காரியம் ஆகிற வரைக்கும் காலைப் பிடிப்பார்கள். காரியம் முடிந்தால் கழுத்தைப் பிடிப்பார்கள்’ என்பது முன்னோர்களின் அனுபவ பூர்வமான வாக்கு. எந்தக் காலத்திலும் நடக்கக் கூடியதுதான் இது. இதை மெய்ப்பிக்கும் விதமான கதை இது. சூரிய குலத்தைச்சேர்ந்த பரிட்சித்து எனும் மன்னருக்கு சலன்-தளன்-பலன் என மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவருக்குப் பிறகு மூத்த பிள்ளையான சலன், ஆட்சியை ஏற்றான். ஆட்சி நல்லமுறையில் நடந்து வந்தது.
ஒருநாள்...சலன் ரதத்தில் ஏறி வேட்டைக்குப் போனபோது, ஒரு மான் சலனின் கையில் பிடிபடாமல் ஓடியது. சலனுக்கோ, மானை விட்டு விட்டுப் போவதற்கு மனம் இல்லை. ஆகையால் அவன், “தேரோட்டியே! நான் அந்த மானைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல், ரதத்தை வேகமாக ஓட்டு!” என்றான். அதற்குத் தேரோட்டி, “மன்னா! நீங்கள் இந்த மானைப் பின் தொடர வேண்டாம். உங்கள் ரதத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த இரண்டு குதிரைகளும், வாமதேவருடைய குதிரைகளாகவே இருந்தாலும் சரி! இந்த மானைப் பிடிக்க உங்களால் முடியாது” என்றான்.
சலன் விடவில்லை; ‘‘அப்படியென்றால் வாமதேவருடைய குதிரைகளைப் பற்றி எனக்குச் சொல்!” என்றான். தேரோட்டிக்குப் பயம் வந்துவிட்டது. வாமதேவரின் குதிரைகளைப் பற்றிச் சொல்லாவிட்டால், மன்னர் தண்டிப்பார்; சொல்லிவிட்டாலோ, வாமதேவர் சாபம் கொடுப்பார். என்ன செய்வது? ‘‘மன்னா! வாமதேவருடைய குதிரைகள் மனோ வேகத்தில் செல்லும்” எனப் பொதுப்படையாகச் சொல்லி வைத்தான்.
சலன், ‘‘சரி! இப்போது நமது ரதத்தை, வாமதேவர் ஆசிரமத்திற்கு ஓட்டு!” என உத்தரவிட்டான். அதன்படியே ரதம், வாமதேவர் ஆசிரமத்தின் முன்னால் நிறுத்தப்பட்டது. மன்னன் சலன் ரதத்தில் இருந்து குதித்தோடி வாமதேவரிடம், ‘‘ரிஷியே! நான் ஒரு மானைத்துரத்தி வந்தேன். பிடிக்கமுடிய வில்லை. உங்கள் குதிரைகளைத் தந்து உதவி, என்னைக்கௌரவப் படுத்துங்கள்!” என வேண்டினான். முனிவரைப் பார்த்ததும் குதிரைகளைக் கேட்டானே தவிர, அவருக்குச் செய்ய வேண்டிய முறைப்படியான மரியாதைகள் எதையும் சலன் செய்ய வில்லை.
மன்னன் மரியாதை செய்ய வில்லையே என்பதில் மனம் செலுத்தாத வாமதேவர், ‘‘மன்னா! என் குதிரைகள் இரண்டையும் தருகிறேன். ஆனால், வேலை முடிந்ததும் அவைகளைச் சீக்கிரமாகத் திருப்பித் தந்துவிட வேண்டும். சம்மதமா? எனக் கேட்டார். ‘‘அப்படியே சுவாமி!” என்று சொல்லிக் குதிரைகளைப் பெற்றுக்கொண்ட சலன், வாமதேவரிடம் விடைபெற்றான். வாமதேவரின் குதிரைகள், ரதத்தில் பூட்டப்பட்டன. அதில் ஏறிய சலன், சற்று நேரத்திற்குள்ளாகவே மானைப் பிடித்து விட்டான்.
அப்போது, அவன் மனம் மாறியது. குதிரைகளின் வேகம் அவன் மனத்தை மாற்றியிருந்தது; ‘‘ரிஷியான அவருக்கு, எதற்காகக் குதிரைகள்? வேகமாகச் செல்லும் இப்படிப்பட்ட குதிரைகள், என் போன்ற மன்னனிடம்தான் இருக்க வேண்டும்” எனத் தீர்மானித்த சலன், ‘‘தேரோட்டியே! இந்த இரண்டு குதிரைகளும் நம்மிடம் இருக்க வேண்டியவை. இவற்றை வாமதேவரிடம் திருப்பித் தரக்கூடாது. நம்மிடமே இருக்கட்டும். ரதத்தை அரண்மனைக்கு ஓட்டு!” என உத்தரவிட்டான் சலன்.
தேரோட்டி ஒன்றும் சொல்லவில்லை; ‘‘வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் மன்னர். நமக்கென்ன?” என்று எண்ணினான் அவன். வாமதேவரின் ஆசிரமம் நோக்கிப் போக வேண்டிய ரதம், அரண்மனை நோக்கித் திரும்பியது. அங்கு போனதும், இரண்டு குதிரைகளையும் கொண்டு போய், அந்தப்புரத்தில் கட்டினார்கள். குதிரைகள் திரும்பி வராததைக்கண்டு, வாமதேவர் ஆலோசித்தார்; ‘‘இளம்வயது; அரசபதவி வேறு; அதனால்தான், என் குதிரைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறான் மன்னன்.
என்னுடைய குதிரைகளைத் திருப்பிக் கொடுக்க, அவனுக்கு மனம் வரவில்லை போலிருக்கிறது” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார், வாமதேவர். அதன் பிறகு, ‘‘என்ன செய்யலாம்? என்ன செய்தால், நம் குதிரைகள் திரும்பி வரும்?” என்றெல்லாம் வாமதேவர் ஆலோசனை செய்தார். ஆலோசனை என்றால், ஏதோ ஒரு நாள்-இரு நாட்கள் அல்ல; ஒரு மாதகாலம் தீர்க்காலோசனை நீடித்தது.
ஒரு மாதகாலம் ஆனதும், வாமதேவர் தன் சீடனை அழைத்து, ‘‘ஆத்ரேயா! நீ மன்னனிடம் போ! உன் காரியம் முடிந்திருந்தால், குருநாதரின் இரண்டு குதிரைகளையும் திருப்பிக்கொடுக்கக் கடவாய் என்று மன்னனிடம் சொல்!” என்றார். சீடனும் போய் மன்னனிடம் அப்படியே சொன்னான். மன்னனான சலன் மறுத்தான்; ‘‘இந்தக் குதிரைகள் அரசர்களுக்கு உரியவை. இப்படிப்பட்ட உயர்ந்த ரத்தினங்களுக்கு, அந்தணர்கள் தகுதியற்றவர்கள்.
அந்தணர்களுக்குக் குதிரைகளால் ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை. குதிரைகளை நான் கொடுக்க மாட்டேன். நீ போகலாம்!” என்று சொல்லிவிட்டான். சீடன் போய் குருநாதரிடம் நடந்ததைச் சொல்லி, ‘‘மன்னர் குதிரைகளைத் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்” என்றான். அதைக்கேட்ட வாமதேவர் தாமே மன்னனிடம் போய்க் குதிரைகளைக் கேட்டார். மன்னன் அப்போதும் கொடுக்கவில்லை. வாமதேவர் மன்னனிடம், ‘‘மன்னா! நீ என் இரு குதிரைகளையும் கொடுத்துவிடு! சாதிக்க முடியாத காரியத்தைச் சாதிப்பதற்காக, என் குதிரைகளை இரவல் வாங்கிக்கொண்டு போனாய்.
திருப்பித் தருவதாகச் சொன்ன நீ, வாக்கு மாறாதே! ‘‘அந்தணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் உண்டான முறையை மீறிச்செல்லும் உன்னை, வருணன் தன் கோரமான பாசத்தால் கொல்லுவான். அது உனக்கு வேண்டாம். என் குதிரைகளைத் திருப்பிக் கொடுத்துவிடு!” என்று எச்சரிக்கை செய்தார். மன்னன் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை; மாறாக, ‘‘ரிஷியாக இருந்தால் என்ன? என் ஆட்சியில் எனக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டியவர். இவர் போய், என்னை எச்சரிப்பதாவது? ஊஹும்! இவருக்குப் பயந்து, குதிரைகளை நாம் திருப்பிக் கொடுக்கக்கூடாது. இவரை ஒரு கை
பார்த்துவிட வேண்டியதுதான்” எனத் தீர்மானித்தான். கெட்ட எண்ணமல்லவா? அதுவும் உயர்ந்த பதவியில் இருப்பவனின் எண்ணம் வேறு; கேட்க வேண்டுமா? உடனே செயல்பாட்டிற்கு வந்துவிட்டது; வணங்கி, மரியாதையுடன் அழைக்க வேண்டிய மாமுனியை, பெயர் சொல்லி அழைத்தான் மன்னன்.
‘‘வாமதேவரே! அந்தணர்களின் வாகனம் காளைகள் தான். குதிரைகளால் அந்தணர்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. என்னிடம் இரண்டு காளைகள் இருக்கின்றன. தீனி தின்று நன்றாகப் பழக்கப்பட்டவைகள் அவை. ‘‘அந்த இரண்டு காளைகளையும் உமக்குத் தருகிறேன் நான். அவற்றின் மீது ஏறி, நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்களோ அங்கு போகலாம். உம்மைப்போன்ற அந்தணர்களை, வேதங்கள் நன்றாகச் சுமக்கின்றன'' என்றான் மன்னன்.
வேதங்களே சுமக்கும் அளவிற்குத் தகுதி படைத்த நீங்கள், குதிரைகளைத் திருப்பிக் கேட்கக்கூடாது. கேட்டாலும் கொடுக்க மாட்டேன் என்பது கருத்து. மேலும், குதிரைகளுக்குப் பதிலாகக் காளை மாடுகளைத் தருகிறேன். ஏனென்றால், அந்தணர்களுக்கு வாகனம், காளை மாடுதான் என்று சொன்னதன் மூலம், மன்னன் நன்கு விவரம் அறிந்தவன் என்பது புலனாகிறது. நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம்.
அடுத்தவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீதி - சாஸ்திரங்கள் எல்லாம் சொல்லுவோம். ஆனால், நமக்கென்று வரும்போதோ, அந்த நீதிகள் எல்லாம், மறந்தும் மறைந்தும் போய் விடுகின்றன. இந்த மன்னன் சலனையே எடுத்துக்கொள்ளுங் களேன்! அந்தணர்களின் வாகனம் எது என்று, ரிஷியான வாமதேவருக்கே பாடம் நடத்தும் அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கும் அவன், அந்தணர்களின் பொருட்களைக் கவரக்கூடாது என்பதை மறந்து விட்டான் பாருங்கள்! இதுதான் உலகம்.
ஆனால், இப்படிச் செய்பவர்கள் தப்ப முடியாது. அதோ! மன்னனுக்கு வாமதேவரே பதில் சொல்கிறார். வாமதேவர், ‘‘மன்னா! என்னைப் போன்றவர்களை வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இங்கல்ல; பரலோகத்தில்தான் அவ்வாறு. ஆனால், இந்த உலகிலோ, எனக்கும்-நம்மைப் போன்றவர்களுக்கும் இந்தக்குதிரைகள்தான் வாகனம். ஆகையால் என் குதிரைகளை, என்னிடமே திருப்பித் தந்துவிடு!” என்றார்.
நற்புத்தி சொன்ன வாமதேவரை, மன்னன் மேலும் அவமானப்படுத்தினான்; ‘‘வாமதேவரே! உம்மை நாலு கழுதைகள் சுமக்கட்டும்; நாலு கோவேறுக் கழுதைகள் சுமக்கட்டும்; அல்லது காற்றைப்போலப் பறக்கின்ற நாலு குதிரைகள் சுமக்கட்டும். நீங்கள் எதிலாவது ஏறிப்போங்கள்! அதைப்பற்றி எனக்கு என்ன? இந்தக் குதிரைகள் சத்திரியனுக்கே உரிமையானவை. ஆகையால், இவற்றின் மீது எனக்குத்தான் உரிமை உண்டு.
உங்களுக்கு இக்குதிரைகளின் மீது உரிமையில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!” என்றான்.அப்போதும் வாமதேவர் பொறுமை இழக்கவில்லை; ‘‘மன்னா! நீ அந்தணர்களின் பொருட்
களைக் கவர்ந்து அதன்மூலம் பிழைப்பை நடத்துகிறாய். இது தீமையை உண்டாக்கி விடும் எச்சரிக்கிறேன். இரும்பு மயமானவர்களும், கோரமான வடிவம் கொண்டவர்களும், பயங்கரமான செய்கைகளும் கொண்ட, நாலு ராட்சசர்களை நான் ஏவினால், உன் நிலை அவ்வளவுதான்! அவர்கள் கூர்மையான சூலத்தால் உன்னை நான்கு துண்டுகளாக வெட்டி, நான்கு திசைகளிலும் வீசி எறிந்துவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.
மன்னன் மரியாதையைக் கைவிட்டான்; ரிஷியிடம் ஒருமையில் பேசத் தொடங்கினான்; ‘‘வாமதேவா! வாக்கு, மனசு, செய்கை முதலியவற்றால், நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய். இதை என்னைச்சுற்றி இருப்பவர்கள் அறிந்தால், உன்கதி அதோகதிதான்! அவர்கள் எல்லாம் கூர்மையான சூலம், கத்தி முதலியவைகளால் உன்னையும் உன் சீடர்களையும், நீ அந்தணனாக இருந்தாலும் சரி! விட்டு வைக்க மாட்டார்கள்” என்றான்.
வாமதேவர் தன் எச்சரிக்கையை இன்னும் சற்று கடுமையாக்கினார்; ‘‘மன்னா! திருப்பித் தந்துவிடுகிறேன் என்று சொல்லித்தான், என்குதிரைகளை இரவலாக வாங்கிக் கொண்டாய். உனக்கு உயிரோடு இருக்க விருப்பமிருந்தால், என் குதிரைகளைச் சீக்கிரமாகக் கொடுத்துவிடு!” என்றார். மாமுனிவரின் வாக்கை மன்னன் பொருட்படுத்த வில்லை; ‘‘வேதியா! உன் பேச்சு சரியில்லை. வேதியர்களுக்கு வேட்டை என்பது கிடையாது. என் உயிரை வாங்கிவிடுவதாக, நீ பொய் சொல்கிறாய்!
இருந்தாலும் உன்னை நான் தண்டிக்க மாட்டேன்” என்றான். இவ்வாறு பேசிய மன்னன் மேலும் பரிகாசத்தில் இறங்கினான்; ‘‘அந்தணா! இன்றுமுதல், நீ சொன்னதை அப்படியே மனதில் பதிய வைத்து, நான் புண்ணிய உலகத்தை அடைவேன். கவலை வேண்டாம்” என்று பரிகாசம் செய்தான். வாமதேவர் தொடர்ந்தார்; ‘‘மன்னா! வாக்கு, மனம், செய்கை ஆகியவைகளால், வேதியர்களுக்குத் தண்டனை இல்லை. கல்வி அறிவுள்ள எவன், இப்படிப்பட்ட ரிஷிகளை முறைப்படி உபசரித்து வாழ்க்கையை நடத்துகிறானோ, அவன் சிறப்பை அடைகிறான் என்பது உனக்குத் தெரியாதா?” என்று பேசி முடித்தார்.
வாமதேவர் இவ்வாறு சொல்லி முடித்த அதே விநாடியில், பயங்கரமான ராட்சசர்கள் அங்கே தோன்றினார்கள்; கைகளில் இருந்த சூலங்களால் மன்னனைக் குத்தி மண்ணில் தள்ளினார்கள். மண்ணில் விழும்போது கூட, மன்னன் திருந்தவில்லை; மரணமே வந்தாலும் சரி! மாமுனிவரின் குதிரைகளைத் திருப்பித் தரமாட்டேன் என்பதிலேயே உறுதியாய் இருந்தான். ‘‘இட்சுவாகு குலத்தில் பிறந்தவர்களும் பூமியில் இன்னும் எனக்கு மற்ற அரசர்களும், ஒட்டு மொத்தமாக என்னை விட்டுவிட்டாலும் சரி!
வாமதேவரின் இரண்டு குதிரைகளையும் நான் கொடுக்க மாட்டேன். குதிரைகளைத் திருப்பிக்கேட்கும் வாமதேவரைப் போன்ற இப்படிப் பட்டவர்கள், தர்மசீலர்களாக இருக்கமாட்டார்கள்” என்று சொல்லியபடியே கீழே விழுந்து உயிர் துறந்தான். மன்னன் சலன் இவ்வாறு இறந்துபோனதும், அவன் தம்பி யான தளன் என்பவன் அரசனானான். தளன், அரசனானதும் அவனது அரண்மனை தேடி, வாமதேவர் மறுபடியும் தன் குதிரைகளுக்காக வந்துவிட்டார்.
வாமதேவர் குதிரைகளைக் கொடுத்தது; அவற்றைத் திருப்பித்தருவதாகச் சொன்ன சலன் தராமல் ஏமாற்றியது; வாமதேவர் குதிரைகளைக் கேட்டபோது இழிவாகப் பேசி சலன் மடிந்தது என நடந்தவை அனைத்தும் தளனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரனான சலனை இழந்த துயரம், அரசன் எனும் பதவி என எல்லாம் சேர்ந்து தளனையும் தீயவனாகவே ஆக்கியிருந்தது. அப்படிப்பட்ட தளனிடம் தான்,‘‘இவனாவது நம் குதிரைகளைத்திருப்பித் தருவானா?” என்ற எண்ணத்தில் வாமதேவர் வந்தார்.
‘‘மன்னா! தர்ம சாஸ்திரங்களில் எல்லாம் இந்த முறைப்படி, அந்தணர்களுக்குத் தானம்செய்ய வேண்டும் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. (எனக்கு எதுவும் தானம் தராவிட்டால் கூடப் பரவாயில்லை. என்னுடைய குதிரைகளையாவது திருப்பிக்கொடுத்து விடு - என்பது கருத்து). ஆகையால் மன்னா! நீ அதர்மத்தைக் கண்டு பயப்படுபவனாக இருந்தால், என்னுடைய இரண்டு குதிரைகளையும் இப்போதே சீக்கிரமாகத் திருப்பிக் கொடுத்து விடு!” என்றார்.
அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய தளன், அவரிடம் பேசவில்லை; மாறாகத் தேரோட்டியிடம் பேசத் தொடங்கினான்; ‘‘சாரதியே! இந்த வாமதேவன் அடிபட்டுக் கீழேகிடக்க வேண்டும்; துடிக்க வேண்டும்; இவன் உடலை நாய்கள் கடித்து இழுக்கவேண்டும்; அதற்காக நன்கு தீட்டப்பட்ட, கூர்மையான விஷம் தோய்ந்த ஓர் அம்பைக் கொண்டு வா!” என்று கோபத்துடன் ஏவினான். அதைக்கேட்ட வாமதேவர் கடுங்கோபம் கொண்டார்; மன்னா! நீ சொன்னது நடக்கிறதோ இல்லையோ; இப்போது நான் சொல்வது நடக்கும் பார்! உனக்கும் உன் மனைவிக்கும் ‘‘சேனாஜித்” என்ற பிள்ளை இருக்கிறான். அவனுக்குப் பத்து வயது ஆகிறது என்பது எனக்குத் தெரியும். இப்போது, என்னால் ஏவப்பட்ட நீ மிகவும் பிரியமான அந்தப் பிள்ளையைக் கோரமான அம்புகளால்கொல்! என்று கட்டளையிட்டார். அப்படி யாராவது செய்வார்களா? அதே சமயம் மாமுனிவரான வாமதேவரின் வாக்கு பலிக்காமல் போகுமா? பலித்தது.
தளன் தன் நிலை மறந்தான்; வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து ஏவினான்; அம்பு ஔி வீசிக்கொண்டு பறந்துபோய் அந்தப்புரத்தில் நுழைந்து, அங்கிருந்த இளவரசனைக் கொன்றது. ஒரு சிலர் ஓடிவந்து தளனிடம், இளவரசனின் முடிவைச் சொன்னார்கள். தளன் கொதித்தான்; அரசவையில் இருந்தவர்களை நோக்கிக்கூவினான்; ‘‘எல்லோரும் கேளுங்கள்! நான் கவலைப்பட வில்லை. இதோ! இந்த வேதியனை இப்போதே அடித்துக் கொல்கிறேன் பாருங்கள்! பளபளவென மின்னும் கூரான ஓர் அம்பைக்கொண்டு வாருங்கள்!” என்றான்.
அதன்படியே தளனிடம் ஓர் அம்பைக் கொடுத்தார்கள். அதை வாங்கியவுடன் தளன், ‘‘இப்போது பாருங்கள் என் திறமையை! இந்த வாமதேவனைக் கொன்று கீழே தள்ளுவேன்” என்று கத்தினான். அதைக்கேட்ட வாமதேவர் அமைதியாக, ‘‘மன்னா! உன் கையிலுள்ள அம்பு கடுமையானது தான்; விஷம் பூசப்பட்டதுதான். மறுக்கவில்லை. என்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தீவிரமாக இருக்கிறது. அதையும் நான் மறுக்கவில்லை.
ஆனால், உன் கையில் உள்ள வில்லில் நாண் கயிற்றைப் பூட்டுவதற்கோ, அதில் அம்பைத் தொடுப்பதற்கோ, உனக்கு சக்தி கிடையாது” என்றார். அவர் வாக்கு பலித்தது. அரசன், இளைஞன், வீரன் என்றெல்லாம் ஆணவத்தில் இருந்த தளன், அசைவற்றுப்போனான். சபை முழுதும் வியப்பில் ஆழ்ந்தது. அந்த நிலையில் தளன் பேசத் தொடங்கினான்; ‘‘சபையோர்களே! அசைய முடியாமல் செய்யப்பட்ட என்னைப் பாருங்கள்! அம்பைப் பிரயோகிக்கச் சக்தியில்லை; இந்த வாமதேவருக்குத்தண்டனை அளிக்கவும் எனக்குச் சாமர்த்தியம் இல்லை. வாமதேவரே நீண்ட ஆயுளுடன் வாழட்டும்” என்றான் தளன்.
அப்போது தளனுடைய மனைவி, வாமதேவரைத் தெளிவாகப் பார்த்தவாறே கைகளைக் கூப்பினாள்; ‘‘வாமதேவரிஷியே! நான் நல்வழியில் மனதைச் செலுத்தியவள்; கொடியவனான இந்தக் கணவனுக்கு தினந்தோறும் நல்வார்த்தைகளைச்சொல்பவள்; ஆவேத வல்லுனர்களைப் பூஜை செய்பவள்; இவற்றையெல்லாம் நான் உள்ளன்போடு செய்தது உண்மையாக இருந்தால், எனக்குப் புண்ணிய உலகங்கள் கிடைக்கட்டும்” என்றாள்.
அவள் பக்கம் திரும்பினார் வாமதேவர்; ‘‘அம்மா! உன் கண்களிலேயே மங்கலம் தெரிகின்றது. உன்னால் இந்த அரசு காப்பாற்றப்பட்டது. இந்த மக்களையும் இட்சுவாகு அரசர்களுக்கு உரிமையான இந்த நாட்டையும் நீ நல்லவிதமாக ஆளக்கடவாய்! அரசகுமாரியே! உனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்!” என்று கனிவாகச் சொன்னார்.
ராணி வரம் கேட்டாள்; ‘‘பகவானே! என் கணவன் இப்போது பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். நான் பிள்ளைகளோடும், உறவினர்களோடும் கூடச் சுகமாக வாழ வேண்டும்” என்றாள். வாமதேவர், ‘‘அப்படியே நடக்கும் அம்மா!” என்று வரம் தந்தார். நடந்தவற்றையெல்லாம் பார்த்து மனம் திருந்திய தளன் மகிழ்ச்சியடைந்து, தன்னிலை அடைந்தான்; வாமதேவரை முறைப்படிப் பூஜித்து வணங்கினான்; அவருடைய இரண்டு குதிரைகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்தான். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதே! உதவி செய்தவர்க்கு உபத்திரவம் செய்யாதே! என்பதை விளக்கும் கதை இது.
(தொடரும்)
பி.என். பரசுராமன்
