×

விவசாயமும் தெய்வங்களும்

பயிர்சாகுபடி  என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும். இதில் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு தெய்வம் உரியது என  வகுத்து, அந்த தெய்வத்திற்கு உரிய பூஜையை செய்து செயலை தொடங்கினர். நம்  முன்னோர்கள். அதை அப்படியே பின்பற்றுவது என்பது சில மாவட்டங்களில் மட்டும்  இன்றும் தொடர்கிறது. சாதாரணமாக வியாபாரம் செய்யும் வணிகர் கூட, கடையை  திறக்கும் போதும், முதல் விற்பனையை மேற்கொள்ளும்போது கடையை அடைக்கும்  போதும் என அன்றாட வாழ்விலே குறைந்தது மூன்று முறை தெய்வ வழிபாட்டை  மேற்கொள்கிறார் வணிகர். அவரது வழிபாடு ஒரே தெய்வமாகக் கூட இருக்கலாம்.  ஆனால் விவசாயியை பொறுத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சாமி என தீர்மானித்து  வழிபாட்டை மேற்கொள்கிறார்.

1.குலதெய்வ வழிபாடு

தரிசாக கிடந்த  நிலத்தில் மண்டி கிடக்கும் கருவேலஞ்செடி, கண்டங்கத்திரி வேர், நெருஞ்சி  உள்ளிட்ட முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அந்த நிலத்தை சீர்ப்படுத்தி  விவசாயம் செய்ய முற்படுகிறான் விவசாயி. அவன் முதலில் தனது குலதெய்வத்தை  வணங்கிய பின் கோடாரி, அரிவாள் முதலான பொருட்களை குலதெய்வக்கோயிலில் உள்ள  திருநீறு எடுத்து அந்தக்கருவிகள் மேல் வைத்துவிட்டு கருவிகளை எடுத்துக்  கொண்டு நிலத்திற்கு செல்கிறான். அங்குச் சென்று நிலத்தைச் சீர்ப்படுத்துகிறான் பின்னர் நிலத்தின் வரப்புகளை செதுக்கி உயர்த்துகிறான்.

2. மகாலட்சுமி வழிபாடு

மறுநாள்  நிலத்திற்கு தனது தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுடன் சென்று நிலத்திற்கு  பூஜை செய்கிறான். அப்போது மகாலட்சுமியை நினைத்து வீட்டிலுள்ள திருவிளக்கை  கொண்டு வந்து அதன் முன் தலைவாழை இலை விரித்து தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு, நிறைநெல் நாழியை வைத்து ஊது வத்தி ஏற்றி பூஜை செய்து  வழிபடுகிறார்கள்.

3. வருண பகவான் வழிபாடு

அதன்பின் விளைச்சல் அமோகமாக  வரவேண்டும் என்றால் சூரிய பகவான் அருளும், வருணனும் அருளவேண்டும் ஆகவே  சூரிய பகவானையும், வருண பகவானையும் நினைத்து வழிபாடு செய்வார்கள். தேங்காய் மீது கற்பூரத்தை ஏற்றி வானத்தை நோக்கி தீபம் காட்டி வணங்குகிறார்கள்.

4. சூரிய பகவான்

வானத்தை  நோக்கி தீபம் காட்டியதோடு அப்படியே கதிரவன் இருக்கும் திசை நோக்கி தீபத்தை  காட்டி விட்டு, அந்த திசையை நோக்கி தேங்காயை உடைக்கிறார்கள்.

5. ஊரம்மன் வழிபாடு

நிலத்தை  உழும் முன்பு ஊர் தெய்வமான அம்மன் முப்பிடாதி அம்மன், முத்தாலத்து அம்மன்  உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்வார்கள். அதன்பின்தான் நிலத்தை உழவு  செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மரம் அடித்தல், நிலத்தை சமன் செய்தல் வேலையை  செய்வார்கள். விதை நெல்லை ஊற விடுவார்கள். விதை நெல்லை ஊர் அம்மன்  கோயிலுக்கு கொண்டு வந்து அம்பாளின் முன் வைத்து சூடம், பத்தி, வெற்றிலை  பாக்கு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள் அதன் பின்பு குறிப்பிட்ட அந்த நெல்லை எடுத்து ஒரு ஓலைப் பெட்டியில் வைத்து கோயிலை மூன்று முறை வலம் வந்து மறுபடி சணல் சாக்கில் (கோணிப்பை)அந்த நெல்லை ஊற வைப்பார்கள். மூன்று நாள் கழித்து அந்த நெல்லை எடுத்து பார்த்தால் சற்று முளை விட்டிருக்கும்.

6. சாஸ்தா பூஜையும், நாற்றங்கால் விதைப்பும்

முளை விடப்பட்டிருக்கும் விதை நெல்லை எடுத்து வந்து, வயலில் ஒரு குறிப்பிட்ட  பகுதியை தேர்வு செய்து நல்ல நாளைப் பார்த்து விதைப்பார்கள். விதைக்கும்  சாஸ்தா நினைத்து பூஜை செய்வார்கள். பெரும்பாலும் வயலுக்கு நீர் வரும்  குளம்,குட்டை, ஆறு இவைகளின் கரையோரம் சாஸ்தா கோயில் கொண்டிருப்பார். ஆகவே  விதைப்பு அன்று பூஜை செய்வார்கள். விவசாயியின் வசதியைப் பொறுத்து பூஜை  அமையும். சிலர் தேங்காய் உடைத்தலோடும் சாஸ்தா பூஜையை  முடித்துக்கொள்வார்கள்.

7. நாகர் மற்றும் சங்கர நயினார் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செய்யும் நபர்கள் விஷப்பூச்சிகளால்  எந்த தீங்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக சங்கரன்கோவில் சங்கரநயினாரை வணங்குவார்கள். குமரி மாவட்டத்தில் நாகரம்மன் வழிபாடு. பெரும்பாலான  மாவட்டங்களில் நாகர் வழிபாடு மேற்கொள்வார்கள். அதன் பின்னர் நடவு செய்யும்  வயலின் வரப்புகளை சீர்செய்து வெட்டி ஒழுங்குப்படுத்தி உயரப்படுத்துவார்கள்.  அதனையடுத்து நீர்ப்பாய்ச்சி, மண்வெட்டியை வைத்து தொழியடித்து சகதியாக்கி  நாற்று பாவும் வேலைக்கு தயாராக்குவார்கள்.

8. கணபதி பூஜையும், நாற்று எடுப்பும்

நாற்றங்காலில் நன்கு வளர்ந்த நாற்றை ஒரு நல்ல நாள் பார்த்து எடுத்து முடியாக  கட்டுவார்கள். இந்த பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுத்தப்படுவார்கள்.  நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நாற்றுகளை, எல்லா பாக்யமும் பெற்ற  அதாவது பேரன் பேத்தி எடுத்த சுமங்கலியான வயது முதிர்ந்த பெண்மணி கையினால் சிறு சிறு கட்டாக கட்டி வைப்பார்கள். இதற்கு நாற்றுக்கு தாலி கட்டும்  நிகழ்வு என்பார்கள். ‘‘மூன்று கைப்பிடி அளவு நாற்றை ஈசான மூலையில்  வைத்து அதற்கு மேல் பெண்கள் அணியும் தாலி போன்று நார் அல்லது கயிறு கொண்டு  கட்டி மூன்று முடிச்சுகள் போடுவார்கள்’’. பின்பு வெற்றிலை, பாக்கு,  தேங்காய், பழம், அவல், கடலை வைத்து கணபதியை நினைத்து மஞ்சளில் கணபதி  பிடித்து அதில் திருநீறு இட்டு கற்பூரம் தீபம் காண்பித்து பூஜை  செய்வார்கள். பின்னர் அங்கிருக்கும் அனைவரும் விபூதியை எடுத்து பூசிக் கொள்வார்கள். இனிப்புகள் வழங்குவார்கள்.

9.கன்னிதெய்வ பூஜையும் நாற்று நடுதலும்

நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நாற்றுகளை கட்டிக் கொண்டு வந்து வேளாண்மை செய்யும் வயலில் நடவு செய்வார்கள். முன்னதாக சப்த கன்னியர் பூஜை செய்வார்கள் சிலர்.  சிலர் தனது குடும்ப கன்னி தெய்வத்திற்கு (தனது குடும்பத்தில் மணமுடிக்காமல்  வாலிப பருவத்தில் மரணம் எய்தியவர்களை கன்னி என அழைக்கிறார்கள்) பூஜை  செய்வார்கள். அதன் பின்னர் வயலில் நடவு செய்யப்படும். முதலில் ஈசான மூலையில் ஈசனை வணங்கிவிட்டு கன்னிப்பெண் கையினால் முதல் நாற்று நடுவார்கள்.  முதல் நாற்று நடும் பொழுது வயல் வெளியே அதிரும் அளவுக்கு குலவை சத்தம்  இருக்கும். நடவு முடிந்த பின்னர் வயல் உரிமையாளரான விவசாயியைப் பொறுத்து  வயலில் நாற்று நட வந்த பெண்களுக்கு உணவு பரிமாறுவார்கள்.

10. சுடலைமாட சாமி, இசக்கியம்மன், பூதத்தார், மதுரவீரன், அய்யனார், முனீஸ்வரன் கருப்பசாமி, காத்தவராயன் வழிபாடு

வளர்ந்து  வயலின் கதிர்களை காத்திடும் பொருட்டு காவல் தெய்வமான சுடலைமாடன்,  இசக்கியம்மனுக்கு பூஜை செய்வார்கள். நடவு முடிந்து மறுவாரம் வரும் வெள்ளி,  செவ்வாய் நாட்களில் மாலை பொழுதில் இந்த பூஜை இருக்கும். இந்த வழிபாடு  ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபாடாக அமையும். சிலர்  பூதத்தாரை வணங்குவார்கள். பல ஊர்களில் அய்யனார், மதுர வீரன், முனீஸ்வரன்,  கருப்பசாமி வழிபாடு மேற்கொள்வார்கள்.

11. தளவாய்மாடன், தளவாய் மாடத்தி, பன்றி மாடன், வராக மூர்த்தி, வாராகி, கருடாழ்வார் வழிபாடு

உளுந்து,  வேர்கடலை, கத்தரி, தக்காளி முதலான பயிர்வகைகளை பயிர் செய்யும் விவசாயிகள் ஆடு, பன்றி முதலான விலங்கினங்களாலும், கொக்கு, காகம் முதலான பறவை  இனங்களாலும் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக மனித உடலும் விலங்கு மற்றும்  பறவை முதலான உயிரினங்களின் முகங்களைக் கொண்ட தெய்வங்களின் வழிபாட்டை  மேற்கொள்வார்கள்.

12. முத்தாரம்மன், நாகாத்தம்மன், நாகரம்மன், அங்காளம்மன், மாரியம்மன் வழிபாடு

மண்  சிறக்க மண்புழு வேண்டும். அந்த மண்புழுவை உண்பதற்காக தவளையும், நெற்கதிரை  திங்க எலியும் வந்து பயிர்களின் வளர்ச்சிக்கு இடையூறை ஏற்படுத்தும்.  இதைப்போக்க எலியையும், தவளையையும் உண்ண பாம்பு வரும். அது வரவேண்டும்.  ஆனால் அது என் கண்ணில் படக்கூடாது. அதனால் எனக்கும் ஏதும் நேரக்கூடாது  என்று விவசாயிகள் நாகாத்தம்மனையும், நாகரம்மனையும், நாகமே வடிவான  அங்காளம்மனையும், நாகத்தின் வயிற்றிலே கருமுட்டையாக உருவாகி அவதரித்த  முத்தாரம்மனையும், மாரியம்மனையும் வணங்குவார்கள்.

13.காளி வழிபாடும், களை பறிப்பும்

கதிர்கள்  வளர்ந்து வரும் வயலில் அதினிடையே அதன் வேகத்திற்கு களைகளும் வளரும். இந்த  களைகள் அனைத்தும் பறிக்க, பறிக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இடையூறுகளை அகற்றும் தெய்வம் காளி. ஆகவே களை பறிக்கப்பட்ட பின்பு மீண்டும் களைகள் வராத  வகையில் தாயே கருணைக்காட்டு என்ற நோக்கத்தில் காளியம்மனையும், அவளது  ரூபமான வடக்குவாசல் செல்வி, செண்பகவல்லி ஆகிய உக்ர வடிவான அம்மன்  தெய்வங்களை வழிபடுவார்கள்.

அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் வயலுக்கு  நன்றி செலுத்தும் வகையிலும் விளைச்சலுக்கு நன்றி செலுத்தும் வகையிலும்  பச்சரிசி பொங்கலிட்டு சேவல் பலி கொடுத்து பூஜை நடத்துவார்கள். அறுவடைக்கு  ஓரிரு நாட்களுக்கு முன்பு கன்னிப்பெண் கையினால் நடப்பட்ட கதிரை அறுத்து அதை  ஊர்அம்மன், காவல் தெய்வ கோயில்களில் கொண்டுச்சென்று கட்டுவார்கள். விளைந்த  நெற்கதிர்களை அறுத்து அடுத்து நெல்லை தனியாகவும் பதாகை தனியாகவும் தூற்றி  எடுத்து சாக்கில் கட்டி வைப்பார்கள். பெரும்பாலும் ஊர்களில் நீர்ப்பாசி  எனும் ஒரு நடைமுறை உள்ளது அதாவது மொத்த ஊரில் உள்ள வயல்களுக்கும் அவர்தான்  நிறைவேற்றுவார் எந்த வயலில் நீர் இல்லையோ அந்த வேலை பார்த்து சரியாக நீர்  பாதுகாப்பு மற்றும் நோயுற்ற கதிர்களுக்கு சரியான மருந்து அடிக்க  சொல்லுவார்.

இந்த நீர்பாய்ச்சிக்கு முதலில் நெல்லை அளந்து கொடுப்பார்கள்  அதன் பின்பு கிராம கோயில்களுக்கு தங்களால் முடிந்தளவு நெல்லை காணிக்கையாகக்  கொண்டு செலுத்துவார்கள். அதன்பின்பு புதியல் எனும் ஒரு சம்பிரதாயத்தை  கடைபிடிப்பார்கள். அது என்னவென்றால் முதலில் விளைந்த நெல்லை குத்தி அரிசியாக்கி, அதனை சமையலாக்கும் அன்று மணமுடித்துக் கொடுக்கப்பட்ட மகள்  மற்றும் மருமகன் ஆகியோரை வரவழைத்து வடை, பாயாசத்தோடு அன்று விருந்தோம்பல்  நடைபெறும். இதற்கு புதுஅரிசி சாப்பாடு என்பார்கள். இதுவெல்லாம் முடிந்த  பின்னர் ஊர்க்கோயில் கொடைவிழா, திருவிழா வரும் அப்போது புது அரிசியில்தான்  பொங்கல் இடுவார்கள். ஆக விதைப்பில் தொடங்கி அறுவடை முடியும் வரை தெய்வ  வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயமும் ஒருவகையில் பிரசவம் தான்.  இரண்டும் இனிதே நடைபெற இறைவன் தான் காரணமாகிறார். உருவங்கள் தான் வேறே  தவிர, உள்ளுணர்வும் சக்தியும் ஒன்றுதான்

தொகுப்பு: சு.இளம்கலைமாறன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்