×

வாரணமாயிரம் சூழ வலம் செய்து...

திருமண நிகழ்வுகளையும் சடங்குகளையும்  பெரும்பாலும் வைதீக முறையில் செய்பவர்கள் ஆபஸ்தம்ப சூத்திரத்தை அனுசரித்து நடத்துகிறார்கள்.கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இந்த ஆபஸ்தம்ப கிருஹ சூத்திரங்கள்.இதுதவிர, தேவாரத் திருமுறைகளை வைத்து, திருமணத்தை அழகாக நடத்தும் மரபும் தமிழ்நாட்டில் உண்டு.ஆனால், திருமண நிகழ்வுகளில், சடங்குகளின் அமைப்பை, வரிசையாக, ஒரு அழகான தமிழ்ப் பதிகத்தில்  பாடிக் கொடுத்தவள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பதிகத்தில் வைதீக மரபையும் விடவில்லை; தமிழ் மரபையும் விடவில்லை.

திருமணச் சீர் பாடல்

வைணவ ஆலயங்களில், எத்தனை வேத மந்திரங்கள் ஒலித்தாலும்,  இரண்டு திருப்பாவைப் பாசுரங்கள் (சிற்றம் சிறு காலே, வங்ககடல்) பாடாமல் வழிபாடு நிறைவு அடையாது.இதனை சாற்றுமுறைப் பாசுரங்கள் என்பார்கள்.அதைப்போலவே, நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் அருளிச்செய்த ஆறாவது திருமொழியான, “வாரணமாயிரம்” பதிகத்தைப் பாராயணம் செய்யாமல்,  திருமணச்  சடங்குகளை நிறைவேற்றமாட்டார்கள். இல்லங்களில் மட்டுமல்ல, ஆலயங்களில் நடக்கிற திருக்கல்யாண வைபவங்களிலும், இந்தப்  பாசுரங்கள்  சேவிக்காமல்  நிறைவு செய்யமாட்டார்கள்.

“பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் அனுசந்திக்காத திருமணமும்” பயனற்றவை என்பது வைணவ நம்பிக்கை.ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகையில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் கல்யாணம் என்று சொல்வார்கள்.ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமாளிகைகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யை “சீர் பாடல்” என்று சொல்லுவார்கள்.

தேங்காய் உருட்டுதல்

இந்தப் பதிகத்தின் பதினோரு பாடல்களையும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் சேவிப்பார்கள்.இந்த நிகழ்ச்சியை “தேங்காய் உருட்டுதல்” என்றும் சொல்லுவார்கள்.மணமகனும் மணமகளும் ஒரு பட்டுப் பாயில் எதிரெதிராக அமர்ந்து, இந்தப் பாசுரங்கள் சேவிக்கப்படும் பொழுது, மஞ்சள் தடவிய நான்கு தேங்காய்களை ஆளுக்கு இரண்டிரண்டு  காய்களாக எதிரெதிராக உருட்டி விடுவார்கள். அப்பொழுது, இரண்டு பக்கத்திலும் இருக்கக்கூடிய உறவினர்களின் பெயர்கள் சொல்லி அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி சீர்பாடி களிமின், களிப்போமே என்று ராகமாகப் பாடுவார்கள். நாச்சியார் திருமொழியின் கடைசிப்  பாசுரத்தை  ஆசாரியனும், ஸ்ரீவைஷ்ணவர்களும் பாடுவதற்கு முன்னால் ‘‘நாச்சியார் சம்பாவனை’’ என்று செய்வார்கள். வெற்றி லை, பாக்கு பழங்களுடன் ஆசாரியனுக்கும் மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும்
சம அளவில் சம்பாவனை செய்வார்கள்.

திவ்ய தேச மரியாதை

அதைப்போலவே திவ்யதேச மரியாதை என்று ஒரு மரபும் வைணவத்தில் உண்டு. ஒரு திருக்கல்யாணத்தை ஆசீர்வதிக்கும் விதமாக பல்வேறு திவ்ய தேசத்து எம்பெருமான்களின் திருமாலை, பரிவட்ட பிரசாதங்கள், அந்தந்த திவ்யதேசத்தைச்   சேர்ந்தவர்களால் கொண்டு வரப்படும். இது பெருமாளும் பிராட்டியும் சூடிக் களைந்த மாலையாக இருக்கவேண்டும். காரணம், “சூடிக் களைந்த மாலை சூடும் தொண்டர்கள்” என்று பகவானுடைய பிரசாதத்தை அல்லாது, மற்றவற்றை வைணவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தில் சொன்னார் பெரியாழ்வார். எனவே, அந்தந்த திவ்யதேசத்து மாலையை பிரசாதமாக மணமக்களுக்கு  சூட்டி, அந்தந்த திவ்யதேசத்து பாசுரத்தை வாழ்த்துப்பாவாகப் பாடி வாழ்த்துவார்கள்.

அப்படி திவ்யதேசத்து மரியாதை
செய்பவர்களுக்கு எதிர்  மரியாதை
(சம்பாவனை) செய்ய வேண்டும்.
இனி இந்த நாச்சியார் திருமொழியில் வாரணமாயிரம்
பதிகத் தத்துவத்தைப்  பார்ப்போம்.

திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்தன?

கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கனவு கண்டாள். ‘தோழி! பார்! எங்கு பார்த்தாலும் நம் நகரத்தில் தோரணங்கள் கட்டப் பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப் பந்தலிட்டு, மாலை, முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன், என்னை பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். என் கையைப் பிடித்துக்கொண்டு வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ!’ என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள்.திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்தன என்பதை முதல் பாடல் சொல்கிறது.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

வாரணமாயிரம் என்றால் ஆயிரம் யானைகள். கண்ணனுக்கு எப்படி ஆயிரம் யானைகள்? கண்ணனிடம் மாடுகள்தானே இருக்கும்? அவன் பிறந்தது அரச குலம் என்றாலும், வளர்ந்தது வைசிய குலத்தில்தானே! அவ்வகையில் கண்ணன் பிறந்த குலத்தில் இருந்து ஆயிரம் யானைகள்.
வளர்ந்த குலத்தில் இருந்து கறவை இனங்கள்.
அது சரி, ஒரு யானை போதாதா?
எதற்காக ஆயிரம் யானைகள்?

கண்ணன் தன்  தோழர்கள், ஒவ்வொரு வரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறான். பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தானே யானை வாகனத்தில் வருவார்..! ஆனால், இங்கே கண்ணனின் தோழர்களும் அவனுக்கு சமமாக வாகனத்தில் வருகிறார்கள். காரணம், பகவானுக்கு இருக்கிற தயாள குணம்..! அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைத்து அழகுபார்ப்பது அவன் குணமாயிற்றே? பெரியவாச்சான்பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோட்சத்தைக் கூறுகிறார். பகவானிடம் ஒருவன் சரணம் என்று சொல்லி, அவன் மோட்சம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து சாம்யாபத்தி மோட்சம் அடைகிறான்.

அந்த எட்டு கல்யாணக் குணங்கள்

“அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா”
(அபகதபாப்மா - பாபம் தீண்டாத தன்மை; விஜரஹா - மூப்பு கிடையாது; விமுர்த்திஹு  - மரணம் கிடையாது; விசோகஹா - சோகமே கிடையாது; விஜகிக்ஸஹா  - பசி கிடையாது; அபிபாஸஹா - தாகம் கிடையாது; சத்யகாமஹா - ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்; சத்யசங்கல்பஹா - எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை)
பகவானைச் சரணடைந்தவன், இப்படி எட்டு கல்யாண குணங்களைப் பெறுகிறான் என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

மாப்பிள்ளை அழைப்பு

இனி அடுத்த பாசுரம் . கல்யாணத்தில் முதல் நாள் விசேஷமான நிச்சயதார்த்தம் பற்றிய பாசுரம்.
மாப்பிள்ளை அழைப்பு பாசுரம்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

மாப்பிள்ளை கண்ணன் வந்துவிட்டார். என்னதான் முன்னதாக இரண்டு மூன்று மாதம் முன், பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டாலும், முதல் நாள் வைதீகமாக நடப்பது நிச்சயதார்த்தம். அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அரங்கன் உள்ளே நுழைய, ஆரத்தி எடுத்து வர்வேற்பு, நிச்சயதார்த்தம் நடந்த அனுபவம் இப்பாசுரத்தில்
ஜொலிக்கிறது.

ஆண்டாளைக் கை பிடிக்க “தட தட”
என நுழைத்தானாம்.

‘‘கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்’’
நரசிங்கத்தின் (கோளரி) கம்பீரமும், பெரியபிராட்டியாரின் மணாளன் (மாதவன்) என்ற பெருமையும்,
மாடு மேய்த்ததின் எளிமையுடன் (கோபாலன்) ஒருசேர காளையை போல் பந்தலில் கண்ணன் நுழைந்தானாம்.

மணமாலை சூட்டுதல்,
புடவை ஓதி வழங்குதல்
இனி மாலை சூட்டி, புடவை அளித்தல் நிகழ்ச்சியைப் பாடுகிறாள்.

இந்திரன் உள்ளிட்ட, தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

இந்திரன், உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வந்து முன்னின்று சடங்குகளை நடத்தி வைக்கின்றனர். புடவைக்கு மந்திர ஜபம் செய்தனர். நாத்தனார்  அந்தரி வந்து கூறைப்புடவையும், (திருமணச் சடங்குகளின் போது மணமகள் அணிந்துகொள்ளும் (பெரும்பாலும்) அரக்கு நிறத்தில் இருக்கும் சேலை) மாலையையும் ஆண்டாளுக்குக் கொடுத்தாள்.
அந்தரி யார்?

கண்ணன் மதுராநகரில் பிறந்த அதே நாளில் நந்தகோபருக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் பெயர் யோக மாயா என்கிற துர்கை. கம்சன் துர்கையைப் பிடிக்க, அவள் ஆகாயத்தில் பறந்தாள். ஆகாயத்தில் சுற்றுபவள் அந்தரி. ஆண்டாளின் கல்யாணத்திற்காக ஆகாயத்திலிருந்து யோகமாயா (அந்தரி) வந்து கூறைப்புடவையும் மாலையையும்
ஆண்டாளுக்குக் கொடுத்தாள்.

புண்யாகவாசனம், காப்பு
காப்பு கட்டும் நிகழ்ச்சி அடுத்து நடக்கிறது.
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா ரெடுத்தேத்தி,
பூப்புனை கண்ணி புனிதனோடென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

பல திசைகளிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து புண்யாகவாசனம் செய்தனர். ஆண்டாளுக்கும், அரங்கனுக்கும் திருக்கல்யாணம் நன்றாக நடக்க காப்பு கட்டினார்கள். ஆண்டாள் இடது கையில், அரங்கன் காப்பு கட்டுகிறார். பூப் புனை கண்ணிப் புனிதன் என்றால், நன்கு மலர்ந்த பூக்கள் அணிந்த தூய்மையான கண்ணன் என்று பொருள்.மங்கள தீபமுடன் வரவேற்புஇப்பாசுரத்தில் காசியாத்திரை முடிந்து வரவேற்கும் நிகழ்ச்சியைப் பாடுகிறாள்.

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர்கொள்ள,
மதுரையார் மன்னனடி நிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

மங்கையர் கையில் எட்டுவகை மங்கலங்களுடன் (விளக்கு, பூர்ணகும்பம்) வரவேற்கிறார்கள்.மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு, என்று ஆண்டாள் பாடுவதைக் கவனிக்க வேண்டும்.
மதுரா நகரத்து மன்னனான கண்ணன் செருப்பு அணிந்து உள்ளே வருகின்றார். இதனால் தான் இன்றும் காசியாத்திரை நடைபெறும் போது, மாப்பிள்ளை புது செருப்பு அணிந்துவரும் வழக்கம் உள்ளது.

பாணிக்கிரகணம்
இனி கரம் பிடிக்கும் (பாணிக்கிரகணம்) வைபவம்.
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீநான்.

மத்தளம் கொட்ட, சங்கு தொடர்ந்து முழங்குகிறது. திருமணத்தில் சங்கம் ஊதும் வழக்கம் அன்று உண்டு. இன்றும் நகரத்தார் திருமணங்களில் சங்கம் ஒலிக்கும். (மொய்குழலார் நடுச்சங்கம் நல் விலங்கு பூட்டும் என்பது பட்டினத்தார் பாடல்) அதை போல, பறை என்னும் வாத்தியமும் ஒலிக்கும்.(மணப்பறை-திருவிளையாடல் புராணம்). சுப நிகழ்வுக்குத் தனி வாத்தியம் உண்டு. முத்துப்பந்தலின் கீழே கண்ணன் ஆண்டாளின் கைப்பிடித்தார்.

இதற்குப் பாணிக்கிரகணம் என்று பெயர்.
(மாதவி பந்தல் என்று ஸ்ரீவில்லி
புத்தூரில் முற்றம் உண்டு).
தீவலம் வரும் காட்சி
அழல் ஓம்பும் காட்சியும் தீவலம் வரும் காட்சியும் பாடுகிறாள்.

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளிறன்னா னென் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீநான்.
வேதம் ஸ்வரத்துடன் ஓதுகின்ற பண்டிதர்கள், அக்னியைச் சுற்றி
அமர்ந்திருக்கிறார்கள்.
மந்திர பலிதம் ஆக வேண்டும் என்றால், அதற்குரிய அனுஷ்டானம் வேண்டும்.

ஸ்வரம் தப்பாகக்  கூடாது.
ஸ்வரம் மாறும் போது, அர்த்தம் மாறி, அனர்த்தம் விளையும்.
அதைப் போலவே, அக்னி குண்டம் எப்படி தர்பைகளாலும்
சமித்துகளாலும் காக்கப்பட வேண்டும் என்பதை
அற்புதமாகக்  காட்டுகிறாள்.

பெரியாழ்வார் பெண் என்பதால்,
அத்தனை கலைகளும் தெரிந்திருக்கிறது.

மறை என்றால் வேதம். இதில் “நல்ல மறை” என்பது காமியார்த்தமாக இல்லாது,
பரப்பிரம்ம சொரூபத்தைச் சொல்லும் “புருஷ சூக்தம்” போன்ற உயர்ந்த மந்திரங்கள்.
ஸ்ரீசூக்தம் போன்ற மந்திரங்கள்.
இன்றைக்கும் மாங்கல்ய பூஜையின் போது, ஸ்ரீசூக்த ஜெபம் செய்வதைப்  பார்க்கலாம்.

அம்மி மிதித்தல்
அடுத்து அம்மி மிதித்ததைச்
சொல்கிறாள்.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராயணன் நம்பி,
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று எடுத்த எடுப்பில் பாடியவள்.
இப்போதும் அதை திருப்பிச் சொல்கிறாள். இப்போது மட்டும் அல்ல, எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவரே நமக்கு உறவு. பாதுகாப்பு.
 காக்கும் கடவுள் கண்ணபிரான் அல்லவா!

ஆண்டாள் திருவடிகளை கண்ணபிரான் தன் கையால் பற்ற, அம்மி மிதிக்கிறாள்.
இவளைப் பிடித்த கை என்பதால்
செம்மையுடைய கை.
“மனைவி வந்த அதிர்ஷ்டம்”  என்பார்கள் அல்லவா.
அந்த அதிர்ஷ்டம் கிடைத்ததை
எண்ணிப் பூரிக்கிறாள்.

சகல உலகமும்  அவன் காலைப்  பிடிக்க, அவன் இவள் காலைப் பிடிக்கிறான். தன்னை விரும்பியவர்களிடம்  தன்னையே தருபவன்.
லாஜ ஹோமம்
அடுத்து லாஜ ஹோமம்.
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

ஆண்டாள் கண்ணன் கை மேல் கை வைத்து. அக்னியில் பொரி சேர்க்கிறாள்.
அரிமுகன் (சிங்க முகத்துடன் இருக்கும் நரசிங்கன்), அச்சுதன் - அச்சுதன் என்றால்-நழுவாதவன், நழுவ விடாதவன் என்று பொருள்.
 நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை.

கல்யாண ஊர்கோலம்
கல்யாணம் முடிந்தவுடன் ஊர்கோலம் விடுதல் என்ற முறை 40 வருடங்களுக்கு முன் இருந்தது. மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு குதிரையில் வந்து இறங்குவார். திருமணம் முடிந்த பிறகு மணமக்களை குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் வீதி வலம் செய்ய வைப்பார்கள். ஆங்காங்கே அவர்களுக்கு உபசாரம் நடக்கும்.
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடன் சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

அரங்கனுக்கு பெரியாழ்வார் குங்குமப்பூவும் சந்தனமும் நிறைய அப்பினார். ஆண்டாளும் அரங்கனும் யானையின் மேல் வீதி உலா வந்து கல்யாணம் சிறப்பாக முடிந்தது. கோயில்களில் திருக்கல்யாணம் முடிந்தவுடன் புறப்பாடு உண்டு.

பலஸ்ருதி
திருமணத்திற்கு பலஸ்ருதி சொல்கிறாள். கல்யாணம் ஆகி குழந்தைப் பேறு தாமதம் ஆகிறவர்களுக்கு இந்த வாழ்த்துப்பாசுரம் உதவும்.
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வாரே.

இப்பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மைகளைப் பெற்று மகிழ்வார்கள் என்பது நம்பிக்கை அதைப்போ ல வே திருமணமாகாத பெண்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு வைத்து இந்த பதிகத்தை தொடர்ந்து சேவித்து வந்தால், நல்ல மணவாழ்க்கை கிடைக்கும்.

விருச்சிகன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி