×

ஆண்டாள் அரங்கனை ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வாரின் நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பூமி தேவியே ஒரு குழந்தையாக வந்து தோன்றினாள். அக்குழந்தையைக் கண்டெடுத்த பெரியாழ்வார், அந்தக் குழந்தையே ஒரு பூமாலை போலே இருந்தபடியால், கோதை என்று பெயர் சூட்டினார். தமிழில் கோதை என்றால் மாலை என்று பொருள்.

அந்தக் கோதையைத் தனது மகளாகவே வளர்த்த பெரியாழ்வார், இளம் வயதிலிருந்து அவளுக்குக் கண்ணனின் கதைகளை எல்லாம் சொல்லி வந்தார். கண்ணனின் லீலைகளையும் தெய்வீக விளையாட்டுகளையும் இளமையில் கேட்ட கோதைக்கு, அவன்மேல் காதல் பிறந்தது. மணந்தால் கண்ணனையே மணப்பது என்று உறுதி பூண்டாள் அவள

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டிருக்கும் வடபெருங்கோயில் உடையானுக்கு அன்றாடம் மாலை தொடுத்துச் சமர்ப்பிப்பது வழக்கம். பெரியாழ்வாருக்குத் தெரியாமல் அந்த மாலையைக் கோதை அணிந்து கொண்டு, பெருமாளுக்கு நான் ஏற்ற ஜோடியாக இருக்கிறேனா என்று அழகு பார்ப்பாள். அவ்வாறு அணிந்து அழகுபார்த்து விட்டு மாலையை எடுத்த இடத்திலேயே வைத்து விடுவாள். அதை அறியாமல் பெரியாழ்வாரும் கோதை சூடிய மாலையைத் திருமாலுக்குச் சமர்ப்பித்து வந்தார்.
    
ஒருநாள் பெருமாளுக்கென்று தொடுத்து வைத்த மாலையைக் கோதை அணிவதைக் கண்ட பெரியாழ்வார், அடடா இது என்ன அபசாரம் அவன் சூடிக் களைந்த மாலையைத் தான் நாம் அணிய வேண்டும் நாம் சூடிக் களைந்து அவனுக்குக் கொடுக்கலாமா என்று அந்த மாலையைத் தூக்கி வீசி விட்டு, புதிதாக மாலையைத் தொடுத்துப் பெருமாளிடம் எடுத்துச் சென்றார்.
    
ஆனால் பெருமாளோ, இந்த மாலை எனக்கு வேண்டாம் உங்கள் மகள் கூந்தலில் சூடிய மாலை தான் எனக்கு வேண்டும் உங்கள் மகள் தனது பக்தியாலும் காதலாலும் என்னை ஆண்டு விட்டாள் என்று கூறினார். இப்படியே இறைவனையே ஆண்டதால், ஆண்டாள் என்று பெயர் பெற்றாள் கோதை. தன் கூந்தலில் சூடிக் களைந்த மாலையை இறைவனுக்குச் சமர்ப்பித்தபடியால், சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.

அவளுக்குத் திருமணப் பருவம் வந்தவாறே, பெரியாழ்வார் அவளுக்குத் தகுந்த மணமகனைத் தேடுவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். ஆனால் ஆண்டாளோ திட்டவட்டமாக, மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று சொல்லி விட்டாள். மணந்தால் மாதவனைத் தான் மணப்பேன். மாதவனுக்கு உரியவளான என்னை ஒரு மனிதனுக்கு மணம் முடிப்பது என்ற பேச்சு வந்தாலே நான் உயிர்துறப்பேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள் ஆண்டாள்.

ஆயர்பாடியில் வாழ்ந்த கோபிகைகள், கண்ணனை மணக்க விரும்பி மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றார்கள் என்ற வரலாற்றைக் கேள்விப் பட்டாள் ஆண்டாள். அதைப் பின்பற்றி, தன்னையே ஒரு கோபிகையாக எண்ணி, ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாக எண்ணி, தன் தோழிகளை எல்லாம் கோபிகைகளாக எண்ணி, அங்குள்ள திருமுக்குளத்தையே யமுனா நதியாக எண்ணி, வடபெருங்கோயிலுடையானின் கோவிலையே நந்தகோபனின் இல்லமாக எண்ணி, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாக எண்ணி மார்கழி நோன்பு நோற்றாள் ஆண்டாள். முப்பது நாட்கள் நோற்ற நோன்பை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையாகப் பாடித் தந்தாள். பூமாலையோடு சேர்த்து இறைவனுக்குப் பாமாலையும் பாடியதால், பாடவல்ல நாச்சியார் என்றும் ஆண்டாள் போற்றப்படுகிறாள்.

மார்கழி நோன்பு நிறைவடைந்த பின்னும் கண்ணன் தன்னை மணக்க வராதபடியால், அடுத்து தைமாதம் விஷ்ணு காமதேவ விரதம் எனப்படும் வழிபாட்டைச் செய்தாள். கண்ணனையே மன்மதனாகப் பாவித்து அவனைக் குறித்து நோன்பு இருந்தாள். அதற்கும் கண்ணன் மனமிரங்கவில்லை.
    
அடுத்து, கூடல் இழைத்தாள் ஆண்டாள். ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு, கண்ணை மூடியபடி அதற்குள் சிறிய வட்டங்களைப் போட்டுக்கொண்டே வர வேண்டும். சிறிய வட்டங்களின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும். ஒற்றைப் படையில் வந்தால் நினைத்த காரியம் நடக்காது என்பார்கள். கூடல் இழைத்த போது அவளுக்கு இரட்டைப் படை எண் கிடைத்தது. ஆனாலும் கண்ணன் வரவில்லை.
    
அடுத்து, மேகங்களைக் கண்ணனிடம் தூது அனுப்பினாள். தனது நிலையை அவனிடம் எடுத்துச் சொல்லும்படி அவைகளிடம் சொன்னாள். மேகங்கள் தூது மொழிந்தும் கண்ணன் வரவில்லை.
குயில் கூவினால் மனத்துக்குப் பிடித்தவர் வீட்டுக்கு வருவார் என்றோர் நம்பிக்கை இருப்பதாக அவளது தோழிகள் கூறினார்கள். அதனால் “உலகளந்தான் வரக் கூவாய்!” என்று குயிலைக் கூவச் சொன்னாள். அப்போதும் கண்ணன் வரவில்லை.இறுதியாகத் தனது பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த நினைத்தாள் ஆண்டாள். தனது தந்தை பெரியாழ்வாரிடம், தந்தையே நீங்கள் அழைத்தாள் கண்ணன் வருவான். எனக்காக அழைப்பீர்களா என்று கேட்டாள். என் மகளுக்காக எது வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அம்மா என்று சொன்ன பெரியாழ்வார், இந்தப் பூமியில் 106 திவ்யதேசங்களில் திருமால் காட்சி தருகிறார். பாற்கடல், வைகுண்டம் இவ்வுலகுக்கு வெளியே உள்ளன அவற்றுள் எந்த திவ்யதேசத்துப் பெருமாளை நீ மணக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.

நூற்றாறு பெருமாள்களும் இங்கே வரட்டும் நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்றாள் ஆண்டாள். அதன்படி பெரியாழ்வார் அழைக்கவே, பங்குனி மாதம் பூர நட்சத்திரத்தன்று நூற்றாறு திவ்ய தேசத்துப் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை வந்து அடைந்தார்கள். பெரியாழ்வார் ஒவ்வொரு பெருமாளாக ஆண்டாளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
    
அதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவாடிப் பூர உற்சவத்தின் போது ஐந்து கருட சேவை நடக்கிறது. திருவரங்கனுக்குப் பிரதிநிதியாக ரங்கமன்னார், திருவேங்கடமுடையானுக்குப் பிரதிநிதியாகத் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள், கள்ளழகருக்குப் பிரதிநிதியாகக் காட்டழகர், சிவகாசியில் இருந்து திருத்தங்கலப்பன், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்ட வடபெருங்கோயிலுடையான் ஆகிய ஐந்து பெருமாள்கள் கருட வாகனத்தில் வர, பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஹம்ஸ வாகனத்தில் வருவார்கள்.
    அந்த மாப்பிள்ளைகளுக்குள் திருவரங்கநாதனையே தனக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்து, அமுதனாம் அரங்கனுக்கே மாலை இட்டாள் ஆண்டாள். பங்குனி மாதம் பூர நட்சத்திரத்தன்று இந்தச் சுயம்வரம் நடைபெற்றது. அதற்கு மறுநாளான பங்குனி உத்திர நன்னாளிலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்
என்று ஆண்டாளே பாடியபடிப் பங்குனி உத்திர நாளிலே ரங்கமன்னார் ஆண்டாளின் கைப்பிடித்தார். ஆண்டாளுடன் ரங்கமன்னாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலும் கொண்டார்.
இதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கும் ரங்கமன்னாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

ஆண்டாளை மணந்த பின் திருவரங்கம் செல்ல நினைத்த ஸ்ரீரங்கநாதன், பெரியாழ்வாரிடம், உங்கள் மகளைத் திருவரங்கத்துக்கு அழைத்து வந்து என்னிடம் சேர்த்து விடுங்கள் என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார். அதன்படி பெரியாழ்வாரும் ஆண்டாளைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஆண்டாள் வந்தார், சுரும்பார் குழல்கோதை வந்தார், திருப்பாவை பாடிய செல்வி வந்தார் என்றெல்லாம் முழக்கங்கள் ஒலிக்க, நேராக அரங்கனின் கருவறையை நோக்கிச் சென்று, அரங்கனின் திருவடிகளிலே நித்திய கைங்கரியத்தை அடைந்தாள் ஆண்டாள்.ஆண்டாள் அரங்கனை ஆண்டாள்
ஆண்டாள் தமிழை ஆண்டாள்ஆண்டாள் நம் மனங்களை எல்லாம் ஆண்டாள்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்