×

பன்னிரெண்டு ராசிகளும் கடன் தீர்க்கும் தலங்களும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஜோதிடத்தில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான விஷயங்களை சூட்சமமான முறையில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்கும் கடன்கள் அடைவதற்காக என்னென்ன செய்ய வேண்டும் - எதையெல்லாம் செய்ய கூடாது -  எந்தெந்த கடவுளை வழிபடலாம் என்ற பரிகார முறைகளையும் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு  ராசியினுடைய இரண்டாம் வீடு தன ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு ராசியினுடைய ஆறாம் வீடு ரண ருண ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒவ்வொருவருடைய மன சம்பந்தமான வலி - உடல் சம்பந்தமான வலி - ஆரோக்கியம் - கடன் போன்றவைகளை நாம் ஆறாமிடத்தின் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஜாதக ரீதியாக ஆறாம் இடம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை நாம் பார்க்கலாம். ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால் வெப்பம் சம்பந்தமான விஷயங்கள் வெப்பநோய் சம்பந்தமான விஷயங்களும் அரசு சார்ந்த கடன்களும் இருக்கலாம். சந்திரன் இருந்தால் நீர் சம்பந்தமான பிரச்சினைகளும் சீக்கிரமே அடையக்கூடிய கடனும் இருக்கலாம். செவ்வாய் இருந்தால் ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூமி சம்பந்தமான கடனும் இருக்கலாம். இவர்களுக்கு மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும். புதன் இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் பணம் சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கலாம்.

குரு இருந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் தெய்வக் கடன் சம்பந்தமான விஷயங்கள் இருக்கலாம். சுக்கிரன் இருந்தால் மறைவிடங்களில் பிரச்சினைகளும் - கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கலாம். சனி இருந்தால் முழங்கால் முழங்கை இடுப்பு சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் பூமியை சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் இருக்கலாம். ராகு இருந்தால் முகம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூர்வீக வழியில் சொத்துக்கள் பிரச்சினைகளும் இருக்கலாம். கேது இருந்தால் ஞாபக மறதி சம்பந்தமான விஷயங்களில் சிறிது இறக்கங்களும் கையிருப்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும்.

1 மேஷம்:

இவர்கள் சர ராசியில் பிறந்தவர்கள். பிடிவாத குணம் அதிகம் உடையவர்களாகவும், எடுத்த முடிவை  யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு பேசத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே  சொல்லக்கூடியவர்களாக இருப்பர். இரத்தம்
சம்பந்தமான உறவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். உணவின்  சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தனிமையை விரும்புவார்கள். அடுத்தவர்கள் தன்னைப் பாராட்ட வேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள். பேசும் பேச்சில் கவர்ச்சி அதிகம் இருக்கும். மனதில்  தைரியம் அதிகமுள்ளவர்கள்.

இவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்ததனால் இவர்களுக்கு சொந்தமாக வீடு, மனை, வாகனம், பூமி உண்டு. மேஷ ராசிக்காரர்களுக்கு தனஸ்தானமாக ரிஷபமும் - ரண ருண ரோக ஸ்தானமாக கன்னியும் வருகிறது. எதிரிகளை மனவலிமையாலும், உடல்வலிமையாலும் துவம்சம் செய்யக்கூடிய அளவிற்கு இவர்களுக்கு வலிமை உண்டு. இவர்கள் வளர்பிறையில் வியாழன் - சனிக்கிழமைகளிலும் தேய்பிறையில் செவ்வாயிலும் கடன் கொடுக்கவோ வாங்குவதையோ தவிர்ப்பது நன்மை தரும். தொழில் செய்வதை விட வேலைக்குச் செல்வது இவர்களுக்கு நன்மை தரும்.
கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் திறன் உடையவர்கள். முதலீடு செய்யும் பொழுது இவர்களே முதலீடு செய்யாமல் வேறு ஒருவரிடம் கொடுத்து செய்வது நன்மை அளிக்கும்.

கடன் அடைவதற்கான பரிகாரம்

வழிபாடு: வாராகியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்
திசை: கிழக்கு அல்லது தெற்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
ஞாயிறு - செவ்வாய் - வியாழன் ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

புதன்கிழமை தோறும் துளசியை பெருமாளுக்கு சமர்ப்பித்து வணங்கி வருவதன் மூலம் கடன் சம்பந்தமான பிரச்சினைகள் குறையும். இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது - நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்வது மிகப்பெரிய பரிகாரம். புதன் ஹோரையில் கடன்களை அடைப்பது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலுக்கு சென்று  மரகத நடராஜரை தரிசித்து வாருங்கள். இத்தலம்  இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று இவ்வூரை அடையலாம்.

2 ரிஷபம்

இவர்கள் சொன்ன வாக்கைக் காப்பற்றும் குணமுடையவர்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு வெற்றியை தரும். எனவே இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை நிறம் அவசியம் இருத்தல் வேண்டும். பொதுவாகவே ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். ரிஷப ராசியின் அதிபதி சுக்ரன். ரிஷப ராசிக்காரர்களின் ராசியாதிபதியும், ரண ருண ரோகாதிபதியும் சுக்ரன். வடமொழியில் ரிஷபம் என்பதற்கு எருது என்று பொருள். ரிஷபராசி மந்திரி ராசி எனப்படுகிறது. தனக்கு கொடுத்த வேலைகளை கம்பீரமாக செய்து முடிப்பார். அவ்வேலையை நேர்த்தியாகவும் செய்து முடித்து பாராட்டு பெறுவதில் வல்லவர்.

சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். இந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்.

உடல் உழைப்பால் அதிகம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதைவிட மூளைக்கு வேலை கொடுத்து எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு நிகரான அறிவாளியாகவும் இருப்பார்கள். சிந்தனைகளும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது பற்றியே இருக்கும். இவர்கள் வளர்பிறையில் ஞாயிறு - செவ்வாய் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் வியாழன் - வெள்ளி ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பதை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: சிவனை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

வாசல்: கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நின்று கடனை அடைப்பது நன்மை தரும்.

புதன்- வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

ரிஷப ராசிக்காரர்கள் மல்லிகையை மகாலட்சுமிக்கு சமர்ப்பித்து வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வணங்கி வருவது நன்மையை கொடுக்கும். தினசரி உடலில் வெள்ளை ஆடைகளை பயன்படுத்துவதும் மாற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் இவர்கள் கடன்களை அடைக்கத் தொடங்குவது மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அரங்கனை தரிசித்து வாருங்கள்.


3 மிதுனம்

வடமொழியில் மிதுனம் என்பது தமிழில் இரட்டை என்று பொருள்படும். பஞ்சபூதங்களில் காற்று தத்துவத்தில் பிறந்தவர்கள். இவர்களின் ராசி உபய ராசி எனப்படுகிறது. மிதுன ராசி இளவரசன் ராசி எனப்படுகிறது. மிதுன ராசிக்காரர்கள் இயற்கையிலேயே மிக மிக நிதானமாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தைச் செய்வதாக இருந்தாலும் தீர ஆலோசனை செய்து செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய புத்தி நேர்பாதையில் செல்லக்கூடிய புத்தியாகவே இருக்கும். தொழில் விஷயத்தைப் பொறுத்தவரை இவர்களுக்கு சிறு மனவருத்தம் இருந்து கொண்டே இருக்கும். வேலை பார்ப்பவர்களைப் பொறுத்தவரை விரும்பிய பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ எளிதில் கிடைக்காது. சில போராட்டங்களுக்குப் பிறகே நினைத்தது நடக்கும்.

நல்ல உழைப்பாளிகளான இவர்கள் நல்ல சம்பாத்யம் உடையவர்கள். எப்பொழுதும் பொருள்வரத்து இருந்தாலும் அதை தேவையில்லாமல் அனாவசியமாகச் செலவு செய்வர். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்கள் கையில் பணம் பொருள் பெரிய அளவில் தங்காது. காரணம் இவர்களுடைய தனாதிபதி சந்திரனாக இருப்பதால் சலனம் இருக்கும். ரண ருணாதிபதியாக செவ்வாய் வருவதால் இவர்களுக்கு பூமி சம்பந்தமான விஷயங்களில் தடங்கல்கள் வரலாம். பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியும். கையில் பணம் இருந்தால் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் வளர்பிறையில் செவ்வாய் - வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் புதன் - வெள்ளி ஆகிய நாட்களில் கடன் வாங்குவது - கொடுப்பதை தவிர்க்கவும்.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: முருகனை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.
வாசல்: கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் நின்று கடனை அடைப்பது நன்மை தரும்.
திங்கள்- புதன் - வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

மிதுன ராசிக்காரர்கள் செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலரை முருகனுக்கு சமர்ப்பித்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அனுகூலத்தை கொடுக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்வது மாற்றத்தை கொடுக்கும் கடன்களை அடைக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் கடனை ஆரம்பிக்கத்
தொடங்குவது நன்மையைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள்

4 கடகம்

கடக ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் நான்காவது ராசியாக உள்ளது. வடமொழியில் கடகம் என்பது தமிழில் நண்டு என்று பொருள்படும். இவர்கள் இயற்கையிலேயே அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நீர் தத்துவமாதலால் அன்பானவர்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். மனசாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு தனாதிபதியாக சூரியனும் - ரண ருண ரோகாதிபதியாக் குருவும் வருகிறார்கள்.
கொடுத்த வேலையை சரியான நேரத்தில் சரியான முறையில் முடிப்பதே இவர்களின் சிறப்பு. பணவரவு இவர்களுக்கு நன்றாகவே இருக்கும்.

வாழ்க்கைத் துணை மூலம் செல்வாக்கான வாழ்க்கை வாழ்வார்கள். மனை வாங்கி வீடு கட்டுவதைவிட கட்டிய வீட்டை வாங்குவது அதிர்ஷ்டம் தரும். இவர்
களுக்கு வளர்பிறையில் திங்கள் - வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் கடன் வாங்குவது - கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: ராமரை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.
வாசல்: மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் நின்று கடனை அடைப்பது நன்மை தரும்.
திங்கள் -வியாழன் ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

கடக ராசிக்காரர்கள் குரு ஹோரையில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அவர்களுக்கு நன்மை வந்து சேரும். கடன்கள் அடைபடும் காலகட்டமும் இதுதான். குரு ஹோரையில் இவர்கள் சிறு பகுதி கடன்களை அடைக்கத் தொடங்குவது இவர்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும். சிவனை வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்று பசுபதீஸ்வரரை தரிசித்து வாருங்கள். இந்த தலம் கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக, அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரில் மையப்பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

5 சிம்மம்

சிம்ம ராசி என்பது ஆண் ராசி. வடமொழியில் சிம்மம்  என்பது தமிழில் சிங்கம் என்று பொருள்படும். சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். தனாதிபதி புதன் - ரண ருணாதிபதி சனி. சிம்ம ராசிக்காரர்கள் தொழில் செய்வதை விட வேலை பார்ப்பதே சிறப்பானதாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகே இவர்களுக்கு வேலை என்பது நன்மை தரும் வகையில் அமைந்திருக்கும். ரத்தம் சம்பந்தமான உறவுகளுடன் இணைந்து தொழில் செய்தால் லாபம் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படும். தனவாக்கு குடும்பாதிபதியும் லாபாதிபதியும் புதனாகவே அமைந்துள்ளதன் மூலம் பொருளாதார நிலை நல்லதாகவே இருக்கும்.

உபதொழில் மூலமும் அதிகமான வருவாய் பெற இயலும். வாக்கு ஸ்தானாதிபதி புதனாக இருப்பதால் இவர்களுக்கு வாய் சாமர்த்தியம் அதிகம். எந்த சூழ்நிலையையும் தனது வாதத் திறமையால் வெல்வார்கள். இவர்கள் வள்ர்பிறையில் ஞாயிறு, வெள்ளி ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் திங்கள், புதன்கிழமைகளிலும் கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: விநாயகர் - சிவன் ஆகிய தெய்வங்களை வணங்கினால் கடன் அடையும்.
வாசல்: கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
ஞாயிறு - வியாழன் - வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும். .

சிம்ம ராசிக்காரர்கள் விநாயகர் அகவல் சொல்வதும் - அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பிப்பதும் நன்மையைக் கொடுக்கும். சூரியன் மற்றும் செவ்வாய் ஹோரையில் கடன்களை அடைக்கத் தொடங்குவது இவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பது கூட இவர்கள் சூரியன் மற்றும் செவ்வாய் திசையில் ஆரம்பிப்பது மிகுந்த மாற்றத்தைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேவநாத சுவாமியையும், ஹயகிரீவரையும் தரிசித்து வாருங்கள். இந்தத் தலம் கடலூருக்கு அருகேயே அமைந்துள்ளது.

6 கன்னி

கன்னி ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் ஆறாவது ராசியாக உள்ளது. வடமொழியில் கன்யா  என்பது தமிழில் கன்னிப்பெண் என்று பொருள்
படும். கன்னி ராசியின் அதிபதி புத பகவான். பஞ்சபூதங்களில் நில தத்துவத்தில் பிறந்தவர்கள். இவர்களின் ராசி உபய ராசி எனப்படுகிறது. கன்னி ராசி இளவரசி ராசி எனப்படுகிறது. பெண் சார்ந்த விஷயங்களுக்கு பெண்மை சார்ந்த விஷயங்களுக்கு இந்த ராசியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் புதனே தொழில் ஸ்தானாதிபதியுமாக இருக்கிறார்.

அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் HR போன்ற வேலைகளுக்கு இவர்கள் சரியானவர்கள். தனவாக்கு குடும்பாதிபதியும் பாக்கியாதிபதியும் சுக்கிரனாகவே அமைந்திருப்பதால் பொருளாதார நிலை நிறைவாகவே அமைந்திருக்கும். உபரி வருமானம் இவர்களுக்கு இருக்கும். வாக்கு அதிபதி சுக்கிரனாக இருப்பதால் பேச்சு சாமர்த்தியம் அதிகம்.

சேமிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாய் இருப்பார்கள். பாக்கியாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் ராகு கேது நட்பு கிரகமாய் இருப்பதாலும் பிதுரார்ஜித சொத்துக்கள் வரும். இவர்கள் வளர்பிறையில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் ஞாயிறு, வெள்ளி ஆகிய நாட்களில் கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். இவர்களுக்கு தனாதிபதியாக சுக்கிரனும் - ரண ருணாதிபதியாக சனியும் வருகிறார்கள்.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: சிவன், ஐயப்பன், காவல் தெய்வங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கினால் நல்லது.
வாசல் : கிழக்கு, வடக்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
ஞாயிறு- புதன்- வியாழன் ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

கன்னி ராசிக்காரர்கள் பைரவர் வழிபாடு செய்து வருவதும் நவக்கிரகங்கள் வழிபாடு செய்து வருவதும் மிகுந்த மாற்றத்தைக் கொடுக்க வல்லது.
இந்த வழிபாட்டுடன் புதன், குரு மற்றும் சுக்கிரஹோரைகளில், கடன்களை அடைக்க தொடங்குவதன் மூலம் இவர்கள் வாழ்வில் மாற்றத்தைப் பார்க்கலாம்.

செல்ல வேண்டிய தலம்: அதியமான் கோட்டை கோயிலுக்கு சென்று கால பைரவரை தரிசித்து வாருங்கள். இத்தலம் தர்மபுரி - பழைய கோட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

7 துலாம்

துலா ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் ஏழாவது ராசியாக உள்ளது. இது ஒரு ஆண் ராசி. வடமொழியில் துலாம் என்பது தமிழில் தராசு என்று பொருள்படும். துலா ராசியின் அதிபதி சுக்கிர பகவான். தனாதிபதி செவ்வாய் - ரண ருணாதிபதி குரு ஆவார். துலா ராசி மந்திரி ராசி எனப்படுகிறது. ஒரு நாட்டின் மந்திரிகள் - தொழிலதிபர்கள் - பங்குச்சந்தை சார்ந்த விஷயங்களுக்கு இந்த ராசி முக்கியமானதாகும். அனைவரையும் சரி சமமாக மதிக்கும் குணம் உடையவர்கள். எந்த ஒரு முடிவினையும் நிதானமாக எடுப்பவர்கள். தைரியம் அதிகம் கொண்டவர்கள். கல்வியை விட நடைமுறை அறிவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அனுபவ அறிவை பெறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

எந்த விஷயத்திலும் நேர்மையை கடைபிடிப்பது இவர்களது தனித்தன்மை. ராசியின் குறியீடு தராசாக இருப்பதால் உத்தியோகம் பார்ப்பதை விட சுயதொழில் செய்வதையே விரும்புவார்கள். சேமிப்பு - முதலீடு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் - உறவினர்களுடன் இணைந்து இவர்கள் கூட்டுத்தொழில் செய்யக் கூடாது. இவர்கள் வளர்பிறையில் ஞாயிறு - வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் புதன், வெள்ளிக்கிழமைகளிலும் கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும்.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: முருகன், ஆஞ்சநேயர், காவல் தெய்வங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கினால் தடைகள் அகலும்.
வாசல்: கிழக்கு, தெற்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
செவ்வாய்- புதன்- வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரன் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது நன்மையைக் கொடுக்கும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் மகாலட்சுமிக்கு தாமரை மலர் சார்த்தி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து வாருங்கள்.

8 விருச்சிகம்

விருச்சிக ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் எட்டாவது ராசியாக உள்ளது. பெண் ராசி. வடமொழியில் விருச்சிகம் என்பது தமிழில் தேள் என்று பொருள்படும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். தனாதிபதி குரு - ரண ருணாதிபதியும் ராசிநாதன் செவ்வாயே. விருச்சிக ராசி பெண் தளபதி ராசி எனப்படுகிறது.  ஒரு நாட்டின் பெண் மந்திரிகள் - முக்ககிய முடிவுகளை எடுக்கும் நீதித்துறையில் பணியாற்றும் பெண்கள் - பூமி சார்ந்த விஷயங்களுக்கு இந்த ராசி முக்கியமானதாகும். வேலை செய்யும் இடத்திலும் உங்களுக்கென்று தனி மரியாதையும், உங்கள் வேலையில் நீங்கள் தனித்துவம் மிக்கவராகவும் விளங்குவீர்கள்.
 
சரியான  நேரத்திற்கு வேலைக்குச் செல்வது, கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடிப்பது போன்ற குணங்கள் உங்களிடம் உண்டு. தனவாக்கு குடும்பாதிபதி குரு, லாப ஸ்தானாதிபதி புதன் என்பதால் பொருளாதார நிலை சீராகவே இருக்கும். சீரான ஏற்றம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நிலை இரட்டிப்பாவதற்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை அதிக செலவு செய்தாலும், உங்களின் சிக்கனத்தால் பொருளாதாரம் ஏற்றம் பெறும். குடும்பத்தை விட நண்பர்களுக்கு செலவு செய்வது, கடன் கொடுப்பது போன்றவற்றைக் குறைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும். வளர்பிறையில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: முருகன் மற்றும் காவல் தெய்வங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கினால் நன்மைகள் வரும்.
வாசல்:    மேற்கு - வடக்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
செவ்வாய்- வியாழன் ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

விருச்சிக ராசிக்காரர்கள் கந்த குரு கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவதும் வேல் பூஜை செய்வது போன்ற விஷயங்கள் செய்வதும் கடன்கள் அடைவதற்கான சூழ்நிலையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் இவர்கள் கடன்களை அடைக்க தொடங்குவது மிகுந்த நன்மையை கொடுக்கவல்லது.

செல்ல வேண்டிய தலம்: புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று முத்துமாரியம்மனை தரிசித்து வாருங்கள். இத்தலம் தஞ்சாவூருக்கு அருகே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

9 தனுசு

தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் ஒன்பதாவது ராசியாக உள்ளது. தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். தனாதிபதி சனி ஆவார். ரண ருணாதிபதி சுக்கிரன் இருக்கிறார். வில்லானை சொல்லால் வளை என்பது பழமொழி. அனைவரின் வாழ்க்கைக்கும் ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரராக இருப்பார்கள். ஆனால் தங்கள் சுய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டும் குணம் இருப்பதால் தங்கள் வாழ்க்கையில் சிறு தடுமாற்றங்களை சந்திப்பார்கள். நேர்மையானவர்கள். கோடி கொடுத்தாலும் குறுக்கு வழியில் செல்ல மாட்டார்கள். மன நிம்மதியே முக்கியம் என மனசாட்சிக்கு பயந்து நடப்பீர்கள். வேலைக்குச் செல்வதை விட தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியும்.

உங்கள் தொழிலில் நீங்கள் உண்மையானவராக இருப்பீர்கள். மற்றவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் குணத்தை மேலும் வளர்த்துக் கொண்டால் உங்கள் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தனவாக்கு குடும்பாதிபதி சனி, லாப ஸ்தானாதிபதி சுக்ரன் என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். படிப்படியான ஏற்றம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நிலை இரட்டிப்பாவதற்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்களின் பொருளாதாரத்தில் சிறப்பான ஏற்றம் காணப்படும். இவர்கள் வளர்பிறையில் ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு:  சித்தர்களின் ஜீவ சமாதிகள் சென்று வணங்கி வந்தால் நன்மை தரும்.
வாசல்: மேற்கு - வடக்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
வியாழன்- வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

தனுசு ராசிக்காரர்கள் சுமங்கலி பூஜை செய்து வருவதும் - மஞ்சள் பொடியால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும் கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரம். குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன்கள் அடைவதற்கான நல்ல சூழ்நிலைகள் இவர்களுக்கு ஏற்படும்.

செல்ல வேண்டிய தலம்: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு அருகேயே அமைந்துள்ளது.

10 மகரம்

மகர ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் பத்தாவது ராசியாக உள்ளது. மகர ராசியின் அதிபதி சனி பகவான். தனவாக்கு குடும்பாதிபதியும் சனி பகவானே. ரண ருணாதிபதி புதன் ஆவார். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் வாதாடும் திறமை உள்ளவர்கள். இயற்கையிலே சட்ட நுணுக்கங்களையும் அடுத்தவர்களுடைய குணநலன்களையும் எடை  போடுவதில் வல்லவர்கள். வாக்கு ஸ்தானாதிபதியும் ராசிநாதனாக வருவதால் சுயம்புவாக வாழ்க்கையில் முன்னேறுபவர்கள். தன்மான உணர்ச்சி அதிகமாக உடையவர்கள். தொழில் செய்வதை விட வேலைக்குச் செல்வதே இவர்களுக்கு நல்லது. ராசியாதிபதியே தன வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியும் ஆகிறார். எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

சிக்கனமாக இருப்பார்கள்.. அனாவசிய ஆடம்பர செலவுகளை செய்ய மாட்டார்கள். குறைந்த வருமானம் வந்தாலும் நிறைவான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வார்கள். சர ராசியில் பிறந்த இவர்களுக்கு சுக லாபாதிபதி செவ்வாயே பாதகாதிபதியுமாக ஆவதால் ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு அதிகமாக செலவுகள் செய்வார்கள். பொருளாதாரத்தில் இவர்களுக்கு சரிவு அவ்வளவாக இருக்காது. வரவும் செலவும் சரியாக இருக்கும். தொழில் செய்வதை விட வேலைக்குச் சென்றால் இவர்களுக்கு செல்வம் சேரும். தொழில் ஸ்தானம் வலுத்திருக்கும் பட்சத்தில் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இவர்கள் வளர்பிறையில் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும்.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: பெருமாள் - முருகன் கோவில்கள் ஆகிய தலங்களுக்குச் சென்று வணங்கி வருவது நன்மை தரும்.
வாசல்  வடக்கு - மேற்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
புதன் - வெள்ளி ஆகிய  கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

மகர ராசிக்காரர்கள், குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். வாராஹி தேவிக்கு இவர்கள் பூஜை செய்து வணங்கி வருவது கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரமாக அமைந்திருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இவர்கள் இதை
செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: திருநீர்மலை அரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளை தரிசித்து வாருங்கள். இத்தலம் சென்னை பல்லாவரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது.

11 கும்பம்

கும்பராசி என்பது கால புருஷ தத்துவத்தில் பதினோராவது ராசியாக உள்ளது. கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். தனாதிபதி குரு - ரண ருணாதிபதி சந்திரனாகவும் அமைந்திருக்கிறது. கும்பராசிக்காரர்கள் அதிக மன உறுதி உடையவர்கள். நீட்ட முகத்தையும் உடல் மெலிதானதாகவும், சற்று உயரமானவர்களாகவும் இருப்பார்கள். கடமை உணர்ச்சி மிக்கவர்கள். பேசும் பொழுது படபடப்பாக பேசக் கூடியவர்கள். பகுத்தறிவாளர்கள் சீர்திருத்தக் கொள்கை
களில் விருப்பம் உடையவர்கள். பங்கு வர்த்தகம் எப்போழுதுமே இவர்களுக்கு கை கொடுக்கும். பங்கு வர்த்தகத்தில் சிறந்த திறமையுடன் செயல்பட்டு அதில் நிறைய சம்பாதிப்பதில் திறமையானவர்கள்.

கும்ப ராசிக்காரர்கள் பொருளாதாரநிலையைப் பொறுத்த வரை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான குரு பகவான் சுபகிரகம் ஆகையால் உங்களுக்கு பொருளாதார நிலை சுபிட்சமாகவே இருக்கும். நடுத்தர வயதிற்குள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் சம்பாதித்து விடுவீர்கள். வீடு, வாகனம், வசதிக்கு குறைவிருக்காது. ஆடம்பர வாழ்க்கை இந்த ராசியில் பிறந்த பெரும்பாலான பேருக்கு அமையும். பணம் சார்ந்த விஷயங்களை கையாளும் போது வாழ்க்கைத்துணை உங்களை சரியாக வழிநடத்துவார். இவர்கள் வளர்பிறையில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் திங்கள், புதன் ஆகிய நாட்களையும் தவிர்ப்பது நன்மை தரும்.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: பைரவர் மற்றும் முருகன் கோவில்கள் சென்று வருவது நன்மை தரும்.
வாசல்:    கிழக்கு - தெற்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
செவ்வாய் - புதன் - வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

கும்ப ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி சொல்லி அம்பாள் வழிபாடு செய்து வருவது மிக நல்ல பரிகாரம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஹோரைகளை இவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கடன்கள் அடைவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும். தினசரி வீட்டில் ஐந்து முக தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்து வருவதும்
நல்ல மாற்றத்தினையும் ஏற்றத்தையும் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: சுசீந்தரம் தாணுமாலயசாமி கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயரையும், தாணுமாலையரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்தரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.


12 மீனம்

மீன ராசி என்பது கால புருஷ தத்துவத்தில் பன்னிரெண்டாவது ராசியாக உள்ளது. மீன ராசியின் அதிபதி குரு பகவான். மீனராசிக்காரர்கள் நடுத்தர உயரத்தைக் கொண்டவர்கள். கம்பீரமாக காட்சியளிப்பவர்கள். பரந்தமனப்பான்மையும் கொண்டவர்கள். எந்த நேரத்திலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள். நிதானமாக முடிவு எடுக்க மாட்டார்கள். மற்றவர்களிடம் எளிதாக பழகக் கூடியவர்கள். யாராலும் இவர்களை சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். சிரித்துப் பேசியே தங்களது காரியத்தை சுலபமாக சாதித்துக் கொள்வார்கள். அடுத்தவரிடம் கை கட்டி வேலை பார்ப்பதை விட சொந்தத் தொழிலே அதிகமான மீன ராசிக்காரர்கள் செய்வார்கள்.

மீன ராசிக்காரர்கள் பொருளாதாரநிலையைப் பொறுத்த வரை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியாக செவ்வாய் பகவான் விளங்குவதால் உங்களுக்கு பொருளாதார நிலைபொறுத்தவரை சுமூகமாக  இருக்கும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்களாக இருப்பீர்கள். சொத்துகள் உங்கள் பெயரில் இருப்பதை விட உடனிருப்பவர்கள் பெயரில் வாங்கினால் நிலைக்கும். பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் உங்கள் பெயரை இரண்டாவதாக பயன்படுத்துங்கள். இவர்கள் வளர்பிறையில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடன் அடைவதற்கான பரிகாரம்:

வழிபாடு: சிவன் - முருகன் கோவில்கள் ஆகிய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வாசல் :   கிழக்கு - தெற்கு நோக்கி கடனை அடைப்பது நன்மை தரும்.
ஞாயிறு - செவ்வாய் - வியாழன் - வெள்ளி ஆகிய கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.
 
மீன ராசிக்காரர்கள் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையை கொடுக்கும். மீன்களுக்கு உணவு அளிப்பது மற்றும் ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பது போன்றவை இவர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய பரிகாரம். செவ்வாய் மற்றும் குரு ஹோரைகளில் இவர்கள் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது என்பது மிகுந்த நன்மை கொடுக்கக் கூடிய அற்புதமான பரிகாரம்.

செல்ல வேண்டிய தலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?