×

மனை தேடி மாதவன் வரும் புரட்டாசி மாதம்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்

புரட்டாசி என்றாலே, நம் நினைவிற்கு வருவது திருவேங்கடத்து இன்ன முதனின் “கோவிந்தா”,“கோவிந்தா” எனும் திருநாமம்தான்! அதிகாலையின் ஆனந்தமான உறக்கத்தில் நாம் ஆழ்ந்திருக்கும்போது, நம்மைத் தட்டி எழுப்புவது, வீதியில் ஒலிக்கும் “கோவிந்தா” “கோவிந்தா” அமுத சப்தமல்லவா? இதுவே புரட்டாசி மாதத்தின் தெய்வீகப் பெருமையாகும்.
எந்த எம்பெருமானின் கருணையை நாடி, மாமுனிவர்களும் அக்னியை வளர்த்து, அதில் ஒற்றைக் காலில் நின்று, பல காலம் கடும் தவம் புரிந்தார்களோ, அந்தப் பிரபுவே, நம் இல்லங்களைத் தேடி வரும் புனித, புண்ணிய மாதம், இந்தப் புரட்டாசி!

ஏழை, எளியவர், செல்வந்தர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அவரவர் வீடுகளை சுத்தம் செய்து, அழகிய கோலமிட்டு, மாவிலைத் தோரணங்களினால் வாயிலை அலங்கரித்து, பகவானின் திருவுள்ளம் உகந்த புரட்டாசி சனிக்கிழமைகளில், வீட்டின் பூஜையறையில் அரிசி மாவிளக்கு மாவினை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஏழுமலைகளாகப் பாவித்து, அதில் நெய் தீபம் ஏற்றி வைத்து, பூஜிப்பது காலம் காலமாக நாம் கடைபிடித்துவரும் விரதமாகும். அந்த நெய்தீபம் ஒளிவீசி, தானாகவே அணையும் நேரம் வரை, திருமலை வேங்கடவனே நம் வீட்டில் எழுந்தருளி இருப்பதாகக் கருதி, நாம் பக்தியுடன் பூஜித்து வருகிறோம்.

சூரியன், தனது ஆட்சி வீடான சிம்ம ராசியை விட்டு, புதனின் ஆட்சி வீடான கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே புரட்டாசி மாதம் எனப் புகழ்கிறது வானியல் கலையான ஜோதிடம்.
புரட்டாசி மாதத்தின் மற்றோர் சூட்சும சிறப்பு!! புரட்டாசி மாதத்தின் தெய்வீக சக்திக்கு  மற்றும் ஓர் சூட்சும காரணமும் உண்டு. மறைந்த நம் முன்னோர்கள் (பித்ருக்கள்), நம் வீடு தேடி வந்து, நம்முடன் 15 நாட்கள் தங்கி, தங்களது தவ-சக்தியினால் நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்கி, அருள்புரியும் மகாளயபட்சம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் இந்த புரட்டாசி மாதத்தில்தான் அமைகின்றன.

என்றோ தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாம் காட்டிய பாசம், அன்பு, பணிவிடைகள் ஆகியவற்றை நினைத்து, நம் முன்னோர்கள் (பித்ருக்கள்) ஸ்வர்ணமயமான (தூய தங்கம்) விமானங்களில் பூவுலகம் வந்து, நம்முடன் 15 நாட்கள் தங்கி நமது துன்பங்களைப் போக்கியருளி, மகாளய அமாவாசை தினத்தன்று அதே சூரிய கிரணங்கள் மூலம் பித்ருக்கள் உலகிற்கு திரும்பிச் செல்வதாக சூட்சும நூல்கள் தக்க ஆதாரத்துடன் விவரித்துள்ளன. கொடிய நோய்கள், வறுமை, குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, மனநிம்மதியின்மை, தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி, விவாகம் போன்றவற்றில் ஏற்படும் தடங்கல்கள், வீண்பழிகள், நமக்கு வேண்டாதவர்களால் நமக்கு வைக்கப்படும் மாந்தரீகங்கள் (ஏவல், பில்லிசூனியம்) ஆகிய துன்பங்கள், இந்த மகாளயபட்ச பித்ருபூஜை களினால் நீங்குவது அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும்.

“மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல; மனிதப் பிறவியின் ஓர் கட்டமே அது...” என்ற உண்மையைத் தங்களது தவ சக்தியினால் கண்டறிந்து, முதன் முதலில் வெளிப்படுத்தியது நமது வேதகால மகரிஷிகளே! நமக்கும், பிறவி முடிந்த நமது முன்னோர்களுக்கும் ஓர் சூட்சும தொடர்பை ஏற்படுத்தித் தருவது இந்த புரட்டாசி மாதமே. மானிடப் பிறவியின் பல ரகசியங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இப்புரட்டாசி மாதத்தின் ராசி பலன்களை “பூர்வ பாராசர்யம்”, பிருஹத்ஸம்ஹிதை” போன்ற மிகப் பழைமையான ஜோதிட நூல்களில் விவரித்துள்ள “ஷோடஸ ஸதவர்க்கம்” எனும் ஒப்பற்ற ஜோதிட கணித முறைப்படி, கணித்து, எமது “தினகரன்” வாசக அன்பர்களாகிய உங்களுக்கு வழங்குவதில் அளவற்ற மன நிறைவைப் பெறுகிறோம்.

புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு தினத்திற்கும் தக்க வழிகாட்டி உதவும், இக்கணிப்புகள். புரட்டாசி மாதத்தில்  செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்...!! புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் 6வதாக வருவது. மிகவும் புனிதமாகப் போற்றப்படுவது. கன்னியற்கு 9 நாள் நவராத்திரி விழாவும் (அக்டோபர் 7ந் தேதி முதல் அக்டோபர் 15ந் தேதி வரை) இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

இம்மாதத்தில் செய்யவேண்டியது: புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் இவற்றில் ஏதாவது ஒன்றை தினந்தோறும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, ஏழை எளியோர்க்குக் கொடுப்பது மகத்தான புண்ணிய பலனைத் தரும். அன்ன தானம் செய்வித்தல், வீட்டில் பஜனைப் பாடல்களைப் பாடுதல் அல்லது ஒளி-ஒலி நாடாக்களில் பகவந்நாம ஸங்கீர்த்தனைகளைக் கேட்பது. ஏழைகளுக்கு தானம் கொடுப்பது, அளவற்ற புண்ணிய பலனை அளிக்கும்.  

புரட்டாசி மாதத்தில் வரும் ஏகாதசி மற்றும் பிரதோஷம் தினங்களில் உபவாசம் இருந்து, மறுநாள் துளசி, வில்வ தீர்த்தம் பருகி, விரதத்தைப் பூர்த்தி செய்வது மனம், வாக்கு, சரீரம் ஆகியவற்றினால் செய்யும் பாவங்கள் அனைத்தும் தீயிலிட்ட தூசாகும் என கருட புராணம் விவரித்துள்ளது. தவிர்க்க வேண்டியவை: புலால்-மாமிசம் உண்ணுதல் அறவே கூடாது. வருடம் முழுவதும் கடைபிடித்தால் வாழ்வு சிறக்கும். வள்ளலார் பெருந்தகையும்,

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப்பாரே!
- என்கிறார்.


திருவள்ளுவரும்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி
தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்


(அதாவது, தன்னுடலை வளர்ப்பதற்காகவும், உடற்பருமனடையச் செய்வதற்காகவும் ஏனைய உயிரைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்பவனுக்கு எப்படி இறைவனின் அருள் உடையவனாகக் கருதப்படுவான்? அவனுடைய மனத்தில்தான் இரக்கம், பச்சாதாபம், மனிதாபிமானம் என்கிற சொற்கள் இருக்குமா?) ஜீவ வதை என்பது,  பஞ்ச மா பாதகங்களில் ஒன்று எனவும், இது குடும்பத்தினரை ஏழு தலைமுறைகளுக்குக் கடுமையான துன்பங்களையும், கொடிய நோய்களையும் விளைவிக்கும் என சித்த மகா புருஷர்களும் அருளியுள்ளனர். மகாளயபட்ச காலத்தில், பொய் பேசுதல், வீண் வாக்கு- வாதங்களை சண்டை- சச்சரவு களைத் தவிர்த்தல் அவசியம். கல்யாணம், புது வீடு புதுமனை புகுதல், வளைகாப்பு போன்ற விசேஷங்களைத் தவிர்ப்பது அவசியம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பாராதிருத்தல். பக்திப் பாடல்களை மட்டுமே கேட்டு ரசிப்பது, வீட்டில் கெட்ட சக்திகள் வாராதிருக்க உதவும்.

Tags : Madhavan ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது