×

எல்லாப் பொருத்தமும் நட்சத்திரப் பொருத்தத்தில் அடங்கியதுதான்

நாம் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடத்தில் போனால், அவர் ஆண், பெண் இரண்டு ஜாதகங்களையும் வைத்துக் கொண்டு, முதலில் நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்ப்பார். நட்சத்திரப் பொருத்தத்தை பத்து விதமாகப் பார்ப்பார்கள். இதற்கு தசவித பொருத்தம் என்று பெயர். இது பஞ்சாங்கங்களிலும்   கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்தால் போதுமா? அதை மட்டும் வைத்துக்கொண்டு திருமணம் செய்து விட முடியுமா? என்றும்  விவாதம் நடந்து வருகின்றது.

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நட்சத்திரப் பொருத்தத்தில் இருந்துதான் மற்ற எல்லாப் பொருத்தங்களும் பார்க்கப்படுகின்றன. எனவே, அடிப்படையானது நட்சத்திர பொருத்தம்தான். அது மட்டும் இல்லை. நட்சத்திரம்தான் நம்முடைய எல்லா நடைமுறைச் செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. உதாரணமாக நீங்கள் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அங்கே உங்கள் நட்சத்திரத்தை மட்டும்தான் நீங்கள் பெயரோடு சேர்த்துச் சொல்ல வேண்டும். நம்முடைய ஜாதகம் முழுமையும் சொல்லவேண்டிய அவசியம் அங்கே இல்லை. நீங்கள் ஒரு பலனைப் பெறவேண்டி ஒரு ஹோமமோ, இல்லை, வழிபாடோ செய்யும் பொழுது, சங்கல்பத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த நிலையில் இருக்கின்றன என்பதையெல்லாம் சொல்வது இல்லை.

நம்முடைய நட்சத்திரத்தையும், முடிந்தால் ராசியையும் சொல்கிறோம். அதிலேயே எல்லாம் அடங்கி விடுகிறது. நமக்கு தேவையான பலன்கள் கிடைத்து விடுகின்றன. நம்முடைய தெய்வீக வைதீக ஜோதிட மரபிலே நட்சத்திரத்திற்கு பெரிய மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவனுடைய ஜென்ம நட்சத்திரம் அவன் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு செயலிலும் பயன்படுகிறது. அவர் செய்கின்ற வைதிகக் காரியங்களாக இருக்கட்டும்; ஹோமங்கள் செய்வதாக இருக்கட்டும்; கோயில்களில் அர்ச்சனை செய்ததாக இருக்கட்டும்; நட்சத்திரம் தான். எனவே, திருமணப் பொருத்தத்திலும் நட்சத்திரப் பொருத்தத்தை நாம் விளையாட்டாகக் கருதிக் கொள்ளக்கூடாது. திருமணத்தில் கன்னியாதானம் செய்கின்றபொழுது கோத்திர பிரவரம் சொல்லுவார்கள்.

அதாவது இந்த நட்சத்திரம் உடைய பையனுக்கு இந்த நட்சத்திரம் உடைய பெண்ணை, (அவரவர்கள் வழித்தோன்றல் முறையைச் சொல்லி) கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்பார்கள். அங்கேயும் நட்சத்திரம்தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பையனுக்கு (வரன்) இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை (வது) கன்னிகாதானம்  கொடுக்கிறேன் என்று வருவதால் நட்சத்திரத்திற்கு அவ்வளவு பிரதானம். கோயிலிலே சுவாமிக்குத் திருக்கல்யாணம் நடக்கும்பொழுதும் இதே அமைப்பில்தான் நடத்துவார்கள். சுவாமி நட்சத்திரத்தையும், அம்பாளுடைய நட்சத்திரத்தையும், பெருமாள் கோயிலாக இருந்தால் பெருமாள் நட்சத்திரத்தையும், தாயார் நட்சத்திரத்தையும்சொல்லி, கன்னிகாதானம் செய்வார்கள். இங்கேயும் ஒரு நுட்பமான குறிப்பு இருக்கிறது.

ஏன், இரண்டு திருமணங்களும் ஒரே விதத்தில் நடத்தப்படுகிறது என்றால், மணவறையில் அமர்ந்திருக்கும் மணமகனும் மணப்பெண்ணும் சாட்சாத் மகாவிஷ்ணு, மகாலட்சுமித்  தாயாராக கருதப்படுகிறார்கள். திருமணம் புனிதமானது. தெவீகமானது என்பதன் அடையாளம் இது. மந்திரத்திலேயே அப்படித்தான் வருகிறது. எனவே, நட்சத்திரம் என்பது மிக முக்கியமானது. இருவர் நட்சத்திரத்தையும் சொல்லி இணைக்கும் போது நட்சத்திர தோஷங்கள் நம்மை மீறி ஏற்பட்டிருந்தாலும் கழிந்து விடும். ஆனால், வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டுமே வைத்து முடிவெடுத்து விடக்கூடாது. ஜாதகப் பொருத்தங்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். இதில் தவறு இல்லை. நிச்சயமாக ஜாதகப் பொருத்தத்தைக் கட்டாயமாகப்  பார்க்க வேண்டும்.

ஆனால், ஜாதகப்பொருத்தம் கூட, இந்த நட்சத்திரப் பொருத்தங்களில் அடங்கி இருக்கிறது என்பதால், முதல் நிலையாக, நட்சத்திரப் பொருத்தத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ஜாதகத்தின் உயிர் பொருத்தமாக இலக்கினப் பொருத்தத்தையும், உடல் பொருத்தமாகிய ராசிப் பொருத்தத்தையும் பார்த்து முடிவெடுக்கலாம். அதைவிட முக்கியமானது. அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்தி அந்தரங்கள். எத்தனை யோக ஜாதகமாக இருந்தாலும், அவயோக ஜாதகமாக இருந்தாலும், அந்தப் பலனை அந்தந்த காலத்தில்தான் அனுபவிக்க முடியும். அது எந்தக் காலம் என்பதை தீர்மானம் செய்வது தசாபுத்திகளும் கோள் சாரநிலைகளும்தான்.

இந்தக் கோள் சார நிலைகளில் மிக முக்கியமானது தாரா பலன். இந்த தாரா பலம் நட்சத்திரப் பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அங்கேயும் நட்சத்திர பொருத்தம் வந்துவிடும். அடுத்து மிக முக்கியமானது தசாபுத்தி. இந்த தசாபுத்தி காலங்களே சம்பவத்தைத் தீர்மானிக்கின்றன. இதுவும் நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் இருக்கின்றது. ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு கேது தசை ஆரம்பமாகி இருக்கும். அதற்குப்பிறகு வரிசையாக சுக்கிர தசை, சூரிய தசை என்று தொடரும். எனவே, திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கின்ற பொழுது, அவருடைய தசா புத்தி நேரத்தை, அவர் பிறந்த நட்சத்திரம் தான் தீர்மானிக்கிறது என்பதால், நட்சத்திரம் உயிரானது.

குறைந்தபட்சம், முப்பது வருடங்கள், எந்தப்  பிரிவும் இன்றி, வாழ்கின்ற தம்பதிகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலான ஜாதகங்களில் மிக முக்கியமான நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். ஒரு சிலவற்றில் இல்லாமல் இருந்தாலும் கூட, வேறு சில பொருத்தங்களால், நட்சத்திரப் பொருத்தங்களின் தோஷம் சரி செய்யப்பட்டு  இருக்கும். இன்று சார ஜோதிட விஞ்ஞானம் (நட்சத்திர ஜோதிடம்) ஆழமாகப் பரவி வருகிறது. ஒரு கிரகமானது, தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் அடிப்படையில் தான் பலனைச் செய்கிறது.

குறைந்தபட்சம் ஜாதகத்தின் அம்சக் கட்டங்களைத் தீர்மானம் செய்வது கிரகங்களின் நட்சத்திரப் பாதங்கள் தான். ஒரு கிரகம் எந்த நட்சத்திரக் காலில் இருக்கிறது என்கின்ற சாரத்தை வைத்துக்கொண்டுதான் கிரகத்தினுடைய பலனை நாம் தீர்மானம் செய்ய முடியும். திருமணப் பொருத்தமாக இருந்தாலும், வேறு பலன்களைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்கள் அமைப்பைக் கொண்டுதான் பெரும்பாலான விஷயங்கள் முடிகின்றன. எனவே, திருமணப் பொருத்தத்திற்கு நட்சத்திர பொருத்தம் மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது ஆனால் அதோடு நிறுத்தி விடாமல் ஜாதகப் பொருத்தம், தசாபுத்திகள், கோள் சாரம் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.

Tags :
× RELATED பாதுகையின் பெருமை