×

வேத சொரூபியான கருடன்

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும்,  கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும், இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும், வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும், ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க, அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின்போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத சொரூபியான கருட பகவான், நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருந்தாயே! இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று சொல்லி பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும் எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.

கருடனின் வரலாறு கச்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன். பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு, கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார். வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும். வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள். அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை. அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள் கத்ரு. தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து
மீட்டார் கருடன்.

தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறைவைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன், பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார். கருடன் தனது உடலில் எட்டுப் பாம்பு களை எட்டு இடங்களில் அணிந்துள்ளார்.
அவையாவன,

1.தலையில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் மாலையாகக் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.அரைஞாண்கயிறாக தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்
அதனால்தான் கருடன், ‘அஷ்ட நாக கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.

திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார். கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார். கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார். கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம். ஏனெனில், நாம் ஒப்பனை செய்துகொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா? அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா? இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.

அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடன் படம் வரைந்த கொடி, கொடிமரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம். திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.

ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானரசேனையும் மயங்கிக் கிடந்த வேளையில், வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாகபாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.கருடன் எத்தனை கருடனடி?

பட்சிராஜன், வைனதேயன், கருத்மான், சுபர்ணன், தார்க்ஷ்யன், காச்யபி, சுதாஹரன், ககேச்வரன், நாகாந்தகன், விஷ்ணுரதன், புள்ளரசன், புள்ளரையன், மங்களாலயன், பெரிய திருவடி, கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.ஆளவந்தார் என்னும் மகான், “தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய:” என்ற ஸ்லோகத்தில் கருடன் திருமாலுக்குத் தொண்டராகவும், நண்பராகவும், வாகனமாகவும், இருக்கையாகவும், கொடியாகவும், மேல்கட்டாகவும், விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார்.

கருட மந்திரம் ஜபித்து, கருடனை நேரில் தரிசித்தவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகன் என்னும் மகான். அவர் ஒன்று, இரண்டு, மூன்று... என எண்ணிக்கைகளை வைத்து வடமொழியில் ஸ்லோகம் அமைத்துக் கருடனைத்  துதித்தார். ஒப்பற்ற ஒருவரான கருடன், திருமாலின் இரண்டாவது வடிவமாய் விளங்குகிறார். ஞானியர், முனிவருள்ளும் முன்று, நான்கு பேர்கள் மட்டுமே ஐந்தெழுத்து உடைய கருட மந்திரத்தின் பெருமையை நன்கறிவர். ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐசுவரியம், தேஜஸ் என ஆறு குணங்களை உடையவர் கருடன்.

ஏழு சுவரங்களுக்கும் ஆதாரமான சாம வேத ரூபியாக உள்ளார். எட்டு மகாசித்திகளையும் பெற்றவர். அவரது உடல் நவமாக உள்ளது. (நவம் என்பது எண் ஒன்பதையும் குறிக்கும், எப்போதும் புதிதாக இருத்தல் என்றும் பொருள்படும். கருடனின் திருமேனி எப்போதும் புதிதாகவே உள்ளது. அதையே நவம் எனக்குறிப்பிடுகிறார்.) பத்து நூறு (10x100=1000) கண்களை உடைய இந்திரனின் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துகிறார் கருடன். அவர் எண்ணிலடங்காத உருவங்களை உடையவர் என்று அந்த ஸ்லோகத்தில் கூறுகிறார் வேதாந்த தேசிகன்.இந்த ஸ்லோகத்துக்கு மான். அன்பில் ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்கிய தமிழ் மொழி பெயர்ப்பை வாசகர்களின் அனுபவத்திற்காக வழங்குகிறோம்.

“ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும்
திரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான
இரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும்
இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும்
சுருதியான ஏழுஸ்வர சாமத்தின் உறைவிடமும்
இருநான்கு அணிமாதி ஐசுவரியக் கொள்கலனும்
திருமேனி நவமென்னும் புதிதாக அமைந்தவரும்
இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின்
விரோதிகள் பல்லாயிரர் தம்மோடு விளையாடும்
சிறகுகளின் கூர்முனையைச் சிறப்பாக உடையவரும்
உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின்
ஒருபெரிய பகைவருமாய் உறும் கருட பகவானே
பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக!”

எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில் பற்பல உருவங்களோடு கருடன் வருவதைக் காணலாம். தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை, அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை, சீர்காழிக்கு அருகிலுள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை, திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன், தானே உற்சவராகவும், மூலவராகவும், வாகனமாகவும் திகழ்கிறார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Garuda ,
× RELATED கருடன் கருணை