குன்றத்து முருகனின் அருளாசி
எனக்கு வயது 41. எனது தலைப் பிரசவத்தின்போது நடந்த நிகழ்வு இது. எனது முதல் குழந்தைப் பெறுவதில் மிகவும் சிக்கலான சூழல் இருந்தது. வயிற்றில் உள்ள என் குழந்தை தலைகீழாக உள்ளது என்றும், பெண் மருத்துவர் பிரசவம் பார்க்க மிகவும் தயங்கினார். இப்போது அவசரம் வேண்டாம். இறைவன் மீது பாரத்தைப் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள். இரு நாட்கள் கழித்து பிரசவம் பார்ப்போம் என்று மருத்துவர் கூறிச் சென்று விட்டார். முதல் தலைப் பிரசவத்திலேயே இந்தச் சோதனையா என்று கண்ணீர் விட்டேன். குன்றத்து முருகனை நான் வேண்டிக் கொண்டேன். குமரா, திருப்பரங்குன்றத்து முருகா, உன் ஆலயம் அருகில்தான் என் வீடு உள்ளது. சிறு வயதிலிருந்து இந்நாள் வரை உன் ஆலயம் வந்து வணங்கியது உனக்குத் தெரியாதா? ஏன் இந்த சோதனை. நீயும் ஒரு குழந்தை. எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று குன்றத்தோனை நோக்கி விம்மி விம்மி அழுது வேண்டினேன். என்ன ஆச்சரியம் தலைகீழாக இருந்த குழந்தை நேரானது. பெண் மருத்துவர் இரு நாட்கள் கழித்து வந்து பார்த்தார். ஆண்டவன் உன் பக்கமம்மா... என்று என் கன்னத்தில் புன்னகையுடன் தட்டி பிரசவம் பார்த்தார். பிரசவம் எளிதானது. அழகான பெண் குழந்தைப் பிறந்தது. எனக்கு, இந்த நிகழ்வு இறைவனின் அருள் எவ்வளவு வலுவானது என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது.
- எஸ். மாரீஸ்வரி, மதுரை.
தெய்வத்தின் கருணை
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தோம். காரை மாப்பிள்ளை ஓட்ட, மகள், பேத்தி - மனைவியுடன் பயணம் செய்தோம். இரவு 7.15 மணி நன்கு இருட்டி விட்டது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அனைத்தும் வேகமாக சென்று கொண்டிருந்தன. உளுந்தூர்பேட்டையை கடந்து நாங்கள் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரில் பஞ்சர் ஏற்பட்டு நின்று விட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஸ்டெப்னி இருந்தும் அதை மாட்டும் முறையும் அனுபவமும் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த தவிப்புடன் இருந்த தருணத்தில், ஒரு கணம் தெய்வங்களை வணங்கி வேண்டினேன். என்ன ஆச்சர்யம். அடுத்த சில நொடிகளில் ஒரு ஆட்டோ எங்கள் கார் அருகில் வந்து நின்றது. அதில் பயணிகளும் இருந்தனர். யாராவது தேசிய நெடுஞ்சாலையில் அந்நேரத்தில் ஆட்டோ செல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா? அதிலும் 4 நாள் விடுமுறைக்கு பின் இரவு நேரம். அந்த ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், வண்டியை நிறுத்தி, விசாரித்தார். விபரம் கூறினோம். அவரைப் பார்த்தால் ஆட்டோ டிரைவர் என்றே சொல்ல முடியாது. நன்கு படித்த சாஃட்வேர் என்ஜினியர் போலவே இருந்தார். பெயர் ஆனந்த். உடனடியாக காரியத்தில் இறங்கி ஐந்தே நிமிடங்களில் ஸ்டெப்னியை மாட்டிக் கொடுத்தார். இத்தனைக்கும் பயணிகள் ஒருவர் கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அவருக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்து விட்டு, அவர் பற்றி விசாரிக்கையில், தான்தான் அந்த ஆட்டோவின் உரிமையாளர் என்றும் பரஸ்பரம் போன் நம்பர்களை பெற்றுக் கொண்டோம். பணம் எதுவும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மேற்கொண்டு பேசுகையில் அவர் ஒரு தொழில் அதிபர் என்பதும் தெரிய வந்தது. மிகுந்த நெகிழ்ச்சி யுடன் விடை பெற்று பயணம் தொடர்ந்தோம். சற்று நேரத்தில் அவரிடமிருந்து போன். அந்த இடம் மிகவும் மோசமான இடம் என்றும், உடனே அங்கிருந்து அகன்று வரும்படியும் கூறினார். நாங்கள் ஏற்கனவே கிளம்பி விட்டோம் என்றும், மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொண்டோம். இது போன்று மிகுந்த நெகிழ்ச்சியளிக்கக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இக்கட்டான அந்தத் தருணத்தில், நான் கடவுளை வணங்கிய சில நொடிகளில் நாங்கள் பெற்ற இந்த உதவி, அனுபவம் ஆகியவற்றை ‘‘தெய்வச் செயலாக’’வே கருதுகிறேன். திரு.ஆனந்த் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
- R. ஜெயராமன், சென்னை.