×

மென்மை ஓர் அழகு..!

‘மலரினும் மெல்லியது காதல்’ என்று இலக்கியம் கூறும்.“காலடித் தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்’’
தலைவியின் பாதங்கள் மட்டுமல்ல, தலைவனின் உள்ளமும் மென்மையானது என்பதை அழகாகப் பாடியிருப்பார்
கவிஞர்.

மனித வாழ்வில் காதல் ஏன் சிறப்புப் பெறுகிறது எனில், அதில் முழுக்க முழுக்க மென்மை கோலோச்சுகிறது என்பதால்தான்.காதலில் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், மென்மையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்லாமிய வாழ்வியல் வலியுறுத்து கிறது.எகிப்தில் பிர்அவ்ன் எனும் கொடூர மன்னன் இருந்தான். இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக்கி, சொற்களால் வர்ணிக்க இயலாத அளவுக்குக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டான்.கொடுங்கோல் மன்னனான பிர்அவ்னுக்கு நேர்வழி காட்ட இறைவன் தன் தூதரான மூஸாவை அனுப்பினான். அவ்வாறு அனுப்பும்போது மூஸாவிடம் இறைவன் கூறினான்:

“அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன்
அறிவுரையை ஏற்கக்கூடும் அல்லது அஞ்சக்
கூடும்.” (குர்ஆன் 20:44)
மனிதநேயம் என்னவென்பதையே அறியாத ஒரு மன்னனுக்கு அறிவுரை சொல்லும்போதுகூட மென்மையைக் கடைப்பிடியுங்கள் என்கிறான் இறைவன். இதிலிருந்து இஸ்லாமிய வாழ்வியல் மென்மைக்குத் தரும் மேன்மையை நாம் புரிந்து
கொள்ளலாம்.“இறைவன் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையைத்தான் அவன் நேசிக்கிறான். வேறு எந்தப் பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான்”  என்பது நபிகளாரின் கூற்று.

தம் அன்பு மனைவி ஆயிஷாவைப் பார்த்து ஒருமுறை நபிகளார் கூறினார்: “ஆயிஷாவே..! மென்மையாக நடந்துகொள். ஒரு குடும்பத்தினருக்கு இறைவன் நன்மையை நாடுகிறான் எனில் அவர்களுக்கு மென்மையின் பக்கம் வழிகாட்டுகிறான்.”“கடன் கொடுத்தவர் கடனை வசூலிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததால் இறைவன் அவருக்கு சொர்க்கத்தை அளித்தான்” என்றும் கூறப்பட்டுள்ளது.“தாய்- தந்தையரிடம் மிகவும் பணிவுடனும் மென்மையாகவும் நடந்துகொள்ளுங்கள். வயதான பெற்றோரைப் பார்த்து ‘சீ’ என்றுகூட சொல்லாதீர்கள்” என்கிறது இறுதி வேதம்.
ஒருமுறை, நபிகளார்  முக்கியமான  தலைவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது,  பார்வையற்ற ஒரு தோழர் வந்து தமக்கு நல்லுரை வழங்கும்படி
வேண்டினார்.

அந்தச் சமயத்தில் அவர் வந்து குறுக்கிட்டதை நபிகளார் விரும்பாமல் சற்றே முகத்தைச் சுளித்துக் கடுமை காட்டினார். உடனடியாக இறைவன், நபிகளாரைக் கண்டித்துத் திருவசனத்தை அருளினான்.வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கும்படியே இறுதி வேதமும் இறைத்தூதரின் வாழ்வும் போதிக்கின்றன.
“எந்தச் செயலில் மென்மை இருக்கிறதோ அது அந்தச் செயலை அழகுபடுத்திவிடும். எந்தச் செயலில் மென்மை அகற்றப்படுகிறதோ அது அந்தச் செயலைக் கோரப்படுத்திவிடும்” என்பது இறைத்தூதரின் இனிய பொன்மொழி.

மென்மையைக் கடைப்பிடித்து
வாழ்வில் மேன்மை அடைவோம்.

Tags :
× RELATED நம்பினோருக்கு இழப்பில்லை