×

பெண்ணை நதிக்கரையில் பேரழகு பிட்சாடனர்

ஆலயம்: புக்கா இராமலிங்கேஸ்வரர் கோவில், தாடிபத்ரி, அனந்தப்பூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்
காலம்: விஜயநகர தளபதி இராமலிங்க நாயுடுவால்(1490-1509)  கட்டப்பட்டது.

தாருகா வன முனிவர்கள், வேள்வி புரிவதிலும், வேதமந்திர உச்சாடனங்களிலும் தங்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதிலும், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால் தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று இறுமாப்பு கொண்டிருந்தனர். அவர்களுடைய மனைவியர்கள், தாங்களே அனைவரிலும் கற்பில் சிறந்தவர்கள் என்று அகங்காரம் கொண்டிருந்தனர்.  வேத நெறிகளையும்சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்ட அவர்கள் இறைவனை மதியாமல் வாழ்ந்து வந்தனர்.  

பிட்சாடனர் -  சிவபெருமானின் பிச்சையேற்கும் திருக்கோலம்அவர்களை  நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், கருணை பொழியும் கண்களுடனும், காண்போரை மயக்கும் கட்டழகுடனும், பிறந்தமேனியுடன், பிட்சை எடுக்கும் கோலத்தில் தாருகாவனத்துள் சென்றார்.  திருமாலையும் மோகினி வேடம் பூண்டு அங்கு வரச்செய்தார்.

பிட்சாடனராய் வந்த சிவனது பேரழகைக்கண்டு வியந்த முனிவர்களின் மனைவிகள் தங்களது கற்பு நெறியை மறந்து அவர் பின்னே மயங்கி நின்றனர். மயக்கும் எழில் தோற்றத்தில் வந்த மோகினியின் அழகில் முனிவரும் மயங்கி மோகவயப்பட்டு குழம்பினர்.பின் தெளிவடைந்து சுயநினைவு வந்து, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து வருந்தி பின் கோபமுற்றனர்.

இதில் ஏதோ சூழ்ச்சி, மாயம் இருக்கிறது என்றெண்ணி, வேள்வி இயற்றி,  மான், மழு, நாகங்கள், யானை, சூலம், பூதங்கள், உடுக்கை, முயலகன் ஆகியவற்றை பிட்சாடனாரைக்கொல்ல ஏவினர்.
அப்படைகளுக்கு பிட்சாடனாரை வெல்லும் ஆற்றல் இல்லாது போகவே, இறைவனாரிடமே ஆடையாய், அணிகலங்களாய், ஆயுதங்களாய் அடைக்கலம் அடைந்தன. சிவனை அழிக்க முடியாமல் முனிவர்கள் கலங்கி நின்றனர்.  அப்போது அவர்கள் முன்பு பேரழகனாக சிவன் காட்சியளித்தார். உண்மை உணர்ந்த முனிவரும், அவர்கள் மனைவியரும் இறைவனை உணர்ந்து, தங்களின் ஆணவம் அழியப் பெற்றனர்.

வசீகரிக்கும் வடக்கு கோபுரம்: பிச்சை எடுக்கும் வடிவிலான திருக்கோலத்தில் சிவபெருமான் பெரும் அழகோடு அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தில், சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஆலயத்தின் வடக்கு கோபுர நுழைவாயிலின் உள் பகுதியில் வீற்றிருக்கிறார்.வலது காலை ஊன்றியும், இடது காலை வளைத்து நடந்து செல்லும் நிலையில் பாதுகைகளுடனும்,  முன்வலது கரத்தில் அறுகம்புல்லை மானுக்கு அளித்தும்,  பின்வலது கரத்தில் திரிசூலத்துடனும்,  முன் இடது கரத்தில் பிட்சைப் பாத்திரத்துடனும், பின் இடது கையில் உடுக்கை ஏந்தியும் காட்சியளிக்கிறார்.

அழகிய லதா கும்பங்கள், பூத கணங்கள், சிவனடியார்கள்,  சிவ புராணக்காட்சிகள், விலங்குகள், பறவைகள், பூக்கள், கொடிகள் என சிறிதும் இடைவெளியில்லாமல் ஏராளமான நுண் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோபுரம், அந்நியர் படையெடுப்புக்களினால் சிதைவுற்ற சிற்பங்களுடன், முற்றுப்பெறாத நிலையில் இருந்தாலும் அனைவரையும் ஈர்க்கிறது.

சிறப்பு: பூமிக்கடியில் செல்லும் வற்றாத நீரோட்டத்திலிருந்து சிவலிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது.‘புக்கா’ என்ற தெலுங்கு சொல்லுக்கு ‘நீரூற்று’ என்று பொருள்.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Tags : Pitcairn ,
× RELATED காமதகனமூர்த்தி