×

புத்துயிர் அளிக்குமா புவனத்திற்கு பிலவ புத்தாண்டு?

(பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்)

இப்போதுதான் போலிருக்கிறது! ஆசையோடும், எத்தனையோ எதிர்பார்ப்புகளுடனும் வரவேற் றோம் “சார்வரி” தமிழ்ப் புத்தாண்டை! கொண்டாடினோம், குதூகலத்துடன்...! ஆனால், அந்த “சார்வரி” புத்தாண்டோ “Sorry” என்றுகூடச் சொல்லாமல், உலகிற்குக் “கொரோனா”வைக் கொடுத்துவிட்டு, “காலம்'' எனும் கரைகாணாக் கடலில் கரைந்துவிட்டது!! வடதுருவத்திலிருந்து, தென்துருவம் வரையில் எந்த ஒரு நாட்டையும் “கொரோனா” விட்டுவைக்கவில்லை. காலம் எனும் சக்கரம்தான் எத்தனை வேகமாகச் சுழல்கிறது! “பிலவ” தமிழ்ப் புத்தாண்டும் பிறந்துவிட்டது, இப்போது!

“பிலவ” ஆண்டாவது, உலகை இந்த அச்சத்திலிருந்து மீட்குமா? அதிலும், குறிப்பாக பாரத மக்களைக் கைகொடுத்துக் காப்பாற்றுமா? இதுதான் இப்போது மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வியும், எதிர்பார்ப்பும்...! உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்ட இந்தத் தொற்று எங்கிருந்து, எப்படி, ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் கலங்கி நிற்கின்றனர் உலக விஞ்ஞானிகள்!! விஞ்ஞான வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட, இதற்கான விடையைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வானியல், அறிவியல், மனோதத்துவம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் (தாந்த்ரீகம், சாமுத்திரிகா லட்சணம்) தன்னுள் கொண்டுள்ள “ஜோதிடம்” எனும் அற்புதக் கலை “பிலவ” புத்தாண்டின் விளைவுகளைப் பற்றி என்ன கூறுகிறது என்பதைச் சற்று ஆழ்ந்து, ஆராய்ச்சி செய்தால் விடை கிடைக்குமா என்று பார்ப்போம், இப்போது!

ஏனெனில், உலகில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளுமே, நமது வான மண்டலத்தில் சதா சுழன்றுகொண்டே இருக்கும் கிரகநிலைகளின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன என “ரிக் வேத”மும், “அதர்வண வேத”மும் அறுதியிட்டுக் கூறுகின்றன. “பிலவ” தமிழ்ப் புத்தாண்டில், உலகில் எந்தெந்த அம்சங்களை எந்தெந்த கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பதையும், நிகழவுள்ள விளைவுகளையும் எமது இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ்கின்றன. இவற்றில் ஒரேயொரு சந்திர கிரகணம் மட்டும், இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். மற்றவை தெரியாது. கிரகணங்கள் தெரியும் நாடுகளில், பூகம்பம், அதிக   மழை, வெள்ளம் (அ) மிதமிஞ்சிய வறட்சி, புதுப்புது நோய்கள், பொருளாதாரப் பின்னடைவு, உள்நாட்டில் கலகம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பிலவ புத்தாண்டின் நாயகன் (ராஜா) செவ்வாய் ஆகும். பூமிகாரகரான அவரே மேகங்களுக்கும், அதிபதியாக விளங்கு வதால், பூமியில் நல்ல மழைபொழியும். விளைச்சல் அதிகமாக இருக்கும். விவசாயிகள் நல்ல அபிவிருத்தி அடைவர். கால்நடைகள் அபிவிருத்தியடையும்.

அதிக மழையினால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், பொருட்சேதமும் உண்டாகும். ஈரான், பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்நாம், சீனா ஆகிய  நாடுகளில் நிலநடுக்கமும், அதனால் உயிர்ச்சேதமும் மிகப்பெரிய பொருட்சேதமும் ஏற்படும்.அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கிடையே பகையுணர்ச்சி மேலிடும். அதன் காரணமாக, உலகில் பதட்டம் உருவாகும். முன்னாள் அமெரிக்க அதிபரான டோனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களைக் கொண்டு புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கக்கூடும் என்பதை செவ்வாய் - சுக்கிரன் - ராகுவின் நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

செவ்வாய்க்கு அடுத்தபடியாக, வரும் ஒருவருட கிரக ஆட்சியில் அதிகாரம் படைத்தவர் கல்விக்கு அதிபதியும், “வித்யா காரகர்” என ஜோதிட நூல்கள் போற்று பவரும் மூலிகைகளுக்கு அதிபதியுமான புதன் ஆவார். இவரை இவ்வருடத்தின் “மந்திரி” எனக் குறிப்பிடுகிறது, ஜோதிடம். மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்த முன்னேற்றம் பெறுவார்கள். ஏராளமான மாணவ மணிகளுக்கு வெளிநாடு சென்று, உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளும், வசதிகளும் உண்டாகும்.
சனி பகவானின் நிலையினால், வனவிலங்குகளுக்கு - குறிப்பாக, யானைகள், புலிகள், காண்டாமிருகம் ஆகியவற்றிற்கு சமூகவிரோதிகளால் ஆபத்து ஏற்படும். புதுப்புது நோய்களும், சரும நோய்களும் மக்களை பாதிக்கும்.  அமெரிக்க நாட்டின் முக்கிய நகரங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவும். மக்களிடையே ஒற்றுமைக் குறைவும், நிறவெறி உணர்ச்சிகளும் மேலோங்கும்.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் புதுப்புது நோய்கள் உருவாகி, பரவும். மதத் தீவிரவாதிகளினால் தாக்குதல்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியில் இந்தியா நல்ல முன்னேற்றமடையும். “கொரோனா” தொற்று கட்டுப்படுத்தப்படும். இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால், நல்ல பலனளிக்கும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.

தமிழகம்!

இந்த ஆண்டு நல்ல மழை பொழியும்.  வயல்கள் செழிக்கும். பயிர்கள் செழிக்கும். தானியங்களின் விளைச்சல் திருப்தி தரும். விவசாயிகள் பயனடைவர். தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் விலை ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீரான நிலையில் நீடிக்கும். இனி அந்தந்த ராசியினருக்கு இந்தத் தமிழ் புத்தாண்டு எவ்விதம் இருக்கும் என்பதைப் பார்ப்போம்! கிரகங்களின் சஞ்சார அடிப்படையில் இரு பகுதிகளாகத் துல்லியமாகக் கணித்து, பலன்களைத் தந்திருக்கின்றோம்.

கீழ்க்கண்ட பலன்கள் அனைத்தும் மேற்கூறிய கிரகமாறுதல்களைக் கணிப்பில் எடுத்துக்கொண்டே, அதிஜாக்கிரதையாக “ஷோடச ஸதவர்க்கம்” எனும் சூட்சும கணித முறையில் கணித்து, அடுத்து வரும் ஒருவருட காலத்திற்கு வாசக அன்பர்களின் நலன் கருதி எழுதப்பட்டுள்ளவையாகும். இவற்றால் எமது வாசகர்கள் சகல நன்மைகளையும் அடைய வேண்டுமென எமது தின ஆராதனை தெய்வமான ஸ்ரீலட்சுமி நரசிம்மரை பிரார்த்திக்கிறோம்.

தொகுப்பு:  ஏ.எம்.ஆர்.

“பிலவ” புத்தாண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக சஞ்சார மாறுதல்கள்

ஆவணி 29 (14-09-2021) செவ்வாய்க்கிழமை - குரு பகவான், வக்கரகதியில் மகர ராசிக்குத் திரும்புதல்
ஐப்பசி 27 (13-11-2021) சனிக்கிழமை - குருபகவான் நேர்கதியில் (Direct Motion) மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தல்
பங்குனி 30 (13-04-2022) புதன்கிழமை - குரு அதிசாரகதியில், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுதல்.
பங்குனி 7 (21-03-2022) திங்கட்கிழமை- ராகு, ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுதல்
பங்குனி 7 (21-03-2022) திங்கட்கிழமை - கேது, விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறுதல்

இவ்வருடம் முழுவதும் சனிபகவான், தனது ஆட்சி வீடான மகர ராசியிலேயே தொடர்ந்து சஞ்சரிக்கிறார்.

Tags : Bhuvana ,
× RELATED புதுச்சேரியிலும் கோயிலில் பொது வழிபாட்டுக்கு தடை