×

கிராம தெய்வ வழிபாட்டில் அறுபத்துமூவர்

நாட்டுப்புறத் தெய்வங்களான வீரன், ஐயனார், காளி, பிடாரி, முதலிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. முன்னாளில்  மக்கள் இத்தெய்வங்களின் கோயிலுக்கு நாள்தோறும்  செல்லும் வழக்கமில்லை. விழாக்காலங்களிலும், பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டிய காலங்களிலும் மட்டுமே செல்லும் வழக்கம் இருந்தது.

காலப்போக்கில் இவற்றில் பெருந்தெய்வ வழிபாட்டுக்குரியதைப் போலவே நாள் வழிபாடுகளும், சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டுச் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இத்தெய்வங்களில்  பெரும்பாலானவை பலிகொள்ளும் கடவுள்களேயாகும். இத்தெய்வ வழிபாட்டில் மகா சிவபக்தர்களான அறுபத்துமூவர் வழிபாடு இடம் பெறுவதில்லை.

 பெருந்தெய்வ வழிபாட்டில் திளைப்பவர்கள் இக்கோயில்களின் நடைமுறைகளிலும் அதிகாரத்திலும் பங்கேற்கும் போது தாம் அறிந்த பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளைப் புகுத்திவிடுகின்றனர்.  பெருந்தெய்வ ஆலயங்களுக்குரிய கலை, வழிபாடு, சிற்ப அமைப்பு, ஆலயக் கட்டுமானம் முதலியயாவும் சிறுதெய்வக் கோயில்களிலும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இவ்வகையில் ஒருசில ஆலயங்களில் அறுபத்துமூவர் வழிபாடு, இடம்பெற்றுள்ளது.

செண்பக நாச்சியார் வழிபாட்டில் அறுபத்துமூவர்

தென் மாவட்டத்தில் பெருஞ்சிறப்புடன் வழிபடப்படும் தெய்வம் செண்பக நாச்சியார். இவள் மீது பாடப்பட்ட கதைப்பாடல் செண்பக நாச்சியார் கதைப்பாடல் ஆகும். இதில் அம்பிகை பழனியிலிருந்து  வந்ததும்  வளநாட்டில் தம் கூட்டத்தினருடன் குடியேறியதும் குறிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துள் 63 நாயன்மார்களும், சுந்தரரும் உடன் வந்ததாக குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

வரலாற்று நோக்கில் இது உண்மையில்லை என்றாலும், மக்கள் மத்தியில் அறுபத்து மூவர் பற்றிய சிந்தனை ஆழமாகப் பதிந்திருப்பதை இது காட்டுகிறது. நாச்சியார் கோயிலில் நடை
பெறும் படைப்பு எனப்படும் நிவேதனத்தில் அறுபத்துமூவருக்காகவும் ஒரு இலையிட்டுப் படைக்கப்படும் வழக்கம் உள்ளது.

கொளஞ்சியப்பர் கோயில் அறுபத்துமூவர் வழிபாடு

தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் புகழ்பெற்ற சிவத்தலமாகும். காசியிலும் வீசம் பெரியது என்ற பெருமையை உடையது. இத்தலத்திற்கு மேற்கில் அமைந்துள்ள மணவாள நல்லூர்  என்னும் ஊரில் கொளுஞ்சி யப்பர் என்னும் பெயரில் முக்தி பெற்ற வீரக்குமாரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகும்.

இக்கோயிலின் பிராகாரத்தின் சுவரில் தனித் தனி வளைவுக்குள் (தொகையடியார்கள் நீங்கலான) அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுருவங்கள் சுதை வடிவமாகச் செய்து வண்ணம் தீட்டப்பட்டு  அழகுடன் விளங்குகின்றன. மேலும், இவ்வரிசையில் சந்தானக் குரவர்களான மெய்கண்டதேவர், அருள் நந்தியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோரும் ஔவையார், வள்ளலார்,  அருணகிரிநாதர் ஆகியோர் திருவுருவங்களும் இடம் பெற்றுள்ளன. முத்துக்குமாரர் கோயிலில் இடம் பெற்றுள்ள இந்த அறுபத்துமூவர் வடிவங்கள் தனிச்சிறப்புடையதாக உள்ளன.

மலேசியா மகாமாரியம்மன் ஆலயத்தில் அறுபத்துமூவர்

கடல் கடந்த நாடுகளில் தமிழ் மக்கள் வியாபாரம், தொழில் முதலிய காரணங்களால் குடியேறி, குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவ்வகையில் மலேசியாவில் தமிழர்கள் குடியேறி வளமாக  வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கு சிவன், திருமால், விநாயகர், முருகன், மாரியம்மன், ஐயனார் முதலிய தெய்வங்களுக்கான ஆலயங்களை அமைத்துச் சிறப்பான வழிபாடுகளைச் செய்து  வருகின்றனர். அவற்றில் புகழ்பெற்ற ஒன்றாக இருப்பது கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் அறுபத்துமூவரின் உலாத் திருமேனின் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன.  இத்திருவுருவங்களுக்கு தினப்பூசைகள் நடத்தப்படுகின்றன.

கார்த்திக்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்