×

எழுவகை நடனம் ஆடும் நாயகன்

சோமாஸ்கந்த திருவருவம் என்பது ஈசனின் பல வடிவங்களில் ஒன்று. அம்மையும், அப்பனும், குழந்தை குமரனும் ஒரு சேர ஒரே பீடத்தில் காட்சி தருவதைதான் சோமாஸ்கந்த திருவருவம் என்று சொல்லுவார்கள். இந்த திருவுருவை முதலில் பூஜித்தவர் திருமால். அவரிடமிருந்து இந்த அற்புதத் திருவுருவை இந்திரன் வரமாகப் பெற்றான். இந்திரன் ஒருமுறை அசுரர்களை எதிர்த்து போராட பூலோக மன்னனான முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியை பெற்றான்.

போரில் இந்திரனுக்கு வெற்றியை ஈட்டித் தந்த முசுகுந்தர், அதற்கு பரிசாக இந்திரன் பூஜிக்கும் சோமாஸ்கந்த உருவத்தை வேண்டினான். தான் பூஜிக்கும் மூர்த்தியை தர விரும்பாத இந்திரன், ஏழு சோமாஸ்கந்த மூர்த்தங்களை காட்டி உண்மையான உருவை கண்டுபிடித்து எடுத்துச் செல்லுமாறு பணித்தான். ஈசன் அருளால் உண்மையான சோமாஸ்கந்த உருவை முசுகுந்தர் சுட்டிக் காட்டினார். தனது தவறை உணர்ந்த இந்திரன், ஏழு சோமாஸ்கந்த உருவங்களையும் முசுகுந்தருக்கு பரிசாக தந்தான். இப்படி, முசுகுந்தர் பெற்ற ஏழு சோமாஸ்கந்த உருவங்களையும் பூமியில்  ஏழு திருத்தலங்களில் ஸ்தாபித்து கோயில் எழுப்பினார். அந்த திருத்தலங்களே சப்த விடங்கத் தலங்கள் எனப்படுகிறது. இந்த தலங்களில் இருக்கும் சோமாஸ்கந்தர், உளியால் செதுக்கப் பாடாமல் உருவானதால் ‘‘உளியால் செதுக்கப்படாதவர்’’ (விடங்கர்) என்று பெயர் பெற்றார்.

இந்த தலங்களில் இருக்கும் இறைவனை பதஞ்சலி முனிவரும், வியாக்கிர பாத முனிவரும் தரிசிக்க யாத்திரையாக சென்றார்கள். அவர்களின் வேண்டுதலின் பெயரில், அவர்களுக்கு ஏழு விதமாக இறைவன் நடனமாடிக் காட்டினார். அந்த நடனங்களுக்கு சப்த விடங்க நடனம் என்று பெயர். பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் கண்டு தரிசித்த நடனத்தை பற்றி நாம் இப்போது பார்க்கலாமா?

ஆஜபா நடனம்

இந்த நடனத்திற்கு உரிய திருத்தலம் திருவாரூர் ஆகும். இந்திரன் பூஜித்த சோமாஸ்கந்தரை ஒரு தாமரையில் வைத்து முசுகுந்தர் எடுத்து வந்தார். அதன் நினைவாக ஆலய குளத்திற்கு கமலாலயம் என்று பெயர் வந்தது. இங்கு குடி கொண்ட தியாகராஜரை வீதி உலா எடுத்துச் செல்லும் போது ஆஜபா நடனம் நிகழ்த்தப் படுகிறது. நாம் நித்தமும் மூச்சை இழுத்து இழுத்து விடுகிறோம். உற்று கவனித்தால் உள்ளே காற்று இழுக்கும் போது ‘‘சம்” என்ற ஒலியும், வெளிவிடும்போது ‘‘ஹம்” என்ற ஒலியும் வெளிப்படுவதை உணரலாம். இப்படி நம்மை அறியாமல் நாமே எழுப்பும் இந்த ஒலி ஒரு உயர்ந்த மந்திரமாகும். நாம் இதை ஜபிக்காமலே ஜெபிப்பதால் இந்த மந்திரத்திற்கு ஆஜபா காயத்திரி என்று பெயர்.

திருமால், முதல் முதலில் தியாகராஜரை தனது இதயத்தில் வைத்து பூஜித்து வந்தார். அப்போது அவரது மூச்சுக் காற்றையே தாளமாகக் கொண்டு மெதுவாக மேலும் கீழும் துள்ளி துள்ளி ஈசன் ஒரு நடனத்தை நிகழ்த்தினார். அனைவரது இதயத்திலும் இருக்கும் இறைவன் பிராணவாயு வடிவாக ஆடி இயங்குவதால் தான் உடலில் ஜீவன் தங்குகிறது. இதை அறிந்த யோகிகள் பிராணவாயுவை முறைப்படுத்தி யோக நிலையில் இறைவனை அடைகிறார்கள்.

இப்படி மூச்சில் வெளிப்படும் ஆஜபா மந்திரத்திற்கு ஏற்ப ஆடி உலகை இயக்கும் நடனத்தை காண திருவாரூர் செல்ல வேண்டும். திருவாரூரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் எளிதாக சென்று இறைவனை தரிசிக்கலாம்.

ஹம்ஸபாத நடனம்

இந்த நடனத்திற்கான திருத்தலம் வேதாரண்யம்.இந்தத் தலத்து இறைவியின் பெயர் “யாழினும் இனிய மொழியாள்” என்பதாகும்.அம்பிகையின் மென்மையான இனிமையான மொழியிடம், சரஸ்வதியின் வீணை கூட தோற்றுவிட்டதாம். ஆதலால், இத்தலத்தில் வீணை இல்லாத சரஸ்வதி உருவம் அமைந்துள்ளது. யாழை பழிக்கும் அம்மையின் குரலில் மயங்கிய ஈசன், அம்பிகையின் அமுதமான குரலுக்கு நடனம் ஆடினார். அப்படி ஆடும் போது அன்னம் போல சின்ன சின்னதாக அடி எடுத்து வைத்து மெதுவாகவும் மென்மையாகவும், ஈசன் ஆடினார். அம்மை பாடவும், அப்பன் ஆடவும் கண்ட விநாயகர் தாமும் ஆடத் தொடங்கினாராம். அந்த விநாயகரை இன்றும் கோஷ்டத்தில் காணலாம்.

ஹம்சம் என்றால் அன்னம் என்று பொருள். அன்னம் போல நடனம் ஆடும் ஈசனை காண வேதாரண்யம் செல்ல வேண்டும். நாகப்பட்டினத்தில் இருந்து 45 கிமீ தொலைவிலும், திருவாரூரில் இருந்து 63 கிமீ தொலைவிலும் வேதாரண்யம் சிவன் கோயில் உள்ளது.

உன்மத்த நடனம்

இந்த நடனத்துக்குரிய தலம், திருநள்ளாறு ஆகும். சனீஸ்வரன் தொல்லையால் பீடிக்கப்பட்ட நள மகாராஜா, நள்ளாறு இறைவனை பூஜித்து விடுபட்டார். இந்த நிகழ்வின் போது சனீஸ்வரன் ஈசனின் நடனம் காண வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தார். அவரது வேண்டுகோளின் படி ஈசன் உன்மத்த நடனம் ஆடினார். உன்மத்தம் பிடித்தது போலவும் பின்பு அது நீங்கியது போலவும் மாறி மாறி ஆடுவதற்கு உன்மத்த நடனம் என்று பெயர். இந்த அற்புத நடனம் ஆடும் இறைவனை நள்ளாறு தலத்தில் காணலாம். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்தத்தலம் அமைந்துள்ளது.

வீசி நடனம்

இந்த நடனத்தை காண நாகப்பட்டினம் கயாரோகணர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அம்பிகைக்கு நீலாயதாட்சி என்று பெயர். இங்கு இருக்கும் நந்தி அம்பிகையும் ஈசனையும் ஒரே நேரத்தில் பார்ப்பது போல இருப்பதால், நந்திக்கு இரட்டை பார்வை நந்தி என்று பெயர். கன்னிப் பெண்ணாக அம்பிகை இருப்பதால் இங்கு ஆடிப்பூர விழா மிகவும் பிரசித்தம். இந்த தலத்தில் பிரதோஷ காலத்தில் அம்மை அப்பனோடு, மோகினி வடிவம் தாங்கி திருமாலும் வீதி உலா வருவார் என்பது மற்றொரு சிறப்பு.

அழுக்கணி சித்தர் முக்தி அடைந்த தலம் இது. சிம்ம வாகனத்தில் பைரவர் காட்சி தருவது இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பு.  இங்கு ஆதிசேஷன் ஈசனின் திரு நடனம் காண வேண்டி தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி ஈசன் அவருக்காக நடனம் ஆடினார். கடலின் அலைகள் எழுப்பும் ஓசைக்கு ஏற்ப இங்கு ஈசன் நடனம் புரிகிறார். கடல் அலையை போலவே முன்னும் பின்னுமாக வருவதும் போவதுமாக, ஈசன் ஆடும் நடனம் தான் வீசி நடனம். இதை நாகை காயாரோகணர் கோயிலில் சேவிக்கலாம். இந்தத் தலம், நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

குக்குட நடனம்

திருக்காறாயில் என்னும் திருக்காரைவாசல், திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் அமைந்துள்ளது. திருக்காறாயில் தலத்து இறைவன் பெயர், கண்ணாயிர நாதர், அம்பிகையின் பெயர், கைலாச நாயகி என்பதாகும். கபால முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவருக்கு ஏழு விதமாக நடனம் ஆடி காட்டிய அற்புதத் தலம். திருமால் புத்திரப் பேறு  வேண்டி தவமிருந்த திருத்தலம். பிரம்மன் செருக்கால் இழந்த பதவியை மீண்டும் பெற்ற தலம். திருமாலுக்கும் பிரமனுக்கும், கோழியின் அசைவுகளை ஒத்து வெட்டி வெட்டி நடனம் ஆடிக் காட்டிய அற்புத திருத்தலம். கோழியின் அசைவுகளை அப்படியே அபிநயம் பிடித்து ஈசன் ஆடியதால் , இந்த தலத்தில் ஈசன் ஆடிய நடனத்திற்கு குக்குட (கோழி)  நடனம் என்று பெயர்.

பிரமரத் திருநடனம்

தேன் சேகரிக்கும் போது ரீங்காரம் இட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் தேனியைப் போல ஆடுவதே பிரமர தாண்டவம். திருக்குவளை ஆலயத்தில் திருவிழா நேரங்களில் இந்த நடனம் ஆடப்படுகிறது. இறைவன்,  இறைவிக்கு இந்த நடனத்தை ஆடிக் காட்ட அம்பிகை கண்டு களித்தலால், அம்பிகைக்கு வண்டார்த்த பூங்குழலம்மை என்ற நாமம் வந்தது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் பகாசுரனை கொன்ற பாவம் நீங்க ஈசனை பூஜித்த தலம் இது. திருத்துறைப்பூண்டியிலிருந்து கச்சனம் வழியாக எட்டுகுடி செல்லும் வழியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கமல நடனம்

அரக்கர்களை கொல்ல ஒரு ஆயுதம் வேண்டி திருமால், இறைவனை ஆயிரம் கமலம் கொண்டு அர்ச்சித்து வந்தார். அப்படி செய்யும் போது ஒரு நாள் ஒரே ஒரு கமல மலர் குறைந்து போகவே, திருமால் தனது, தாமரை கண்ணை ஈசனுக்கு சமர்ப்பித்தார். இதனால் மகிழ்ந்த ஈசன், அவருக்கு சக்ராயுதத்தை தந்து அருளினார். அந்த ஆனந்தத்தில் ஈசன் ஆடிய நடனம் தான் கமல நடனம். மகாலட்சுமியின் தவத்தை மெச்சி அவளுக்காக ஆடிய நடனம் தான் கமல நடனம் என்பாரும் உண்டு. இந்த அற்புத நடனத்தை காண திருவாய்மூர் செல்ல வேண்டும். தென்றல் காற்றில் அசைந்து ஆடும் தாமரை மலரின் அசைவுகளை நடன அபினயத்தில் பிடித்து ஈசன் தாண்டவம் நிகழ்த்திய அற்புதத் தலம் இது.  சூரியன் வழிபட்டு பேறு பெற்ற இந்த தலத்தை, திருவாரூர் வேதாரண்யம் சாலையில் 25 கிமீ சென்றால் அடையலாம்.

தொகுப்பு: ஜி. மகேஷ்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்