வந்து அருள் தந்தது. இறைவனை அடைய முடியும் என்றால், உலகத்தின் பிற எதைத்தான் அடைய முடியாது? என்பதை துருவனின் மன உறுதியில் இருந்து, நம் குழந்தைகள் கற்க வேண்டிய பாடம். நாம் சொல்லித் தரவேண்டிய போதம். (ஞானம்,அறிவு).

10) கண்ணன் எனும் தெய்வம்

தெய்வக் குழந்தைகளாக பல தெய்வங்கள் இருந்தாலும், முதலில் நம் நினைவுக்கு வருவது கண்ணன்தான். எல்லாக் கவிஞர்களும் ஒரு குழந்தையை வர்ணித்துப் பாடும்பொழுது, அல்லது தாலாட்டு பாடும் பொழுது, கண்ணன் என்ற பெயரை வைத்துத்தான் பெரும்பாலும் பாடுவார்கள். அல்லது இயல்பாகவே பாட்டில் அந்த பெயர் வந்து விடும். குழந்தை தெய்வங்களாக முருகப்பெருமான், விநாயகப்பெருமான், அம்பிகை இருப்பினும், சட்டென நினைவுக்கு வருவது கண்ணன் தான். கண்ணன் என்றாலே எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவன் என்றும் பொருள். அதனால் கண்ணன் காட்சிகளாலும், கண்களின் அழகாலும், செய்யும் குறும்புகளாலும் எல்லாக் குழந்தைகளின் வடிவத்திலும்
நிறைந்திருக்கிறான்.

11) ஸ்ரீமத் பாகவதத்தில் தசம ஸ்கந்தம்

ஒரு குழந்தையின் அத்தனை அழகையும் விளையாட்டுக்களையும் காட்சிப்படுத்தும் இலக்கியம் அல்லது புராணம் என்றால் அது `ஸ்ரீபாகவத புராணம்’ தான். ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது. இந்த ஸ்கந்தத்தில்தான் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளது. 10வது ஸ்கந்தம் 90 அத்தியாயங்கள் கொண்டது. மிக முக்கியமானது. மிக நீளமானது. மிக சுவாரசியமானது. இன்றும் அது பல கோடி மக்களால் பக்தியோடு தினம் வாசிக்கப்படுகிறது. பூஜை அறையில் வைத்து பாராயணம் செய்யப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணன், பிரம்மாவிற்கு இதை உபதேசிக்க, அவர் நாரதருக்கு அருள, அவர் ஸ்ரீ வேத வியாஸருக்கு அருளினார்.

ஸ்ரீமத் பாகவதத்தை வேத வியாஸர், அவரது புத்திரன் ஸ்ரீ சுகர் முனிவருக்கு உபதேசித்தார். இந்த பாகவதத்தை 7 நாட்கள் தனியாகவோ, குழுவினராகவோ பாராயணம் செய்வது சப்தாகம். சப்தாகத்தில் 12 ஸ்கந்தங்கள், 335 அத்யாயங்கள், 1800 ஸ்லோகங்கள் உள்ளது. இதை 108 பேர் குழுவினராக 7 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்வது சதகிருது.

12) கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரும்

எவன் ஒருவன் ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை.
இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். கண்ணன் என்ற தெய்வக் குழந்தையின் ஜனன சரித்திரத்தையும், லீலைகளையும் படிப்பவர்கள் இனி ஒரு தாயின் கர்ப்பத்தில் வசிக்கும் துன்பத்தை அடைய மாட்டார்கள். அவர்களுக்கு ஜனன மரண துன்பங்கள் இல்லை.

13) பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

பல்வேறு தெய்வங்களை குழந்தைகளாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் தமிழில் நிறைய உண்டு. புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள்; மதுரை மீனாட்சி யம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர், திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராசப் பண்டாரத்தையா, கலைசை செங்கழுநீர்
விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்.

14) குழந்தையாக அன்னை மீனாட்சி

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு, குமர குருபரரால், மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் பாடப்பட்டது. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமரகுருபரர், `சிற்றிலக்கிய வேந்து’ எனப் போற்றப்படுபவர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் பேசவில்லை.

அதைக் கண்ட இவர் தம் பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்ட, இவர் பேசும் பேறு பெற்றார். குமரகுருபரர் முருகனுக்குக் காணிக்கையாக முதற்கண் “கந்தர் கலிவெண்பா” என்னும் பாமாலை இயற்றினார். அற்புதத் தமிழில் மீனாட்சி அம்மையின் எழிலும், அருட் திறனும், கருணையும் தெய்வ வடிவும் போற்றிப் பாடப்பட்ட மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் ஒலிநயம் சிறந்த பல பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

 15) மடியில் அமர்ந்தாள் குழந்தை மீனாட்சி

திருமலை நாயக்க மன்னர் மதுரையை அரசாண்ட காலம். அவருக்கு அன்னை மீனாட்சியின் மீது அளவற்ற பக்தி. தினமும் கோயிலுக்குச் சென்று அன்னையை தரிசனம் செய்யாது உணவு உட்கொள்ள மாட்டார். அன்னிய படையெடுப்பில் சீரழிந்துபோயிருந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை மீட்டெடுத்தவர்.

தமிழின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் பற்று கொண்டவர். நாயக்க மன்னரின் கனவில் மதுரை மீனாட்சியம்மன் தோன்றி குமரகுருபரர் தன்மீது பாடியுள்ள பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு பணித்தாள். அவ்வாறு மீனாட்சியம்மன் சந்நதியில் குமரகுருபரர் தினம் ஒரு பருவம் பாடி விளக்கம் தந்து கொண்டிருந்தார். ஐந்தாம் நாள் ‘வருகைப் பருவம்’, அதாவது தேவி வருகின்ற பகுதி பாடப்பட்டது. அப்போது சாட்சாத் மீனாட்சி தேவியே அர்ச்சகரின் மகளுடைய உருவில் வந்து, மன்னனின் மடியில் அமர்ந்து பாடல்களை உன்னிப்பாகக் கேட்டாள். “தொடுக்கும் பழம் பாடல்” என்று தொடங்கும் பகுதி வந்தபோது தேவி எழுந்து மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து மறைந்துவிட்டாள்.

16) மீனாட்சி அம்மன் பேரருள் வற்றாது கிடைக்க…

இந்தப் பாடலை தினசரி ஒருமுறையாவது பாராயணம் செய்தால் மதுரை மீனாட்சி அம்மன் பேரருள் வற்றாது கிடைக்கும். தினசரி விளக்கேற்றி வைத்து இப்பாடலைப் பாட அன்னை மீனாட்சி நம் இல்லம் தேடி வருவாள்.

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே
நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் சுவையே
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே
வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே

எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே
மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும்
இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெருவாழ்வே
வருகவருகவே

பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல் பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப் பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்தின்றி
விளைந்த பரமானந்தத்தின் விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக அருள்பழுத்த கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளம் குடைவார்
பிறவிப் பெரும் பிணிக்கோர்

மருந்தே வருக பசுங்குதலை மழலைக் கிளியே வருகவே
மலயத்துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே

17) முருகன் என்றாலே அழகுதானே அழகு என்றால் தமிழ் தானே

புள்ளிருக்கு வேளூர் என்று தேவாரத்தில் போற்றப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கும் முருகன் பெயர் முத்துக்குமாரசாமி. அவர் மீது பாடப் பட்ட முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ். ஆசிரியர் குமரகுருபரர். பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள பருவங்கள் பத்து. மொத்தப் பாடல்கள் 101. இந்த நூலைப் பாடுவதற்கு முருகப் பெருமான் `பொன் பூத்த குடுமி’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முருகனை இவர் `தீராத வினை தீர்த்த தம்பிரான்’ என்கிறார் குமரகுருபரர். முத்துக்குமார சுவாமியைக் காக்கும்படி திருமாலை அழைக்கும்போது `பச்சைப் பசுங்கொண்டலே’ என அழைக்கிறார். இந்த வார்த்தை வைணவ உரைகளில் அதிகமாக மேற்கோள் காட்டப்படும் வார்த்தை. இதில் வைணவ மரபும் பேசப்படுகிறது.

திருக்கோலமுடன் ஒரு மணக்கோலம். ஆனவன் செங்கீரை ஆடியருளேசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை ஆடியருளே
 என்ற அழகான பாடல்கள், முருகப் பெருமானை அழகுக் குழந்தையாக வர்ணிக்கின்றன. முருகன் என்றாலே அழகுதானே… அழகு
என்றால் தமிழ் தானே...

18) திருச்செந்தூர் முருகன்

முருகனை குழந்தையாகப் பாவித்துப் பாடும் மற்றொரு இலக்கியம் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ். இதன் ஆசிரியர் பகழிக் கூத்தர். இது திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. பாடல் எண்ணிக்கை 3+103. காலம் 15 ம் நூற்றாண்டு. இலங்கையில் வீட்டுக்குப் பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலைத் திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து வழிபாடு செய்த பின்னர்தான் கட்டட வேலைகளை ஆரம்பிப்பார்களாம். திருச்செந்தூர் பிள்ளைத் தமிழுக்குப் பண்டித தா.கனகராஜையர் உரை இயற்றியுள்ளார்.

19) ஓடி வா முருகா ஆடி வா முருகா

அழகு கொஞ்சும் ஒரு பாடல், முருகனை செங்கீரை ஆட அழைக்கிறது. இருகைகளையும் இரண்டு முழங்கால்களையும் தரையில் ஊன்றிக் கொண்டு, தலையை மெல்ல நிமிர்த்தி, அசைத்து விளையாடுவது செங்கீரை. அதில்தான் எப்படி தமிழ் கொஞ்சுகிறது பாருங்கள்.

பொறைகொண்ட சுரர்மருவும் அண்டகோ ளகைமுகடு
பொதிரெறிய நிருதர் உட்கப்
பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்
புருகூதன் வெருவி வேண்டுந்
திறைகொண்ட ளக்கவரு மயிலேறு சேவகா
செங்கீரை யாடியருளே

திரையெறியும் அலைவாய் உகந்தவடி
வேலவனே
செங்கீரை யாடி யருளே.
இப்பாடலை மெல்லப் பாடிப் பாருங்கள். குழந்தை முருகன் தவழ்ந்து வரும் காட்சி
உங்கள் கண்களில் தெரியும்.

20) விநாயகர் குழந்தையாக...

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலசை என்ற ஊருக்கு இன்றைய பெயர் தொட்டிக்கலை. இத்தலத்தில் பசுக் கொட்டில்கள் அதிகம் இருந்ததால் தொட்டிக்கலை என்று பெயர். அங்கு செங்கழுநீர் விநாயகர் சிதம்பரேஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. ஒரு காலத்தில் இவ்வூர் கலசை, கலசாபுரி, கோவிந்தபுரம் என்று அழைக்கப்பட்டது. கலசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளையாருக்கான பிள்ளைத் தமிழ் நூல்.

இதில் குழந்தை பிள்ளையாரின் அழகும் அருளும் வீரமும் ஈரமும் வர்ணிக்கப்படுகிறது. பிள்ளையார் எல்லோருக்கும் பிள்ளை. அவருக்கும் நாம் எல்லோரும் பிள்ளைகள். கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் நூலின் ஆசிரியர் சிவஞான முனிவர். விநாயகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பருவத்துக்கும் 5 பாடல்கள் வீதம் 10 பருவங்களுக்கு 50 பாடல்கள் உண்டு. 18ஆம் நூற்றாண்டு நூல் இது.

21) கண்ணனை அனுபவித்தவர்கள்

கண்ணனை பாசுரங்களில் அதிகம் அனுபவித்தவர்கள் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள். ஆழ்வார்களில் நம்மாழ்வாரை “கிருஷ்ண குதூகலம்” என்று சொல்வார்கள். அவரே கிருஷ்ண வடிவம்தான். கிருஷ்ண பிரேமை தான். பாகவதத்தில் உள்ள பல லீலைகளை ஆழ்வார்கள் உருகி உருகிப் பாடி இருக்கிறார்கள். பகவான் ஸ்ரீமன் நாராயணனை குழந்தை ஆக்கினார் பெரியாழ்வார். அவர் கண்ணன் மீது பாடிய பிள்ளைத்தமிழ், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், தனி நூலாக இல்லாமல், பெரியாழ்வார் திருமொழியின் ஒரு பகுதியாக இருக்கிறது. பிள்ளைத்தமிழ் நூல்களில் இந்த நூல் மற்ற நூல்களை விட மிகச் சிறப்பான இடத்தை, இலக்கிய உலகிலும், சமய உலகிலும் பெற்றிருக்கிறது.

22) குழந்தை வடிவில் தெய்வங்கள்

குழந்தை வடிவிலே உள்ள தெய்வங்கள் நம் சமய மரபில் வைணவத்திலும் உண்டு. சைவத்திலும் உண்டு. சாக்தத்திலும் உண்டு. வைணவத்தில் கண்ணன், குருவாயூரப்பன் குழந்தை வடிவத்தில் அருள் தரும் தெய்வங்கள். சைவத்தில் முருகனும் விநாயகரும் குழந்தை வடிவத்தில் காட்சி தரும் தெய்வங்கள். ஆண்டாள், பாலாம்பிகை முதலிய பெண் தெய்வங்களும் குழந்தை வடிவிலே நமக்கு அருள்புரிகின்றனர். ஏன், ஐயப்பனும் குழந்தை கோலத்தில் தானே பெரும்பாலும் காட்சி தருகிறார்.

23) குழந்தைகள்தான் தெய்வங்கள்

தெய்வங்கள்தான் குழந்தைகள். குழந்தை களின் மீது கொண்ட அன்பு, தெய்வங்களின் மீது பக்தியாக மாறுகிறது. தெய்வங்களின் மீது உள்ள பக்தி, குழந்தைகளின் மீது அன்பாக மாறுகிறது. பொதுவாகவே பக்தியின் நிறைவு நிலை “அன்பு நிலை” என்று சொல்வார்கள். இந்த அன்பு நிலை தான், ‘‘என் கண்ணா, என் தெய்வமே” என்று குழந்தைகளைக்  கொஞ்ச வைக்கிறது. தெய்வங்களை குழந்தைகளாக எண்ண வைக்கிறது.

24) தெய்வங்களின் அருட்கொடை

சமய நூல்களும், சாத்திர நூல்களும் குழந்தைகளை தெய்வங்களின் அருட் கொடை. பூர்வ புண்ணிய பலன் என்று ஒரே குரலில் குறிப்பிடுகின்றன. எத்தனை செல்வந்தராக இருந்தாலும் கூட, குழந்தை இல்லாத வாழ்வு கொஞ்சம் குறைவுடைய வாழ்வாகவே எண்ண வைக்கிறது. ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு பூர்வபுண்ணியமும், தெய்வத்தின் அனுகூலமும் வேண்டும். இதை நாம் ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

25) குருவின் திருவருள்

குருவின் திருவருள் இருந்தால்தான் குழந்தைச்செல்வம் கிடைக்கும் என்பது வேதத்தின் அங்கமான ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை. சுக்கிரன் யோகத்தையும், குரு குழந்தைச் செல்வத்தையும் தருவார். இதில் இன்னொரு நுட்பமும் உண்டு. குரு செல்வம், குழந்தை இரண்டையும் குறிப்பார். குழந்தை என்பது செல்வம் அல்லவா.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வம் என்பது சிறப்பானது. பாண்டியன் அறிவுடை நம்பி வெகு காலம் குழந்தையின்றி, பின் தமக்கு வாய்த்த தன் குழந்தை  உணவு உண்ணும்போது செய்கின்ற குறும்புகளை அப்படியே நம் கண்முன் காட்சியாக்கித் தந்த பாடல் புறப்பாடல்.

குழந்தையின் சிறப்பைச் சொல்லும்,
படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்
இடைப்படக்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குற இல்லைத் தாம் வாழும் நாளே!

26) சந்தான லட்சுமி அருள் முக்கியம்

குருவும் சுக்கிரனும் இருக்கும் செல்வத்தையும், அனுபவிக்கப்படும் செல்வத்தையும் குறிக்கும் கிரகங்கள். சுக்கிரன் மஹாலட்சுமிக்குரியகிரகம். மகாலஷ்மி செல்வம் கொடுப்பவள் அல்லவா. குழந்தையும் செல்வம் தானே. சந்தான லட்சுமி அருள் முக்கியம் அல்லவா? குரு, சுக்கிரன் இரண்டுமே முழு சுப கிரகங்கள். இதில் குரு ஆண் கிரகம். சுக்கிரன் பெண் கிரகம். இந்த இரண்டு கிரகங்களின் முறையான அருள் இருந்தால் (பலம்) மட்டுமே குறைவற்ற குழந்தைச்செல்வம் வாய்க்கும்.

27) குழந்தைச்செல்வம் ஏன் வேண்டும்?

பாகவதத்தைப் பார்ப்போம். தேவகி வசுதேவருக்கு குழந்தையாகக் கண்ணன் பிறக்கிறான். அதுவரை அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களுக்கு விடுதலையை யார் தந்தார்கள்? அவர்களுக்குப் பிறந்த குழந்தை கண்ணன் கொடுத்தான். கண்ணன் பிறக்கும் வரை, அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். கண்ணன் பிறந்த உடன் மகிழ்ச்சி அடைந்தார்கள். “தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்பது ஸ்லோகம் அல்லவா.
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ, நள் இருட்கண்-

வந்த எந்தை பெருமானார், மருவி நின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே.

தேவகிக்கும் வசுதேவருக்கும் கண்ணன் பிறந்ததால் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். தந்தை தாய்க்கு விடுதலையை கொடுக்க வந்தவன், புகழ் அடையச் செய்தவன் கண்ணன் அல்லவா! எனவேதான் தங்கள் துன்பங்களையெல்லாம் போக்குவதற்கும், தங்களை மகிழ்ச்சி அடையச் செய்ததற்கும், தங்கள் பிறவிக் கடனை தீர்ப்பதற்கும், ஒரு குழந்தை வேண்டும் என்று தெய்வத்தை வேண்டுகிறார்கள்.

28) அபிராமி அன்னையை வேண்ட அருட் குழந்தை பிறக்கும்

திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால், குழந்தைப் பேறு தப்பாமல் கிடைக்கும். மற்றச் செல்வங்களும் குறை வில்லாது கிடைக்கும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தினமும் நீராடி, அபிராமி பட்டர் அருளிய இந்தப் பாடலை மனமுருகிப் பாராயணம் செய்தால், மழலைச் செல்வம் வீட்டில் மலரும்.

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

29) மக்கட்பேறு தரும் ஸ்ரீசந்தானகோபால மந்திரம்

குழந்தைச் செல்வம் பெற ஸ்ரீ சந்தான கோபால மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. குழந்தைச் செல்வம் பெற வேண்டுவோர் இந்த ஸ்ரீ சந்தான கோபால மந்திரத்தை தினசரி காலை பக்தி சிரத்தையுடன் பசும்பாலை நிவேதனமாக வைத்து, அதோடு கொஞ்சம் வெண்ணெயும் வைத்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனம் செய்த வெண்ணெயையும் பால் அல்லது பாயசத்தையும் சந்தானகோபாலனை வழிபட்டு வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய|
கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||
இம்மந்திரத்திற்கு ரிஷி நாரதர் அவரை மந்திரம் பலிக்க வேண்டிக் கொண்டு பின் ஜெபிக்கவும். இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தைப் பாக்கியம் கிட்டும்.

 30) மழலைச் செல்வம் தரும் மகத்தான பாசுரங்கள்

சனிக்கிழமை விரதமிருந்து, பெருமாளை வேண்டிக் கொண்டு கீழ்க்கண்ட இரண்டு பாசுரங்களை பக்தியோடு பாராயணம் செய்ய மிக விரைவில் வீட்டில் மழலையின் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி மலரும். வைணவத்தில் திருமணமான தம்பதிகளை வாழ்த்தும் பொழுது, ``சீக்கிரம் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும்” என்று இந்த பாசுரத்தைச் சொல்லி ஆசீர்வதிப்பார்கள்.

ஆயனுக்காக, தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும்
வல்லவர் - வாயும்
‘‘நன் மக்களை” பெற்று மகிழ்வரே
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
அஞ்சனவண்ணன் தன்னைத்

தாயர் மகிழ ஒன்னார் தளரத்
தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
விரித்தன உரைக்கவல்லார்
“மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே”

எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்..