×

தாயும் நீயே! தந்தையும் நீயே!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-77

‘பூரண ஞானம் பொலந்த நன்னாடு!’
‘ஞான என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரதநாடு’
- என்று இந்தியத் திருநாட்டைப் போற்றி மகிழ்கிறார், பாரதியார். வாழையடி வாழையாக ஞான பரம்பரை தழைத்துப் பொலியும் இந்நாட்டில் பிறந்து வாழும் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். சீனநாட்டின் தலைசிறந்த தத்துவஞானி கன்பூவியப்ப தன் சீடர்களைப் பார்த்து இவ்வாறு கூறினாராம்.‘என் இனிய சீடர்களே! புண்ணியச் செயல்கள் பல புரிந்ததால் தான் உங்களுக்கு மானிடப் பிறவி வாய்த்துள்ளது.

இப்பிறப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு அறச்செயல்களிலும் புண்ணிய காரியங்களிலும் ஈடுபட்டால் அதன் பயனாக அடுத்த பிறவி உங்களுக்கு பிரஜையாகத் தோன்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்துகொண்டு பெற்ற பிறப்பிற்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வநிலைக்கு நம்மால் உயரமுடியும். உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இறைவன் மீது அன்பு செலுத்துவோம்.

‘தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்!
தன்னை நிகர் இல்லாத தனித்தலைமை தெய்வம்
வாயாரப் பாடுகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்’
மலரடி என் சென்னிமிசை வைத்த பெருந்தெய்வம்!’
‘எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ!’
‘அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!’
- என்று அருளாளர்கள் ஆண்டவனைப் பாடிப் பரவுகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏதாவது குறை ஏற்பட்டாலோ, அல்லது தேவையான பொருள்  ஒன்று தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ குறிப்பறிந்து அதை நிறைவேற்றித் தருவது அம்மாவும், அப்பாவும் தானே!அப்படி மானுடகுலத்தின் பிரச்சனைகளை நீக்கி, கவலைகளை மாற்றி நம்மைக் காப்பாற்றும் தாய் தந்தையராகவே இறைவனைக் கண்டார்கள் நம் பாரதஞானிகள்.
அருஞ்சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தான்அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே!

என்று பாடுகிறார் ஆழ்வார்.ஜகதகா பிதரௌவந்தே பார்வதி பரமேஸ்ரௌ மாதாச பார்வதிதேவி பிதாதேவோ மகேஸ்வரகஎன்று வடமொழி இறைவனை வாழ்த்துகிறது.
பொதுவாக நாமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையோ, சோதனையோ, இடர்ப்பாடோ வாழ்க்கையில் ஏற்பட்டால் என்ன செய்வது? யாரிடம் போய் தீர்வு காண்பது என்று சாமியார்களையும், ஜோதிடர்களையும், மனநல நிபுணர்களையும், மருத்துவர்களையுமே முக்கியமாகப் பற்றிக் கொள்கிறோம்.

ஆனால் இவற்றையெல்லாம் விட வலிமைமிஞ்சும் ‘பிரார்த்தனை’யை நாம் வழிபடும் தெய்வத்திடம் செய்ய மறந்துவிடுகிறோம்.கடவுளை ‘அன்னைதந்தை’ என்ற நிலையில் ஞானியர்கள் கூறுவது உலகிற்கு மூல முதலானவர். படைத்தும், காத்தும், பரிபாலிப்பவர். என்கிற நோக்கில் மட்டுமல்ல ஒரு குழந்தை நேரடியாக எவருடைய தயவும் தேவையின்றி குறைகளைக்
களைய பெற்றோரை நாடுவது போல் மனிதர்களும் தெய்வத்தை அணுகலாம் என்பதை வலியுறுத்துவதே ‘அம்மை அப்பனாக’ ஆண்டவனை சித்தரித்தது என்று அறிந்து கொள்வோம்.

‘உலகம் கனவில் கூட காணமுடியாத விஷயங்களை பிரார்த்தனை நிறைவேற்றுகிறது என்கிறார்கள்.அழுது அடம்பிடித்து ஒரு குழந்தை தன் ஆசையை பெற்றோரிடம் நிறைவேற்றிக் கொண்டு போவது போல பக்தனும் தன், இஷ்ட செய்வத்திடம் மன்றாடிக் கேட்டால் கட்டாயம் வேண்டுகோள் நிறைவேறும் என்கிறார் காஞ்சி மகா பெரியவர்.

வேண்டிய போது அடியர்
வேண்டிய போதமது
வேண்ட வெறாதுதவும் பெருமாளே!
என்கிறது திருப்புகழ்ப்பாடல்.

திருவருட்பா பாடிய இராமலிங்க அடிகள் தில்லை நடராசரிடம்  மனம் உருகி வேண்டுகின்றார்.பொன்னம்பலத்தில் நடனமாடும் புனிதரே! என் தாயும் நீங்கள்தான்! தந்தையும் நீங்கள் தான்!
தவறு செய்து விட்ட ஒரு குழந்தையை தந்தை அடித்தவுடன் மனம் பொறாது அம்மா வந்து கட்டித்தழுவிக் கொள்வாள்! அந்தக் குழந்தைக்கு ஆறுதல் கூறுவாள்.குழந்தையின் விஷமம் தாங்க முடியாமல் ஒருவேளை, தாயே கோபம் கொண்டு அடித்தாலும், பரிவுடன் அப்பா ஓடி வந்து அரவணைப்பார்!

இவ்வுலகில் தொடர்ந்து நான் படாத பாடுபடுகிறேன்!அடிமேல் அடியாக பல கவலைகள் என்னைச் சூழ்கின்றன!தில்லை நடராசரே! தாயும் தந்தையும் எனக்கு நீங்கள் தானே அரவணைத்து ஆறுதல் கூறுங்கள் அருள்புரியுங்கள். உருகிப் பதறிக் குழைந்து வள்ளலார் பாடும் அருட்பா நம் மனதை ஒருகிணைக்கின்றது.

தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால்
தாய் உடன் அணைப்பாள்!
தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை
அணைப்பன்!

உனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திருமேனி அம்பலத்து ஆடும்
புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும்! அணைத்திட வேண்டும்!

அம்மை அப்பா இனி ஆற்றேள்!

அருட்பிரகாச வள்ளலார் இப்படிப்பாடுவதற்கு அடி எடுத்துக் கொடுத்தவரே அருணகிரிநாதர்தான்.திருத்தணித் திருப்புகழில் அருணகிரியார் பாடும் ‘ஏது புத்தி ஐயா!’ என்ற பாட்டில் ‘முருகப் பெருமானே!’ எனக்குத் தாங்கள் கூறும்  அறிவுரை என்ன?

உலக மாயையிலேயே  உழன்று
கொண்டிருக்கும் எனக்கு தக்க வழிகாட்டி
தாங்கள் தான் ஆட்கொள்ள வேண்டும்.
அம்மை அப்பனாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!
அழுது துடித்து அரற்றும் குழந்தையைக்
கவனிக்காமல் அப்படியே தரையிலேயே கிடக்
கட்டும் என்று பெற்றோர்களே புறக்கணிப்பார்களா?

அநாதைக் குழந்தை என ஊரார் ஏளனம் பேசி கை கொட்டிச் சிரிக்கிறார்களே!
கேலி பேசுபவர்கள் வாயை மூடிக்கொள்ள, அவர்கள் கண் எதிரிலேயே என்னை வாரி அணைத்துக் கொள்ள நீவர வேண்டும்.

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்களோ!

மேற்கண்ட திருப்புகழ் திருமுருக வாரியார் சுவாமிகளின் தந்தையார்க்கு மிகவும் பிடித்தமான ஒருபாடல். வாரியாரின் அப்பா மல்லைய தாஸ் பாகவதர் தன் கடைசி நிமிடத்தில் இப்பாடலைக் கேட்டபடி உயிர் நீத்தார் என்று வாரியாரின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.ஆதியும் அந்தமும் ஆன ஆண்டவனே உயிர்க்குலத்தின் அன்னையும் தந்தையும் என அறிந்து மூல முதல்வனிடம் நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம்!

(தொடரும்)

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி