×

மார்கழி மாதப் பலன்களும், எளிய, சக்தி வாய்ந்த, சூட்சும பரிகாரங்களும்..!

மாதங்களில் உயர்ந்த மார்கழி மாதம்!!

மாதங்கள் பல, பல!! ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆயினும், மார்கழி மாதத்திற்கென்று ஓர் தெய்வீக தனிப் பெருமை உள்ளதை குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில், கீதாசார்யனான ஸ்ரீ கிருஷ்ணனே திருவாய்மலர்ந்தருளியுள்ளார். அண்டசராசரங்களில் எவையெல்லாம் உயர்ந்தவையோ எவையெல்லாம் உத்தமமானவையோ அவையனைத்தும் தனது அம்சமே என அருளிய கிருஷ்ணன், “மாதங்களில் நான் மார்கழி மாதமாகத் திகழ்கிறேன்!” எனக் கூறி, மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

“மாஸானாம் மார்க்க சீர்ஷோஹம்” என்பது கீதா வாக்காகும். இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் மார்கழி மாதத்திற்கு? மனிதர்களுடைய ஒரு வருடகாலம், தேவர் களின் உலகிற்கு ஒரு நாளாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை, உள்ள 6 மாத காலம் தேவர்களுக்கு பகல் காலமாகும். இதனை உத்திராயண காலம் என்பர். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவு காலமாகும்.  இதனை தக்ஷிணாயண காலம் எனக் கூறுகின்றன, புராதன நூல்கள்.

மார்கழி மாதம் இரவு காலம் முடிந்து, பொழுது புலரும் விடியற்காலமாகும், தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும். அப்போது, முப்பத்து முக்கோடி தேவர்களும், மகரிஷிகளும் தேவ கங்கையில் நீராடி, காயத்ரி மகா மந்திரத்தைச் சொல்லி, சூரியனுக்கு கங்கா தீர்த்தத்தினால் அர்க்கியம் விடுகின்றனர். தை மாதத்திலிருந்து, தேவர்கள், மகரிஷிகள் கந்தவர்களுக்கு பகல் நேரமாகும்.  மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த தினமாகும்.

ஆதலால், மார்கழி ஆத்ம சாதனைக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த காலமாகும். இம்மாதம் முழுவதும் தினமும், அதிகாலையிலேயே எழுந்திருந்து நீராடி, பகவானையும் அவரவரது இஷ்ட தெய்வங்களையும் பூஜிப்பது, அவனது பெருமைகளைப் பாடி, ஆடி பரவசப் படுவது (நாம சங்கீர்த்தனம் - பஜனை) மத் ராமாயணம், மத் பாகவதம், ஆகியவற்றைப் படிப்பது, திவ்யப் பிரபந்தம், தேவாரம் போன்றவற்றை இசைப்பது, திருக்கோயில் தரிசனம் ஆகியவற்றினால், பல பிறவிகளில் செய்துள்ள பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் மறையும் எனப் புராதன நூல்கள் உறுதியாகக் கூறுகின்றன.

ஏனெனில், இம்மாதம் முழுவதும் அதிகாலையில் மனிதமனம் தெளிவாக இருக்கும். மனத்தை இறைவன்பால் செலுத்துவது, எளிதாகும். நாம், நமது பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள், வறுமை, நோய்கள், குடும்பப் பிரச்னைகள் ஆகிய அனைத்திற்கும் நாம் அறிந்தோ, அறியாமலோ, ஆணவத்தினாலோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ செய்யும் பாபங்களே காரணமாகும். அவையனைத்திலிருந்தும் விடுபட்டு, மகிழ்ச்சியையும்,  மனநிம்மதியையும் பெற வழிவகுக்கிறது, மார்கழி மாதம்!

ஜோதிடத்தில் மார்கழி!


குரு பகவானின் ஆட்சி வீடான தனுர் ராசியில், ஆத்ம காரகரான சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமாதலால், மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம்எனும் பெயருண்டு! மேலும் பல பெருமைகள்!! இவை தவிர மேலும் பல தெய்வீகப் பெருமைகளும் இம்மாதத்திற்கு உண்டு. அவை...

1. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நோன்பு இருந்து, அரங்கத்து இன்னமுதனை கைத்தலம் பற்றிச் சேர்ந்த பெருமை இம்மாத்திற்கு உண்டு!
2. பரசுராமர் அவதரித்தது
3. தத்ராத்ரேயர் அவதாரம்
4. பரம ஸ்ரீ ராம பக்தரான ஹனுமான் அவதாரம்.
5. கலியின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ மகா பெரியவா தன்னை மறைத்துக்கொண்ட தினம் மார்கழியில்தான்.
6. ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கைலாயம், சுவர்க்க லோகம், வைவஸ்வதம் எனும் தர்மராஜனின் உலக வாயில்கள் திறக்கப்படுவதும் இப்போதுதான்.

இத்தகைய ஈடு இணையற்ற மார்கழி மாதத்தின் நவகிரக சஞ்சார பலன்களை, எமது அன்பிற்குரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு ஷோடச சதவர்க்கம் எனும் அதியற்புத ஜோதிட சூட்சுமக் கலையின் கணித முறையின் அடிப்படையில், துல்லியமாக ஆராய்ந்து வழங்குவதுடன், தேவையான ராசிகளுக்கு மிக எளிய, ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரங்களைத் தெரியப்படுத்துவதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து மனநிறைவு பெறுகிறோம்.இம்மாதம் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்கு இவை பெரிதும் பயன்படும் என உறுதியளிக்கிறோம்.

மார்கழியின் மற்றுமோர் சூட்சும ரகசியம்!

மார்கழி மாதம் பற்றிய சூட்சும, ரகசிய விஷயத்தையும் “பூர்வஜென்ம நிர்ணய சாரம்” மற்றும் “இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்...” (The world beyond) என்ற ஆராய்ச்சி நூல்களும் விளக்கியுள்ளன.  

சூரிய உதய நேரத்தில்  செய்யப்படும் ஹோமங்கள், யாகங்கள், மந்திர உச்சாடனம், ஸ்ரீ காயத்ரி மகா மந்திரம் ஜபித்தல் ஆகியவற்றின் சக்தி மிக மிக அதிகமென்பதால், பூவுலகம் (நமது பூமி) உள்ளிட்ட அனைத்து உலக மக்களும், ஜீவராசிகளும் க்ஷேமமாக  (நலமாக) இருக்கவேண்டுமென்பதற்காக, சுவர்க்கத்தில் (தேவர் களின் உலகம்), ரிஷிகள் யாகங்களைச் செய்கின்றனர் என்றும், அப்போது அக்னியில், பசு நெய்யை ஆஹூதியாக விடும்போது ஒவ்வொரு உலகையும் குறிப்பிட்டு, இவ்வுலக மக்கள் சகல நன்மைகளையும் அடையட்டும் என்று சொல்லி நெய்யை விடுகின்றனர் எனவும், அப்போது, தவப் பலத்தினால், ரிஷிகளைவிட உயர்ந்தவர்களான மகரிஷிகள் “ததாஸ்தூ” (அதாவது “அப்படியே ஆகட்டும்!”) எனக்கூறி ஆசிர்வதிப்பதாகவும் சூட்சுமநூல்கள் விளக்கியுள்ளன.

ஆதலால்தான், மார்கழிமாதம் முழுவதும் நாம் கெட்ட வார்த்தைகளைச் சொல்லக்கூடாதெனவும், நல்லதையே சொல்ல வேண்டும் எனவும் அந்நூல்கள் அறிவுரை கூறியுள்ளன. ஏனெனில், நாம் மார்கழி மாதத்தில், அதுவும் அதிகாலையில் தவறாகப் பேசினால், அவ்விதம் பேசும் நேரமும், மகரிஷிகள் “ததாஸ்தூ” (அப்படியே ஆகட்டும்!) என்று சொல்லும் வேளையும் ஒத்திருந்தால், கெடுவிளைவு ஏற்படும் எனக் கூறுகின்றன, அந்த ரகசிய நூல்கள். அதனால்தான், இம்மாதம் முழுவதும் நல்லதை நினைக்க வேண்டும்; நல்லதையே பேச வேண்டும்! இந்த ஒரு மாதப் பழக்கம் ஏற்பட்டுவிட்டால், வருடம் முழுவதும் நல்லதையே நினைப்போம்; நல்லதையே சொல்லுவோம்!! தீயதிலிருந்து விலகியே இருப்போம்!!!

மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் நாம் அனைவரும், நல்லதையே நினைக்கவேண்டும், நல்லதையே பேச வேண்டும் வாய்மையை கடைப்பிடிக்கவேண்டும் என நீதிநூல்கள் அனைத்தும் நமது நன்மைக்காகவே வலியுறுத்தியுள்ளன. மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் (சுமாராக விடிகாலை 4.30 மணி முதல் 6.00 வரை) துயிலெழுந்து, நீராடிவிட்டு, அவரவர் வீட்டுப் பூஜையறையில் நெய்தீபமேற்றிவிட்டு, வீட்டு வாசலின் இருபுறமும் கிழக்குநோக்கி, கண்டிப்பாக நெய்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல் வேண்டும்.

அனைவரும், திருப்பாவை, திருவெம்பாவை பாமாலைகளை, பக்தி, சிரத்தையுடன் பாராயணம் செய்தல் வேண்டும்; பாசுரங்களை மனப்பாடமாகத் தெரிந்தவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். முடிந்தவரை இறைவனின் திருநாமங்களை - அது நாம சங்கீர்த்தனமாகவே பாடலாம் அல்லது ஒலிநாடாக்களில் பாடக் கேட்கலாம்.

தினமும் இறைவனின் திருவடிகளில் அன்றலர்ந்த மலர்களை இடுதல் வேண்டும். தனுர் மாத விரதம் அனுஷ்டித்தல் மற்றும் இம்மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது பாவங்கள் அனைத்தும் தீயிலிட்ட தூசுபோல் மறையும்; பேரின்பம் பெருகும்.

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி