×

விநாயகர் வழிபாட்டின் விழுமியங்கள்

உலகிலுள்ள விலங்குகளிலேயே யானை மட்டும்தான் தன்மீது பயணம் செய்யும் பயணிக்காக குனிந்துகொடுக்கும் குணமுடையது. இப்படி உதவிக்கரம் நீட்டும் யானையின் முகத்துடன் விளங்கும் ஐங்கரனும் அடியார்க்கு எளிமையாக அருளும் அற்புதத் தெய்வம். பிற தெய்வங்களை வழிபட, திருவுருவச் சிலைகளோ அல்லது படங்களோ தேவை. ஆனால், பிள்ளையாரை வழிபட மண்ணோ, மஞ்சளோ, பசுஞ்சாணமோ எதைப் பிடித்து வைத்து வழிபட்டாலும் பிடித்துவைத்த பிள்ளையாராய் எளிதாக வந்தருள் செய்வார் பிள்ளையார். இவரை வழிபட பூக்கள்கூட வேண்டியதில்லை; புல் இருந்தாலும் போதும். நறுமலர்கள் கூடத் தேவையில்லை; நற்காட்டில் பூக்கும் எருக்க மலர்கூடப் போதும். ஆனாலும், கூட விநாயகருக்கு உகந்த மலர்கள் இருபத்தொன்று என அரும்பருத்தைப்புரி பிள்ளைத்தமிழ்பின்வருமாறு அறிவிக்கின்றது.

‘‘அலரி துளசி மருது எருக்கோடு அருகு கையாந்தகரை
முள்ளி அரசு பச்சை நாயுருவி எழில்சேர் நாவல்
எலுமிச்சை இலகு நொச்சில் சாதிப்பூ இலுப்பை
வன்னி ஊமத்தை இலந்தை தேவதாருடன் எழில்மாதுளை

விட்னுகாந்தி கழுவவும் இருபத்து ஒன்றான குணபத்திரங்கள்பல சாத்திக் குட்டிக் கொடுதாள் பணிசெய்வோர் குறித்த கருமம் தருவோனே
புலவரேத்தும் அரும்பருத்தைப் புரிவாள் களிறே வருகவே எழில் சேர் வேத விநாயகமாம் புனிதா வருக வருகவே’’

பட்டியலாகப் பல மலர்களிருந்தாலும் அந்த ஐங்கரன் விரும்புவதெல்லாம் நம் அன்பு மலரைத்தான். அதுகொண்டு அரும்பு வயதில் வழிபாடு செய்த நம்பியாண்டார் நம்பிக்காகத்தான் விநாயகர் நேரடியாகத் தோன்றித் திருக்காட்சி அளித்தார். எளிமையையே எப்போதும் விரும்பும் விநாயகருக்கு ஏன் விமர்சையாக வீதிக்கு வீதி சிலைகள்? விசர்ஜன ஊர்வலம்? என்ற கேள்விகள் எழுகின்றன. அக்காலத்தில் விநாயகர் சிலையை களிமண்ணாலும் செம்மண்ணாலும் செய்தார்கள். ஊறு விளைவிக்கும் வண்ணப் பூச்சுகள் அக்காலத்தில் இல்லை. வழிபாட்டின்போது விநாயகரின் ஒவ்வோர் அங்கங்களிலும் நாணயங்களை வைத்து வழிபாடு செய்தார்கள். வழிபாடு முடிந்ததும் விநாயகர் சிலையை நீரில் கரைத்தனர்.

சிலையிலுள்ள களிமண்ணும் செம்மண்ணும் நீர்நிலைகளில் நீரைத் தேக்கி வைக்கும் வகையில் உதவி செய்தன. இதுமட்டுமின்றி நாட்டில் பஞ்சம் வரும் காலங்களில் விநாயகரின் சிலையுடன் வைத்து நீர்நிலைகளில் இட்ட நாணயங்களை தோண்டியெடுக்க முற்பட்டனர். இதன்மூலம் நாட்டின் பஞ்சமும் தீரும்; நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டன. இவ்வாறு இயற்கை காப்பாற்றப்பட்டது. முக்குறுனிப் பிள்ளையார், மூத்த பிள்ளையார், வலம்புரி விநாயகர் போன்ற மரபார்ந்த வடிவங்கள் மாறி, கணினியுடன் காட்சிதரும் விநாயகர் சிலைகளை தற்போது வர்த்தகரீதியாக வடிவமைக்கிறார்கள். மரபே வழிபாட்டிற்குரியது.

விநாயகர் வழிபாட்டில் பட்சணங்கள் மிக விமரிசையாக இருக்கும். விநாயகருக்கான பட்சணங்களை கபிலதேவ நாயனார், ‘‘வாழைக்கனி பலவின் கனி மாங்கனி தாஞ்சிறந்த சூழைச்சுருள் குழையப்பம் எள்ளுண்டை’’ என்றும்... திருப்புகழில் அருணகிரிநாதர், ‘‘இக்கு(கரும்பு), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டு எச்சில்(தேன்), பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப் பழம், இடிப்பல்வகைத் தனிமூலம், மிக்க அடிசில்(சாதம்), கடலை’’ என்றும் பட்டியலிடுகின்றனர். பல சுவையமுதுகள் விநாயகர் வழிபாட்டில் இடம்பெறுகின்றன.

இவை யாவும் இறைவனின் பெயரால் இல்லாதோரின் இரைப்பைக்குச் செல்வதற்காகவே. எளிமையே வடிவான விநாயகரை மிகவும் எளிதில் வழிபடலாம். வழிபாடுதான் எளியதே தவிர, அவர் செய்யும் அருளோ ஏராளம். விநாயகரின் பூரண அருள் பெற்றதாலேயே தமிழ்மறையாகிய திருமுறைகளைத் தொகுக்கும் திருப்பேறு பெற்றார்  நம்பியாண்டார் நம்பி. விநாயகரின் அருளின் காரணமாகவே வள்ளியின் கரம்பிடித்தார் வடிவேல் முருகன். வியாசர் பாரதம் பாடினார். ஔவையார் முதுமையழகு பெற்றார். விநாயகரின் அருளைப் பெறாமல் திரிபுரத்தை எரிக்கச் சென்ற சிவபெருமானின் தேர்ச் சக்கரத்தின் அச்சு முறிந்தது. ஆகவே விநாயகரின் அருளே நம்வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணி என்பதை உணர்ந்து ஐங்கரனை வழிபடுவோம். ஆனந்த வாழ்வு வாழ்வோம்.

சிவ.சதீஸ்குமார்

Tags :
× RELATED ஜப்பானில் சரஸ்வதி பென்சாயின் தென்