×

சிம்ம ராசி குழந்தை: அன்பின் சின்னம், அதிகாரத்தின் அடையாளம்!

என்னோட  ராசி  நல்ல  ராசி

ஆகஸ்ட் மாதம், ஆவணி மாதம் சிம்ம லக்னம் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி உச்சம் பெற்ற குழந்தைகள் பெரும்பாலும் பின்வரும் பண்புகளைப் பெற்றிருப்பார்கள்.

தோற்றம்

சிம்ம ராசி குழந்தைகள் பார்க்க அழகாகவும் பிரகாசமாகவும் காணப்படுவர். சுறுசுறுப்பாக துள்ளிக்குதித்து பரபரப்பாக திரிந்து விளையாடாவிட்டால் இவர்கள்  எப்போதும் ‘ஆக்டிவாக’ இருப்பார்கள். இசை, ஓவியம், மென்மையான விளையாட்டுகள், நடனம், எழுத்து, கவிதை போன்றவற்றில் ஈடுபாடு  காட்டுவார்கள். சோம்பேறியாக இருப்பது கிடையாது. தன்னைச்சுற்றிப் பெரியவர்கள் பேசுவது, நடந்துகொள்வது என அனைத்தையும் கூர்ந்து கவனித்து மனதில் பதித்து அவற்றை மதிப்பீடு செய்து மூளையில் பாதுகாத்து வைப்பார்கள். இன்றைக்கு சிறு குழந்தை தானே என்று அந்த குழந்தையின் முன்பு தவறாகவோ அல்லது மோசமாகவோ நடந்து கொண்டால் பின்னர் இவர்கள் பெரியவர்களாகி வரும்போது அதைச் சுட்டிக்காட்டி
குற்றம்சாட்ட அஞ்ச மாட்டார்கள். எனவே சிம்ம ராசி குழந்தைகளை குழந்தைகள் என்று நினைப்பதை விட அவர்கள் புத்திக் கூர்மை படைத்த நினைவாற்றல் உடைய விவேகிகள் என்று கொள்வதே சரி.

தலைமைப்பண்பு

பிறவியிலேயே சிம்ம ராசி குழந்தைகள் தலைமைப் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். ஐந்து  குழந்தைகள் விளையாடும் இடத்தில் இவர்கள் சொல்லும் நெறிமுறைகளைப் பின்பற்றி மீதி நான்கு குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவதைக் காணலாம். இவர்களின் வழிகாட்டுதலை மதிக்காத குழந்தைகளோடு அல்லது அகம்பாவமாக எதிர்த்துப் பேசும் குழந்தைகளோடு இவர்கள் விளையாடுவது கிடையாது. இதனால் சில சமயம் இக் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் அமைதியான குழந்தைகள் என்று  பெரியவர்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை அது அல்ல. இவர்களுக்கு அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து சமமாக விளையாடப் பிடிக்கவில்லை என்பதுதான் அதன் உட்பொருள்.  மற்ற குழந்தைகள் மீது இவர்கள் செலுத்தும் அதிகாரம் என்பது ஆணவம்  கிடையாது. அவர்களை சிறந்த முறையில் அல்லது சரியான முறையில் வழிநடத்தும் நோக்கத்தில்தான் இக்குழந்தைகள்  அதிகாரம் செலுத்துவார்கள்.

தவறும் தண்டனையும்

சிம்ம ராசி குழந்தைகள் செய்வது பெற்றோருக்கு அல்லது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை என்றால் அது தவறு என்று அவர்கள் கருதினால் இக்குழந்தைகளைத் தனியாக அழைத்து  மென்மையாக எடுத்துக் கூறவேண்டும்.  வன்மையாகக் கண்டித்தால் அல்லது வன்முறையில் ஈடுபட்டு அடி, கொட்டு, தண்டனை என்று கொடுத்தால் அவர்கள் மனதில் வன்மம் இருந்துகொண்டே இருக்கும். சில சமயம் இவர்கள் முரடர்களாக மாறி தவறான காரியங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் கொடுத்து மறைவில் இருந்து செயல்படும் புத்திசாலிகளாக (intellectual criminals) கூட மாறிவிடக்கூடும்.

சிம்ம ராசி குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு புத்திசாலித்தனம் தேவை. சிம்ம ராசி குழந்தையை பக்குவமாக எடுத்துச் சொல்லி அன்போடு அதற்கு விபரங்களை எடுத்துக் கூறினால் அக்குழந்தை நீங்கள் விரும்பாத அந்தச் செயலை மீண்டும் செய்யாது. கண்டித்து தண்டித்து திருத்தலாம் என்றால் அது நடக்காது. காரணம் அந்த குழந்தை தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ளாது. அதனுடைய மனம் ஏற்றுக் கொள்ளாது.

நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்னை ஏன் இவ்வாறு துன்புறுத்துகிறார்கள்? இதுவே அதன் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். சிம்ம ராசி குழந்தைகள் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள். அதாவது தவறு என்று தன் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அறியாமல் தெரியாமல் அவர்கள் செய்தது தவறாகி விட்டால் தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். தவறு என்று அவர்கள் மனதுக்குப் பட்டதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

ஊக்கமளித்தல்

சிம்ம ராசி குழந்தைக்கு இயல்பாக இருக்கக்கூடிய தலைமைப் பண்புகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்குச் சிறிய சிறிய பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மென்மேலும் பொறுப்புடையவர்களாக வளர்க்க வேண்டும். இரண்டு மக்குப் பிள்ளைகளின் படிப்புப் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்தால் இவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து  அந்த இரண்டு பிள்ளைகளையும்   படிக்க வைத்து தங்களுக்கு வழங்கிய பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு அந்தப் பொறுப்பை வழங்கும்போது இது உனக்கு இட்ட பணி என்ற சொல்லைப் பயன்படுத்த கூடாது.

இது உனக்கு வழங்கியிருக்கும் பொறுப்பு நீ பொறுப்பாக செயல்படுவாய் என்பது எனக்குத் தெரியும். எனவே இந்த இரண்டு பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வா என்று அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமே தவிர அவர்களுக்குக் கட்டளை இடக்கூடாது. ஆக பெற்றோர்கள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் சொற்களும் அவர்களுடைய மனோபாவமும்தான் சிம்மராசிக் குழந்தையின் வாழ்க்கை வெற்றி அடங்கியிருக்கிறது. இவர்களின் திறமைகளை வெளிப்படுத்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரியவர்களும் முன்வர வேண்டும்.  இவர்களின் திறமைகளைப் பலரும் அறியச் செய்யும் விதத்தில் அவர்களின் திறமைகளை வளர்த்து பலர் கூடியிருக்கும் இடங்களில் அதனை பெருமையோடு சொல்ல வேண்டும். இதை அக்குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள்.

பலர் முன்னிலையில் குழந்தைகளை அவர்களின் திறமையை வெளிக்காட்டச் செய்து பலருடைய பாராட்டையும் அக்குழந்தைக்கு பெற்றுத்தர வேண்டும். இதுவே பெற்றோர் கடமையில் முக்கியமானதாகும். இந்த குழந்தைகளின் மனதில் ‘எனக்கு பாடத் தெரியும் எனக்கு பேசத் தெரியும் நான் இவர்கள் மத்தியில் பேசி காட்டவேண்டும் எழுதிக் காட்ட வேண்டும் பாடிக் காட்ட வேண்டும் ஆடிக்காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் நினைவு திரும்பத் திரும்ப ஒரு மனக் குரலாக மனத்தின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும். எனவே அவர்களின் திறமைகளை பலர் முன்னிலையில் காண்பிக்க செய்வதால் அவர்கள் மனம் மகிழும். மேலும் மேலும் திறமைகளை சீராகவும் சிறப்பாகவும் வளர்க்க    ஊக்கமாக இருக்கும். இவர்கள் சாதனை செய்து கைதட்டல் வாங்க ஆசைப்படுபவர்கள். எனவே பலர் முன்னிலையில் தான் பாராட்டப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.

கௌரவம்

சிம்ம ராசி குழந்தைகள் பிரஸ்டீஜ் dignity பார்ப்பவர்கள். தங்கள் கௌரவம் குறைவுபடாத வகையில் அதனை மிகைப்படுத்தும் வகையில் சுற்றியிருப்பவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இவர்களைக் குழந்தைகள் என்று கருதாமல் பெரியவர்களைப் போல் நடத்த வேண்டும். அடிக்கடி பாராட்ட வேண்டும்.  எக்காரணம் கொண்டும் சிம்மராசி குழந்தைகளை வாடா வாடி என்றோ   சோம்பேறி தூங்குமூஞ்சி அறிவு கெட்டது என்றோ குறிப்பிடக் கூடாது. அழைக்கவும் கூடாது. ராஜா தங்கம் செல்லம் என்று அழைக்க வேண்டும். தன்னை மற்றவர்கள் பார்க்கிறார்களா தன் அழகை ரசிக்கின்றார்களா தன்னுடைய செயல்பாடுகளை கவனிக்கிறார்களா என்று இந்த குழந்தைகள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

இவர்களை ஒரு இருக்கையில் அமரச் செய்யும் போது முதலில் இரண்டு காலையும் தொங்கப்போட்டு அமர்ந்து மெல்ல சுற்றி ஒரு பார்வை பார்ப்பர். தங்களைச்சரியாககவனிக்கவில்லை என்று தெரிந்தால் மெதுவாக கால் மீது கால் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து அப்போது ஒரு சுற்று பார்வை பார்ப்பார்கள். அப்போது பெரியவர்கள் தங்களை கவனிக்கிறார்கள் என தெரிந்தால் மனதுக்குள் ஒரு சின்ன சிரிப்பு சிரித்து விட்டு திரும்பவும் காலை கீழே போட்டு இரண்டு கால்களையும் தொங்கப்போட்டு அழகாக உட்கார்ந்து கொள்வார்கள். மற்றவர்களின் பார்வையில் தாங்கள் இருக்கவேண்டும் மதிக்கப்பட வேண்டும் என்று சென்டர் ஆப் அட்ராக்‌ஷன் உணர்வு இவர்களுக்கு எப்போதும் உண்டு.    

சில வேளைகளில் இவர்கள் சற்று சோம்பலாக இருப்பது போல  நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் அப்படி இருப்பதில்லை அவர்களுடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அவ்வேளைகளில் பெரியவர்கள் அவர்களை சோம்பேறி என்று தூங்குமூஞ்சி என்று குறிப்பிடாமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். அவர்கள் தாம் படித்த புத்தகத்தை பற்றி யோசித்துக்கொண்டு இருக்கலாம் அல்லது அன்றைக்கு நடந்த ஒரு விளையாட்டு சம்பவம் குறித்து பள்ளி நிகழ்வு ஏதேனும் ஒன்றை குறித்து யோசித்துக் கொண்டே இருக்கலாம்.

பொறுப்புணர்ச்சி

சிம்ம ராசி குழந்தைகள் உட்கார்ந்த இடத்தில் அதிகாரம் செய்யும் இயல்பை பெற்றவர்கள். வேலைக்காரர்களை வேலை ஏவுவார்கள். உடன் படிக்கும் மாணவர்களை பெற்றோர்களைக் கூட வேலை ஏவுவார்கள். அதை எடுத்துக்கொண்டு வா இதை எடுத்துக் கொடு என்று அதிகாரம் செய்வார்கள். அவர்களிடம் அப் பண்பை வளரவிடாமல் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும். அதை மென்மையாக சொல்லி உருவாக்க வேண்டுமே தவிர நாமும் அதிகாரம் செய்தால் குழந்தைகள் தாங்கள் கேட்ட அந்தப் பொருள் வேண்டாம் என்று சொல்வார்களே தவிர எழுந்துபோய் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களை குழந்தைப் பருவத்திலேயே தங்கள் வேலைகளை தாமே செய்ய  பழக்கிவிட வேண்டும். சிறு குழந்தை தானே என்று செல்லம் கொடுத்து விட்டால் பிறகு பெரியவர்களானதும் எந்த ஒரு வேலையையும் தன்னுடைய வேலையையும் அடுத்தவருடைய வேலையையும் செய்யமாட்டார்கள். அதிகாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.

எந்த வேலை செய்வார்கள்?

சிம்ம ராசி குழந்தைகளை எக்காரணம் கொண்டும் துப்புரவு பணி செய்ய சொல்லக் கூடாது. அதுவும் பொதுவான துப்புரவு பணி, அதாவது  ஒரு வீட்டைப் பெருக்க, தரையைத் துடைக்க, துணிகளைத் துவைக்க வேண்டும் என்றும் அவர்களை  வேலை ஏவக் கூடாது. அவர்களின் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள சொல்லலாம். பொதுவான வேலைகள் துப்புரவு பணிகள் அல்லது வேறு ஏதேனும் அழுக்கான பணிகளைச் செய்யச் சொல்லக் கூடாது.   பூஜை அறையை சுத்தம் செய், நூலகத்தில் நூல்களை எடுத்து அடுக்கி வை போன்ற வேலைகளைச் சொன்னால் அவர்கள் செய்வார்கள்.

ஆனால் பிறருடைய விஷயங்களை  சுத்தப்படுத்து என்று சொன்னால் அவர்கள் செய்யமாட்டார்கள். தாங்கள் செய்யும் வேலை ஒவ்வொன்றிலும் தங்களுடைய கவுரவம் இருப்பதாக அவர்கள் கருதுவதால் பெரும்பாலும் அழுக்கு தூசி மண் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்க விரும்புவதில்லை. தோட்ட வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்,  ஆனால் பூ கட்டுவார்கள், பூஜைக்கு அழகழகாக மாலைகள் தொடுத்து கொடுப்பார்கள், பூஜை பாத்திரங்களை விளக்க விரும்ப மாட்டார்கள், ஆனால் பூஜை அறையில் பல தோத்திரப் பாடல்களை சொல்லி பெரிய அளவில் பூஜை செய்வார்கள்,

அஞ்சா நெஞ்சமும் அன்பும் பாசமும்

சிம்ம ராசி குழந்தைகள் மன உறுதி படைத்தவர்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். யாருக்கும் எதற்கும் அஞ்சமாட்டார்கள். இடியே விழுந்தாலும் அசையாமல் இருப்பர். யாரிடமும் உதவி கேட்க மாட்டார்கள். சிம்ம ராசி குழந்தைகள் மிகுந்த பாசமும் நேசமும் கொண்டவர்கள். குறிப்பாக தாயின் மீது அபரிமிதமான அன்பு வைத்திருப்பார்கள். இவர்களின் தாய்ப் பாசத்துக்கு நிகராக வேறு எதையும் எடுத்துரைக்க முடியாது. அவ்வளவு அன்பு கொண்டவர்கள் இவருடைய தாய்ப் பாசம் பார்ப்பதற்கு ஒரு நாடகம் போலத் தோன்றினாலும் கூட அது அப்படியல்ல உண்மையான தாய்ப் பாசம் ஆகும்.

கவர்ச்சி

சிம்ம ராசி குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர் பாலினக் கவர்ச்சி சற்று விரைவாகவே வந்து எட்டிப்பார்க்கும். 11, 12 வயதிலேயே எதிர்பாலின ஈர்ப்பு அனுபவங்கள் இவர்களுக்கு ஏற்படும். இவர்களுடைய அந்த கம்பீரமான தோற்றத்தைப் பார்க்கும் எதிர் பாலினத்துக்கு இவர்களின் தோற்றம் நடை உடை பாவனை மிகுந்த வியப்பையும் ஈர்ப்பையும் அளிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதை இவர்கள் ரசிப்பார்களே தவிர காதல் கல்யாணம் என்று கொண்டு செல்ல விரும்புவது கிடையாது. எனவே இக்குழந்தை களின் எதிர்பால் ஈர்ப்பை பெற்றோர்கள் மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் அதை காதல் என்று நினைத்துக்கொண்டு கண்டித்து இவர்களை கேவலப்படுத்தக் கூடாது.

வளரிளம் பருவத்தில்  இவர்கள் பிறந்த நாள் விருந்து, நண்பர்களோடு சினிமா ட்ராமா பீச் என்று சுற்றுவதை பெரிதும் விரும்புவார்கள்.  10 பேர் இருக்கின்ற இடத்தில் தான் இருக்க வேண்டும். அந்த பத்துப் பேரும் தன்னைப் பார்த்து ரசித்து போற்ற வேண்டும் புகழ வேண்டும் என்ற ஆசை சிம்ம ராசி குழந்தைகளின்  மனதில் இருக்கும். அதற்காகத்தான் அவர்கள் அந்த பத்துப் பேரோடு அங்கும் எங்கும் செல்ல விரும்புகிறார்களே தவிர மற்றபடி கேளிக்கை நோக்கத்தில் அல்ல என்பதை பெரியவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.சிம்ம ராசி குழந்தைகள் தங்களைத் தொட்டுப் பேசுவதை விரும்ப மாட்டார்கள்.

யாராக இருந்தாலும் ஒரு தூரத்தில் வைத்து அவர்களிடம் பழகுவார்களே தவிர கைகோர்த்துக் கொண்டு தொட்டுக் கொண்டு தோளில் கைபோட்டுக் கொண்டு செல்வதை இக்குழந்தைகள் விரும்புவதில்லை. அதே வேளையில் அம்மா, சித்தி, பெரியம்மா அல்லது இவர்களின் பேரன்புக்கு உட்பட்டவர்கள் எவரேனும் இவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துப் பாராட்டினால் அதை இவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்றைக்குமே மறக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த கட்டிப்பிடித்துத் தரும் முத்தத்துக்கும் உரியவர்கள் இவர்களின் ஆழமான அன்புக்கு தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். சிறு குழந்தைகள் தானே என்று கன்னத்தை தொடுவது, மூக்கை கிள்ளுவது இவர்களுக்குப் பிடிக்காது. சிறு குழந்தையாக இருக்கும்போதே அதை வெறுப்பார்கள். தங்களுடைய வட்டத்துக்குள் யாரையும் விட இவர்கள் மனம் அனுமதிக்காது. தன் அருகில் வந்து பழக உயர் தகுதி படைத்தவர்களையே அனுமதிப்பர். தான் ஒரு மிகப் பெரிய உப்பரிகையின் மேல் இருக்கும் மகாராணி அல்லது ஒரு மகாராஜன் என்ற நினைப்பு இவர்களின் மனதுக்குள் எப்போதும் இருக்கும். மற்றவர்களெல்லாம் சிப்பாய்கள், சேவகர்கள் (பெற்றோர் ஆசிரியர் உட்பட ) என்று தான் நினைப்பார்கள்.

ஆசிரியர் அந்தஸ்து

இவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி ஒரு சிலருக்கே உண்டு. சிம்ம ராசி குழந்தைகள் அறிவுத் தாகம் கொண்டவர்கள். இவர்களின் அறிவுக்குத் தீனி போடும் ஆசிரியர்களை இவர்கள் மிகவும் மதிப்பார்கள். ஏனோதானோவென்று பேசிப் பொழுதை கடத்திச் செல்லும் ஆசிரியர்களை நகைச்சுவை என்ற பெயரில் மொக்க ஜோக் அடிக்கும் ஆசிரியர்களை இவர்கள் கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள். ஒரு சிம்ம ராசி குழந்தையின் ஆசிரியர் சிம்மராசி குழந்தையை மேலும் மேலும் மேன்மைப்படுத்தக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி  ஆவார்.

ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் 40 குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதை விட ஒரு சிம்மராசிக் குழந்தையின் மனதில் இடம் பெறும் படி நடந்து கொண்டால் அந்த சிம்ம ராசி குழந்தை நாடு போற்றும் நல்லவராக உயர்ந்து பேரும் புகழும் பெற்று இந்த ஆசிரியரின் பெயரையும் வாழ்நாள்  முழுக்க குறிப்பிட்டு இவருக்குப் பெருமை சேர்க்கும். சிம்ம ராசி குழந்தைகள் நேர்மையானவர்கள். பொய் சொல்வது கிடையாது. புரட்டிப் புரட்டிப் பேசுவது கிடையாது.

புறம் பேசுவதை விரும்பமாட்டார்கள். கேவலமான பேச்சுக்கள், இரட்டை அர்த்த பேச்சுக்கள் இவற்றை விரும்பமாட்டார்கள். நண்பர்களோடு இருக்கும் போது ஆங்கில இலக்கியம், நவீன தொழில்நுட்பம், பாரம்பரியக் கலைகள், இன்றைய மேல் நாட்டு நாகரீகங்கள் பற்றி விவாதிப்பதை கலந்துரையாடுவதை விரும்புவார்கள். இரட்டை அர்த்த பேச்சு, slang usages போன்றவற்றை வெறுப்பார்கள்.

அறிவும் அழகும்

எப்போதும் தங்கள் தலையின் பின்புறம் ஓர் அறிவுச் சுடர், சுடர் விட்டு கொண்டிருப்பதான நம்பிக்கையில் தான் இவர்கள் முகம் ஒளி வீசித் திகழும். சிம்ம ராசி குழந்தைகள் மிக அழகாக நேர்த்தியாக உடை உடுத்த விரும்புவார்கள். அவர்களுக்குப் பொருத்தமில்லாத மேலாடைகள் கீழ் ஆடையை அணிவித்து அல்லது சுத்தமில்லாத ஆடையை அணிவித்து அனுப்ப தாய்மார்கள் முன்வரக் கூடாது. பெற்றோர்கள் இவர்களுக்கு மிக அழகான நேர்த்தியான மற்றவர்கள் பார்த்து பாராட்டக் கூடிய உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவிக்க வேண்டும். இவர்களுடைய உடுப்பில் ஏதேனும் ஒரு குறை அல்லது  கறை இருந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள்.

கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுகின்றவர்கள் இவர்கள். எனவே ஏழையோ பணக்காரனோ அது முக்கியம் அல்ல. ஏழைக் குழந்தையாக இருந்தாலும் பணக்கார குழந்தையாக இருந்தாலும் நேர்த்தியாக உடை உடுத்தி சிறப்பாக  கம்பீரமாக நடந்து கொள்ளும் இக்குழந்தைகளைப் பார்க்கும்போது பெரியவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்படும். ‘நீ என்ன ஆகப் போகிறாய் என்று கேட்டால் இவர்கள் டாக்டர், இன்ஜினியர் என்று மற்ற குழந்தைகள் சொல்வதைப் போல சொல்ல மாட்டார்கள். நாம் எதிர்பார்க்காத ஒரு பதில் வரும். கலெக்டராவேன் ஜட்ஜ் ஆவேன்.

அரசியல் தலைவராக வந்து இந்த நாட்டை ஆளுவேன் என்று பதில் சொல்வார்கள். இதை கேட்டு மற்றவர்கள் சிரிக்காமல் அவர்களுடைய அந்த மேன்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினால் அன்று முதல் அந்தப் பெரியவர்கள் இக்குழந்தையின் அரசவையின் முக்கிய மதியூகி மந்திரிகள் ஆகிவிடுவார்கள்.தங்கள் வாழ்வை மேம்படுத்த விரும்பும் தங்களுடைய ஆளுமையை போற்றுகின்ற பெரியவர்களை இவர்கள் மதிப்பார்கள். மற்றவர்களை இவர்கள் வயது காரணமாகவோ பதவி, அந்தஸ்து, அதிகாரம் காரணமாகவோ பெரியவர்கள் என்று நினைப்பதே கிடையாது.

அவர்களை தங்கள் கால் தூசுக்கு சமானம் ஆகவே நினைப்பார்கள். ஒரு சிறு குழந்தைக்கு இவ்வளவா? என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அது ஆணவம் அல்ல. தன்னம்பிக்கை. சிம்ம ராசி குழந்தைகள் தன்னம்பிக்கையின் அடையாளம்; அதிகாரத்தின் சின்னம்; அன்பின் விளக்கு; நேர்மையின் குரல்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்