×

சாதுர்மாஸ்ய விரதம்

சாதூர்மாஸ்யம் என்றால் நான்கு மாதங்களுக்கு உரியது என்று பொருள். நம் பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில் பெரும்பாலும் சாந்திரமான மாதக் கணக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கணக்கின் அடிப்படையில், அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படும். அந்த வளர்பிறை பிரதமை முதல் அடுத்த அமாவாசை வரை ஒரு மாதம். அடுத்த பிரதமை தொடங்கி அதற்கு அடுத்த மாதம் என்று கணக்கிடப்படும்.

இந்தச் சாந்திரமானக் கணக்கின்படி பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் தொடங்குவது சைத்ர மாதம். அதையே யுகாதி என்னும் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவார்கள். பங்குனி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, சித்திரை அமாவாசையோடு அந்தச் சைத்ர மாதம் நிறை வடையும். சித்திரை அமாவாசைக்கு மறுநாள் முதல் வைகாசி மாத அமாவாசை வரை வைசாக மாதமாகும். இப்படிச் சாந்திரமான மாதக் கணக்கில், ஒரு வளர்பிறையும், ஒரு தேய்பிறையும் இணைந்த காலத்தை ஒரு மாதமாகக் கணக்கிட்டு வருகிறார்கள்.

சைத்ர, வைசாக, ஜ்யேஷ்ட, ஆஷாட, ச்ராவண, பாத்ரபத, ஆச்வின, கார்த்திக, மார்கசீர்ஷ, பௌஷ, மாக, பால்குன ஆகியவை இந்தச் சாந்திரமான மாதக் கணக்கின்படி வருடத்தின் பன்னிரண்டு மாதங்கள் ஆகும்.இதன் அடிப்படையில், ஆனி மாத அமாவாசைக்கு மறுநாளில் ஆஷாட மாதம் பிறக்கிறது. அந்த ஆஷாட மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி, அடுத்து வரும் ச்ராவண, பாத்ரபத, ஆச்வின மாதங்களிலும் விரதம் அனுஷ்டித்து, கார்த்திக மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரதத்தை நிறைவு செய்வார்கள். இப்படி நான்கு மாதக் காலத்துக்கு நீடிக்கும் இந்த விரதமே சாதுர்மாஸ்ய விரதம் ஆகும்.

இந்தச் சாதுர்மாஸ்யக் காலத்தில் தான் முக்கியமான பல பண்டிகைகள் வருகின்றன. கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம் ஆகியவை இந்தக் காலத்திலேயே வருகின்றன. விரதம், இறைவழிபாடு, பண்டிகைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற காலமாக இது இருப்பதால் தான் இந்த நான்கு மாதங்களில் திருமணம், உபநயனம், கும்பாபிஷேகம் போன்ற செயல்களைக் கூடத் தவிர்த்து விடுவார்கள்.

இந்த நான்கு மாதங்களுள் ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பொருளை உணவிலிருந்து விலக்க வேண்டும் என்று காஞ்சி மகாசுவாமிகள் தெய்வத்தின் குரல் பாகம் 3 - பக்கம் 622-ல் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ச்ராவண மாதம் முழுவதும் காய்கறிகளே சாப்பிடக் கூடாது. குழம்பில் கூட காய்கறிதான், புளி, மிளகாய் சேர்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அவை இல்லாமல் மோர், இஞ்சி கொண்டு செய்யவேண்டும். சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளவும் காய்கறிக்குப் பதிலாக அப்பளம், வடாம், சுண்டல் ஆகியவற்றை உபயோகிப்பார்கள்.

பாத்ரபத மாதம் முழுவதும் தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆச்வின மாதத்தில் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கார்த்திக மாதத்தில் நெய், உளுந்து, துவரை, கடலை உள்ளிட்ட எந்த பருப்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எல்லோருமே கடைபிடிக்க வேண்டிய விரதமாக இது இருந்த போதும், இன்றைய காலக்கட்டத்தில் இதைச் சந்நியாசிகள் மட்டுமே கடைபிடித்து வருவதாகவும் காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கி இராமல், பல்வேறு இடங்களில் சஞ்சாரம் செய்வது வழக்கம். ஆனால், சாதுர்மாஸ்யம் எனப்படும் இந்த நான்கு மாதக் காலத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். எனவே, புழு பூச்சி போன்ற பல்வேறு ஜீவராசிகள் இடம்பெயர்ந்து வாழும் என்பார்கள். அந்த ஜீவராசிகளுக்குத் தொந்திரவு ஏற்படாமல் இருப்பதற்காக, சந்நியாசிகள் இந்த நான்கு மாதங்களும் வேறெங்கும் சஞ்சரிக்காமல் ஒரே இடத்தில் தங்கி இருந்து விடுவார்கள். ஆஷாடப் பௌர்ணமி அன்று வியாச பூஜை செய்து விட்டு அதே இடத்தில் சாதுர்மாஸ்ய காலத்தில் சந்நியாசிகள் தங்குவது வழக்கம்.

ஒருவர் துறவறம் பூண்டால், அன்று முதல் மறுபிறவி எடுத்ததற்குச் சமம். அவர் எத்தனை சாதுர்மாஸ்ய விரகங்கள் அனுஷ்டித்திருக்கிறாரோ, அதுவே சந்நியாசியின் வயதாகக் கருதப் படுகிறது. அதனால் தான் வயதில் பெரியவராக ஒரு சந்நியாசி இருந்தாலும், தன்னை விட அதிக சாதுர்மாஸ்ய விரதங்கள் அனுஷ்டித்த சந்நியாசியைப் பார்த்தால் அவர் நமஸ்கரிக்க வேண்டும் என்பார்கள்.

குடந்தை எஸ். நாகராஜன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்