×

கற்பக மரம் தந்த கற்பக விநாயகர்

நாராயண நாமத்தை சதா ஜபித்த படி இருக்கும் நாரத முனிவர் , அன்று இந்திர லோகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருக்கு உரிய மரியாதையை தந்த தேவேந்திரன், அவர் இருக்க அற்புதமான ஒரு ஆசனம் தந்து அவரை வணங்கிய படியே அமர்ந்தான். “முக்காலமும் உணர்ந்த நாரத முனிவரே! தாங்களது தேவ லோக வருகைக்கான காரணத்தை நான் அறியலாமா?” கை குவித்த படி, பணிவாக வினவினான் வானவர் தலைவன்.

“விஷயம் சாதாரணமானது இல்லை இந்திரா! ஒரு மரம், காயையும் கனியையும் தந்து பார்த்திருப்பாய். உன் விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்யும் மரத்தை பற்றி கேட்டாவது இருக்கிறாயா?” கண்களை அகல விரித்து, உள்ளத்து ஆச்சரியத்தை குரலிலும் காட்டிய படி, நாரதர் கேட்டார். “நீங்கள் சொல்வது போல ஒரு மரத்தை நான் கேள்வி பட்டதே இல்லையே! உண்மையில் அப்படி ஒரு மரம் இருக்கிறதா?” குழம்பிய படியே இந்திரன் கேட்டான்.

“ஆனை முகவனின் கருணையால் ஆகாதது தான் என்ன?. கேட்டதை எல்லாம் தரும் அந்த மரத்துக்கு பெயர் கற்பக மரம். கற்பக விநாயகரின் தனிப்பெரும் அருளால் உருவான மரம் அது. அந்த தெய்வீக மரம், இப்போது புருசுண்டி என்ற முனிவரின் வசம் இருக்கிறது.” அகில உலகமும் கேட்டிராத ஒரு அதிசயத்தை பற்றி அனாயாசமாக சொன்னார் நாரதர். அதை கேட்ட இந்திரனுக்கு, நடப்பதை நம்பவே முடியவில்லை. “என்ன சொல்கிறீர்கள் நாரதரே? யார் அந்த புருசுண்டி முனிவர்? அவருக்கு எப்படி அந்த மரம் கிடைத்தது?”

“சுருக்கமாக சொல்கிறேன் இந்திரா. கவனமாக கேள். திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், தண்டகாரண்யம் என்ற வனத்தில் , விப்ரதன் என்ற வேடன் இருந்தான். மிருகங்களை வேட்டையாடி , தன்னையும் குடும்பத்தையும் காத்து வந்தான். திடீரென்று மழை பெய்யாமல் போகவே, உணவு கிடைக்காமல் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த வேளையில், அவனது கண்களில், காடு வழியே செல்லும், ஒரு அந்தணர் தென்பட்டார். அவரை வழிப்பறி செய்ய அவரை, விப்ரதன் பின் தொடர்ந்தான். அந்த அந்தணர் காட்டின் நடுவே இருக்கும் ஒரு விநாயகர் ஆலயத்தில் சென்று மறைந்து விட்டார்.”

“அப்படி அந்தணராக வந்தது அந்த விநாயகப் பெருமான் தானே?” ஆர்வம் தாங்காமல் இந்திரன், இடையில் புகுந்தான். “இதில் என்ன சந்தேகம் இந்திரா! அந்த கணேசனின் திருவிளையாடலை, அற்ப புத்தி படைத்த நம்மால் உணர முடியுமா?. சரி கதையை கேள்” என்று கட்டளையிட்டு விட்டு நாரதர் தொடர்ந்தார். “அந்த அற்புத விநாயகர் ஆலயத்தை கண்டதும் விப்ரதன் மனம் பரம சந்தோசம் அடைந்தது. அந்த விநாயகரின் அழகில், தன்னை பறிகொடுத்த வேடன், அவருக்கு தொண்டு செய்வதில் பசி தாகம் மறந்து காலத்தை கழித்து வந்தான்.

அந்த சமயம், அவ்வழியே முக்கால முனிவர் என்ற முனிவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம், எதாவது பொருள் கிடைக்கும் என்று எண்ணிய விப்ரதன், ஒரு அம்பை கொண்டு அவரை மிரட்ட ஆரம்பித்தான். வேடனை கண்டு கலங்காத அந்த முனிவர், தனது கமண்டலத்தில் இருந்த சிறிது நீரை எடுத்து கணேச மந்திரத்தை ஜெபித்து அவன் மீது தெளித்தார்.” இடைவிடாமல் கதை சொன்ன நாரதர் , சற்று நிறுத்தி, மெல்ல மூச்சு வாங்கினார்.

“பிறகு என்ன நடந்தது சுவாமி?, முனிவருக்கு என்ன ஆனது?. ” என்று பொறுமையை இழந்த இந்திரன் பரபரப்பாக கேட்டான். அதை கவனித்த நாரதர் புன்னகை
பூத்த படி தொடர்ந்தார். “கணேசனின் மந்திரத்தால் ஜெபிக்கப்பட்ட நீர் விப்ரதன் மீது பட்டதும் அவனுக்கு ஞானம் வந்தது. இவ்வளவு நாள், பிறருக்கு இம்சை தந்து வழிப்பறி செய்து வாழ்ந்ததை எண்ணி, திடீரென்று அவன் மனம் கலங்கியது. போதாத குறைக்கு, சிவப் பழமாக இருக்கும் இந்த முனிவருக்கு வேறு தீங்கு செய்ய இருந்தோமே, என்ற எண்ணம் அவனை தீயாய் சுட்டது. தான் செய்த பாவங்களால் பயந்த விப்ரதன், வேரற்ற மரம் போல முக்கால முனிவரின் பாதத்தில் சரிந்தான். அவனைக் கண்டு மனம் கனிந்த முனிவர், அவனை எழுப்பி ஆசிர்வதித்தார். முனிவரின் அன்பினாலும், அவரது கண்கள் வீசும் ஞான ஒளியாலும், மனம் அமைதி அடைந்தான் விப்ரதன். மெல்ல கைகுவித்து தான் நற்கதி பெறுவதற்கான வழியை காட்டி அருள வேண்டும் என்று முனிவரை வேண்டினான்.

அவனை வாஞ்சையாக பார்த்த முனிவர், அருகில் இருந்த ஒரு காய்ந்த மரக்கிளையை எடுத்து பூமியில் நட்டார். பிறகு முறையாக அவனுக்கு மகா கணபதியின் மூல மந்திரத்தை உபதேசம் செய்தார். உபதேசம் முடிந்ததும், ”அப்பனே நான் கற்பித்த மந்திரத்தை அந்த விநாயகரை தியானித்த படி ஜெபித்து வா. உன் தவ வலிமையால் இந்த காய்ந்த மரக்கிளை துளிர்க்கும். அப்பொழுது உன் பாவங்கள் நீங்கி நீ புனிதனாகி விட்டாய் என்று பொருள்” என்று கருணையோடு மொழிந்து அவனுக்கு ஆசி கூறி, முக்கால முனிவர் அங்கிருந்து நகர்ந்தார்.
விப்ரதன் அந்த முனிவர் சொன்னபடியே, ஐம்புலனையும் அடக்கி அரும் தவம் புரிந்து கணபதி மந்திரத்தை ஜபித்து வந்தான். அவனது தவ வலிமையால், அந்த காய்ந்த மரக்கிளை துளிர்விட்டு மரமாய் வளர்ந்தது. அவனது தவத்தால் மனம் மகிழ்ந்த விநாயகன் அவனுக்கு காட்சி தந்தார். காட்சி தந்த கணேசனை விப்ரதன் ஊனுருக, உயிருருக சேவித்தான். அப்பொழுது விநாயகர், அவன் கேட்காமலேயே வரங்களை அருள ஆரம்பித்தார்.

“அப்பனே! இடையறாமல் மந்திரத்தை ஜபித்து என்னை நீ தியானித்து வந்ததால் நீ என்னை போலவே உருவத்தை அடைவாய். அதாவது உனது மூக்கு நீண்டு என்னுடைய துகிக்கை போல இனி விளங்கும். புருவத்தின் நடுவே என்னைப் போல துதிக்கை உடையதால் உன்னை ‘‘புருசுண்டி” முனிவர் என்று இந்த உலகம் போற்றும். உன் தவ வலிமையால் உருவாகிய இந்த மரம் யார் எதை கேட்டாலும் தரும். இதை கற்பக விருட்சம் என்று உலகம் கொண்டாடும். நீ பல வகைகளில் என்னை வழிபட்டு விரைவிலேயே என்னை வந்து அடைவாய் ஆசிகள் ”என்று அமுதமாய் அருளை வாரி வழங்கிய படியே ஆனை முகத்து எம்பெருமான் மறைந்து போனார்.

அவர் சொன்னது போல இன்றுவரை விநாயகரை பூஜித்து சேவித்து ஜெபித்து வருகிறார் புருசுண்டி முனிவர்.” பெரிய விருத்தாந்தத்தை அழகாக சொல்லிவிட்டு, நாரதர், இந்திரனை கருணை பொங்க பார்த்தார். இந்திரன் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயை பிளந்தபடி இருந்தான். “மற்ற தெய்வங்கள் கேட்ட வரத்தை மட்டும் கொடுத்து விட்டு மறைந்து விடும். ஆனால், விநாயகர், புருசுண்டி முனிவர் கேட்காமலேயே, விரும்பியவற்றை எல்லாம் அளிக்கும் கற்பக மரத்தை தந்து விட்டார். அவரது கருணையை புகழ்வதா இல்லை, புருசுண்டி முனிவரின் தவ வலிமையை புகழ்வதா என்று விளங்கவில்லை சுவாமி!” கண்களில் நீர் கசிய ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தபடி இந்திரன் மொழிந்தான்.

இந்திரன் அடைந்த பரவசத்தை கண்ட நாரதர், மெல்ல இளநகை பூத்தார். விநாயகர் தனது, அடுத்தக் கட்ட திருவிளையாடலை நடத்த தன்னை ஒரு கருவியாக பயன்படுத்துவதை எண்ணி, நாரதர் பூரித்தார். மெல்ல கலகத்தை மூட்ட ஆரம்பித்தார். “இந்திரா! கேட்டதை தரும் கற்பக மரம் பூலோகத்தில் இருப்பதை விட, வானவர் உலகில் இருப்பதே சாலச் சிறந்தது. பூலோகத்தில் மனிதர்கள், போட்டியாலும், பொறாமையாலும் அந்த மரத்துக்காக அடித்துக் கொண்டு சாவார்கள். ஆகவே நீ சென்று அந்த மரத்தை புருசுண்டி முனிவரிடம் யாசகமாக கேள்.” கொஞ்சம் கொஞ்சமாக இந்திரன் மனதில் ஆசையை விதைத்தார் நாரதர். முதலில் தயங்கிய இந்திரன், பிறகு நாரதர் சொல்படி நடக்க இசைந்தான். ஐராவதம் ஏறி, முனிவர் இருக்கும் தண்டக வனத்துக்கு இந்திரன் வந்தான். ஒரு பக்த யாசகனை போல வேடம் பூண்டு , இந்திரன், முனிவரிடம் சென்றான்.

அந்த யாசகனின் நிலையை கண்ட முனிவர் அவன் எதை கேட்டாலும் தருவதாக உறுதி அளித்தார். இதற்காகவே காத்திருந்த யாசகன் வடிவில் இருக்கும் இந்திரன், கற்பக மரத்தை தருமாறு முனிவரை கேட்டான். முனிவர் சற்றும் மனம் தளரவில்லை, முகம் சுளிக்கவில்லை, யோசிக்கவும் இல்லை. நொடி கூட தாமதிக்காமல், யாசகன் வடிவில் இருக்கும் இந்திரனுக்கு, கற்பக
விருட்சத்தை தாரை வார்த்தார். முனிவரின் இந்த அற்புத குணத்தால் மனம் மகிழ்ந்த ஆனை முகன், அடுத்தக் கணத்தில் புருசுண்டி முனிவரை தன் பாதத்தில் சேர்த்துக் கொண்டார்.

ஒரு பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு தொண்டு செய்வது மட்டுமே வாழ்க்கை, என்று வாழும் பக்குவம் தேர்ந்த யோகிகளுக்கும் வராது. அப்படியிருக்க, தனது தவத்தால் அடைந்த கற்பக மரத்தை அனாயாசமாக தானம் செய்து புதிய சாதனையே படைத்து விட்டார் முனிவர். அவரது தியாகத்தை மனதில் கொண்டு தான், நாம் செய்யும் நற்காரியங்களின் பலனை இறைவனுக்கு அளித்து விடும் வழக்கம் வந்தது. உதாரணமாக நாம் கோவிலுக்கு அர்ச்சனை செய்யப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அங்கிருக்கும் அர்ச்சகர், ‘‘யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்” என்று கேட்பார். அதற்கு சிலர்  “சுவாமி பேருக்கே அர்ச்சனை பண்ணிடுங்க” என்று பதில் தருவார்கள். அதாவது இறைவனை அர்ச்சிக்கும் பலனை இறைவனுக்கே அர்ப்பித்து விடுவது என்பது தான் அதற்கு பொருள். சுருங்கச் சொன்னால் கண்ணன் கீதையில் விரிவாக எடுத்து உரைத்த கர்ம யோகமும் இது தான். அதாவது பலனை கருதாமல் நற்காரியங்களை செய்வது. இப்படி நமக்கு கற்பக மரத்தை தந்த முனிவருக்கு , நாம் வாழ் நாளெல்லாம் கடமை பட்டிருக்கிறோம் இல்லையா?

ஜி.மகேஷ்

Tags : Ganesha ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி