×

தனுர்மாத பூஜை

இன்று மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் சொல்லி இருக்கின்றான். ஆகையினால் இது 12 மாதங்களில் மிக உயர்வான, ஆன்மீகத்துக்கு வழிகாட்டும், தலை மாதமாகக்  கருதப்படுகிறது. அதனால் வடமொழியில்  மார்கழி மாதத்தை, “மார்க சீர்ஷம்’' என்பார்கள்.

மார்க்கம் என்றால் வழி. சீர்ஷம் என்றால் தலை. ஆன்மீகத்துக்கு வழிகாட்டும் தலைமை  மாதம் இது. இந்த மாதத்தில் விடியலில் எழுந்து இறைவனை வழிபட வேண்டும். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் இந்த மார்கழி மாதத்திற்கு உரிய ஒரு அருமையான தமிழ் பிரபந்தத்தை அருளிச் செய்திருக்கிறாள். அந்த பிரபந்தத்திற்கு திருப்பாவை என்று பெயர்.’ மார்கழி மாதத்தின்  பெயரோடு துவங்குகிறது.

நாளுக்கு ஒரு பாசுரமாக 30 பாசுரங்கள் இருக்கின்றன. இந்த பாசுரங்களை திருப்பள்ளியெழுச்சி ஆகவும் பாடுவார்கள். இந்த திருப்பாவையைப்  பாடித்தான்  விஷ்ணு ஆலயங்களில் ஒவ்வொரு பூஜையும் நிறைவு செய்ய வேண்டும். அதிலும்  காலசந்தி ஆராதனையில் திருப்பாவை அவசியம் இடம்பெறும். இந்தத் திருப்பாவை பிரபந்தத்தை கால நியமம் இன்றி எல்லாக் காலத்திலும் சொல்லலாம். திருப்பாவையை உபநிஷத் ஸாரம் என்றும், கோதைத்  தமிழ் என்றும்  அடைமொழி கொடுத்து அழைப்பார்கள்.

வைணவத்தில் திருப்பாவை என்றால் சைவத்திலும் மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  என்று மார்கழி மாதத்திற்கு உரிய பாடல்களைப்  பாடி அருளியிருக்கிறார்.மார்கழியின் விடியல் பனி  வேளையில் இந்தப் பாசுரங்களைப் பாடி திருமாலையும், சிவபெருமானையும் ஆராதிப்பது எல்லையற்ற புண்ணிய பலன்களைத்  தரும்.மார்கழி மாதம் முழுக்கவே இப்பாசுரங்களைப் பாடலாம். வழிபாடு நடத்தலாம்.

Tags : Tanurmatha ,
× RELATED காமதகனமூர்த்தி