×

காலம் பார்த்து பயிர் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம்

மனிதன் இந்த நிலவுலகத்தில் வாழ்கிறான். இந்த நிலவுலகத்தில் மட்டுமே வாழ்கிறான். ஆம். இன்றைய தேதி வரை வேறு அண்டங்களில் மனித உயிர்கள் இருப்பதாகத் தகவல் இல்லை. மனிதன் வாழ்வதற்கு உரிய அத்தனை வசதிகளும் இங்கே இயற்கையாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. உண்ண உணவு, இருக்க இடம், சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர், இத்தனையும் இயற்கை தந்த கொடை.  இயற்கையை நம்பித்தான் மனிதன் இருக்கிறான்; மனிதனை நம்பி இயற்கை இல்லை என்பது இங்கே அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய ஆணித்தரமான செய்தி. விவசாயம் வெற்றி பெறுவதற்கு உள்ள அடிநாதமான விஷயம் இது. இயற்கையை கவனிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது வானவியலையும், வானவியலை அடிப்படையாகக் கொண்ட ஒளி காட்டும் ஜோதிட சாஸ்திரமும் வந்துவிடுகிறது.

இயற்கை மனிதனுக்கு பல்வேறு அறிவியலைக்  கற்பிக்கிறது. இன்றைய கொரோனா  காலம் வரை கற்பித்துக் கொண்டே இருக்கிறது.  முதல் குரு இயற்கைதான். அது கற்றுத்தந்த பாடங்களில்  ஒன்று தான் விவசாயம். ஒரு விதை பூமியில் விழுகிறது. மழை துளிகள் விழுகின்றன. சூரிய ஒளியும் சந்திர ஒளியும்  விழுகிறது. விதை வளர்கிறது.  இப்படித்தான் விதை வளரும் என்கின்ற அறிவியலைக் கண்முன்னால் நடத்திக் காட்டியது இயற்கை.

எனவே இயற்கைதான் குரு.
குரு தான் தெய்வம்.

எனவே இயற்கைதான்  தெய்வம் ஆகிறது. இயற்கையில் உள்ள சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும், மண்ணும் மனிதன் வாழ வழி காட்டுகின்றன. இத்தனையும் இணைந்த ஒரு சாஸ்திரம்தான் ஜோதிட சாஸ்திரம். இயற்கையை மதித்தும், இயற்கையோடு இணைந்தும், இயற்கையிடம் சரணடைந்தும் இருப்பதன் மூலமே மனிதன் தன் வாழ்வை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியும்.

இயற்கையாக இருந்து வழிநடத்தும் தெய்வத்திடம் தெரிவிக்கும் அன்பும் நன்றியும் வழிபாடாக மாறியது என்பது அறிவியலும் ஏற்றுக் கொள்ளும் உளவியல் பூர்வமான உண்மை.

இங்கே ஜோதிடம் எங்கே வருகிறது?

பூமியில் நின்று கொண்டு வானத்தைப்  பார்க்கிறோம். நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அதன் அமைப்பை, 27 பாகங்களாக, நட்சத்திர மண்டலங்களாகப்  பிரிக்கிறோம். நட்சத்திரங்களைப் பார்த்து இரவில் வழி நடப்பது என்பது ஒரு கலை. அந்த நட்சத்திரங்களில் ஒன்று தான் சூரியன். அது பகலில் வழிகாட்டுகிறது. அதனால் அதனை தலைமைக் கோளாகக் கொள்கின்றோம். மற்ற அனைத்து கோள்களும் சூரியன் பிரகாசத்தில் முன் நிற்கமுடியாது. எனவே மனித குலத்துக்கு அதிக ஒளி தரும் சூரியனை முன்னிறுத்தி மற்ற கோள்களை ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுத்தனர்.

மரங்கள் வளர்வதும், கனி கொடுப்பதும், பட்டுப் போவதும், துளிர்ப்பதும், விதை முளைப்பதும்  என அத்தனை விவசாய நுட்பங்களும், தான் இருக்கும் பூமியை ஆதாரமாகக் கொண்டு, கிரக நகர்வுகள்  கட்டுப் படுத்துவதைக் குறித்துக்கொண்டு ஜோதிட சாஸ்திரத்தை ஆராய ஆரம்பித்தான். ஒன்பது கோள்களும் ஏதோவொரு வகையில் பூமியோடு இணைந்து, ஒருங்கிணைந்து செயல்படும் வித்தையைப்  புரிந்துகொண்டான். ஆரம்பத்தில்  மனிதன் இந்த கிரகங்களின் நகர்வுகள்  தனிப்பட்ட ஒருவரின் வாழ்வியலில் செலுத்தும் ஆதிக்கத்தைக்  குறித்து கவலைப்படவில்லை. அது பின்னால் வளர்ந்தது. துவக்கத்தில் இது விவசாயத்திற்கு உகந்த சாத்திரமாகவே இருந்தது.

சாத்திரம் என்பது சில விதிகளின் தொகுப்பு. வழிகாட்டி. அதில் முக்கியமானது செவ்வாய். பூமிகாரகன் என்ற குறியீடு அவனுக்கு உண்டு. மனிதன் அடுத்து எங்காவது வாழலாம் என்றால், அதற்கு நம்பிக்கை ஊட்டுவது செவ்வாய்க்கிரகம்தானே. அதற்கடுத்து சூரியன். சூரிய கதிர்கள் இல்லாவிட்டால் மற்ற கிரக நகர்வுகள், செயல்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் ஆதார ஒளியாக நின்று  உயிர் தருவதால் இதனை “ஆத்மகாரகன்”, “உயிர் காரகன்” என்று சொன்னான். சந்திரன் இல்லாத நிலையைக் கூட சமாளிக்கலாம். சூரியன் இல்லாத நிலையை எண்ணிப் பார்க்கவே முடியாது.

பயிர்கள் வளர்வதற்கு சூரிய ஒளி அவசியம். மழைக்கும் சூரிய ஒளி அவசியம். அது விழுவதற்கு மண் அவசியம். அதனால் தான் ஒரு பழைய பாட்டின்  முதல் இரண்டு வரி இப்படி இருக்கிறது.

“மண்ணை நம்பி மரம் இருக்கு
மழையை நம்பி பயிர் இருக்கு”


மழை என்பது சூரியக் கதிர்களை நம்பித்தான் இருக்கிறது. அது மட்டும் இல்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் ஒரு விவசாயியின்  தினசரி வாழ்க்கைத்  துவக்கத்தையும் நிறைவையும் காட்டுகிறது. சூரியன் உதிப்பதற்கு முன் நிலத்திற்குப்  புறப்படுகிறான். சூரியன் அஸ்தமிக்கும் போது நிலத்திலிருந்து திரும்புகின்றான். எனவே, விவசாய வேலையின்  கால அளவையும் வரையறுக்கிறது சூரியன். அதன் நிலையைப் பொறுத்துத்தான் மாதங்கள் உருவாகின்றன. அந்தந்த  மாதங்களில் நிலவும்  பருவ நிகழ்வுகளைப் பொறுத்துத்தான் விதைப்பதும் அறுப்பதும் நடக்கிறது. விவசாயத்தின் நம்பிக்கைச்  சாஸ்திரம் ஜோதிடம்.

ஜோதிடம் காட்டும் கொள்கை விவசாயிக்கு இரண்டு கை இருந்தாலும் மூன்றாவது கை நம்பிக்கை. “நம்பி இருக்கும் கை நம்பிக்கை.” ஆக இந்த மூன்றாவது கையான நம்பிக்கை சூரியனை நம்பி இருக்கிறது. மழையை நம்பி இருக்கிறது. காற்றை நம்பி இருக்கிறது. பருவ காலங்களை நம்பியிருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் சக்தி மனிதனுக்கு இல்லாததால் அதனிடம் பிரார்த்தனை செய்கின்றான். நம்பிக்கை என்றாலே அது மனம் சார்ந்தது. மனம் சார்ந்த விஷயங்கள் சந்திரனின் நிலை சார்ந்தது. அதாவது மதியைச்  சார்ந்தது. எனவே விவசாயத்திற்கு சந்திரனுடைய நிலை முக்கியம். அதாவது மனதின் உறுதியும் ஈடுபாடும் மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.

எப்படிக்  கூட்டிக் கழித்தாலும் அங்கே ஜோதிட சாஸ்திரம் வந்து நிற்கும். மனிதன் உழைப்பையும் தொழிலையும் காட்டுவது சனி. யாரையும் குனியவைப்பது சனி. விவசாயம் செய்பவன் முதலில் மண்ணை நோக்கி குனிய வேண்டும். நாற்று நடுவது விதை தெளிப்பது எல்லாம் குனிந்து செய்யும் வேலைகள். குனிந்து செய்தால்தான் செடி நிமிரும்.செடி நன்கு தழைத்து முற்றியபின் பாரம் தாங்காது குனியும். கதிர்கள் முற்றி குனிய, மனிதன் நிமிர்வான். குனிய வைப்பதும், குனிந்தபின் நிமிர வைப்பதும் சனி. மழை வளம், மண்வளம் அனைத்துமே  சூரியனைச்  சார்ந்து இருக்கிறது. மழைக்குக் காரணம் உஷ்ணம்.

உஷ்ணத்திற்கு காரணம் சூரியன். சூரியன் நீரை உறிஞ்சி ஆவியாக்குகிறது. பிறகு குளிர்ந்து மழை பெய்கிறது. குளிர்ச்சிக்குக் காரணம் சந்திரன்.  நீர் பூமியின் பரப்பில் மூன்று பங்கு இருக்கிறது. பூமியில் விழும் நீர் என்றபோது செவ்வாயும் சந்திரனும் வந்துவிடுகிறது. செவ்வாய்க்கு மங்கள காரகன் என்று பெயர். சர்வ மங்களம் தருபவன். எனவே விவசாயக் காரணிகளுக்கு அடிப்படையான பூமியும், நீர் பொழியவும் வெளிச்சம் தந்து மகரந்தச் சேர்க்கை (ஒளிச்சேர்க்கை) நிகழவும் சூரியனும் சந்திரனும் காரணமாகிறது. இந்த மூன்று கிரகங்கள் (சூரியன்,செவ்வாய்,சந்திரன்) மற்ற கிரகங்களின் துணையோடு பருவநிலையை நிர்ணயித்து பயிரை வளரச் செய்கின்றன. விவசாயத்துக்கு அடிப்படையான இத்தகைய ஜோதிட சாஸ்திரத்தை மதித்து காலம் பார்த்து பயிர்  வளர்ப்போம். உயிர் வளர்ப்போம்.

- எஸ்.கோகுலாச்சாரி

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்