×

விதியை, மதியால் வெல்ல முடியுமா?

காலம், காலமாக மக்களிடையே விவாதிக்கப்பட்டுவரும் கேள்வி இது! “முடியும்!” என்பது, தங்களது திறமையிலும் சக்தியிலும், செல்வத்திலும், செல்வாக்கிலும் அசைக்க முடியாத, அதீத தன் நம்பிக்கை கொண்டவர்களின் வாதமாகும்! பிரச்னைகள் ஏற்படும்போது, மனங்கலங்கிவிடாமல், சற்று ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றினால், மதியிடம், விதி மண்டியிட வேண்டியதுதான் என்பது இவர்களின் திடமான எண்ணம்!

ஆனால், மதியைவிட, விதியே அதிக வலிமை பெற்றது என்பது பல பெரியோர்களின் கருத்தாகும். நமது முற்பிறவியில் செய்த தவறுகளே (பாவங்கள் -தகாத செயல்கள்), மறு பிறவிகளில் “விதி”யாக நம்மை பாதிப்பதால், அந்த விதியை மாற்ற எந்தச் சக்தியாலும் முடியாது என்பது அவர்களது முடிவாகும். ஐம்பெருங்காப்பியங்களில் தனிச் சிறப்பு பெற்றுத் திகழும் சிலப்பதிகாரமும், “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்!” எனக் கூறுகிறது.

தர்ம நூல்களில் புகழ்பெற்ற திருக்குறளும், “ஊழிற் பெருவலி யாவுள   மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்றல்லவா கூறுகிறது? ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், லக்கினத்திலிருந்து 5ம் இடத்தையே “பூர்வ புண்ணிய ஸ்தானம்” என விவரித்துள்ளன மிகப் பழைமையான ஜோதிட நூல்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படவிருக்கும் இன்ப துன்பங்களை, இந்த 5ம்
இடத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

“விதி” நிர்ணயித்துள்ள ஒரு சில துன்பங்களுக்கு மட்டும் பரிகாரங்கள் உள்ளன எனவும், அவற்றை ஜெனன கால கிரக நிலைகளைக் கொண்டு அறிந்து, அந்தப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் எனவும் பிரசித்திப்பெற்ற ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. விதிக்கும், மதிக்கும் இடையே நிகழும் போராட்டத்தில், விதியே வெல்லும் என்பதற்குப் பல நிகழ்ச்சிகள் சான்றாக விளங்குகின்றன இன்றும்! அவற்றில் ஒன்றுதான், நமது பாரத புண்ணிய பூமியை சுமார் 1950 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட, உலகப் பிரசித்திப்பெற்ற மாமன்னர் விக்கிரமாதித்யரின் அரண்மனையில் நிகழ்ந்த ஓர் அரிய சரித்திர நிகழ்ச்சியாகும்! தலைநகரம் அவந்திகா!! (தற்கால உஜ்ஜையினி) மட்டுமல்ல- நாடே அப்போது குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது!

தெருவெங்கிலும் மாவிலைத் தோரணங்கள் அலங்கரிக்க, விழாக் கோலம் பூண்டு, குபேரனின் அளகாபுரியைப் போன்று மங்கல ஒலியும், ஒளியும் சேர்ந்து பிரகாசித்தது அம்மாநகரம். சிற்றரசர்கள் பலரும், புரவிகளிலும், அழகிய ரதங்களலும், பல்லக்குகளிலும் அரண்மனையை நோக்கி, ஒருவரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு விரைந்த வண்ணமிருந்தனர்.
குதுகலம்; கொண்டாட்டம்!!

எத்திசை திரும்பினும், ஆடலும், பாடலும், “இதுவும் ஓர் இந்திர லோகமோ...!” என பிரம்மிக்க வைத்தன. காரணம்? மாமன்னர் விக்கிரமாதித்தருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்ததே ஆகும். அரியணைக்குப் பிறந்துவிட்டான், அரசகுமாரன்! அரண்மனையோ, பொன்கொண்டு வேயப்பட்ட அலங்காரத்தில் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் பொன்னும் பொருளும், முத்தும், பவளமும் வாரி, வாரி வழங்கிக்கொண்டிருந்தனர் மன்னரும், மகா ராணியும்! ஆனால், ஒருவர் மட்டும் வரவில்லை! அவரைத் தான் மன்னரின் கண்களும் இடைவிடாது தேடிக்கொண்டிருந்தன!! மன்னர் மனத்தில் வியப்பும், வேதனையும், ஏமாற்றமும் போட்டியிட்டு நின்றன.

அவர் யார்? மன்னரின் ஆருயிர் நண்பரும், ராஜசபையை அலங்கரித்த “நவமணிகள்” என்று புகழ்பெற்ற 9 பேரறிஞர்களில் ஒருவரும், ஜோதிடக் கலையில் தன்னிகரற்ற நிபுணருமான மிஹிரரே அவர். அவர்தான் முதலில் ஓடிவந்து, தன்னையும், தனது ராணியையும் குழந்தையையும் ஆசீர்வதித்திருக்க வேண்டும். அவர் ஏன் இன்னும் வரவில்லை? ஏன்...? ஏன்...? மன்னன் மனம் குழம்பியது. மிஹிரர் மீது அளவற்ற மரியாதையும், பக்தியும் கொண்டிருந்தனர் மன்னரும், மகாராணியும். மாலை வேளையும் வந்தது!  மிஹிரர் மட்டும் வரவில்லை. இனியும் பொறுக்க மனமில்லை மன்னருக்கு!! தனது மந்திரிகளில் ஒருவரைக் கூப்பிட்டு, உடனடியாகச் சென்று, மிஹிரரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.

சிறிது நேரத்தில் மிஹிரரும் வந்துவிட்டார்! தங்கத் தட்டில் பொன்னும், மணியும், வைரமும், வைடூரியமும் வைத்து, வணங்கி வரவேற்றார், விக்கிரமாதித்யர். என்ன ஆச்சர்யம்! மிஹிரர் அப்பரிசுகளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை!! அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது!!! முகத்தில் விவரிக்க இயலாத சோகம். அதைக் கண்ட மன்னர் திடுக்கிட்டார். ஏதோ விபரீதம் நிகழவுள்ளதை உணர்ந்துகொண்டார் மன்னர். மிஹிரரை அன்புடன் அணைத்தவாறு, அரண்மனையிலுள்ள மலர் வனத்திற்கு தனியே அழைத்துச் சென்றார். “மிஹிரரே! தாங்கள் ஏன் குழந்தையை ஆசீர்வதிக்க வரவில்லை? தங்கள் முகத்தில் சோகம் ஏன்?” என்று வினவினார்.

“மன்னா! அதனை, நான் எப்படிச் சொல்வேன்?” என்று தேம்பித் தேம்பி சிறு குழந்தையைப் போல் அழலானார், மிஹிரர். “எதுவாகினும், கூறுங்கள் மிஹிரரே, தாங்கிக்கொள்வேன்!” என்றார் கவலை தோய்ந்த எதிர்பார்ப்புடன். “மாமன்னரே! குழந்தை பிறந்த நேரம் சரியில்லை!! அற்ப ஆயுள் கொண்ட குழந்தை அது! தனது 12வது வயதில், அதன் ஜாதகப்படி ஓர் வராகத்தினால் இளவரசனுக்கு மரணம் ஏற்படும்!!” எனக் கூறி, மீண்டும் கண்ணீர் வடித்தார், மிஹிரர். திடுக்கிட்டு, நிலைகுலைந்து போனார், மாவீரர் விக்கிரமாதித்யர்.

“ஜோதிடத்தில் தலைசிறந்த மிஹிரரே! அந்த மரணம் ஏற்படும் காலம், நேரம் ஆகியவற்றை கணித்துக் கூற முடியுமா? மதியால் அதை வெல்ல முடியுமா?” என்று கேட்டார் மன்னர்.
உடனடியாகக் கிரக நிலைகளைக் கணித்து, “குறிப்பிட்ட ஓர் ஆண்டு, தேதியில், மாலையில் சூரியன் அஸ்தமிப்பதற்கு ஒரு நாழிகைக்கு முன்பு மரணம் ஏற்படும். அதற்கு முன்போ அல்லது பின்போ மரணம் ஏற்படச் சாத்தியமில்லை. அதுவும் ஓர் வராகத்தினால் (பன்றி) ஏற்படும் என்றார் மிஹிரர். திடுக்கிட்ட மன்னர், “விதியை மதியால் வெல்ல முடியுமா?” என்று
கேட்டார்.

“இதுவரை விதியை வென்றவரில்லை! தங்களால் முடியுமென்றால், முயற்சித்துப் பாருங்கள்!!” வேதனை நெஞ்சை அடைக்க பதிலளித்தார் மிஹிரர். இந்த ஜோதிட ரகசியத்தை, மன்னர் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார். இதனை அறிந்தவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் மன்னர்; மற்றொருவர் மிஹிரர்! காலமும், கடல் அலைகளும் எவருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை! வேகமாகச் சுழன்றது, காலமென்னும் சக்கரம். குழந்தை, நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, முகத்தில் வீரமும், எழிலும் பொங்க அரசிளங்குமரனாக வளர்ந்து வந்தான்.

கண்டவர் அனைவரும் அந்தக் கண்கவர் இளவரசனைக் கண்டு மனம் பூரித்தனர். அவனைப் பெற்ற அரசிக்கோ அளவில்லா ஆனந்தம். குழந்தை வளர, வளர விக்கிரமாதித்யருக்கு
வேதனையும் வளர்ந்தது. உண்ணும்போதும், உறங்கும்போதும் அதே சிந்தனை. மதியினால், விதியை வென்றேயாகவேண்டும் என உறுதிபூண்டார். பன்றியினால்தானே, தன்னுடைய பாலகனுக்கு ஆபத்து? பன்றியையே வரவொட்டாமல் தடுத்துவிட்டால்....? சிந்தித்தார்... சிந்தித்தார்... வழியும் புலப்பட்டது. மனத்திற்குள் நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டார், புகழ்பெற்ற அந்த மாமன்னர்.

விதி, நாட்களை எண்ணிக்கொண்டே வந்தது. மிஹிரர் குறித்த அந்த நாளும் வந்தது! அரசருக்கு எதிரிகள் இருக்கக்கூடும். அவர்களால் அரச குமாரனுக்கு ஆபத்து உண்டாகக்கூடும் எனக் கருதிய மன்னர், அவரது மூதாதையர்கள் வாழ்ந்துவந்த, புராதனக் கோட்டை அறையொன்றில் பலத்த காவலுடன் இளவரசனைத் தங்க வைத்தார். சிறுவனின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சில நண்பர்கள் மட்டும் உடன் வைத்து வாயிற் கதவு பூட்டப்பட்டது! வாயிற் கதவு அருகில் இரு ஆசனங்கள் போடப்பட்டு, ஒன்றில் மன்னரும், மற்றொன்றில் மிஹிரரும் அமர்ந்திருந்தனர். சுற்றிலும் மெய்க்காப்பாளர்கள். அத்தனை பாதுகாப்பு!!

மேற்கு திசையில் மலை வாயிலில் சிறிது சிறிதாக இறங்கிக் கொண்டிருந்த சூரியனையே கண்கொட்டாமல் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தனர் மன்னரும், மிஹிரரும். திடீரென்று பூட்டிய அறையிலிருந்து, “ஐயோ...ஐயோ!” என்ற அலறல் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு, மிஹிரரின் முகத்தை நோக்கினார், மன்னன். “இளவரசன் இறந்துவிட்டான்!” பொங்கிவரும் கண்ணீரை அடக்க இயலாமல் தழுதழுத்த குரலில் கூறினார் மிஹிரர்! பூட்டியிருக்கும் அறைக்குள் எவ்விதம் பன்றி சென்றிருக்க முடியும்? மன்னர் மனம் பதைபதைத்தது. அறையைத் திறந்து, உள்ளே விரைந்தனர் இருவரும். மண்டை பிளந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்தான், ராஜகுமாரன்.

அருகில் பிரம்மாண்ட மரத்தினால் செதுக்கப்பட்ட பன்றியின் உருவம் கிடந்தது. பல்லாண்டுகளுக்கு முன்னரே அந்த அறையின் மேற்கூரையின் மேல் கலையழகிற்காக பொருத்தி வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மரப் பன்றி உருவம் அது! பல காலமாக அந்த அரண்மனை உபயோகத்தில் இல்லாததால்,  உளுத்துப் போய், கீழே விழுவதற்குத் தொங்கிக்கொண்டிருந்த மரப்பன்றி உருவம், குறிப்பிட்ட நேரம் வந்ததும்,  அரச குமாரனின் தலையில் விழுந்துவிட்டது. கனமான மரச் சிலையாதலால், அந்தச் சிறுவனின் மண்டை பிளந்தது. அன்றிலிருந்து, மிஹிரர், “வராகமிஹிரர்” என்று பிரசித்திப்பெற்றார்.

அவரது ஈடிணையற்ற ப்ருஹத் சம்ஹிதை, ப்ருஹத் ஜாதகம் ஆகிய ஜோதிட நூல்கள் உலகளவில் புகழ்பெற்றவையாகும். பிற்காலத்தில், பாரத தேசத்திற்கு விஜயம் செய்த அரேபிய பேரறிஞரும் யாத்திரிகருமான, அல்பிரூனி, வராகமிஹிரரின் ஜோதிட வானியல் புலமையையும், கணிக்கும் திறமையையும், புகழ்ந்து எழுதியுள்ளார். விதியை, மதியால் வெல்ல முடியாது என்பதை, ஜோதிட ரீதியில் நிரூபித்துக்காட்டியவர் வராகமிஹிரர்! அன்றே அவர் விவரித்துள்ள ஜோதிடக் கணித முறைகளும், அறிவுரைகளும் ஈடிணையற்றவை; காலம் அனைத்தையும் கடந்தவை. இன்றும் அவை ஏராளமான ஜோதிட வல்லுநர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

A.M. ராஜகோபாலன்

Tags :
× RELATED சுந்தர வேடம்