சென்னை: தமிழில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் பலத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் தணிக்கை குழுவை கண்டித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அது வருமாறு: இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, தெளிவற்ற தன்மையால் முடக்கப்பட்டுவிட கூடாது. இது எந்த ஒரு திரைப்படத்தையும் விட பெரியது. இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும், கலைஞர்களுக்கும் நாம் வழங்கும் இடத்தையே பிரதிபலிக்கிறது. சினிமா என்பது ஒரு தனி நபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும்.
தெளிவு இல்லாதபோது படைப்பாற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது. பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுகின்றன மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனம் அடைகிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இருக்கும் சினிமா ரசிகர்கள் கலைகளின் மீது ஆர்வத்தையும், பகுத்தறியும் திறனையும், முதிர்ச்சியையும் கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவை வெளிப்படைத்தன்மையும், மரியாதையும் ஆகும்.
இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப் படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு அல்லது திருத்தத்துக்கும் எழுத்துப்பூர்வமான, காரணத்துடன் கூடிய விளக்கத்துடன், சான்றிதழ் வழங்கும் செயல்முறைகளை ஒரு கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்வதாகும்.
முழு திரைப்பட துறையும் ஒன்றிணைந்து, நமது அரசு நிறுவனத்துடன் அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுதான். இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும். மேலும், கலைஞர் கள் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும். இவ்வாறு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

