×

வற்றாத வளங்கள் அருளும் வராகர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருத்தாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மனிதர்களால் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று.இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள். அப்படி எட்டு தலங்களை குறிப்பிடுகிறது வைஷ்ணவம். அதில் ஒன்று ஸ்ரீமுஷ்ணம். மற்றவை திருவரங்கம், திருவேங்கடம், அகோபிலம், பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், புருஷோத்தமன், தோத்தாத்திரி விண்ணை முட்டும் கம்பீரமான கோபுரம் ஏழுநிலையுடன் பார்க்கப் பரவசம் தரும்.

நீண்ட சந்நதி தெரு. கோபுரத்துக்கு முன்னால் உயர்ந்த பீடத்துடன் கூடிய கருடக் கொடி மரம். மேலே அம்பாரியில் அமர்ந்த நிலையில் கருடாழ்வார். உள்ளே அழகிய சிறிய நான்கு கால் மண்டபம். இடது புறத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு தனிச் சந்நதி. உள்ளே முதலில் நூற்றுக்கால் மண்டபம். அகன்ற பெரிய மண்டபம். கோபுரத்தின் முதல் நிலையை கோஷ்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருவடியைப் பார்க்கலாம். திருவடிகளைச் சேவித்த பின்னர்தான் வராகப் பெருமாளை வணங்கிச் செல்வது வழக்கம். நூற்றுக்கால் மண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார் சந்நதி. நேராக கொடிமரம், பலிபீடம், வேலைப்பாடமைந்த கருடாழ்வார் சந்நிதி ஆகியவையும் இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அமைந்துள்ளன. இதைக் கடந்து சென்றால் மிக அற்புதமான புருஷசூக்த மண்டபத்தை நாம் காணலாம். அது முழுக்க முழுக்க கலைப் பொக்கிஷமாக சிற்பக்கூடம் ஆக அமைந்திருக்கும் எழிலான மண்டபம். அங்கே உயிர் ஓவியங்களாக கண்ணில் நிலைபெற்று நின்றிருக்கும் பல சிற்பங்களை  நாம் காணலாம்.

அதையும் தாண்டி உள்ளே சென்றால் விசாலமான மகா மண்டபம்.அதற்குள் மிக அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய திருஉண்ணாழியும் அர்த்த மண்டபமும் காணலாம். இதற்கு உள்ளேதான் ஸ்ரீ வராகப் பெருமாள் இடுப்பில் கை  வைத்துக்கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார் .மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். ஸ்ரீதேவி பூதேவியுடன் அத்தனை அழகுடன் காட்சி தருகிறார். ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டுகளில் இவர் “ஆதிவராக நாயனார்” என்றே குறிப்பிடுகிறார். அருகே.சந்தான கோபாலனையும் காணாலாம். பற்பல உற்சவத் திருமேனிகளும் இங்கு உள்ளன.

மூலவரையும் உற்சவரையும் வணங்கிவிட்டு திருவலமாக வந்தால் குழந்தை அம்மன் சந்நதி என்றும் வழங்கப்பெறும் தாய்மார் எழுவரின் திருவுருவங்களைக் காணலாம். இங்குள்ள அம்புஜவல்லி தாயாரின் தோழிகள் என இவ்வெழுவரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்களும், திருமணத்தடை இருப்பவர்களும் இந்த சப்த கன்னிகைகளை வணங்குகின்றனர். இதனையடுத்து தெற்கு நோக்கிய அழகான விஷ்வக் சேன மூர்த்தி சந்நதி. வட கிழக்கு மூலையில் அமைந்துள்ள யாகசாலை. தொடர்ந்து வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சன்னதிகள். தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி இடம்பெற்றுள்ளது. இவற்றைச் சேவித்துக் கொண்டு வந்தால், தாயார் சந்நதியை அடையலாம். இரு கரங்களிலும் மலர் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்புஜவல்லித் தாயாருக்கு,ஊஞ்சல் மண்டபமும், அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் கொண்ட தனிக்கோயில் அமைப்பிலேயே சந்நதி உள்ளது.

திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் தாயார் சன்னதி போலவே ஆண்டாளுக்கும் தனிச் சன்னதி உண்டு. இதனை ஒட்டி ராமானுஜருக்குச் சந்நதி உள்ளது. அதனை அடுத்து உடையார் மண்டபம் என்று வழங்கப் பெறும் விழா மண்டபம். அதில் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தது மிக அழகான முறையில் காட்சிதரும் வேணுகோபாலன் சன்னதியும்,அதனை ஒட்டி வடபுற கோபுரவாசல் சொர்க்க வாசலாகவும்  அமைந்துள்ளது.இவை அனைத்தையும் ,வணங்கி விட்டு வெளியே வந்தால், திருமதில் கோபுரத்துக்குத் தென்கிழக்கில் “நித்ய புஷ்கரணி” என்று வழங்கப்படும் திருக்குளமும், அதன் கரையில் லட்சுமி நாராயணர் சன்னதியும் , அஸ்வத்த நாராயணன் என்று வழங்கப்பெறும் அரசமரமும், அதன் கரையிலே 3 அனுமன் சன்னதிகளும்  இடம்பெற்றுள்ளன.இந்த புஷ்கரணியில் தான் சித்திரை மாதம் தெப்போற்சவம் நடைபெறும். இதுதவிர சந்நதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நதித் தெருவில் திருவடிக் கோயில் என்று அனுமனுக்கு தனி சந்நதி உள்ளது. இத்திருக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

அத்வைத, விசிஷ்டாத்வைத, மாத்வ  சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களின்  மடங்களும் இங்கே உள்ளன.அனந்தபுரம் மாவட்டம் முப்புரி என்ற ஊரைச் சேர்ந்தவர் உப்பு வெங்கட்ராயர். அவர் தமிழகத்தில் வங்கக் கடற்கரை ஓரம் கிள்ளை என்கிற ஊரிலேயே வந்து தாசில்தாராகப் பணிபுரிந்தார் அவர் ஸ்ரீமுஷ்ணம் வராகபெருமானிடம் மிகுந்த பக்தி மிகுந்தவர். வராகப்பெருமாள் மாசிமகத்தில் கிள்ளைக்கு கடலாடுவதற்காக வருகின்ற பொழுது பக்தர்கள் தங்கும்வசதிகளும், அன்னதானம்செய்வதற்கான ஏற்பாடுகளும்  செய்திருந்தார். கிள்ளைக்கு வருகின்ற பெருமாள் உற்சவம் காணவும் அபிஷேக ஆராதனைகள் ஏற்கவும் திருநாள் தோப்பு எனுமிடத்தில் 175 ஆண்டுகளுக்கு முன்னரே மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார். இந்தப் பகுதியை சையத் ஷா குலாம் முகைதீன் ஷூத்தாரி என்கிற முகலாய ஜமீன்தார் உப்பு வெங்கட்ராயருடன் நட்பு கொண்டிருந்தார். அந்த நட்பின் காரணமாக 16 காலனி நஞ்சை நிலம் சுத்த தானமாகவும் ஆறுகாணி சாசுவத தானமாகவும் நிலம் அளித்தார். இந்த சையத் ஷா என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன்னரே கிள்ளை தர்காவில் அடக்கமாயுள்ள ஹஜரத் சையத் ரகமத்துல்லா ஷூத்தாரி என்பவரின் பேரன் ஆவார்.

உப்பு வெங்கட்ராமையர் கிள்ளை ஜமீன்தார் தந்த கொடையில், பரம்பரையாக  ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீ வராக சந்நதியில் அகண்டம், கிள்ளை மாசிமக மண்டகப்படி, கிள்ளை ஆஞ்சநேயர் கோயில் பூஜைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன ஏற்பாட்டை செய்தார். மாசிமக உற்சவத்தின்போது கிள்ளையில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தைக்கால் இடத்திற்குச் செல்லுதல், அவர்கள் வழிபாட்டினையும் மரியாதைகளையும் ஏற்றல், ஹாஜியார் பதில் மரியாதை செய்தல் ஆகிய நடைமுறைகள் உடையார்பாளையம் ஜமீன்தார் காலம் முதல் இன்று வரை
நடைமுறையில் உள்ளன. அதைப்போலவே ஐரோப்பியர்கள் குறிப்பாக தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக 1826 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஹைட் என்பவர் சில அணிகலன்களையும் தேர் திரு
விழாவிற்கு தேர்வடம் ஆகஇரும்புச் சங்கிலியும் இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி யிருக்கிறார்இக்கோயிலில் பல வாகனங்கள் இருப்பினும் ஓவியங்கள் தீட்டப் பெற்ற பல்லக்கு ஒன்று இங்கு உள்ளது. அதில் தல புராணக் காட்சிகள்,லட்சுமி வராகர், ஸ்ரீ யஞ்ஜ  வராகர், உற்சவமூர்த்திகள், இசை, நடனம் ஆகியவை ஓவியமாகத் தீட்டப் பெற்ற இந்த பல்லக்குஅற்புதமான  கலைக்கருவூல மாகவும் திகழ்கிறது.

முனைவர் ஸ்ரீராம்

Tags :
× RELATED நாகதோஷம் போக்கும் திருத்தலம் :...