×

நிறைகளைத் தேடுங்கள்!

காலித் பின் வலீத் என்னும் நபித்தோழர் பெரும் வீரர். மக்காவில் குறைஷி குலத்தினரிடையே பெரும் புகழ் பெற்றவர். எத்தகைய போர்க்களத்திலும் புலிபோல் பாய்ந்து எதிரி களைத் தாக்கி வீழ்த்துபவர்.  இவர் தொடக்க காலத்தில் நபிகளாரைக் கடுமையாக எதிர்த்தவர். உஹது போர்க் களத்தில் இவருடைய தாக்குதல் காரணமாகத்தான் முஸ்லிம் படைகள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டி வந்தது என்பது வரலாறு.
காலித் எதிரணியில் இருந்தாலும்கூட அவருடைய சிறப்புகளையும் வீரத்தையும் நபிகளார் நன்கு அறிந்திருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்பு நபிகளாரின் கை மேலோங்கியது. குறைஷிகளின் வலிமை குன்றியது. காலித் மக்காவை விட்டே வெளியேறிவிட்டார். இத்தருணத்தில் காலிதின் நினைவு வந்தது நபிகளாருக்கு.

காலித் செய்த போர்கள், முஸ்லிம்களுக்கு அவர் ஏற்படுத்திய இழப்புகள், உஹதுப் போரின் தோல்வி அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, காலிதின் சகோதரர் வலீதிடம் நபிகளார் கேட்டார்- “காலித் எங்கே? அவரைப் போன்றவர்கள் சத்தியத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்? அவர் நம்மிடம் வந்துவிட்டால் அவருக்கு உரிய கண்ணியம் அளிக்கப்படும்” என்று கூறினார்.
வலீத் நபிகளார் சொன்னதைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். உடனே தம் சகோதரருக்கு  கடிதம் எழுதுகிறார். நபிகளார் அவரை விசாரித்ததையும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதினார்.

உடனே காலித் திரும்பி வருகிறார். இஸ்லாமிய வாழ்வியலை ஏற்றுக் கொள்கிறார். நேர்வழி பெறுகிறார். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நபிகளாரின் அணுகுமுறை.சிலர் மற்றவர்களிடமுள்ள குற்றங்குறைகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நபிகளார், காலிதிடம் உள்ள நிறைகளை மட்டுமே பார்த்தார். அவற்றை மட்டுமே சிலாகித்துப் பேசினார். அவர் நம்மிடம் வந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அண்ணலாரின் அந்த உயர்பண்பைக் கண்டு காலித் உருகிவிட்டார்.மற்றவர்களின் மனங்களை எப்படி வெல்வது எனும் அழகிய வழிமுறை இதில் உள்ளது. ஒருவரிடமுள்ள குறைகளை மறந்துவிட்டு, நிறைகளைப் பார்க்கத் தெரிந்துவிட்டால் போதும். அவருடைய மனத்தை நாம் எளிதில் வெல்லலாம்.இதுதான் நபிகளாரின் இனிய வழிமுறை.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்