×

அனந்தாழ்வாரின் ஆனந்த சாகரம்


எழில் கொஞ்சும் ஏழுமலை வேங்கடவா, ஏடுகொண்டல வாடா கோவிந்தா... வெங்கட்ட ரமணா கோவிந்தா... என்கிற பக்தி முழக்கம் கேட்ட வண்ணம் இருக்கும் திருத்தலம் திருப்பதி எனும் திருவேங்கட ஏழுமலை. ஆறறிவு கொண்ட மனிதர்களும், பகுத்தறிவு இல்லா உயிரினங்களும், ஏனைய எல்லாமும் தாங்கள் திருப்பதியிலேயே பிறந்து, இருந்து மறைய வேண்டும் என வேண்டுமென விரும்புவர். ஒவ்வொரு திரு அவதாரங்களையும் முடித்துக் கொண்ட பின் திருமால் பூரிப்புடன் நின்ற கோலத்தில் திருமால் திருவேங்டவனாக தரிசனம் தருகின்றான். எனவேதான் திருமலை சுவாமி ‘‘பெருமானிடம்’’ தீராக்காதல் கொண்டுள்ளன, உலகத்து உயிர்கள் எல்லாமும்.

தன்மீது தான் வேங்கடவன் இருக்கின்றான் என்ற மிதமிஞ்சிய பெருமிதத்துடன் நிற்கும் ஏழுமலைகள் அந்த மலைகளின் மீது இயற்கை அன்னை தன் வானம் என்னும் சேலையை போர்த்த நினைப்பது போன்று மேகங்கள் பஞ்சுப் பொதியாக மூடியிருக்கும் அழகு. சில்லென்ற குளிர்காற்று. இத்தகைய அழகு வாய்ந்த திருமலையையும் வேங்கடவனையும் ஆழ்வார்கள் உருகிப் உருகிப் பாடினர்.

‘‘வேங்கடக் கோன் தான் உமிழும் பொன் விட்டில்’’ பிடிக்கின்றவன் ஆவேன். வேங்கடத்தின் செண்பக மரமாக, குளத்து மீனாக, பறவையாக, படியாகக் கிடந்து பவளவாய் காண்கின்ற படிக்கல்லாக அல்லது ஏதாவது ஒன்றாக ஆவேன் என்று பக்தித் துணிவுடன் பாடுகின்றார் குலசேகர ஆழ்வார். இறைவன் திருமாலின் திருவடிகளிலேயே தன் அன்பாலே பிணைந்து ஆழ்கின்ற ஆழ்வார் போலே தனது அளப்பரிய பக்தியால் ஆழ்வார் நிலைக்கு உயர்ந்தவர் அனந்தாழ்வார்.

அனந்தன் பிறப்பும் குரு பக்தியும் கர்நாடக மாநிலத்தில் சிறுபுத்தூர் கிராமத்தில் கி.பி. 1053 ஆம் ஆண்டு சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் யஜூர்வேதியாக அறியப்பட்ட கேசவாச்சார்யாருக்கு பிறந்தவர் அனந்தன். தன் தந்தை சொல்லித் தருகின்ற பக்திக் கதைகளும், வேதமும் பிஞ்சு உள்ளத்தே பதிந்தது. இறைவனின் திருமேனியை தன் கற்பனையில் கண்ட குழந்தை அனந்தன் இறை தேடி தன்னுணர்வு மறந்து பக்தியிலே திளைத்தது.

வைஷ்ணவ மரபிலே பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்ற ரங்கத்திற்கு சென்றான், அனந்தன். இளைஞனாக நாராயணனின் திவ்ய ரூப தரிசனமே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அனந்தன் வைணவத்தை வாழ்விக்க வந்த போற்றுதலுக்குரிய மகான் ராமானுஜரை தரிசிக்கின்றான். அவருடைய சத்சங்கங்களிலும் தத்துவ விசாரணைக் காலங்களிலும் அவரது உபதேசங்களைக் கேட்டுத் திளைத்து அவரது சீடரானார்.

சிந்து பூ மகிழ வேண்டும் அணுக்கச் சீடனாக இருந்த அனந்தன் தனது குருமொழி தன் உயிர் மொழியாக, வேதமாகக் கொண்டான். ஒருநாள் சீடர்களுக்கு நம்மாழ்வாரின் பாசுரமான கோயில் திருவாய் மொழியைச் சொல்லித் தந்து கொண்டு இருந்தார்.

‘‘எந்தை தந்தை தந்தை
தந்தை தந்தைக்கும் முந்தை வானவர்
வானவர் கோனொடும்
சிந்தை பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே’’

- என்ற பாசுர வியாக்யானம் செய்கின்ற போதில் சிந்து பூ மகிழும் இடம் திருவேங்கடம் எனச் சொல்லும்போது தழுதழுத்தார். வேங்கடவனுக்குப் பூ மாலை கட்டிக் கொடுக்க ஆள் இல்லாது பூக்கள் எல்லாம் நிலத்தில் விழுகின்றன. எமது சீடர்களில் எவராவது திருமலை சென்று பகவானுக்கு மலர் மாலை சூடும் கைங்கரியம் செய்ய இயலுமா என்று கேட்டார்.

ஆண் பிள்ளை அனந்தன் மற்ற எல்லாச் சீடரும் மௌனமாக இருக்க அனந்தன் மட்டும் எழுந்தான். ‘‘குருவே! நான் செல்கின்றேன்’’ என்றான். நீயே ஆண் பிள்ளை. சீடர்களே அனந்தன் ஆண் பிள்ளை என்று கூறி மகிழ்ந்தார். மத் ராமானுஜர் அனந்தாண்பிள்ளை’’ என்று அனந்தன் அழைக்கப்படலானார். திருமலைக்கு செல்வது என்பது அன்றைய காலகட்டத்தில் மிகுந்த சிரமம். ஆயினும் தனது குரு சொல் கேட்டு குருவே கடவுள் என்கின்ற தீர்க்கமான கொள்கை கொண்டு தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு கற்களிலும் பெருஞ் சிரமத்துடன் திரு மலைக்கு நடந்து சென்றார். அங்கு சென்றவுடன் செய்த முதல் காரியம் தனது குரு பெயரிலே தீர்த்தக் குளமும் நந்தவனமும் அமைக்கும் பணியில் ஈடுபடலானார்.
ராமானுஜ நந்தவனமும் குளமும்!

தானும் தனது மனைவியுமாக சேர்ந்து முதலில் நந்தவனத்திற்குத் தேவையான நீர் நிலைக்காக குளம் ஒன்று வெட்டலானார். கடினமான பணியிலும் சிறிதும் சோர்வு காட்டாது முழு மூச்சுடன் குளம் வெட்டும் பணியில் ஈடுபடலாயினர். தனது பக்தன் படும் பாடு கண்டு நெகிழ்ந்த வேங்கடவன் வளர் பருவத்து இளைஞனாக வந்த அனந்தாண்பிள்ளைக்கு உதவினால் மகிழ்ந்திடுவான் என்று வந்து சேர்ந்தார்.

அவரது மனைவிக்கு உதவியாக கூடை மண்ணை சுமந்து கொட்டலானான். தான் வெட்டி மண் சேர்க்கும் முன்பாக மனைவி வேகமாகச் செய்வதைக் கண்டு, மனைவியின் விரைவான வேலைக்குக் காரணம் அந்த இளைஞனே என்பது புரிந்தது. ‘‘பகவான் கைங்கரியம் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இது எனது குருநாதர் எனக்கு இட்ட கட்டளை ஓடிப்போ’’ என்று சொன்னார். கேளாமல் மீண்டும் மண் கூடை எடுத்துக் கொண்டு செல்ல முற்பட்டவனின் மீது தன் கடப்பாரையைக் கொண்டு எத்த அது இளைஞனின் முகவாய் கட்டையை பதம் பார்த்தது. அதே சமயத்தில் வேங்கடவனின் திருமேனிச் சிலையின் முகத்துத் தாவாயில் இருந்து ரத்தம் ஒழுகியது. பயந்து போன அர்ச்சகர்கள் காரணம் எனத் தெரியாது இருக்க அனந்தனைச் சென்று கேளுங்கள் எனும் அசரீரி எழுந்தது.

பச்சைக் கற்பூரம் மணந்தது அர்ச்சகர்களின் பதட்டத்திற்கு பதில் கூறுவதுபோல் விரைந்து வந்து சேர்ந்த அனந்தாண்பிள்ளை சட்டென்று பச்சைக் கற்பூரத்தை வைத்து பெருமாளின் முகத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ரத்தமும் நின்றது. இன்றும் இந்தப் பச்சைக் கற்பூரம் பாத ரேணு என்று திருப்பெயருடன் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்
படுகிறது. திருமலையப்பனை பதம் பார்த்த கடப்பாரை இன்றும் திருமலையின் ராஜகோபுரத்தின் வடக்குப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

அலர்மேல்மங்கை நாச்சியாரின் தகப்பன் அனந்தன் ராமனுஜர் நந்தவனம். ராமானுஜர் யுஷ்கரண் என்று தனது குரு பக்தியால் உருவாக்கிய அனந்தாண்பிள்ளை, நந்தவனத்தை நேர்த்தியாக பராமரித்து வந்தார். ஒருநாள் திருவேங்கடவன் தன் மனையாள் அலர்மேல் மங்கையோடு உலா சென்றார். இதனைக் கண்ணுற்ற அனந்தாண்பிள்ளை யாரோ காதல் ஜோடி என நினைத்து கோபத்துடன் விரைந்து வந்தார். அனந்தரைக் கண்டவுடன் விரைந்து தப்பித்தார்.

அந்தப் பெண்ணை மட்டும் சிறைப் பிடித்து வைத்தார். அடுத்தநாள் மாலை தொடுத்துக் கொண்டு வேங்கடவனுக்குச் சூடச் சென்றார். அங்கே வேங்கடவனின் மார்பில் எப்பொழுதும் உறைகின்ற நாச்சியார் திருமேனி காணாது திகைத்தார். வேங்கடவனோ ‘‘நீ சிறை பிடித்து வைத்திருக்கிறாயே’’ எனவும், அப்பொழுதுதான் தெரிந்தது வந்தது பெருமாள் தம்பதியர் என்று. மனம் நொந்த அனந்தரைப் பார்த்து அலர்மேல் மங்கை நாச்சியாரோ ‘‘நீரே எமது தகப்பன்’’ என்றார். அதற்குப் பின் மீண்டும் நாச்சியாருக்கும் பெருமாளுக்கும் திருமணம் செய்து வைத்ததாகக் கூறுவர். பெருமாளையே தன் கைங்கரியத்தால் கவர்ந்ததால் அனந்தாழ்வார் என்று அழைக்கப்பட்டார். பெருமாளின் மாமனார் ஆகவும் மாறினார்.

வேங்கடவன் அழைக்கின்றார் என்று எவரேனும் சொன்னாலும் கூட ‘‘இல்லை! பிறகு வருகிறேன் என்று சொல்வதுடன் எனது குரு கூறிய மலர் மாலை கட்டிய பின் வந்து பார்க்கிறேன் என்று சொல்வாராம். தனது குருவான ராமானுஜர் திருமலை வந்தபோது அவரை விட்டுப் பிரிய மனமில்லாது செய்து வைத்திருந்த குருவான் திருமேனியைச் சிலையைக் கொடுத்தார். அதனைத் தன் திருக்கரங்களால் தழுவிக் கொடுக்க அதனையே திரு மலையில் வைத்து கோயில் கட்டி வழிபட்டார் அனந்தாழ்வார். நம்மாழ்வாரின் மீது அதிதீவிரகுருபக்தி வைத்திருந்த மதுரகவி ஆழ்வார் போன்றே குரு ராமானுஜர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர்.

எழுதிய நூல்கள்

திருவேங்கடவன் ஏழுமலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், குன்றின் மீது நிற்பவன் முருகனாகத்தான் இருப்பான். மலையின் மீது எழுந்தருளி ஆட்சி செய்கின்றவன் முருகப் பெருமான் என்று சிலர் வாதிட்டனர். இதனை மறுத்த ராமானுஜர் ஏழுமலையானாகிய நாராயணனே திருவேங்கடவன் என்று புராண, வரலாற்று செய்திகளோடு நிரூபித்தார். இந்த வரலாற்றை ‘வேங்கடாசல இதிஹாசமாலை’’ என்று வடமொழியில் எழுதினார்.

அனந்தாழ்வார் அருளிச் செய்த இந்த மாலையே திருவேங்கடவனுக்கான சாட்சி வரலாறாக கொண்டாடப்படுகிறது. கோதையாகிய ஆண்டாள் பிராட்டியின் மேல் கொண்ட பக்தியால் கோதா சதுஸ்லோகி என்ற பெயரிலே வடமொழியில் அருளிச் செய்தார். தனது குருநாதர் ராமானுஜர் ஆண்டாள் பிராட்டியால் ‘கோயிலண்ணா’ என்று அழைக்கப்பட்டவர் அல்லவா. ஆக மாணாக்கன் குரு வழியே ஆண்டாளையும் பாடி விட்டார். குரு பக்திப் பிரகடனமாக ராமானுஜ சதுஸ்லோகி என்ற நூலை அருளிச் செய்தார்.

திருவேங்கடத்துச் சிரஞ்சீவி
அனந்தர், அனந்தாழ்வார், அனந்தாண்பிள்ளை,
அனந்த சூரி என்று அழைக்கப்
படுகின்ற, அனந்தாழ்வார் திருவேங்கட
வனின் செல்ல மாமனாராக இருந்து,
தான் ஏற்படுத்திய நந்தவனத்திலேயே
ஆடிப் பூரத்தன்று தனது இறுதிநாளில் மீளாப்பள்ளி கொண்டார்.

ஆயினும் வேங்கடவனோ அவர் நீட்டிப்படுத்த இடத்திலே மகிழ மரம் ஒன்றைத்
தோன்றச் செய்தார். இன்றும் ஆடிப்பூரத்
தன்று மகிழ மரத்தடி சேவை செய்கிறார்
மாமனார் திருவேங்கடவன்.
‘‘பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிரம் எழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்’’
- என்று பெரியாழ்வார் திருவேங்கட வனைப் பாடியதுபோல்
தன் குருவைக் கொண்டு வேங்கடவனைப் பெற்றார்,
அனந்தாழ்வார்! பல்லாண்டு! பல்லாண்டு!!!

மகேஸ்வரி சற்குரு

Tags : Ananda Sagaram ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்