×

ஏன் மார்கழியை ஆண்டாள் தேர்ந்தெடுத்தாள்?

ஆழ்வார்களிலேயே  ஆண்டாளுக்கு  தனித்த பெருமை உண்டு. வாழ்வின் லட்சிய நோக்கம் வைகுந்தம் அடைவது என்றால், அந்த வைகுந்த வான் போகத்தை வேண்டாம் என்று வெறுத்து, கர்ம பூமியான தர்ம பூமியில், பெரியாழ்வாருக்கு மகளாக  இருக்கும் பெருமையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அவதரித்தார் ஆண்டாள்.

ஒரு தாயானவள் தன் கணவனோடு எத்தனை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் கூட, தன்னுடைய குழந்தைகள் துன்பப்படுகின்ற போது, அவர்களோடு  இருந்து, அவர்களை மீட்க வேண்டும் என்று நினைப்பாளே தவிர, தன் கணவனோடு அனுபவிக்கக்கூடிய உயர்ந்த ஸ்தானமோ, பேறோ, அவளுக்கு கசக்கவே செய்யும். பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள், கண்ணன் மேல் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தாள். அந்தக் கண்ணனையே  மணக்க விரும்பி, மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பு நோற்று, தான் அவ்வாறு நோன்பு நோற்ற விதத்தை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவை என்னும் பிரபந்தமாக பாடினாள்.

இந்த நோன்பை நோற்பதற்கு மார்கழி மாதத்தை ஆண்டாள் ஏன்  தேர்ந்தெடுத்தாள் என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக
இக் கட்டுரையில் காண்போம்:

1.கோபிகைகள்  காட்டிய வழி

ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்ட வேளையில், ஊரில் மழை பொழிவதற்காக மார்கழி நோன்பு நோற்குமாறு ஊர்ப்பெரியவர்கள் கோபிகைகளை அறிவுறுத்தினார்கள். ஆனால், கண்ணனையே தங்கள் உயிராகக் கருதிய கோபிகைகள், ஊரார்க்கு மழை வேண்டும் என்ற பிரார்த்தனையோடு சேர்த்து, தங்களுக்குக் கண்ணனே கணவனாக வரவேண்டும் என்ற பிரார்த்தனையையும் முன்வைத்து மார்கழி நோன்பு நோற்றார்கள். அதிகாலையில் எழுந்து பஜனை செய்து கொண்டு யமுனா நதிக்கரைக்குச் சென்று, யமுனையில் நீராடிக் காத்யாயனி தேவியை வழிபட வேண்டும் என்பது நோன்புக்கான வரையறை. நோன்பு நோற்க யமுனை நதிக்கரைக்குச் செல்லும் கோபிகைகளுக்குத் துணையாகக் கண்ணனையே ஊர்ப் பெரியவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இதனால் கோபிகைகளுக்கு இரட்டை மகிழ்ச்சி - கண்ணனை மணப்பதற்காக நோன்பு நோற்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம், கண்ணனே அதற்கு துணையாக வருகிறான் என்ற மகிழ்ச்சி மறுபுறம்.ஆனால், இவற்றை விடவும் கோபிகைகளுக்கு எது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றால், கண்ணனுக்காக நோன்பு நோற்கும் மாதம் தற்செயலாக மார்கழி  மாதமாக அமைந்ததே ஆகும். ஏனெனில், மார்கழி மாதக் குளிருக்குப் பயந்து ஊர்ப்பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள். அதனால் இடையூறின்றிக் கண்ணனை அனுபவித்து, அவனோடு ஆனந்தமாகக் களிக்கலாம் என்று எண்ணி மகிழ்ந்தார்களாம்கோபிகைகள்.

கண்ணனை மணக்க விரும்பிய ஆண்டாளுக்கு இந்த கோபிகைகளே முன் னோடிகள்! திருப்பாவை 26-ம் பாசுரத்தில், “மேலையார் செய்வனகள் -  பெரியோர்கள் எந்த விதத்தில் ஒரு செயலைச் செய்கிறார்களோ, அதே வழியைப் பின்பற்றி நாம் செய்ய வேண்டும்!” என்று பாடி யிருக்கிறாள். அதனால் தான் கோபிகைகள் நோன்பு நோற்ற அதே மார்கழி மாதத்தில், தன்னையே ஒரு கோபிகையாக நினைத்து, தனது தோழிகளை எல்லாம் கோபிகைகளாக எண்ணிக் கொண்டு, தனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகக் கருதி, அங்குள்ள திருமுக்குளத்தை யமுனா நதியாக எண்ணி, அங்குள்ள வடபத்ரசாயீ திருக்கோயிலை நந்தகோபனின் இல்லமாகக் கருதி, அங்குள்ள பெருமாளையே கண்ணனாக எண்ணி, கோபிகை
களின் வழியை அப்படியே  பின்பற்றி இந்த மார்கழி நோன்பை நோற்றாள் ஆண்டாள். கோபிகைகள் நோன்பு நோற்ற மாதம் மார்கழி என்பதால், அவர்களைப் பின்பற்றிய  ஆண்டாளும் அதே மார்கழி மாதத்தில் இந்த நோன்பை அனுஷ்டித்தாள்.

2. பெருமானுக்கே பேருதவி புரிந்த மாதம்

ராமனின் பட்டாபிஷேகம் சித்திரை மாதத்தில் நடைபெற்றதால், அது மிகச்சிறந்த மாதம் என்று கூறுவார்கள். ஆனால், ஐந்து லட்சம் கோபிகைகள் ஒன்று கூடிக் கண்ணனுக்காக நோன்பு நோற்ற மார்கழி மாதம், சித்திரை மாதத்தை விடவும் பெருமை வாய்ந்ததாகும். ஏனெனில், சித்திரை மாதத்தில் தொண்டர்களான அயோத்தி மக்களுக்கு ராமன் என்கிற நல்ல தலைவன் கிடைத்தான். ஆனால், மார்கழியில்தான் தலைவனான கண்ணனுக்குக் கோபிகைகள் என்னும் நல்ல தொண்டர்கள் கிடைத்தார்கள்.உண்மையான தொண்டன் (பக்தன்) கிடைப்பது அரிதல்லவா? அத்தகைய பக்தனைத் தானே இறைவனே தேடுகிறான்? அத்தகைய ஐந்து லட்சம்  கோபிகைகளைக் கண்ணனுக்குத் தந்து கண்ணனுக்கே பேருதவி புரிந்த மாதம் என்பதால், மார்கழி மாதம் மிகச்சிறந்த மாதமாகச் சொல்லப்படுகிறது.  எனவே அந்த மார்கழியைத் தன் நோன்புக்காகத் தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள்.

3. கேசவ மாதம்

வருடத்திலுள்ள அனைத்து மாதங்களுமே ஆண்டாளுக்கு உகந்தவையாக அமைந்திருக்க, அவள் மார்கழியைத் தேர்வு செய்ய என்ன காரணம்? மார்கழிக்கு என்ன தனிச்சிறப்பு?காலத்தால் ஆண்டாளுக்குப் பிற்பட்டவரான போதும், ராமாநுஜரை ஆண்டாளின் அண்ணன் என்று கொண்டாடுகிறோம்.  திருப்பாவையில் ராமாநுஜருக்கு உள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, ராமாநுஜரைத் ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அழைக்கிறோம். அந்த ராமாநுஜர்  அவதரிக்கப் போகிற மாதம் சித்திரை என்பதை ஆண்டாள் முன்னமேயே அறிவாள். எனவே சித்திரை மாதம் அவளுக்கு மிகவும் பிடித்தமான மாதம்  என்பதில் ஐயமில்லை. வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையைப் பாடிய ஆண்டாளுக்கு, அந்த வேதத்தை முதன்முதலில் தமிழாக்கம் செய்தருளிய நம்மாழ்வார்  தோன்றிய வைகாசி மாதம் மிகவும் பிடித்தமானதே என்பதில் ஐயமில்லை.

ஆண்டாளுக்குத் தந்தையாக மட்டுமின்றி, குருவாகவும் விளங்கிய பெரியாழ்வார் தோன்றிய ஆனி மாதமும் அவளது மனத்துக்கு மிகவும் உகந்த  மாதமே ஆகும்.
ஆண்டாள் தோன்றிய மாதம் ஆடி. எனவே அதுவும் கூட அவளுக்கு இனியதே. அவள் மணக்க விரும்பிய கண்ணன் தோன்றிய மாதம் ஆவணி. எனவே அதுவும் அவளது மனம்
கவர்ந்த மாதமே ஆகும்.

“வேங்கடவற்கு என்னை விதி” என்று ஆண்டாளால் ஆசையுடன் போற்றப்பட்ட திருவேங்கடமுடையான் அவதரித்த மாதமான புரட்டாசியும்  அவளுக்குப் பிடித்தமான மாதமே.
“அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி - ஆழ்வார்களின் குலத்துக்கு ஒரே வாரிசு” என்று ஆண்டாளைப் போற்றினார் மணவாள மாமுனிகள். அந்த ஆழ்வார்களுள்  முதல் மூவரான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த ஐப்பசி மாதமும் ஆண்டாளுக்கு உகந்த மாதந்தான்.

ஆண்டாள் எந்த அரங்கனோடு கலக்க விழைந்தாளோ, அதே அரங்கனின் திருவடிகளில் கலந்த திருப்பாணாழ்வார் அவதரிக்கப் போகின்ற மாதம்  கார்த்திகை என்பதையும் ஆண்டாள் அறிவாள். (திருப்பாணாழ்வார் ஆண்டாளுக்குக் காலத்தால் பிற்பட்டவர்.)தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் கண்ணனை அடைய விரும்பி ஆண்டாள் மதன கோபால உபாசனை செய்ததாக அவளே, “தை ஒரு திங்களும் தரை விளக்கி...”, “மாசி முன்னாள்...”, “காமன் போதரு காலமென்று பங்குனி நாள் கடைபாரித்தோம்...” முதலிய பாடல்
வரிகளில் தெரிவித்திருக்கிறாள்.

இப்படி இத்தனை மாதங்களும் ஆண்டாளுக்கு உகந்த மாதங்களாகவே அமைந்திருக்க, இந்த நோன்புக்கு அவள் மார்கழியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? மற்ற மாதங்கள் எல்லாம் ஆண்டாளுக்கு உகந்த மாதங்களே! ஆனால், மார்கழி தான் திருமாலுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மார்கழிக்குக் கேசவ மாதம் என்றே பெயர். கீதையில் கண்ணன், “மாஸானாம் மார்கசீர்ஷோஹம்”(மாதங்களுள் நான் மார்கழியாகஇருக்கிறேன்) - என்று கூறுகிறான். அதனால் அவனை மணக்க விரும்பி நோன்பு நோற்கும் மாதம், அவனுக்கு உகந்த மாதமாக இருக்கவேண்டும் என்று கருதினாள் ஆண்டாள். அதனால் தான் மார்கழியைத் தேர்வு செய்தாள்.

4. இறை வழிபாட்டுக்கான மாதம்

கோயில்களில் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையைக் கூறும் பாஞ்சராத்ர ஆகமம், வருடத்தின் முதல் மாதமாக மார்கழியையே சொல்கிறது. அதைப் பூஜ்ய மாதம் என்றும் அழைக்கிறது. அதென்ன பூஜ்ய மாதம்?
அமங்களமான மாதமா?

வடமொழியில் ‘பூஜ்ய:’ என்றால் பூஜிக்கத்தக்கவர் என்று பெயர். அனைவராலும் வணங்கத்தக்கவரான இறைவனுக்குத் தான் பூஜ்யன் என்று பெயர். பூஜ்யனான இறைவனுக்குரிய மாதம் என்பதால், மார்கழி பூஜ்ய மாதம் எனப் படுகிறது. பூஜிக்கத்தக்கவரான இறைவனைக் குறித்துப் பூஜைகளும்  வழிபாடும் செய்யத்தக்க மாதம் என்று பொருள். எனவே இது மிகவும் மங்களகரமான மாதமே ஆகும்.அப்புறம் ஏன் மார்கழியில் திருமணங்கள், புதுமனைப் புகுவிழாக்கள் போன்ற மங்கள நிகழ்ச்சிகளைச் செய்வதில்லை?

புதிதாக வேலைக்குச் செல்பவர் தனது முதல் மாத ஊதியத்தை இறைவனுக் கென்று சமர்ப்பிப்பது போல், வருடத்தின் முதல் மாதமாக ஆகமங்களில்  கூறப்பட்ட மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு என்றே அர்ப்பணிக்கப்படுகிறது. அவ்வாறு இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்காகவே அர்ப்பணிக்கப்  பட்டிருப்பதால், அம்மாதத்தில் மற்ற விசேஷங்களைக் கொண்டாடினால் அது இறைவழிபாட்டிற்கு இடையூறாக இருக்கும் என்று கருதியே, மார்கழியில் மற்ற விழாக்களை நாம் தவிர்க்கிறோம்.

வருடத்தின் முதல் மாதமான மார்கழியை முழுவதுமாக இறைவனுக்கு நாம் அர்ப்பணித்து விட்டால், ‘தைப் பிறந்தால் வழிபிறக்கும்’ என்பதற்கேற்ப  தை மாதம் தொடங்கி வருடம் முழுவதும் இறைவனின் அருளால் நமக்கு அனைத்து நன்மைகளும் மங்களங்களும் உண்டாகும் என்பது  சாஸ்திரங்களின் கருத்தாகும்.எனவே இறைவனுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட மாதத்திலே நோன்பு நோற்க விரும்பி மார்கழியைத் தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள்.

5. தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம்

பூமியில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களாகிய உத்தராயண காலம் தேவர்களின் பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயன காலம் தேவர்களின் இரவுப் பொழுதாகும்.மார்கழி மாதம் என்பது தேவர்களின் இரவு முடிந்து பகல் பொழுது விடியும் காலமாகிய பிரம்ம முகூர்த்தமாக அமைந்துள்ளது. பிரம்ம முகூர்த்தம்  என்பது இறைவழிபாட்டுக்கு உகந்த பொழுதாகச் சொல்லப்படுகிறது. அதிகாலைப் பொழுது மனிதர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். மார்கழி மாதம்  தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். எனவே மார்கழி மாதத்தில் அதிகாலையில் நாம் இறைவழிபாடு செய்தால், அது தேவர்கள் மனிதர்கள்  இருவருக்கும் பிரம்ம முகூர்த்தமாக அமைவதால், மிகவும் விசேஷமானதாகும்.

அதுமட்டுமின்றி, மனிதர்கள் இ றைவழிபாடு செய்யும் போது சில தேவர்கள் இடையூறும்செய்வார்களாம். விசுவாமித்ரர் தவம்புரிந்த போது இந்திரன் மேனகையை அனுப்பிய வரலாற்றை நாம்
அறிவோம் அல்லவா? இறைவழிபாட்டினால் தங்களது தேவலோகப் பதவியை  மனிதர்கள் பிடித்து விடுவார்களோ என்ற பொறாமையால் தேவர்கள் இத்தகைய இடை யூறுகளைச் செய்ய வாய்ப்புண்டாம்.

ஆனால் பிரம்ம முகூர்த்தத்தின் போது மனதிலுள்ள தீய எண்ணங்கள் விலகிச் சத்துவ குணமே மேலோங்கி இருப்பதால், தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழியில் அவர்கள் மனதில் தீய எண்ணங்கள் தோன்றாது. எனவே தான் மார்கழி மாதத்தில் நாம் இறைவழிபாடு செய்தால், தேவர்கள் அத்தகைய இடையூறு களைச் செய்ய மாட்டார்கள். எனவே எந்த இடையூறுமில்லாமல் இறைவழிபாடு செய்வதற்கேற்ற மாதம் என்பதால் மார்கழியைத் தன் நோன்புக்காகத் தேர்வு செய்தாள் ஆண்டாள்.

6. மார்க்கங்களில் தலையாயது

மார்கழி மாதத்துக்கு வடமொழியில் ‘மார்கசீர்ஷம்’ என்று பெயர். ‘மார்க்கம்’ என்றால் வழி. ‘சீர்ஷம்’ என்றால் தலை. ‘மார்கசீர்ஷம்’ என்றால்  மார்க்கங்களுள் தலையாயது என்று பொருள்படும்.இறைவனை அடைவதற்குப் பலவிதமான மார்க்கங்கள் சொல்லப்படுகின்றன. சாஸ்திரங்களில்  சொல்லப்பட்ட கடமைகளைச் சரியாகப் பின்பற்றி, அவற்றின் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்தல் கர்ம மார்க்கமாகும். ஜீவாத்மாவையே சிந்தித்து  தியானித்து அதை அறிதல் ஞான மார்க்கமாகும். இறைவனையே இடையறாது காதலுடன் சிந்தித்து தியானித்து வழிபடுதல் பக்தி மார்க்கமாகும்.  இறைவனை அடைய அவனே வழி என்று புரிந்து கொண்டு சரணாகதி செய்தல் பிரபத்தி மார்க்கமாகும்.

இப்படி இறைவனை அடையப் பல மார்க்கங்கள் இருந்தாலும், இவை அனைத்தை விடவும் தலையாய மார்க்கமாக இருப்பது எது என்றால் ‘ஆசார்ய  நிஷ்டை’ ஆகும். ஆசார்ய நிஷ்டை என்பது யாதெனில், இறைவனின் வடிவமாக நம் முன்னே காட்சி தரும் ஒரு நல்ல குருவை அண்டி, அவரது  திருப்பாதங்களே கதி என்று அந்த குருவிடம் சரணாகதி செய்வதே ஆகும். அது தான் இறைவனை அடைவதற்கான எளிய மார்க்கமாகும், சிறப்பான  மார்க்கமும் ஆகும். முக்திக்கான மார்க்கங்களுள் தலையாயதானபடியால், ஆசார்ய நிஷ்டைக்கு ‘மார்கசீர்ஷம்’ (மார்க்கம்=வழி, சீர்ஷம்=தலை) என்று பெயர்.

இப்படிப் பலப் பல பெருமைகள் மிகுந்த மார்கழி மாதத்தைத்  தேர்ந்தெடுத்து ஆண்டாள் திருப்பாவையைப் பாடினாள்.இந்த மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் ஓதிச் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வோமாக!

பாரதிநாதன்

Tags : Andal ,Markazhi ,
× RELATED பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்